அன்பும் நேசமும்
தியானம்: மே 16 செவ்வாய்;
வேத வாசிப்பு: யோவான் 21:15-17, ரோமர் 5:5-8
“ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான்” (யோவான் 21:17).
கேட்ட கேள்விக்கு உண்மையான பதிலை மனதாரக் கூறிய பின்னரும் அதே கேள்வியைத் திரும்பத்திரும்ப ஒருவர் கேட்டால், அவர் நம்மை நம்பவில்லை என்று நமது மனது சங்கடப்படும் அல்லவா?
முதல் தடவை ஆண்டவர் பேதுருவிடம், “இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று மற்ற சீஷரைப் பார்க்கிலும்… என குறிப்பிட்டுக் கேட்டார். இங்கே ‘அன்பு’ என்ற சொல், கிரேக்க பதத்தில் ‘அகாபே’ என்று அர்த்தம் பெறும். இது தன்னலமற்ற, எதிர்பார்ப்பற்ற, தன்னையே கொடுக்கின்ற அன்பு. இதைத்தான் ஆண்டவர் நம்மில் காட்டினார். நாம் நல்லவர்கள் என்று அல்ல; நம்மிடம் எதையும் எதிர்பார்த்தும் அல்ல. மாறாக, நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தாரே (ரோமர் 5:8), அந்த அன்பு ஒப்பற்றது. பின்னர் இயேசு, “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று பேதுருவை மாத்திரம் குறிவைத்துக் கேட்டார். மூன்றாம் தடவையோ, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். இது கிரேக்க மொழியில் சகோதர பாசம், பிரியம் என்று அர்த்தம் பெறும். அதாவது, “நீ என் நண்பனாய் இருப்பாயா?” என்று கேட்பது போன்றது இது. ஆண்டவர் பேதுருவை நம்பாமல் அல்ல; ஆனால் அவர் மேலோட்டமான பதிலை விரும்பவில்லை; மாறாக, விஷயத்தின் ஆழத்திற்குச் சென்று பேதுருவின் மனது விடுதலைபெற உதவி செய்தார். பேதுரு தன் மனநிலையை உணர்ந்து, தன் நோக்கத்தைச் சரி செய்யவேண்டும். இயேசு அவனுடன் இடைப்பட்டபோது பேதுரு தனக்குள் தானே உறுதிப்பட்டார் என்பதுதான் உண்மை.
பேதுருவின் விஷயங்களும், நமது சூழ்நிலைகள், சம்பவங்களும் வேறு பட்டிருக்கலாம். அவற்றின் மத்தியிலும், “உன் எல்லாவற்றைப் பார்க்கிலும், எல்லாரைப் பார்க்கிலும் நீ என்னில் அன்புகூருகிறாயா, எதையும் எதிர்பாராமல் என்னை நம்பி என்னில் அன்புகூருகிறாயா, ஒரு நண்பனைப்போல என்னை நேசிக்கிறாயா” என்று இன்று ஆண்டவர் நம்முடன் இடைப்பட்டால் நமது பதில் என்ன? நமக்கு இயேசு வேண்டும்; அவருடைய அன்பும் வேண்டும். ஆனால் நாம் அவரை உண்மையாய் நேசிக்கிறோமா? அவருக்காக நம்மையே கொடுக்கத் தக்க அன்பு நமக்குள் உண்டா என்று சிந்திப்போம். அந்த நேசம் நமக்கிருப்பது உண்மையானால், பவுலோடு இணைந்து நம்மாலும் கூறமுடியுமா?
“அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன்” (பிலிப்பியர் 3:11).
ஜெபம்: தேவனே, எங்களது தேவைகளுக்காக, அல்லது அவற்றின் நிறை வேறுதலுக்காக மாத்திரம் உம்மை நாங்கள் நேசிக்காமல், இருதயத்தின் ஆழத்திலிருந்து உண்மையாகவே உம்மை நேசிக்கிறோம் பிதாவே. ஆமென்.