ஆசிரியரிடமிருந்து…

(மே-ஜுன் 2017)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று திருவுளம் பற்றின  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்திய வசன ஊழியத்திற்கு தாங்கள் நல்கிவரும் ஆதரவுக்காக நன்றிகூறுகிறோம். நமது பங் காளர் மற்றும் வாசகர் குடும்பங்களில் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காக பாரத்தோடு வேண்டுதல் செய்கிறோம். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அபரிதமான வெற்றியைத் தருவார்.

தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதரணமான சூழ்நிலை மாறவும் தேசிய அளவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளுக்காகவும் நாம் பாரத்தோடு ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம். மேலும் நமது தேசத்தில் மழை பொய்த்தபடியால் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் தண்ணீர் பஞ்சம் நீங்கவும் தேவன் நல்ல மழையைக் கட்டளையிடும் படியாகவும் மன்றாடுவோம். நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும் அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது (1தீமோ.2:2,3).

உங்கள் ஜெபக்குறிப்புகளையும் மனபாரங்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளலாம். நாங்கள் உங்கள் தேவைகளுக்காக பாரத்தோடு ஜெபிப்பதோடு நல் ஆலோசனைகளையும் உங்களுக்கு வழங்க ஆயத்தமாயிருக்கிறோம். இப்புத்தகத்திலுள்ள துதி ஜெப விண்ணப்பபகுதியிலுள்ள ஜெபக்குறிப்புகளுக்காக எங்களோடு இணைந்து ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் மே மாத தியானங்களை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின்போது நடைபெற்ற சம்பவங்களை மையமாக வைத்து தியானங்களை எழுதியுள்ளார்கள். ஜுன் மாத தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்கள் நாம் எவ்வாறு தேவனுக்கு உகந்த பாத்திரமாக விளங்கவேண்டுமென்பதை வேதாகம பக்தர்களின் வாழ்க்கையிலிருந்து அருமையான சத்தியங்களை தியானங்களாக எழுதியுள்ளார்கள் இத்தியானங்கள் வாசிக்கும் அனைவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்