செட்டைகளின் நிழல்!
அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி
வேதபகுதி: சங்கீதம் 17
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும். உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும் (சங்கீதம் 17:4). (பொது மொழிபெயர்ப்பு)
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சிறகுகள் கோழியின் செட்டைகளைக் குறிக்காது (மத். 23:37). ஆனால், அவை தேவாலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள கேருபீன்களின் செட்டைகளைக் குறிக்கிறது. (யாத். 25:10-22). பிரதான ஆசாரியரைத் தவிர வேறு எவரும் இந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையமுடியாது. அவரும் ஆண்டுக்கு ஒருமுறை பாவநிவிர்த்தி நாளில் மட்டுமே பிரவேசிக்கலாம் (லேவி.16). அவர் பலியின் இரத்தத்தை இரு கேருபீன்களின் செட்டைகளுக்கு கீழே கிருபாசனத்தின்மீது தெளிக்கவேண்டும். இந்த உருவகம் வேதாகமத்தில் எட்டுமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. தேவனின் செட்டைகளின் கீழ் இருப்பவர்களுக்கு செய்யும் காரியங்களை சங்கீதம் 17 இல் நாம் வாசிக்கிறோம். அவர் அவர்களை இரட்சிக்கிறார், பராமரிக்கிறார், திருப்திப்படுத்துகிறார்.
அவர் இரட்சிக்கிறார் (சங்கீதம் 17:7).
நாம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறினதால் நியாயத்தீர்ப்புக்கு தகுதியானவர்கள். எனவே நாம் இரட்சிக்கப்படவேண்டும். கேருபீன்களுடன் கூடிய கிருபாசனம், நியாயப்பிரமாணப்பலகைகள் இருந்த பெட்டியை மறைப்பதாக இருந்தது. இஸ்ரவேலரைப் போலவே நாமும் நியாயப் பிரமாணத்தை மீறுகிறோம். “ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்வது இரத்தமே” (லேவி.17:11). ஆசாரியன் கிருபாசனத்தின் மீது இரத்தத்தைத் தெளித்தார். தேவனுடைய பார்வையில் மீறப்பட்ட பிரமாணங்களல்ல, பாவநிவிர்த்திக்கான இரத்தம் மட்டுமே காணப்பட்டது. இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தபோது அவருடைய இரத்தம் நமது இரட்சிப்புக்கான கிரயத்தை செலுத்தியது. “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபே.1:7). மோவாபிய பெண்ணான ரூத், உண்மையான ஜீவனுள்ள தேவனாகிய யேகோவாவில் விசுவாசம் வைக்கும்வரை, இஸ்ரவேலின் உடன்படிக்கை ஆசீர்வாதங்களுக்கு வெளியே இருந்தாள் (ரூத்.1:16,17). விளைவு? “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைக்கட்டும்” (2:12) என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டாள்.
அவர் காக்கிறார் (சங்கீதம் 17:8).
“எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” (57:1). தாவீது இதை எழுதினபோது அவருடைய உயிருக்கு ஆபத்து இருந்தது. அவர் ஒரு குகையில் ஒளித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய விசுவாசம் தேவன் மீது இருந்தது. சங்கீதம் 61ம் இதைப் போன்றதொரு ஜெபமாகும்.
“நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (வசனம் 4). தேவனுடைய பிள்ளைகளுக்கு மிகப் பாதுகாப்பான இடம் அவருடைய மகா பரிசுத்த ஸ்தலமாகும். உன்னதமானவரின் மறைவில் வசிப்பவர் சர்வவல்லவரின் நிழலில் தங்குவார் (சங்.91:1). இதுவே புதிய ஏற்பாட்டில் “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்“ (யோவான் 15:4) என்று காணப்படுகிறது.
அவர் திருப்திப்படுத்துகிறார் (சங்கீதம் 17:15)
“அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்; (36:7-8). “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்” (63:7). என்னே ஒரு வாழ்க்கை! நிறைவு, மிகுதி, முழுமை, மற்றும் மகிழ்ச்சி, இவை அனைத்தும் தேவனுடைய இதயத்திலிருந்து வருகிறது! “என் ஆத்துமா திருப்தியாகும்” (வச.5). இது தாவீதின் சாட்சியாகும்.
பழைய ஏற்பாட்டில், நியாயப்பிரமாணம் பரிசுத்த ஸ்தானத்துக்கு எல்லை களை நிர்ணயித்தது (யாத் 21:12,19-21), மேலும் பரிசுத்த எல்லைக்குள் ஜனங்கள் வரக்கூடாது என்றும் எச்சரித்தது. ஆனால் தேவனுடைய கிருபையோ பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து எறிகிறது (எபே. 2:14), திரையைக் கிழிக்கிறது (மத்.27:51), மேலும் கர்த்தரிடம் நெருங்கி வர நம்மை அழைக்கிறது. “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார்” (யாக்.4:8).
“ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பததற்கு இயேசு வானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், ….தேவனுடைய வீட்டின் மேல்அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும்; விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக் கடவோம் (எபி. 10:19,21-22). நாம் “அவருடைய செட்டைகளின் கீழ் இருப்பதால் நமக்கு இரட்சிப்பு, பாதுகாப்பு மற்றும் நிறைவு ஆகிய அனைத்தும் கிடைக்கின்றன.
“ஆகையால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்பவர்களுக்கு இனி தண்டனைத் தீர்ப்பு கிடையாது” (ரோமர் 8:1)
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை