குவியலாக நின்ற ஜலம்

அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2011)
Dr.உட்ரோ குரோல்

கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும்
மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து,
அவர்கள் சேனையைக் கலங்கடித்து, (யாத். 14:24)

மனிதனின் எண்ணங்களும் செயல்பாடுகளும் தேவனுடைய அநாதி திட்டத்துக்கு மாறுபட்டு இருப்பின் அது ஒருபோதும் நிறைவேறாது என்பதில் சற்றும் சந்தேகமில்லை. சர்வவல்லமையுள்ள தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை அழிப்பதற்காக பிறர் தீட்டிய சதியாலோசனைகளை தேவன் அவமாக்கிப் போட்டதை சத்திய வேதத்தில் பல இடங்களில் நம்மால் வாசிக்க முடிகிறது. (எஸ்தர் 7:10, தானியேல் 3:22, 6:24)

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் புத்திரரை விடுதலை செய்ய பார்வோன் மறுத்ததால் தேவன் எகிப்தியரைக் கொடிய பத்து வாதைகளால் வாதித்தார். இறுதியில் எகிப்திய குடும்பத்தின் முதற்பேறான ஆண்பிள்ளைகள் அனைவரையும் சங்காரம் பண்ணினார். இதனால் அதிர்ச்சியும் திகிலும் கொண்ட பார்வோன், தேவ ஊழியக்காரர்களான மோசேயையும் ஆரோனையும் தனது நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறக் கட்டளையிட்டான். இஸ்ரவேல் ஜனங்களும் தங்களுடைய விடுதலைப் பயணத்தைத் தொடங்கினார்கள். அதுவரை தங்களிடம் அடிமைகளாக வேலை செய்துவந்த இஸ்ரவேலர்கள் வெளியேறிவிட்டதற்காக வருத்தப்பட்டு, அவர்களைத் திருப்பிக் கொண்டுவர தனது 600 இரதங்களோடும் எகிப்திய சேனைகளோடும் பார்வோன் இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து சென்றான். அவர்களை பாகால்செபோனுக்கு எதிரே உள்ள ஈரோத் என்ற இடத்தில் நெருக்கினான். தேவஜனம் இக்கட்டில் மாட்டிக்கொண்டது. அவர்களுக்கு முன்னே ஆர்ப்பரிக்கும் செங்கடல், பின்னே துரத்திவரும் எகிப்திய சேனைகள்; இருதலைக் கொள்ளி எறும்பு போல மாட்டிக்கொண்டனர். இஸ்ரவேல் ஜனங்கள் தப்பிச்செல்ல வழியே இல்லை. இதை எதிர்பார்த்திருந்த பார்வோனின் முகத்தில் ஒரு எகத்தாளமான சிரிப்பும் குடிகொண்டது.

ஆயினும் தேவன் தமது ஜனங்களைக் கைவிடவில்லை. மோசேயை பயப்படாதிருக்கச் சொல்லி தைரியப் படுத்தினார். (வச.13,14,19)

அதுவரை இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திச் சென்ற மேகஸ்தம்பம் விலகி, இஸ்ரவேலருக்கும் எகிப்தியருக்கும் இடையில் நின்றது. அது இஸ்ரவேலருக்கு வெளிச்சமாகவும் எகிப்தியருக்கு காரிருளாகவும் இருந்தது. மோசேயின் கையிலிருந்த கோலை செங்கடலின் மீது நீட்டச் சொன்ன தேவன் பலத்த கீழ்க்காற்றை அனுப்பினார். சமுத்திரத்தின் தண்ணீர் இரண்டாகப் பிரிந்து போயிற்று. ஆறுலட்சம் ஆண்களுடன் பெண்களும் குவியலாக நின்ற ஜலத்தின் நடுவே உலர்ந்த தரையின் வழியாக நடந்து சென்றனர் (யாத்.14:24). பார்வோனின் சேனைகளும் அதே வழியில் இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து வந்தனர். ஆனால் கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து, அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறார் என்றார்கள் (யாத். 14:24). எனவே எகிப்தின் சேனைகள் குழப்பமும் திகிலும் அடைந்தவர்களாய், இஸ்ரவேலரை விட்டுத் திரும்பி ஓட எத்தனித்தனர். ஆனால் காலம் கடந்துவிட்டது. மோசே தேவனுடைய கட்டளையின்படி தன் கரத்தை சமுத்திரத்தின்மீது நீட்ட, குவியலாக நின்ற ஜலம் ஒன்று சேர்ந்தது. அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப் போட்டார் (யாத்.14:27). எகிப்தியர்களில் ஒருவரும் மீந்திருக்கவில்லை. பார்வோனின் சேனையின் சடலங்கள் கரையில் ஒதுங்கி, தேவனுடைய வல்லமைக்குச் சான்றுகளாகப் பறைசாற்றின.

சத்திய வேதத்தைப்பற்றி தவறான எண்ணம் கொண்டிருந்த ஒரு நாத்திகரான ஆசிரியை, தனது மாணவர்களிடம் செங்கடலைக் கடந்து இஸ்ரவேலர் ஜனங்கள் சென்ற நிகழ்ச்சி ஒரு அற்புதமே அல்ல. ஏனெனில் அவ்விடத்தில் நீரின் ஆழம் வெறும் ஆறு அங்குலம் மட்டுமே இருந்தது. இதை இஸ்ரவேல் புத்திரர்கள் கடந்து செல்வது கடினமான காரியமே அல்ல என்றார். உடனே வகுப்பின் கடைசி வரிசையிலிருந்து, அல்லேலூயா, கர்த்தருக்கே மகிமை என்று ஒரு மாணவன் குரல் கொடுத்தான். அந்த ஆசிரியை வியப்புற்றவராய், ஜானி, நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; ஆழம் குறைவான இடத்தைக் கடந்து செல்வது அற்புதமல்லவே? என்றார். அதற்கு ஜானி நான் இஸ்ரவேல் ஜனங்கள் அவ்விடத்தைக் கடந்ததற்காகத் துதிக்கவில்லை. அந்த ஆறு அங்குல நீரில் பார்வோனின் சேனை முழுவதையும் மூழ்கடித்த அற்புதத்துக்காகவே நான் தேவனை மகிமைப்படுத்தினேன் என்றான்.

ஆம், இஸ்ரவேலர்களின் பாதகமான சூழ்நிலைகளை தேவன் சாதகமாக மாற்றிவிட்டார். அழிவு என்று எண்ணியது மீட்பாக மாறியது; தோல்வியின் சின்னமாகத் தோன்றிய செங்கடல் வெற்றியின் சின்னமாக மாறியது. செங்கடலைக் கடந்து மறுகரை சேர்ந்த இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய அற்புதத்தைப் பாடி மகிழ்ந்தனர். அல்லேலூயா!

நம்மை மேற்கொண்டுவிடும் என்று நாம் பயப்படும் சூழ்நிலைகள் வரும்பொழுது சேனைகளின் தேவனாகிய கர்த்தரை நாம் அடைக்கலமாகக் கொள்ள வேண்டும். அப்பொழுது அவை பனிபோல் விலகிடும் என்பது நிச்சயம்!

அதிகாலைப் பாடல்:

என்கோட்டை பாதுகாப்பானது; என் இளைப்பாறுதல் இனிமையானது,
கிறிஸ்து என்னைத் தம் அன்பின் கரத்துக்குள் மறைத்திடுவார்,
தம் சத்தியவசனத்தால் என் ஆத்துமாவைத் தேற்றிடுவார், எனவே
எந்த தீங்கும் என்னை அணுகாது, எதிரி என்னை மேற்கொள்ளமாட்டான்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை