சோதிக்கப்படும் விசுவாசம்

Dr.உட்ரோ குரோல்
(ஜூலை-ஆகஸ்டு 2014)

வாழ்வில் சோதனைகள் ஏற்படுவதை யார்தான் விரும்புவார்கள்? என்னுடைய பள்ளி பருவத்தில் அறிவியல் தேர்வு எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் ஒரு சமயம் அதனை நன்கு எழுத வேண்டுமென்று தீர்மானித்துப் படித்தேன். அது கடினமான தேர்வாக இருந்தாலும், நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டேன். என்னுடைய உழைப்பு வீண் என்று நான் கருதவில்லை.

ஆனால் இஸ்ரவேலின் கோத்திரப் பிதாவாகிய ஆபிரகாமுக்கு ஏற்பட்ட சோதனையைப்போல் எவருக்கும் நேரிடவில்லை. அதில் அவர் தேர்ச்சி பெறுவதற்குத் தனது ஒரே மகனைப் பலியிட வேண்டியதாய் இருந்தது. அச் சோதனை எத்தகையது என்று நாம் இவ்விதழில் சற்றே தியானிப்போம்.

தேவனுடன் சஞ்சரிக்கும் ஒரு விசுவாச வாழ்க்கையை ஆபிரகாம் கற்றுக் கொண்டதை நாமும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. தேவனுடன் உள்ள உறவில் நாம் வளருவதற்காக, சில வேளைகளில் கர்த்தர் நம்முடைய விசுவாசத்தை சோதிக்கிறார். ஆபிரகாமின் வாழ்வில் இது உண்மை என்பதை ஆதியாகமம் புத்தகம் சாட்சி பகருகிறது.

ஆதியாகமம் புத்தகம் எல்லாவற்றுக்கும் தொடக்கம் என்பதையும், எங்கே எல்லாம் தோல்வியடைந்தது என்பதையும் விளக்குகிறது. அத்தவறுகளிலிருந்து நம்மை மீட்பதற்காக கர்த்தர் எவ்வாறு தம்முடைய திட்டத்தை ஆரம்பித்தார் என்பதையும் இப்புத்தகத்தில் நாம் காணலாம். மனுக்குலத்தின் அழுக்கான கந்தைகளின் சலவை நிலையமாக இந்நூல் தோற்றமளிக்கிறது. ஆதாம் ஏவாளின் பாவம், தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்த காயீன், முற்பிதா ஆபிரகாம் கூறிய பொய்கள், சாராளின் பொறாமை இவை போன்ற பலவற்றை இதில் நாம் வாசிக்கிறோம். ஆனால் இன்று நாம், இத்தகைய குற்றங்கள் அவற்றுக்கான தண்டனைகள் இவற்றை ஆராயாமல், இந் நூல் காட்டும் உணர்வுகளையும் கடமைகளையும் பற்றி தியானிப்போம்.

அறிவுடைமையல்லாத காரியங்களைச் செய்யும்படி கர்த்தர் உங்களிடம் கட்டளையிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுடைய கடமையானது உங்களுடைய அறிவுக்கு எதிராக இருப்பின் என்ன செய்வீர்கள்? இதுபோன்ற ஒரு சூழலில் விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாம் என்ன செய்தார்? “இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்” (ஆதி.22:1). கர்த்தர் ஆபிரகாமுக்கு மறுபடியும் தரிசனமானார் என்று இங்கு நாம் வாசிக்கிறோம். ஆதியாகமத்தின் முதல் மூன்று அதிகாரங்களில் ஆதாமுக்கு தரிசனமான கர்த்தர் மீண்டும் 12ஆம் அதிகாரத்தில்தான் ஆபிரகாமுக்கு தரிசனம் அருளுகிறார்.

நோவாவுடன் கர்த்தர் பேசினார் என்று மாத்திரமே வேதாகமம் கூறுகிறது. அவருக்கு தரிசனம் தந்ததாகக் கூறப்படவில்லை. ஒவ்வொரு முறையும் தம்மை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்திய பொழுதெல்லாம், முற்பிதாவாகிய ஆபிரகாம் தேவனுடன் உள்ள ஐக்கியத்திலும் அவரைப் பற்றிய அறிவிலும் வளர்ந்து வந்தார். இக்காலத்திலும் தேவனுடைய ஆள்தத்துவத்தை நாம் தரிசிக்க முடியாவிட்டாலும், அவருடைய சத்திய வார்த்தையில் அவரை நாம் சந்திக்க முடிகிறது. அவருடைய வார்த்தையில் அவரைக் காணும்பொழுது, நீங்களும் நானும் அவரைப் பற்றிய அறிவிலும் ஐக்கியத்திலும் நாள்தோறும் வளர முடியும்.

ஆதியாகமம் 12ஆம் அதிகாரத்தில் கர்த்தர் தம்முடைய முதல் தரிசனத்தில் அக்கால சமுதாயத்தில் தனக்கிருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் ஆபிராமை கல்தேயரின் பட்டணமாகிய ஊர் என்ற தேசத்திலிருந்து தான் காட்டும் தேசத்துக்குப் புறப்பட்டுப் போகச் சொன்னார். மீண்டும் 13ஆம் அதிகாரத்தில் கர்த்தர் தமது திட்டத்தையும் வாக்குத்தத்தத்தையும் ஆபிரகாமுக்கு விளக்கிக் கூறினார்.

15ஆம் அதிகாரத்தில், கர்த்தர் மூன்றாவது முறை தரிசனமாகி, தம்முடைய பொறுமையை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தினார். ஏனெனில் ஆபிரகாம் தமஸ்கு ஊரைச் சேர்ந்த எலியேசரைத் தமது சுதந்தரவாளியாகக் கருதினார். ஆனால் கர்த்தரோ ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைத் தருவதாக வாக்குக் கொடுத்தார்.

ஆதியாகமம் 15:12-21இல் ஆபிரகாமுக்கு நான்காம் முறையாக கர்த்தர் மீண்டும் தரிசனமானார். காரியங்கள் அசாத்தியமாகத் தோன்றும் பொழுது அவர் ஆபிரகாமுக்கு நம்பிக்கையைத் தந்தார். கர்த்தர் எப்பொழுதும் இவ்வாறே செய்பவர். எனது வாழ்க்கையிலும் உங்கள் வாழ்க்கையிலும் தேவன் அவ்வாறே செய்வார். நாம் அவரது வார்த்தையில் நம்பிக்கையைப் பெற முடிகிறது.

17ஆம் அதிகாரத்தில் ஐந்தாவது முறையாக தரிசனமாகி, தம்முடைய வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கான வல்லமையையும் வெளிப்படுத்தினார். என் அன்பு நண்பர்களே, உங்களுக்கும் எனக்கும் கர்த்தர் வாக்குப் பண்ணினதை நிச்சயமாய் நிறைவேற்றவல்லவராய் இருக்கிறார். ஆதியாகமம் 18ஆம் அதிகாரத்தில் சோதோம் கொமோரா மக்கள் மீது கர்த்தர் தம்முடைய இரக்கத்துடன்கூடிய நீதியை வெளிப்படுத்தினார்.

மீண்டுமாக 22ஆம் அதிகாரத்தில் கர்த்தர் ஆபிரகாமுக்கு ஏழாவது முறையாகத் தரிசனம் தந்தார். இங்கே பாடுகளுக்கு இடையே தமது ஐக்கியத்தை வெளிப்படுத்தினார். விசுவாசத்தின் உச்சக்கட்ட சோதனையின்பொழுது முற்பிதாவாகிய ஆபிரகாமுடன் அவர் இருந்தார். ஆபிரகாமின் விசுவாசத்தை சோதிப்பதற்காக கர்த்தர் அவருக்குத் தரிசனமானார். “இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்;” என்று முதல் வசனம் கூறுகிறது.

தேவனால் சோதிக்கப்படுவது நன்மைக்கே என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? எபிரெயர் 11:17,18 “மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே;”

இந்நிகழ்ச்சியிலிருந்து ஆபிரகாமை ஆண்டவர் சோதித்தது ஒரு நல்ல காரியம் என்று நாம் கருதுகிறோம். ஆனால் நீங்களும் நானும் இவ்வாறு சோதிக்கப்படுவதை நாம் விரும்புவதில்லை. ஆனால் இவ்விதமான சோதனைக்குப் பின்னரே நம்முடைய விசுவாசம் வளர்ந்திருப்பதை நாம் நிச்சயமாய்க் காணமுடியும்.

யாக்கோபு தமது நிருபத்தில் “நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின் மேல் செலுத்தினபோது, கிரியை களினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே” (யாக்.2:21-22) என்று எழுதியிருப்பதை இந்நிகழ்வின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கே தேவனால் சோதிக்கப்படாத விசுவாசம், விசுவாசமே அல்ல என்பது தெளிவாகிறது.

ஒரு தேவபக்தியுள்ள வாழ்வைத் தராத விசுவாசம், நம்மை இரட்சிக்க முடியாத விசுவாசமாகத்தான் இருக்கும். உங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கு கிரியைகளைச் செய்யவேண்டும் என்று யாக்கோபு கூறவில்லை. நாம் விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டோம். வேறு எதுவும் தேவையில்லை. இரட்சிப்புக்கான விசுவாசம் வெறும் பேச்சிலல்ல என்பதை நாம் அறிவோம். அது கிரியைகளில் வெளிப்பட வேண்டும். கர்த்தர் ஆபிரகாமை சோதித்தது சரியா? நம்முடைய விசுவாசத்தைக் கர்த்தர் சோதிக்கலாமா? அது சரியே என்று நான் நினைக்கிறேன்.

கடமையுடன் அறிவுடைமையையும் இணைக்கும் ஒரு பாடத்தை ஆபிரகாமுக்குக் கர்த்தர் கற்றுக் கொடுத்தார். “அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்” (ஆதி.22:2). ஈசாக்கு ஆபிரகாமின் ஒரே உடன்படிக்கையின் மகன். அவரே சாராளுக்கு வாக்குத்தத்த குமாரன். “உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின் வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்” என்று ஆதி.17:19 கூறுகிறது.

ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று (ஆதி.18:11). ஆபிரகாம் சாராள் தம்பதியினரின் ஒரே மகன் ஈசாக்கு அவர்களது அற்புத மகன். அவர்கள் அவனிடத்தில் அன்பாயிருப்பதை தங்களுடைய கிரியையில் காட்டினார்கள். சாராள் தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரைத் துரத்திவிடும்படி தனது கணவரிடம் கூறினாள். ஆபிரகாமின் ஒரே குமாரனும் உடன்படிக்கையின் மகனுமான இந்த ஈசாக்கைப் பற்றியே நாம் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

கர்த்தர் ஆபிரகாமை மோரியா தேசத்துக்குப் போய் அங்கே ஒரு மலையின்மேல் ஈசாக்கை பலியிடக் கூறினார். கர்த்தர் காட்டும் ஒரு மலை; அது ஆபிரகாம் அறியாத ஒரு மலை, அங்கே செல்லக் கட்டளை கொடுக்கிறார். இது கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ என்ற கட்டளையைப் போன்று உள்ளதல்லவா!

நாம் அறியாத இடத்துக்குப் போகச் சொல்லும்பொழுது, கர்த்தர் நமக்கு வழி காட்டிச் செல்லுகிறார். அவரை விசுவாசித்து அவருடைய கிரியைகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். தேவன் நம்மை வழிநடத்திச் செல்லும்பொழுது நாம் செல்லும் பாதையைப் பற்றிய கவலைகள் நமக்குத் தேவையில்லை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடைய ஈர்ப்புவிசைக் கொள்கை தமக்குப் புரியவில்லை என்றும், ஆயினும் தனது கணவரைத் தான் நம்புவதால் அது தேவையற்றது என்றும் அவருடைய மனைவி கூறியுள்ளார். அதுபோலவே, தேவன் செய்யச் சொல்லும் செயலின் காரணத்தை நான் புரிந்துகொள்ளாவிட்டாலும், அதைக் கட்டளையிடும் தேவனை நான் நம்புவதே முக்கியம். இது உங்கள் வாழ்விலும் உண்மையல்லவா? சிலவேளைகளில் அச்செயல் அறிவுக்கு ஒத்துப்போகாமலிருக்கலாம். தேவன் செய்யச் சொல்லிக் கட்டளையிடுவது சிறப்பானதாகத் தோன்றாவிட்டாலும் அவருக்குக் கீழ்ப்படிவதே முக்கியம்.

“ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்… அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்” (ஆதி.22:3-5).

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்தான். இது ஆபிரகாமின் குணங்களில் ஒன்றாகும். கர்த்தர் கட்டளையிட்டதைப் புரிந்துகொள்ளா விட்டாலும் ஆபிரகாம் அதை உடனடியாக செயல்படுத்த அதிகாலையில் எழுந்துவிட்டார். இது அவருடைய உறவினரான லோத்தினுடைய செயலுக்கு எதிரானது. சோதோமைவிட்டுப் புறப்பட்டு வெளியேற லோத்துக்கு கர்த்தர் கட்டளையிட்டார். ஆனால் அவரோ சோதோமிலேயே தாமதப்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்கு அதைவிட்டு வெளியேற விருப்பமில்லை. ஆனால் ஆபிரகாமோ லோத்திலிருந்து வேறுபட்டவர்.

“கர்த்தர் இதைச் செய்யச் சொல்வாரானால் நான் கீழ்ப்படிவேன்” என்று எண்ணிய ஆபிரகாம் கர்த்தர் தனக்குக் காட்டின இடத்திற்குச் சென்றார். பெயர்செபாவிலிருந்து மோரியா மலை மூன்றுநாள் பிரயாண தூரமாயிருந்தது என்று 4ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். பெயர் செபா எபிரோனிலிருந்து 28 மைல் தென் மேற்கில் இருந்தது. எபிரோன் எருசலேமுக்கு தெற்கே 25 மைல் தொலைவில் இருந்தது. இத் தூரங்களைக் கணக்கிடுவதைவிட என்னைக் கவர்ந்தது 5ஆம் வசனத்தின் பின்பகுதியாகும். தன்னுடைய ஒரே குமாரனைப் பலியிடுவது தேவனைத் தொழுதுகொள்ளும் ஒரு செயல் என்றே ஆபிரகாம் கருதினார். தொழுகை என்பதற்குரிய எபிரெயச் சொல் ‘shachaw’ இவ்விடத்தில்தான் முதன்முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குரிய பொருள், பணிந்து குனிந்து தாழ விழுந்து தேவனைப் பணிந்துகொள்ளுதல் என்பதாகும். நூற்று ஐம்பது தடவைகளுக்கும் மேலாக வேதாகமத்தில் இச்சொல் காணப்படுகிறது. அனைத்து இடங்களிலும் இச்சொல், முகங்குப்புற விழுந்து பணிந்துகொள்ளுதலையே குறிக்கிறது. இதுவே உண்மையான தொழுகையின் அடையாளம் ஆகும்.

வேதாகமத்தில் துதித்தல் உயரச் செல்லுவதையும், தொழுகை தாழ விழுவதையும் குறிக்கிறது. அறிவுக்கு ஒவ்வாததாகத் தோன்றினாலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதே சிறந்த செயலாகும். கீழ்ப்படிதல் துன்பத்தை அளிக்கும் என்றாலும் நாம் அதனை ஒரு தொழுகையாகக் கருதும்பொழுது, அத்துன்பத்தின் வலியை அவர் நீக்கிப்போடுவார். “நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்” என்று தங்களுடன் வந்த வேலைக்காரர்களிடம் கூறினார்.

ஆபிரகாம் தம்முடைய கடமையை மிகவும் கருத்துடன் ஏற்றுக்கொண்டார். “ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.

அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்; என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகன பலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப் போய், தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலி பீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்” (ஆதி22:6-9). இது ஓர் ஆச்சரியமான நிகழ்வு!

ஆறாம் வசனத்தில் தகப்பனும் மகனும் இணைந்து நடக்கின்றனர். இது ஒன்றும் புதியது அல்ல; ஆனால் இருவரும் தேவனுக்குக் கீழ்ப்படிகின்றனர். ஏழாம் வசனத்தில் “இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே” என்ற ஒரு சிறந்த வினாவை ஈசாக்கு எழுப்புகிறான்.

எட்டாம் வசனத்தில் ஆபிரகாம் தனது விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். “என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்” என்றார். இதுதான் விசுவாசம். ஒன்பதாம் வசனம் கிரியை செய்யும் விசுவாசம். நீங்களும் நானும் செய்ய இருப்பதை பேசுவதால் அல்ல, அது செயலில் இருக்கவேண்டும்.

தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். இதுதான் கிரியைகளில் வெளிப்படும் விசுவாசம்.

இத்தகைய விசுவாசத்தையே யாக்கோபு பேசுகிறார். தேவனைப் பற்றிப் பேசுவது அல்ல, அவருக்குக் கீழ்ப்படிவதே முக்கியம். செய்ய வேண்டிய கடமையை சிரத்தையுடன் செய்வதாகும். இங்கு ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கைக் கட்டி பலிபீடத்தின் மேல் கிடத்தினார். தகனபலிக்கு ஆடு எங்கே என்ற வினா எழுப்பிய ஈசாக்குக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

தேவன் தமது உறுதிமொழியைக் கனப்படுத்துகிறவர். “பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகன பலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது”(ஆதி.22:10-14).

இது ஒரு சிறந்த காவியம். ஆபிரகாம் தனது உடன்படிக்கையின் மகனது உயிரையும் எடுக்கத் துணிந்துவிட்டார். கத்தியை ஓங்கியும் விட்டார். சிறிது நேரத்தில் அதைத் தாழ இறக்கி தனது மகனை வெட்டியிருப்பார். ஆனால் கர்த்தருடைய தூதனானவர் அவ்வேளையில் ஆபிரகாமைக் கூப்பிட்டு அவருடைய மகனுக்கு ஒரு கெடுதியும் செய்யவேண்டாம் என்றார். ஈசாக்கின் இடத்தில் பலிகொடுப்பதற்காக ஓர் ஈடு பொருளைக் கொடுத்தார். இதுபோன்றே உங்களுக்கும் எனக்கும் ஈடாக தமது ஒரே குமாரனைத் தேவன் பலியாகக் கொடுத்தார். நம்முடைய பாவங்களுக்கு நாம் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஆனால் அத்தண்டனையை நாம் பெற்றுக் கொள்ளும் முன்னர், “சற்றுப் பொறு, நான் ஒரு நல்ல திட்டம் வைத்திருக்கிறேன். ஈசாக்குக்குப் பதிலாக ஒரு கடா பலியானதுபோல உனக்குப் பதிலாக நான் வேறு ஒருவரை உன்னுடைய இடத்தில் வைக்கிறேன்” என்று தேவன் கூறினார். இயேசுகிறிஸ்து கல்வாரியில் மரித்தார். அவரிடத்தில் ஒரு பாவமும் காணப்படவில்லை. உன்னுடைய இடத்தில் அவர் மரித்தார். அவரே உனக்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தார்.

தேவன் தம்முடைய வாக்குறுதியை கனப்படுத்துகிறவர். தேவன் தமது வாக்குறுதியை மீண்டுமாக வசனம் 16-19இல் “நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயெர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயெர்செபாவிலே குடியிருந்தான்”. இவ்வதிகாரம் ஆபிரகாமின் சில உறவினர்களின் பட்டியலோடு முடிவடைகிறது. ரெபெக்காளைப் பற்றிய குறிப்புகளுக்காக இது தரப்பட்டுள்ளது என நான் எண்ணுகிறேன். இந்த அதிகாரத்தில் நாம் இரண்டு பாடங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம். முதலாவது, கிரியைகளுள்ள விசுவாசமே மெய் விசுவாசம். வெறும் வாய் வார்த்தைகளில் வெளிப்படுவது உண்மையான விசுவாசமல்ல. எங்களுக்கு விசுவாசம் உண்டு என்று பேசும் அநேக சபை மக்கள் அதனை செயலில் காட்டுவதில்லை. மெய் விசுவாசம் உடைய ஒரு மனிதனின் வாழ்வில் வித்தியாசம் காணப்படும். விசுவாசத்துக்கு நற்கிரியைகளைச் செய்ய முயற்சிக்க வேண்டாம்; ஆனால் நம்முடைய விசுவாசம் கிரியைகளில் தானாகவே வெளிப்படும்.

இரண்டாவதாக, ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடுவது அவருடைய உண்மையான விசுவாசத்தை வெளிப் படுத்துவது மாத்திரமல்ல, தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. நம்முடைய இடத்தில் தேவன் ஏற்றுக்கொள்ளும் ஒரு பலியை ஈடாக செலுத்தினால்தான் உண்மையான இரட்சிப்புக் கிடைக்கும். ஈசாக்கு பலியிடப்படுவதற்குப் பதிலாக ஒரு கடா பலி செலுத்தப்பட்டது போல, நமக்காக கல்வாரியில் இயேசுகிறிஸ்து பலியானார். தேவன் நமக்குக் கட்டளையிடுவது நமக்குப் புரியாவிட்டாலும் அவரை நாம் நம்பவேண்டும். ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதிலும் நம்முடைய இரட்சிப்பிலும் தேவனுடைய திட்டம் பூரணமாக விளங்கியது.

மோசேக்கும், நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட காலத்துக்கும் முன்னதாக ஆபிரகாம் வாழ்ந்தார். எனவே அவருக்கு கொலை செய்யாதிருப்பாயாக என்ற கட்டளை கொடுக்கப்படவில்லை. ஆயினும் ஆபிரகாம் தேவனுடைய நீதியை நம்பினார். நீதியற்ற ஒரு காரியத்தைச் செய்ய தேவன் கட்டளையிடமாட்டார் என்றும், அநீதியான காரியத்தைச் செய்ய தன்னை அனுமதிக்கமாட்டார் என்றும் அவர் நம்பினார். “ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு” (ஆதி.17:1) என்றார்.

இப்பொழுது ஆபிரகாம் உத்தமன் என்ற பாராட்டைப் பெறுகிறார். நாமும் தேவனால் உத்தமர் என்ற பாராட்டைப் பெறுவோமா? யோபுவைப் போல “அவர் என்னை சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என நம்மில் எத்தனைபேர் உறுதியாகக் கூறமுடியும்? நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, அதற்குத் தகுதியாக்க ஆண்டவரிடம் நம்மை அர்ப்பணிப்போம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்