சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜூலை-ஆகஸ்டு 2014)

“அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்” (மத்.21:31,32).

மத்.21.28-32 வரையில் சொல்லப்பட்டுள்ள இந்த உவமை ஒரு சிறிய உவமையாகும். இந்த உவமையிலே சொல்லப்பட்டதன் விளக்கத்தை நாம் தியானிக்கலாம்.

இயேசுகிறிஸ்துவைச் சுற்றி அவரது சீடர்கள், ஆயக்காரர்கள், பக்தி நெறி கோட்பாடுகளில் தாங்கள் பக்திமான் என்று மார்பை தட்டிக்கொண்டு இருக்கிற பரிசேயர், வேதபாரகர்கள், சதுசேயர்கள் மற்றும் பலவிதமான மக்கள் இருந்தனர். சதுசேயர்கள், பரிசேயர்கள், வேதபாரகர்கள் ஆகியோர் தாங்கள்தான் பக்திமான்கள் என்றும், எங்களை தான் கர்த்தர் அழைத்திருக்கிறார், நாங்கள் கர்த்தரின் அறநெறி கோட்பாடுகளைக் கைக்கொண்டு வருகிறோம், நாங்கள்தான் பரலோக ராஜ்யத்திற்கு சொந்தமானவர்கள் என்று உரிமை பாராட்டி மற்றவர்களை அற்பமாக, பாவிகளாக எண்ணினர். ஆண்டவர் இவர்களை உணர்த்துவதற்காக இந்த உவமையைச் சொன்னார்.

ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவனுக்கு ஒரு திராட்சத் தோட்டம் இருந்தது. மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத் தோட்டத்தில் வேலை செய் என்றான். அதற்கு அவன் நான் போகமாட்டேன் என்று சொன்னான். மூத்தமகன் வெளிப்படையாக பேசுகிறவனாயிருந்தான். இன்றைக்கு என் திராட்சத் தோட்டத்தில் வேலை செய் என்று சொன்னவுடனே, “முடியவே முடியாது” என்று சொல்லிவிட்டான். தகப்பனுடைய திராட்சத் தோட்டத்தில் வேலை செய்வது அவனுக்கு கிடைத்த பெரிய பாக்கியமும் உரிமையும் கடமையும் ஆகும். தகப்பனுடைய திராட்சத் தோட்டத்திலே ஆசீர்வாதம் வந்தால் மகனுக்கும் அந்த ஆசீர்வாதத்திலே பங்கு உண்டு. அவனோ தனது தகப்பன் தோட்டத்திலே வேலை செய்ய முடியாது என்கிறான்.

இரண்டாவது மகனை தகப்பன் இப்பொழுது அழைக்கிறான். மகனே, நீ போய் என் திராட்சத் தோட்டத்திலே வேலை செய் என்று சொல்லுகிறான். அப்பொழுது இளையவன், “போகிறேன் ஐயா” என்று சொன்னான். ஆனாலும் திராட்சத்தோட்டம் பக்கமே அவன் போகவில்லை. தகப்பனுக்கு மறுப்பு தெரிவித்திருந்த முதல் மகன் பின்பு, மனஸ்தாபப்பட்டு திராட்சத் தோட்டத்திற்கு போனான் (மத்.21: 29). ஆண்டவர் தன்னைச் சுற்றியிருந்த மக்கள் கூட்டத்திலே இந்தக் கேள்வியைக் கேட்கிறார். இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார். உடனே எல்லாரும் மூத்தவன்தான் செய்தான் என்றனர். ஏனென்றால் முன்பு மாட்டேன் என்று சொன்னவன், பிற்பாடு மனம் மாறி செய்தான். இரண்டாவது மகன் செய்வேன் என்று சொன்னான், ஆனால் செய்யாமல் திராட்சத் தோட்டத்திற்கு போகாமலே இருந்து விட்டான். அப்பொழுது சுற்றி இருந்த சதுசேயர், பரிசேயர், வேதபாரகர்கள் ஆகியோர் தங்களைப் பற்றிதான் அவர் சூசகமாக கூறுகிறார் என்று உணர்ந்துகொண்டனர்.

மத்.21:31,32 ஆகிய வசனங்களில் ஆண்டவராகிய இயேசு இதை விளக்கமாகச் சொல்லுகிறார். ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள். யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை. ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்து உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்திற்கு பிரவேசிக்கிறார்கள் என்று விளக்கினார். ஆண்டவருடைய அழைப்புக்கும், வேலைக்கும், திட்டத்திற்கும் தாங்கள்தான் பாத்திரவான்கள் என்று சொல்லி உரிமைபாராட்டுகிற அந்த பரிசேயர்கள் சதுசேயர்கள், வேதபாரகர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த அடிப்படையிலும் எந்த சூழ்நிலையிலும் தேவ திட்டத்தையோ, சித்தத்தையோ, பணியையோ அவர்கள் செய்யவில்லை. தேவனுடைய திட்டம் என்ன? எல்லா மக்களும் மனந்திரும்பி தேவனுடைய ராஜ்யத்திற்குள் வரவேண்டும் என்பதே.

ஆனால் அந்த பரிசேயர் வேதபாரகர்களாகிய எல்லாரும் தாங்கள்தான் தேவனுடைய ராஜ்யத்திற்கு சொந்தம் என்று சொன்னார்களே தவிர, அதைச் செய்ய முயற்சிக்கவில்லை. ஆயக்காரர்களும் வேசிகளும் உள்ளே நுழைய முடியாது என்று எண்ணி அவர்களை அற்பமாக எண்ணினார்கள். ஆண்டவர் சொன்னார்: மூத்தவன் முதலில் போக மாட்டேன் என்று சொல்லியும் பிற்பாடு மனம் மாறி செய்தான். இவர்கள் யார்? இவர்கள்தான் ஆயக்காரரும் பாவிகளும். இரண்டாவது மகன் போகிறேன் ஐயா என்று சொல்லி, செய்யவே இல்லை. இவர்கள் யார்? இவர்கள்தான் சதுசேயர் பரிசேயர் வேதபாரகர்கள். ஆண்டவருக்காக நாங்கள் செய்வோம் என்று சொன்னவர்கள் வாழ்க்கையில் செய்யவில்லை. ஆனால் ஆண்டவர் ராஜ்யத்தின் அழைப்பை ஆயக்காரர்களுக்கும் வேசிகளுக்கும் கொடுத்தபொழுது தங்களுக்குத் தகுதியில்லை, தாங்கள் அபாத்திரவான்கள், தேவ ராஜ்யத்திற்குத் தகுதிபடைத்தவர்கள் இல்லை என்று மறுத்தார்கள். ஆகிலும் மனஸ்தாபப்பட்டு போனார்கள். இதைத்தான் ஆண்டவர் சொன்னார். யோவான் ஸ்நானகன் மூலமாக தேவராஜ்யத்தின் அழைப்பு ஆயக்காரர்களுக்கும் வேசிகளுக்கும் வந்தபோது முதலில் மறுத்தார்கள்; பின்பு மனஸ்தாபப்பட்டு அழைப்பை ஏற்று திருமுழுக்கு எடுத்து தேவ ராஜ்யத்தில் சேர்ந்துகொண்டார்கள். சதுசேயரும், பரிசேயரும் வேதபாரகர்களுமோ அந்த அழைப்பு வந்தும் செய்வோம் என்று சொல்லி செய்யாமல் போனீர்களே என்று சூசகமாக அவர்களைக் கண்டிக்கிறார்.

ஆண்டவர் எத்தனைமுறை வசனத்தின் மூலமாக, ஊழியக்காரர் மூலமாக, சூழ்நிலைகள் மூலமாக உன்னோடும் மனச்சாட்சியோடும் பேசியிருக்கிறார். எத்தனை அழைப்பை கொடுத்திருக்கிறார். எத்தனை தருணங்களைக் கொடுத்தார். செய்கிறோம் என்று சொல்லி செய்திருக்கிறோமா? ஆனால் செய்யமாட்டோம் என்று சொன்ன அநேகர் செய்திருக்கிறார்கள். ஆண்டவர் உன்னை ஊழியத்திற்கு அழைத்தார். ஆண்டவரே உம்முடைய ஊழியத்திற்கு நான் தகுதியுள்ளவன் அல்ல, திறமை படைத்தவன் அல்ல என்று சொல்லி ஆண்டவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாயா; ஆண்டவர் உங்களுக்காக சிலுவையில் சிந்தின தியாகத்தின் மீட்பைப் புரிந்துகொண்டு மனஸ்தாபப்பட்டு அர்ப்பணியுங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொள்வார்.

மோசேயை அழைத்தார்; அவர் முதலாவது மாட்டேன் என்று சொன்னார். பிற்பாடு அழைப்பை ஏற்றுக்கொண்டு போனார். ஆனால் சதுசேயர் பரிசேயர் வேதபாரகர்கள் ஆகிய இவர்கள் தேவனுடைய சித்தத்தை செய்வோம், தேவனுடைய பிரமாணத்தைக் கைக்கொள்வோம் என்று சொன்னார்கள். ஆனால் தேவ திட்டத்தையும், தேவ ராஜ்யத்தையும், தேவ நீதியையும் செய்யாமல் போனார்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? செய்வோம் என்று சொல்லி செய்யாதவர்களா? அல்லது செய்யமாட்டோம் என்று சொல்லி செய்கிறவர்களா? கீழ்ப்படிவோம் என்று சொல்லி கீழ்ப்படியாதவர்களா? நான் கீழ்ப்படியவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு ஆண்டவரின் கல்வாரி காட்சியைக் கண்டு உணர்ந்து கீழ்ப்படிகிறவர்களா? நீங்கள் மூத்த மகனா? இளைய மகனா?