தேற்றும் நல்ல தேவன்

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
(ஜூலை-ஆகஸ்டு 2014)

(ஆ) மோசேக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.
மோசே செய்த பணியைத் தொடர்ந்து செய்வதற்காக யோசுவாவைப் பெலப்படுத்தும் தேவன், தாம் மோசேக்கு கொடுத்த வாக்குத் தத்தத்தையும் அவருக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

“நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதி மட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்” (யோசுவா 1:3-4).

தேவன் மோசேக்கு கொடுத்த வாக்குத்தத்தம் ஆரம்பத்தில் இஸ்ரவேல் மக்களின் தகப்பனான ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டது. தேவன் ஆபிரகாமிடம் அவனுடைய சந்ததிக்கு ஒரு தேசத்தைக் கொடுப்பதாக வாக்களித்ததோடு (ஆதி.12:2-3,13:15), அதனுடைய எல்லைகளையும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார் (ஆதி.17:19-21). பிற்காலத்தில் ஆபிரகாமின் சந்ததியாரிடமும் தேவன் இவ்வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்தியிருந்தார் (ஆதி.26:3-5, 28:13). இவ்வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் வந்தபோது மோசேயிடம் இதை நிறைவேற்றும் பணியைத் தேவன் ஒப்படைத்திருந்தார் (யாத்.1:3). ஆனாலும், மோசே ஒரு சந்தர்ப்பத்தில் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமற் போனதினால், அவரால் வாக்குத்தத்த பூமிக்குள் செல்லமுடியாமற் போய்விட்டது (எண்.20:6-12, உபா.1:37, 3:26). இதனால், மோசே மரணமடைந்த பின்னர் யோசுவாவிடம் இப்பணியை ஒப்படைக்கும் தேவன், மோசேக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை அவருக்குச் சுட்டிக்காட்டுவதோடு வாக்களிக்கப்பட்ட தேசத்தை அவருக்குக் கொடுப்பதாக உறுதியளிக்கின்றார்.

மோசேக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத் தத்தைத் தேவன் யோசுவாவுக்குச் சுட்டிக்காட்டும்போது, “நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” (யோசுவா 1:3) என்று குறிப்பிட்டுள்ளார். தேவனுடைய கூற்று இறந்தகாலத்தில் இருப்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, “கொடுப்பேன்” என்று கூறாமல் “கொடுத்தேன்” என்று கூறுகின்றார். ஏனென்றால், “தேவனைப் பொறுத்தவரை அவர் ஏற்கனவே அத் தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்துவிட்டார். இப்பொழுது அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டியவர்களாய் இருந்தனர்”. இதனால்தான், வாக்களிக்கப்பட்ட தேசத்தில் யோசுவாவின் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும், அதாவது, அத்தேசத்தில் யோசுவா எவ்வளவு தூரம் செல்வாரோ அவ்வளவையும் தேவன் அவருக்குக் கொடுத்துள்ளதாகக் கூறினார். எனவே யோசுவாவின் பணி, வாக்களிக்கப்பட்டதை எடுத்துக்கொள்வதாகவே இருந்தது. இது யுத்தத்தின் மூலம் கைப்பற்றப்படவேண்டிய பிரதேசமாக இருந்தாலும், தேவன் யுத்தத்தில் யோசுவாவுக்கு வெற்றியைக் கொடுப்பவராக இருந்தார். இதைப்போலவே தேவன் நமக்கும் வேதாகமத்தில் பல வாக்குத்தத்தங்களைக் கொடுத்துள்ளார். இவையனைத்தும் “இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருப்பதாக” வேதாகமம் கூறுகிறது (2கொரி.1:20). எனவே இயேசுகிறிஸ்துவுக்குள் இருக்கும் நாம், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் சுவீகரித்துக்கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கின்றோம். நாம் எத்தனை வாக்குத்தத்தங்களை நமக்காக எடுத்துக்கொள்கின்றோமோ அத்தனையும் நம்முடையதாகும்.

தேவன் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் தேசத்தின் எல்லைகள் 4ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தேவன் ஆபிரகாமுக்கும் மோசேக்கும் வாக்குத்தத்த பூமியைப்பற்றி வாக்களிக்கும்போதும் இந்த எல்லைகளைப்பற்றி குறிப்பிட்டிருந்தார் (ஆதி. 15:18-21, உபா.1:6-8). தேவனுடைய அறிவிப்பின்படி, வாக்குத்தத்த தேசத்தின் தெற்கு எல்லையாக சாக்கடலுக்குத் தெற்கே உள்ள வனாந்தரமும், வடக்கு எல்லையாக லீபனோனும் (தற்கால லெபனான் நாடு), கிழக்கு எல்லையாக இயூப்பிரத்தீஸ் நதியும், மேற்கு எல்லையாக மத்திய தரைக்கடலும் இருக்கும். இப்பகுதியில் யோசுவாவின் காலடி படும் பிரதேசம் முழுவதும் இஸ்ரவேல் மக்களுடையதாகும் என்று தேவன் வாக்களித்தார். இப்பிரதேசத்தைத் தேவன் “ஏத்தியரின் தேசம்” என்று இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம், அக்காலத்தில் கானானில் வசித்தவர்கள் ஏத்தியர்கள் என்றும் அழைக்கப்பட்டதேயாகும் (ஆதி.15:20, எசே.16:3). ஏத்தியர்கள் பாலஸ்தீனாவை விட்டுச் சென்ற பின்பும், எகிப்தியர்களும், பாபிலோனியர்களும் இப்பிரதேசத்தை ஏத்தியரின் தேசம் என்றே அழைத்தனர். தேவன் இவ்வளவு பெரிய விஸ்தாரமான தேசத்தை வாக்களித்திருந்த போதிலும், யோசுவா இப்பிரதேசம் முழுவதையும் கைப்பற்றவில்லை. ஏனெனில், அவன் குறிப்பிட்ட அளவு பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், தேசத்தைப் பங்கிடத் தொடங்கிவிட்டான். அவன் யுத்தத்தை நிறுத்தாமல், இன்னும் அதிக பகுதிகளுக்குச் சென்றிருந்தால் அவையும் அவனுக்குக் கிடைத்திருக்கும்.

இஸ்ரவேல் மக்களுடைய சரித்திரத்தில் தாவீது மற்றும் சாலொமோனுடைய ஆட்சிக் காலங்களிலேயே தேவன் இங்கு வாக்களித்த அளவு விஸ்தாரமான தேசமாக இஸ்ரவேல் ராஜ்ஜியம் இருந்தது (2சாமு.8:3-10, 1இராஜா. 4:21-24, 1நாளா.18:3-10). யோசுவாவைப் போலவே சிலநேரங்களில் நாமும் தேவன் நமக்கு வாக்களித்துள்ள ஆசீர்வாதங்களை முழுமையாக சுதந்தரித்துக் கொள்ளாமல் இருக்கின்றோம். ஆவிக்குரிய வாழ்வில் வருகின்ற சோர்வுகள், அசதிகள், அவிசுவாசம் என்பன, தேவன் நமக்கு கொடுத்துள்ள ஆசீர்வாதங்களை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்களாக உள்ளன. எனவே, நாம் இவற்றை நீக்கிவிட்டு விசுவாசத்தோடு முன்னோக்கிச் செல்கிறவர்களாக இருக்கவேண்டும்.

மோசேக்கு கொடுக்கப்பட்ட வாக்குத் தத்தம் யோசுவாவின் மூலம் நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்தும் தேவன், தாம் மோசேயோடு இருந்ததுபோல யோசுவாவோடும் இருப்பதாகக் கூறுவதோடு, வாக்களிக்கப்பட்ட தேசத்தை யோசுவா கைப்பற்றி இஸ்ரவேல் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்” (யோசுவா 1:5-6).

வாக்குத்தத்த தேசத்தை யோசுவா பங்கிட்டுக் கொடுப்பார் என்று தேவன் கூறும் போது, அவர் அத்தேசத்தை நிச்சயமாகக் கைப்பற்றுவார் என்பதை உறுதிப்படுத்துகிறவராய் இருந்தார். மோசேயின் காலத்திலும் தேவன் இதைத் தெரிவித்திருந்தார் (உபா. 1:38). உண்மையில், தேசத்தைக் கைப்பற்றினால்தான் அதைப் பங்கிட்டுக் கொடுக்க முடியும். யுத்தத்தின் மூலமே யோசுவா வாக்குத் தத்ததேசத்தைக் கைப்பற்றப்போவதனால், “ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை” என்று தேவன் கூறுகின்றார். அதாவது, யோசுவாவுக்கு யுத்தத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பதைத் தேவன் உறுதிப்படுத்துகிறார். எனினும், எதிரிகள் மாத்திரமல்ல, இஸ்ரவேல் மக்களிலும் ஒருவனும் யோசுவாவுக்கு எதிராகச் செயற்படப் போவதில்லை என்பதையும் தேவன் இதன்மூலம் யோசுவாவுக்கு உறுதிப்படுத்துகிறார். அதாவது, மோசேயின் காலத்தில் மக்கள் அவருக்கு எதிராகக் கலகம் செய்து முறுமுறுத்தது போன்ற சம்பவங்கள் எதுவும் யோசுவாவுக்கு ஏற்படுவதில்லை என்பதை தேவன் இதன்மூலம் சுட்டிக்காட்டுகிறார்.

யோசுவாவைப் போல நாமும் தேவனுடைய சித்தத்தின்படி அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது, நமக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல் போய்விடும். எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு வெற்றியே கிடைக்கும். ஏனெனில், தேவன் நமக்கு கொடுத்துள்ள வாக்குத்தத்தங்கள் நிச்சயமாய் நம்முடைய வாழ்வில் நிறைவேறும். யோசுவாவை எவரும் எதிர்க்காமல் இருந்ததற்கும், அவருக்கு வெற்றி கிடைத்தற்கும் முக்கியமான காரணம் தேவன் எப்பொழுதும் அவரோடு இருந்ததேயாகும். உண்மையில், “தேவன் ஒருபோதும் நம்மைக் கைவிடாமல் எப்பொழுதும் நம்முடன் இருக்கின்றார் என்னும் நம்பிக்கையே, எல்லா சூழ்நிலைகளிலும் மனிதருக்குத் திடமனதையும் பலத்தையும் கொடுப்பதாய் உள்ளது”. “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று அவர் யோசுவாவுக்கு வாக்களித்தார். இதே விஷயத்தை மோசேயும் யோசுவாவுக்கு சுட்டிக்காட்டியிருந்தார் (உபா.31:7- 8). இப்பொழுது தேவனே இதை யோசுவாவுக்கு உறுதிப்படுத்துகின்றார். தேவனுடைய இவ்வாக்குத்தத்தம் அவர் வழக்கம்போல தமது பக்தர்களுக்கு கொடுக்கும் உறுதிமொழியாகும். இதனால்தான், மோசேயின் காலத்தில் இவ்வாக்குத்தத்தம் இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது (உபா.11:25).

இதற்கு முற்பட்ட காலத்தில் இஸ்ரவேல் மக்களுடைய முற்பிதாக்களான ஈசாக்கு யாக்கோபு என்போருக்கும் தேவன் இதே விதமான வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருந்தார் (ஆதி.26:3,31:3). புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு என்னும் பெயரில் மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்த தேவன் (யோவா. 1:1,14, 1தீமோ.3:16) உலகத்தின் முடிவு பரியந்தம் தம்முடைய சீஷர்களுடன் இருப்பதாக வாக்களித்துள்ளார் (மத்.28:20). இயேசு கிறிஸ்துவின் சீஷர்களே “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்படுவதனால் (அப்.11:26), அன்று யோசுவாவுடன் இருந்த தேவன் இன்று கிறிஸ்தவர்களாகிய நம்முடனும் இருக்கின்றார். தேவன் எப்பொழுதும் நம்மோடு இருப்பதனால், எவராலும் நம்மை எதிர்க்க முடியாது. இதனால் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

இன்று நம்மிடம் இருக்கும் மிகப் பெரியதும், அதிக வல்லமையும் மிக்க ஆயுதம், “தேவன் நம்மோடு இருப்பதேயாகும்”. எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபம் இவ்வுண்மையைச் சுட்டிக் காட்டும்போது, “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே” என்று குறிப்பிட்டுள்ளார் (எபி.13:5,6).

தற்காலத்தில் சில கிறிஸ்தவர்கள், தேவன் எப்பொழுதும் தங்களுடன் இருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். இதற்குக் காரணம், இவர்கள் தாங்கள் தேவனை ஆராதிக்கும் வேளையில் அல்லது, தங்களுடைய வாழ்வில் அவர் அற்புதமாகச் செயற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே தங்களுடன் இருக்கின்றார் என்று எண்ணுகின்றனர். இத்தகைய நேரங்களில் தேவன் நம்முடன் இருப்பதை சிறப்பான விதத்தில் நம்மால் உணரக்கூடியதாக இருப்பது உண்மை என்றாலும், அவர் எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்முடன் இருக்கின்றார் என்பதே வேதாகமம் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும். தேவன் எப்போதாவது நம்மிடம் வந்துவிட்டுப் போகும் விருந்தாளி அல்ல. அவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கும் தெய்வம். இதனால், இன்பமான நேரத்தில் மாத்திரமல்ல, துன்ப காலத்திலும் அவர் நம்மோடு இருக்கின்றார். ஆராதனை வேளையில் மாத்திரமல்ல, எல்லா நேரங்களிலும் நம்மோடு இருக்கின்றார். அற்புதம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் மாத்திரமல்ல, அன்றாட வாழ்வின் மேடு பள்ளங்கள் அனைத்திலும் நம்மோடு இருக்கின்றார். இதை நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் மறந்துவிடக்கூடாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மனிதர் இதை மறந்துவிடுவதனால், தேவன் தம்முடைய பேச்சின் முடிவிலும் 9ஆம் வசனத்திலும் மறுபடியுமாக இதை யோசுவாவுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்:

“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (யோசுவா 1:9).

தேவன் எப்பொழுதும் நம்மோடு இருப்பதனால் நாம் எதற்கும் கலங்கவோ பயப்படவோ தேவையில்லை. நாம் செல்லுமிடமெல்லாம் அவர் நம்மோடு கூடவருவதனால் நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. எப்பொழுதும் நம்மோடு இருக்கும் தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு வெற்றியைத் தருவார்.

(தொடரும்)

சத்தியவசனம்