ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

ஜூலை-ஆகஸ்டு 2014

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நம்மை ஆதரித்து வழிநடத்துகிற அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

சத்தியவசன இதழ் வாயிலாக அநேகர் ஆவிக்குரிய சத்தியங்களை கற்றுவருகிறமைக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மாதாந்திர வெளியீடுகள் ஆகியவற்றின் வாயிலாக தாங்கள் பெறும் ஆவிக்குரிய நன்மைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். பங்காளர்களுக்கு அனுப்பி வைத்த “ஆம், இயேசு உங்களை விசாரிக்கிறார்” என்ற புத்தக வெளியீடு அநேகருடைய வாழ்வில் ஆறுதலைக் கொண்டுவந்ததை அறிந்து தேவனைத் துதிக்கிறோம்.

அஞ்சல் வழி வேதபாடத் திட்டத்தில் இணைந்து பயின்று வருகிற அன்பர்கள் விடைத்தாள்களை எங்களுக்கு அனுப்பிவைத்து அடுத்த பாடத்தை பெற்றுக்கொள்ளலாம். Level-1 ஐ முடித்து Level-2 இல் இணைந்துள்ளவர்களுக்கு கூடிய விரைவில் பாடங்கள் அனுப்பி வைப்போம்.

இவ்வூழியப் பணிகள் வாயிலாக இன்னும் அநேகர் சத்தியத்தை அறியவும் மனந்திரும்பவும் வேண்டுதல் செய்வதோடு எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டவும் அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் டாக்டர்.உட்ரோ குரோல் அவர்கள் “சோதிக்கப்படும் விசுவாசம்” என்ற தலைப்பில் எழுதிய விசேஷித்த செய்தி கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்த ஆபிரகாமின் விசுவாசத்தின் மேன்மையை எடுத்துரைக்கிறது. சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் இரு மகன்களின் உவமையிலிருந்து நாம் தேவனுக்குக் கீழ்ப்படியும் அவசியத்தைக் குறித்து விளக்கியுள்ளார்கள். அன்பு ஒன்றுதான் கிறிஸ்தவ வாழ்வில் பிரதானமான ஒன்று என்பதை சகோதரி.சாந்தி பொன்னு அவர்கள் “வாழ்வில் ஒளிவீசும் அன்பு” என்ற தலைப்பில் எழுதிய செய்தியில் விவரித்துள்ளார்கள். திரித்துவத்தைக் குறித்து திரு.பாபிங்டன் அவர்கள் தொகுத்து வெளியிட்டிருந்த செய்தியை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். இச்செய்தியின் வாயிலாக திரித்துவத்தைக் குறித்த உண்மையை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள இயலும். சகோதரர்.வசந்தகுமார் அவர்கள் யோசுவாவின் வாழ்க்கையிலிருந்து எழுதிய தொடர் செய்தியின் வாயிலாக வாக்குத்தத்தத்தை நாம் எவ்வாறு சுதந்தரித்துக்கொள்வது என்பதை கற்றுக்கொள்ளலாம்.

கலாநிதி தியோடர் எச்.எப் அவர்கள் எழுதிய “ஆசரிப்புக் கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்” – பழைய ஏற்பாட்டு தொடர் வேதபாடம் இவ்விதழோடு முற்றுபெறுகிறது. இவ்வேதபாடத்தின் வாயிலாக ஆழ்ந்த சத்தியங்களை வாசகர்கள் கற்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இச்செய்திகள் அனைத்தும் உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்