Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2020)
முதலாம் நூற்றாண்டின் சபை சிறியதாய் இருந்தாலும் வல்லமையுடையதாய் இருந்தது. அதே வல்லமையுடைய சபையை இன்று நாம் காணமுடியுமா? இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் நிறைவையும் பரிசுத்த ஆவியானவரின் வருகையையும், சபையின் தோற்றம் மற்றும் பவுலின் ஊழியங்களையும் அவருடைய பிரயாணங்களையும் பரி.லூக்கா தனது நூலில் விளக்கமாக எழுதியுள்ளார். ஓர் ஆசிரியர் என்ற முறையில் நிகழ்வுகளின் வரலாற்றுப் பின்னணி, காலம், இடம் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றுடன் அனைத்தையும் தெளிவாகத் தந்துள்ளார்.
ஆதி திருச்சபையின் வல்லமையை மீண்டும் பெற்றுக்கொள்ள நாம் செய்யவேண்டிய காரியங்களை அப்போஸ்தலருடைய நடபடி புஸ்தகத்தின் நான்கு பகுதிகளிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.
1. மன்னிப்பு – ஸ்தேவான்
முதல் பகுதி அப்போஸ்தலர் 7ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. அது இரத்தசாட்சியாக மரித்த ஸ்தேவானைப் பற்றி கூறுகிறது. ஆதி திருச்சபையின் வல்லமை அதனிடத்தில் காணப்பட்ட மன்னிப்பாகும். அது ரோம சாம்ராஜ்யம் மற்றும் யூத மக்களை அநேக காரியங்களுக்காக மன்னிக்க வேண்டியதாயிருந்தது. ஏனெனில் அச்சபை மக்கள் தங்களுடைய விசுவாசத்திற்காக அதிகமான துன்பத்தை அனுபவித்தனர். குறிப்பாக முதல் இரத்த சாட்சியான ஸ்தேவானைப்போல துன்புற்றோர் எவருமில்லை எனலாம். மன்னிப்பை அற்பமான காரியமாக எண்ணாமல் அவரைப் போன்று எவ்வாறு உண்மையாகச் செய்வது என்பதை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
“இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு: அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து, அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள். அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்” என்று நாம் அப்.7:54-60 இல் வாசிக்கிறோம்.
இதைப்போன்ற மன்னிப்பை உங்களால் தர முடியுமா? “தீர்க்கதரிசிகளையும், பழைய ஏற்பாட்டு தேவனுடைய தீர்க்கர்கள் கூறிய செய்திகளை அலட்சியம் செய்தீர்கள். இப்பொழுதோ நீதிபரராகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும் கொலை செய்துவிட்டீர்கள்” என்று ஸ்தேவான் கூறியதைக் கேட்ட யூதர்கள் மகா மூர்க்கமடைந்தனர். ஆனால் ஸ்தேவானோ மூர்க்கக் கோபமடைந்த இந்தக் கூட்டத்தைக் கண்ணோக்கவில்லை. அவன் வானத்தை அண்ணாந்து பார்த்து அங்கு இயேசு நிற்பதைக் கண்டார். அவரிடமிருந்தே அந்த மன்னிக்கும் மாண்பை ஸ்தேவான் பெற்றிருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். ஸ்தேவானால் தன்மேல் கல்லெறிந்தவர்களை மன்னிக்க முடிந்தது. எனவே அவர் தாழ்ந்து பணிந்துகொண்டு “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று கூறினார்.
நம்மை துன்புறுத்துபவர்களையும் நமக்கு தீமை செய்தவர்களையும் நாம் என்ன செய்யவேண்டும்? அவர்களை சபிக்க வேண்டுமா? அல் லது பழிவாங்கவேண்டுமா? இல்லவே இல்லை. 21ம் நூற்றாண்டு சபையைச் சேர்ந்த நாம் ஸ்தேவானைப் போன்று மன்னிக்கும் பண்பைப் பெற வேண்டும். மன்னிக்கும் செயல் எளிதானதே.
“ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்; நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோமர் 12:17-20) என்றும் அப்.பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் ஆலோசனை தந்துள்ளார்.
இந்த நூற்றாண்டில் வாழும் நாமும் பிறரை மன்னிப்பதற்கு அநேக காரியங்கள் உள்ளன. அவற்றை நாம் அலட்சியமாக கருதக்கூடாது. அவற்றை நாம் தேவனுடைய கரத்தில் ஒப்படைக்கும்பொழுது அவர் பார்த்துக்கொள்வார். கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு பண்பு மன்னிப்பதாகும். நாம் மற்றவர்களை மன்னிக்கும்பொழுது அக்காரியத்தை தேவனிடத்தில் கொடுத்துவிடுகிறோம். அப்பண்பை நாம் ஒளித்துவைக்கக் கூடாது.
2. ஏற்றுக்கொள்ளுதல் – அனனியா
மன்னிப்பு என்றவுடன் நமது நினைவில் மற்றொரு நபர் வருகிறார். அப்போஸ்தலரின் நடபடிகள் புஸ்தகத்தில் ஸ்தேவானைப் போன்ற மன்னிக்கும் மாண்பைப் பெற்றிருந்த அனனியா என்ற சீடனை நாம் பார்க்கிறோம். இப்புஸ்தகத்தில் அனனியா என்ற பெயரில் இருவர் காணப்படுகின்றனர். ஒருவர் சப்பிராள் என்ற பெண்ணின் கணவன். ஆனால் நான் இன்று இவரைப் பற்றிக் கூறவரவில்லை. ஆதிசபையின் வல்லமை நமக்கு தேவை எனில் நம்மிடம் வரும் மக்கள் கிறிஸ்துவில் தங்களது விசுவாசத்தைக் காட்டி வாழ்வில் மாற்றத்தை வெளிப்படுத்தும் பொழுது, அவர்களை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அப். 9ம் அதிகாரம்; சபையைத் துன்புறுத்திய சவுல், தமஸ்குவுக்கு செல்லும் வழியில் ஆச்சரியமான விதத்தில் ஆண்டவராகிய இயேசுவை சந்தித்ததை அறிவிக்கிறது. அவர் தமஸ்குவுக்கு சென்ற பின்னர் தேவன் தம்முடைய திட்டத்தை இவருக்கு வெளிப்படுத்தினார்.
“இந்த தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்; அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்” (அப்.9:10-12).
இங்கே ஆண்டவரிடமிருந்து அனனியாவுக்கு தெளிவான ஒரு உத்தரவு வருகிறது. அனனியா ஒரு சீடன். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுபவன். அவன் தர்சு பட்டணத்தானாகிய சவுலைப் பற்றி நன்கு அறிந்திருந்தான். “அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக் குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங்கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்;” (வச. 13-14).
இங்கு நான் அனனியாவை ஆதரிக்கிறேன். தேவன் தனது வார்த்தையினிமித்தம் சவுலை ஏற்றுக்கொள்ளக் கூறுகிறார். ஒருவேளை அனனியா “சவுலை தமஸ்கு சபைக்கு வரச் சொல்லவேண்டும். அங்கு போதகர்களின் அறிமுகப்பாடத்தை அவர் கற்றுக் கொள்ளட்டும். தான் அனைத்தும் சரியாகிவிட்டதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தால், தேவன் அனனியாவை நோக்கி, இவ்வாறு பதிலளித்திருப்பார்: “நீ போய் அவன் பார்வையடையும்படி அவன் மேல் கைகளை வைப்பதே நான் உனக்குக் கூறும் காரியம்” என்பதே. புரிந்து கொள்ளுவதைவிட கீழ்ப்படிதலையே அனனியாவிடமிருந்து தேவன் எதிர்பார்த்தார். நம்மிடமும் அதையே அவர் விரும்புகிறார். நாம் அவருக்குக் கீழ்ப்படியும்பொழுது தம்முடைய கிருபையினால்; அவரது திட்டத்தை அறிந்துகொள்ளும் அறிவையும் சில நேரங்களில் கூடுதலாகத் தருகிறார். “அதற்கு கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார் (வச.15, 16). இங்கு சவுலைப் பற்றிய தம்முடைய திட்டத்தை அனனியாவுக்கு தேவன் விளக்கினார்.
“அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்” என்றான் (வச.9). இதுவே இந்த புத்தகத்தில் காணப்படும் முக்கியமான வசனம்.
