கனியும் விசுவாசமும்
அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2011)
– Dr.உட்ரோ குரோல்
மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது,
அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக்
கண்டார்கள் (மாற். 11:20 )
ஒரு இனிய காலை வேளையில் அடர்ந்த காட்டின் அருகே அமைந்திருந்த ஒரு பழத்தோட்டத்தில் அறிஞர் ஒருவர் நடந்துகொண்டிருந்தார். அவ்வேளையில் பலத்த காற்று வீசியது. அவ்வேளையில் அம்மரங்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்வதாக அவ்வறிஞரின் கற்பனை விரிந்தது. காட்டு மரங்கள் பழமரங்களை நோக்கி, “நாங்கள் அதிக கலகலப்பாய் இருக்கிறோம். எங்களது சலசலப்பு ஓசை வெகு தொலைவுக்கும் எட்டும் அல்லவா? நீங்கள் ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள். நீங்கள் உணரப்பட வேண்டாமா?” என்று கேட்டன. அதற்கு அப்பழ மரங்கள் “அனாவசிய சலசலப்பால் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது எங்களுக்குத் தேவையற்றது. எங்கள் கனிகளே எங்களை உலகிற்கு உணர்த்தும்” என்று பதிலளித்தன.
இம்மரங்களின் ‘இலைகள் — கனிகள்’ உரையாடலை வாசிக்கும்போது, இயேசுகிறிஸ்து அத்தி மரத்தை சபித்த சம்பவம் நம் நினைவுக்கு வருகிறதல்லவா? கனியையும் விசுவாசத்தையும் முக்கியப்படுத்தும் சம்பவமாக அது உள்ளது. இயேசுகிறிஸ்து தமது சிலுவை மரணத்தை நெருங்கும் சமயத்தில் பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. இயேசு எருசலேம் நகருக்குள் மக்களின் வாழ்த்தொலி முழங்க வெற்றி வீரராகப் பிரவேசித்தார்.
அன்று மாலையில் பெத்தானியா ஊரில் இருந்த தமது நண்பர்களின் வீட்டில் தங்கினார். மறுநாள் அதிகாலையில் மீண்டும் எருசலேம் நகருக்குத் திரும்பிவந்தார். தமது பிதாவுக்கடுத்த காரியங்களில் இருப்பதையே அவர் மிகவும் விரும்பினார். அதிகாலையில் தமது பிரசங்கத்தைக் கேட்க வரும் மனிதர்கள் ஏமாறுவதை அவர் விரும்பவில்லை. எனவே காலை உணவுக்கு முன்னரே பெத்தானியாவைவிட்டு கிளம்பியிருக்க வேண்டும். எனவேதான் இயேசுவும் அவருடைய சீஷர்களும் பசியோடிருந்தனர் என நாம் வாசிக்கிறோம். எருசலேமுக்கு போகும் வழியில் இலைகளால் நிரம்பியிருந்த அத்தி மரத்தைக் கண்டனர். பொதுவாக அத்திமரம் பழங்களால் நிறைந்து இருந்தால்தான் அதில் இலைகளும் அதிகமாகக் காணப்படும். அந்தப் பழங்கள் சொற்ப நேரத்திற்கு தமது சீஷர்களின் பசியைப் போக்க உதவுமே என எண்ணியிருக்கக்கூடும். எனவேதான் அம்மரத்தின் கனிகளைப் பறிக்க இயேசு அதனருகே சென்றார். ஆனால் அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. “அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்” (மாற்.11:14). மறுநாள் காலையில் அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருப்பதைக் கண்டார்கள். சீஷர்களுக்கு ஆச்சரியம். இதனை தமது குருவினிடத்துக்குச் சொன்னபோதோ “அவர் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்” (மாற்.11:22) என்றார். ஆம், தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொடுப்பதற்காகவே அந்த அத்திமரம் சபிக்கப்பட்டது. தொடர்ந்து, “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (வச.23) என்று இயேசு விளக்கினார்.
தாவர வல்லுநர்களின் குழு ஒன்று தங்கள் ஆய்வுக்காக ஆல்ப்ஸ் மலையின் உயரமான ஒரு பகுதிக்குச் சென்றது. அவ்விடத்திலே புதுவகை மலரினங்களை அவர்கள் தேடினார்கள். ஒருநாள் மிக ஆழமான கணவாய்ப் பகுதி ஒன்றில் அழகானதும் அரிதானதுமான மலர்ச்செடிகளை அவர்கள் கண்டுபிடித்தனர். மலைகளுக்கு இடையே உள்ள இடுக்கு வழியில் இருந்த அந்த அபூர்வமான மலரைப் பெறுவது அவர்களுக்கு ஒரு கடினமான செயலாகத் தோன்றியது. அந்நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டிடையச் சிறுவன் ஒருவன் அங்கே வந்தான். அறிஞர் ஒருவர் அவனிடம் தங்களுக்கு அம்மலர்களைப் பறித்துத் தர இயலுமா என்று கேட்டார். அவனது இடுப்பில் ஒரு கயிறைக் கட்டி அப்பள்ளத்தாக்கில் பத்திரமாக இறக்கிவிடுவதாகவும் கூறினார். அந்த அகன்ற ஆழமான பிளவை பார்வையிட்ட அச்சிறுவன் அவர்களிடம், “சற்று காத்திருங்கள்; நான் சீக்கிரமாக திரும்பி வருவேன்” என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுத்தான். சிறிது நேரம் கழித்து அச்சிறுவன் ஒரு பெரியவருடன் அங்கே வந்தான். “நான் இப்பொழுது அப்பள்ளத்துக்குச் சென்று அம்மலர்களை உங்களுக்கு பறித்து தர முடியும். ஆனால் என் இடுப்பில் நீங்கள் கட்டும் கயிறைப் பிடித்துக் கொள்வது இம்மனிதராகவே இருக்க வேண்டும். ஏனெனில் இவர் என் தந்தை” என்றான். ஆம், அச்சிறுவன் தன் தந்தை மேல் வைத்திருந்த நம்பிக்கை பெரியது. அவரை நம்பி தன் உயிரையும் அபாயத்துக்கு உட்படுத்திக்கொள்ள அவன் தயங்கவில்லை. தந்தை மேல் வைத்த விசுவாசத்தை செயலில் காட்ட அவன் முற்பட்டான்.
நம்முடைய வாழ்விலும் விசுவாசமும் கனியும் இணைந்து செல்லவேண்டும். இயேசுகிறிஸ்து அத்தி மரத்தை சபித்த நிகழ்ச்சி வலியுறுத்தும் காரியமும் இதுவே. நாமும் நம்முடைய வாழ்வில் கனிகொடுக்க வேண்டுமெனில் நமது கரத்தைப் பிடித்திருக்கிறவரை விசுவாசிக்க வேண்டும். நமக்குக் கொடுக்கப்பட்ட பணி எதுவாயிருந்தாலும் தேவன் மேல் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தைப் பொறுத்தே அப்பணியின் நிறைவும் சிறப்பும் அமையும்.
அதிகாலை கீதம்:
என்னை நம்புவோருக்கு உண்மையுள்ளவனாயும்;
என்னைப் பேணுவோருக்கு தூய்மையுள்ளவனாயும்;
துயரங்களின் மத்தியிலும் விசுவாசமுள்ளவனாயும்;
எதிர்ப்புகள் நடுவிலும் துணிவுள்ளவனாயும், தேவனே
உமக்கு சாட்சியாக வாழ்ந்திட உதவுமையா.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை