(செப்டம்பர்-டிசம்பர் 2020)
நீங்கள் வேதாகமத்தின் கிறிஸ்துமஸ் கீதங்களை கவனித்திருக்கிறீர்களா? மக்கள் விரும்புவதும், எல்லோருக்கும் தெரிந்ததுமான கிறிஸ்துமஸ் கீதங்களின் மீது உங்களுக்கு இருக்கும் விருப்பம் இயேசு நாதரின் பிறப்பின் காட்சியில் பங்கெடுத்த முக்கிய பாத்திரங்களின் அழகான கீதங்களை கவனக்குறைவுக்குள் ஆக்கிவிட்டது. இந்த ஐந்து அழகான எபிரெய வாழ்த்துக் கீதங்களை மக்கள் எதிர்பார்த்திருக்கக்கூடியபடி யூதனான மத்தேயு எழுதி பத்திரப்படுத்தாமல், புறஜாதியைச் சேர்ந்த லூக்காவே எழுதி வைத்திருக்கிறார். லூக்கா எவ்விதம் தேவகுமாரனான கிறிஸ்து சமமாகவும், உண்மையாகவும் மனித குமாரன் என்பதை விளக்குகிறார்.
லூக்கா சுவிசேஷத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் சந்தோஷமும், துதியும் நிறைந்த கீதங்களின் இன்னிசையால் பொங்குகின்றன.
முதலாவது கீதம்: எலிசபெத் மகிழ்ச்சியுடன் பாடுகிறாள். (லூ1க். 1:42-45) (Beatitude)
ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னி டத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின் சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்.
இரண்டாவது கீதம்: இதைக் கேட்டவுடன் மரியாள் எலிசபெத் பாடியதற்குப் பதிலாக ஒப்பற்ற ஒரு கீதத்தைப் பாடுகிறாள். (லூக்.1:46-55) (Magnificat)
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இது முதல் எல்லா சந்ததிகளும், என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்: அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது, தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களை சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்வேலை ஆதரித்தார்.
மூன்றாவது கீதம், சகரியா தன் நாவு கட்டவிழ்க்கப்பட்டவுடன் தேவன் தம் ஜனத்தை மீட்டுக்கொள்வார் என்ற ஆணையை நிறைவேற்றினதை நினைத்துப் பாடுகிறார். (லூக்கா 1:68-79) (Benedictus)
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி; உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு: உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாக பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதி முதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார்.
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்பாக நடந்து போவாய். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும் அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.
நான்காவது கீதம்: தான் பரமசேனையின் திரள் பாடிய இணையற்ற மகிமையின் கீதம் (லூக். 2:8-14). (Gloria)
அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
ஐந்தாவதும் கடைசியுமான கீதம்: தேவன் தம் சிருஷ்டிகளுடன் தனக்கு இருக்கும் தொடர்பை வெளிப்படுத்தியதை சிமியோன் பாடுகிறார். (2:29) (Nunc Dimittis)
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின, உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது.
வார்த்தைகள் நாம் நினைப்பதைக் கூறுகின்றன. இசை நமது மனநிலையை வெளிப்படுத்துகிறது. வார்த்தைகளையும் இசையையும் இணைத்து பாட்டு பிறக்குமேயானால், பாடுகிறவனைப் பற்றி முழுவதும் அறிந்துவிடலாம். ஏனென்றால் நாம் சோர்வடைந்திருக்கும்போது வருத்தமான கீதம் ஒன்றைப் பாடுவோம். சந்தோஷமாயிருக்கும் பொழுது உற்சாகமானதும், களிப்பானதுமான கீதத்தைப் பாடுவோம். ஆண்டவரின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாயிருந்தால் நமது கீதம் கம்பீரமாகவும், எழுப்பத்தக்கதாகவும் இருக்கும். ஆகவே நாம் என்ன பாடுகிறோமோ அதாகவே இருக்கிறோம்!
ஆண்டவரான இயேசு பாலகனைக் கண்ட சிமியோன் திருப்தி அடைந்தவராய் தேவரீர்… ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது, என்று பாடினார். உன்னை எது திருப்தியாக்கும்? நாம் எதைப் பாடுகிறோமோ அதாகவே இருக்கிறோம் இன்றைக்கு நீ என்ன பாடுகிறாய்?