பள்ளத்தாக்கில் வாழுதல்

தியானம்: 2026 மே 1 வெள்ளி | வேத வாசிப்பு: யாத்திராகமம் 15:1-19

YouTube video

நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன் (உன்னதப்பாட்டு 2:1).

நமது அடைக்கலமும் பெலனும் ஆபத்து காலத்தில் அனுகூலமுமான கர்த்தராகிய பரிசுத்தர் இம்மாதத்தை ஆசீர்வதித்து தருவார். நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன் (யோவான் 14:18) என்று வாக்குப் பண்ணின ஆண்டவர் சீக்கிரம் வருவார். நாமும் அவரைச் சந்திக்க ஆயத்தமாவோம்.

ஒரு மலைச் சிகரத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தால், அந்த இயற்கைக் காட்சிகளை என்றென்றும் இரசித்துக்கொண்டே இருக்கத்தோன்றும். அதற்காக மலையுச்சியிலேயே நமது வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக்கொள்ள முடியாது. வாழ்க்கையின் யதார்த்தத்தில் பள்ளத்தாக்குகளில் வாழுவதே மனிதராகிய நமக்கு அதிக நன்மையைத் தரும். இஸ்ரவேலர் தங்கள் வரலாற்றில், மலையுச்சியின் அனுபவத்தைப் பெற்றார்கள். பார்வோனின் சேனையால் துரத்தப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் நடுவாக கால்நடையாய் கடந்துபோனபோது, தங்களைத் தொடர்ந்துவந்த எதிரியின் குதிரைகளையும் இரதங்களையும் சமுத்திரம் மூடிக்கொண்டதைக் கண்டு ஆனந்தமாய் கர்த்தரைப் புகழ்ந்து பாடினார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடித்திருக்கவில்லை. அவர்கள் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வரநேரிட்டது; வனாந்தரத்தின் கொடூரமான வறண்ட காற்றை எதிர் கொண்டனர். மூன்று நாட்களாக தண்ணீரைக் காணாமல் வனாந்தரத்தில் நடந்தார்கள். மலையுச்சியுடன் ஒப்பிடும்போது பள்ளத்தாக்கின் அனுபவம் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. வாழ்வில் நமது அனுபவமும் எப்படி?

ஆனந்தம் நிறைந்த தியானநேரத்தில் தேவனுக்கு மிக அருகாமையில் இருப்பதை நாம் உணர்ந்திருக்கலாம். அல்லது கூட்டமொன்றில் தேவனை தனிப்பட்ட முறையில் சந்தித்த அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். ஆலயத்தில் போதகரின் செய்தியின் மூலம் நமது ஆவிக்குரிய தேவை சந்திக்கப்பட்டிருக்கலாம். இவ்விதமான மலையுச்சியின் அனுபவங்களில் நாம் நிரந்தரமாக திளைத்திருக்கவே விரும்புவோம். ஆனால் அது முடியாது. அலுவலகப் பணிகள், இல்லத்தின் பணிகள், பிள்ளை வளர்ப்பு போன்ற உலக வேலைகள் நம்மை நெருக்குகின்றன. நிஜ வாழ்க்கை நாம் எதிர்பார்ப்பதுபோல குதூகல கொண்டாட்டம் நிறைந்த தல்ல. ஆனாலும் மலையுச்சியில் தங்களுக்குத் துணையாக நின்ற தேவன் பள்ளத்தாக்கிலும் கூடவே இருக்கிறார் என்பதை அன்று இஸ்ரவேல் மக்கள் அறிந்துகொண்டனர். அவர்களுடைய தாகத்தையும் பசியையும் போக்கிய கர்த்தரை, சத்துருக்களிடமிருந்து பாதுகாத்த கர்த்தரை அவர்கள் அனுபவித்தனர்.

அதே தேவன்தான் இன்று நம்மோடும் இருக்கிறார். நமது ஆவிக்குரிய சோதனை நேரத்திலும் சோர்வின்வேளையிலும் நம்முடன் கூடவே இருக்கிறார். அவர் நம்மைக் கைவிடமாட்டார். மகிழ்ச்சியான நேரங்களில் நம்முடன் இருந்த தேவன், நமது துக்கமான நேரத்திலும் கூடவே இருப்பார். ஆகவே இக்கட்டுகள் நேரிடும்போது கலங்கவேண்டிய அவசியமில்லை. நமது தேவன், மலையுச்சிக்கு மாத்திரமல்ல, பள்ளத்தாக்குகளுக்கும் தேவனாகவே இருக்கிறார்.

ஜெபம்: நல்ல ஆண்டவரே, எங்கள் மகிழ்ச்சியின் நேரங்களிலும், துக்கத்தின் நேரங்களிலும்; எங்களோடுகூடவே இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.