சவுலின் அனைத்து காரியங்களையும் அனனியா அறிந்திருந்தார். ஆனால் சவுல் தன்னுடைய வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கண்டுகொண்டார். இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் ஒரு புது சிருஷ்டியாக மாறிவிட்டார். எனவே அனனியா அவரை “இப்பொழுது நீ என் சகோதரன்” அழைக்கிறார்.
இந்த 21ம் நூற்றாண்டில்; மாற்றம் பெற்று திருச்சபைக்கு வரும் மக்கள் நம்மைப்போல இருக்காவிட்டாலும், நம்மைப் போன்று சிந்திக்காவிட்டாலும், நம்மைப்போல தேவனுடைய வார்த்தைகளை அறிந்திருக்காவிட்டாலும் அவர்களும் நம்மில் ஒருவரே. ஆதி சபையினரைப் போன்று வல்லமை வேண்டுமெனில், “சகோதரனே வாருங்கள், என்னுடன் ஐக்கியம் கொள்ளுங்கள்” என்று கூறுவது நமது கடமை.
3. பரிசுத்த ஆவியானவரின் வல்லமை
முதல் நூற்றாண்டு திருச்சபையில் காணப் படும் ஐக்கியத்தை தற்கால போதகர்களிடமும் மற்ற நிகழ்வுகளிலும் நம்மால் காணமுடியவில்லை. காரணம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் நாம் இணையாததேயாகும்.
அப்போஸ்தல நடபடிகளின் 2ம் அதிகாரம் பெந்தெகொஸ்தே நாளின் நிகழ்வு என்பதை நாம் யாவரும் நன்கு அறிவோம். பஸ்கா பண்டிகைக்குப் பின்வரும் ஏழாம் ஓய்வுநாளுக்கு அடுத்த நாள் பெந்தெகோஸ்தே பண்டிகையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். லேவியராகமம் 23ம் அதிகாரத்தில் இப்பண்டிகையின் ஆரம்பம் குறிப்பிடப்பட்டுள்ளது. பெந்தெகோஸ்தே என்றால் ஐம்பது என்று பொருள். பஸ்கா பண்டிகைக்குப் பின்வரும் 50வது நாளில் இவ்விழா கொண்டாடப்படுவதால் இப்பெயரைப் பெற்றது.
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
இந்த சிறப்பான பெந்தெகொஸ்தே நாளில் சீடர்கள் யாவரும் எருசலேமில் உள்ள ஓர் அறை வீட்டில் கூடியிருந்தனர். தங்களுடைய ஊழியத்தின் முக்கியமான பகுதிக்காக அங்கே அவர்கள் காத்திருந்தனர். இயேசு அப்பொழுதுதான் பரத்துக்கு ஏறியிருந்தார். உலகின் பிற பகுதிகளுக்கு நற்செய்தியைக் கூறுவதற்குத் தேவையான வல்லமையைப் பெற்றுக்கொள்ள சீடர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதனை அவர்கள் அப்.1:8 இல் பெற்றுக்கொண்டனர் என வாசிக்கிறோம்.
அப்பொழுது தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு அவர்கள் மீது வந்தார். அந்த சத்தம் பலத்த காற்றின் சத்தத்தைப் போன்று இருந்தது. பிளவுண்ட நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. நாவு என்பது மொழியைக் குறிக்கும். அவர்கள் அறிந்திராத மொழியில் அவர்கள் பேசினார்கள். இயேசுவைப் பற்றிய காரியங்களை அவர்கள் அறியாத மொழியில் பேச ஆரம்பித்தனர்.
இங்கு இரண்டு காரியங்கள் நடந்தன. முதலாவது தேவனுடைய ஆவியானவரின் வல்லமையை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இரண்டாவதாக மற்றவர்களுக்குக் கூறவேண்டிய வல்லமையான செய்தியையும் பெற்றுக்கொண்டார்கள். இங்கு ஆவியானவரின் வல்லமை மற்றும் வார்த்தையின் வல்லமை ஆகிய இரு வல்லமைகளும் இணைந்தன; இங்கேதான் முதல் நூற்றாண்டு சபையின் மெய்யான வல்லமை காணப்படுகிறது.
இந்த 21ம் நூற்றாண்டு சபையின் வல்லமையும் இதில்தான் அடங்கியுள்ளது. தேவனுடைய வார்த்தையின்றி, ஆவியானவரின் வல்லமையை நமது வழிபாட்டில் எதிர்பார்த்தால் அது அரை குறையாகவே அமையும். தேவனுடைய வார்த்தையை அவருடைய வல்லமையின்றி போதித்தால் அதுவும் நிறைவடையாது. நமக்கு இரண்டும் தேவை.
தேவனுடைய வல்லமை, ஆவியானவரின் வல்லமை மற்றும் தேவனுடைய வார்த்தை அதாவது பரிசுத்த வேதாகமம் இவையாவும் ஒன்றோடொன்று இணைந்தே காணப்படுகின்றன. “சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” (1 கொரி.1:18). நமக்கு தேவனுடைய வார்த்தையும் அவசியம் தேவைப்படுகிறது.
பவுல் தன்னுடைய ஊழியத்தின் பாடுகளையும் மகிழ்ச்சியையும் விளக்கும்பொழுது “சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடது பக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்” (2கொரி 6:7) என்று தேவனுடைய வார்த்தையையும் அவருடைய வல்லமையையும் இணைத்தே கூறியுள்ளார். “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16) என்றும் கூறியுள்ளார்.
அப்போஸ்தல நடபடிகள் புஸ்தகத்தின் வல்லமை நிறைந்த பகுதி 2ம் அதிகாரம் ஆகும். இங்கு இரண்டு பகுதிகள் பிரிக்கக்கூடாதவை. ஒன்று, மனிதர்களின் வாழ்வையும் மனதையும் மாற்றும் தேவனுடைய ஆவியானவரின் வல்லமை. மற்றது, தேவனுடைய வார்த்தையில் காணப்படும் தேவசெய்தியின் வல்லமை. ஆதி சபையின் வல்லமையை இந்த நூற்றாண்டின் சபை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் மேற்கண்ட இரண்டும் அவசியம். அப். 2ம் அதிகாரத்தின் ஆரம்பத்தை இதுவரை நாம் ஆராய்ந்தோம். அவ்வதிகாரத்தின் 42ம் வசனத்தில், “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” என்று வாசிக்கிறோம். முதல் நூற்றாண்டு சபையில் காணப்பட்ட அந்த வல்லமை இன்றைய சபைகளில் காணப்படவில்லை.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஒரு போதகராக ஊழியம் செய்து வருகிறேன். வாரத்தின் இறுதி நாட்களில் நான் அநேக சபைகளுக்குச் சென்று தேவனுடைய வார்த்தையை அறிவித்து வருகிறேன். அநேக சபைகளையும் அவை வளர்ந்து வருவதையும் கவனித்து வருகின்றேன்.
அப்போஸ்தலர்களின் இறையியல் கருத்துக்களும் ஐக்கியமும், ஐக்கியம் என்ற சொல்லின் கருத்தாக்கத்துக்கு ஒரு புதிய விளக்கத்தை அளித்தது. அப்போஸ்தலர்களின் கருத்தாவது அனுதினமும் நாம் தேவனுடைய வார்த்தையை தியானிக்கவேண்டும். இதில் நாம் ஆதி திருச்சபையினரைப் பின்பற்றவில்லை என்றே கூறலாம்.
தேவனுடைய வார்த்தையை அறிந்துகொள்ளாமல் இருப்பதே நற்செய்தி சபைகளில் காணப்படும் குறைவுகளில் ஒன்று என பார்னா மக்களும் பியூ ஆராய்ச்சி மக்களும் மற்றவர்களும் கண்ட ஆய்வு ஆகும்.
முதல் நூற்றாண்டு சபையை இன்றைய சபையுடன் ஒப்பிடும்பொழுது நாம் நம்முடைய விசுவாசத்தின் அடிப்படை தத்துவத்தின் அறிவில் குறைவுள்ளவர்களாய்க் காணப்படுகிறோம். நம்மிடையே அநேக ஐக்கிய கூடுகைகள் உண்டு. ஆனால் அவை யாவும் தேநீர் விருந்தாகவே உள்ளன. அதில் தேவனுடைய வார்த்தைக்கு அதிக நேரம் கொடுப்பதில்லை.
“அப்பம் பிட்குதல்” என்பது ஐக்கியத்தின் ஒரு பகுதியாகும். அடுத்து “ஜெபம் பண்ணுதல்”; இந்த ஜெபவேளை நேரத்தை நாம் அதிகமாகக் குறைத்துவிடுகிறோம். இவ்வுலகை நற்செய்தி மூலம் சந்திக்க தேவைப்படும் வல்லமையைவிட நம்முடைய தேவைகளை சந்திப்பதற்கே அதில் அதிக நேரத்தை செலவிடுகிறோம்.
அப்.2ஆம் அதிகாரத்தில் காணப்படும் உபதேசத்தை ஒப்பிட்டால் அதுவும் தற்காலத்தில் மாற்றமடைந்துள்ளதைக் காண்கிறோம். பேதுருவின் செய்தி முழுவதும் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவரிடம் புதிய ஏற்பாடு இல்லை. ஆனால் இன்று நமது செய்திகளோ புதிய ஏற்பாட்டை மட்டுமே சார்ந்துள்ளது. பல வேளைகளில் அவை பரிசுத்த வேதாகமத்திலும் காணப்படுவதில்லை. பலரது தேவசெய்திகள் அன்றாட நிகழ்வுகளிலிருந்தும் அவர்களுடைய எண்ணங்கள், உணர்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
முதல் நூற்றாண்டு சபை மகாவல்லமையுடன் விளங்கியது. அவர்கள் நாள்தோறும் சந்தித்து தேவனைத் துதித்தனர். தேவனிடத்திலும் மக்களிடத்திலும் தயவு பெற்றிருந்தனர். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார் (அப். 2:47).
நாமோ வாரந்தோறும் சந்திக்கிறோம். ஆனால் இக்கூடுகைகள் ஒன்றரை அல்லது ஒரு மணி நேரம் அல்லது 15 நிமிடங்கள் மட்டுமே உள்ளது. நாம் முதலாம் நூற்றாண்டு சபையின் வல்லமையைப் பெற விரும்பினால் நாம் அனுதினமும் தேவனுடைய வார்த்தையை வாசிக்கவும் தியானிக்கவும் தேவபிள்ளைகளுடன் ஐக்கியமும் கொண்டிருத்தல் அவசியம். வேதவசனத்தை வாசிப்பதுடன் நில்லாமல் அதன்படி செய்யவும் வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக “வேதாகமத்துக்கு திரும்பும் ஊழியம்” செய்த ஆய்வின்படி ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வேதத்தை வாசிப்பவர்களைவிட அதனை நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட முறைகள் வேதத்தைப் படிக்கும் மக்களின் வாழ்வில் சிறப்பான மாற்றங்கள் காணப்பட்டன. கிறிஸ்தவர்கள் செய்யக்கூடாத சரீரத்தை அழிக்கும் செயல்களை அவர்கள் செய்வதில்லை; அவர்கள் திருமணத்துக்கு வெளியே உறவு கொள்வதில்லை; சூதாடுவதில்லை; ஆபாசப் படங்களுக்கும், மதுபானத்துக்கும் போதை வஸ்துகளுக்கும் அடிமையாவதில்லை;
இந்த ஆய்வில் நாங்கள் கண்ட மற்றோரு அதிர்ச்சியான காரியம் என்னவெனில், பல கிறிஸ் தவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் மட்டுமே பரிசுத்த வேதத்தை வாசிக்கின்றனர். அதற்கு நேரமின்மையைக் காரணமாகக் காட்டுகின்றனர். எனவே ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் தேவனுடைய வார்த்தையை மக்கள் வாசிக்க சில முயற்சிகள் “வேதாகமத்துக்கு திரும்புக” ஊழியங்கள் மூலம் எடுக்கப்பட்டன. அவ்வாறு செய்யும்பொழுது இன்னும் அதிக நேரம் வேதத்தை வாசிக்க மக்கள் தூண்டப்பட்டனர். வானொலி ஊழியங்கள் ஈமெயில் மற்றும் கைபேசிகளுக்கு செய்திகள், குறுஞ்செய்திகள் போன்ற பல வழிகளில் தேவ செய்திகள் அனுப்பப்படுகின்றன. மக்கள் இவற்றை எங்கிருந்தாலும் அறிந்துகொள்ள பல வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே ஒரு வாரத்தில், விசுவாசிகள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வேதத்தை அறிய ஊக்கு விக்கப்படுகிறார்கள். நாமும் ஆதி திருச்சபையினரைப்போல வல்லமை பெற்று, அநேகரை சீடராக்கி, தேவவார்த்தையை உயர்த்தி இத் தரணியை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை