அத்தியாயம்: 15
Dr.
தியோடர்.எச்.எஃப்
(ஜூலை-ஆகஸ்டு 2014)

தியான நேரத்திற்கு முன்மாதிரி

பரிசுத்த ஸ்தலம்

aasaripukoodaaramபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்ததும் ஆசாரியன் தன் இடதுபக்கத்தில் பொன் குத்து விளக்கு இருப்பதைக் கண்டான். அது ஆசரிப்புக் கூடாரத்தின் உட்பகுதிக்கு வெளிச்சம் கொடுத்தது. இந்தக் குத்துவிளக்கு பரிசுத்த ஆவிக்கு அடையாளம் என்று பார்த்தோம். அவர்தான் இயேசுகிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுபவர். நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரிசுத்தாவியானவரைகுறித்து இப்படிக் கூறியுள்ளார். “அவர் என்னுடையதில் எடுத்து, உங்களுக்கு அறிவிப்பதனால் என்னை மகிமைப்படுத்துவார்” (யோவா. 16:14). இவ்வாறு நமது ஜெபவேளையில் கிறிஸ்துவைக் குறித்த சத்தியங்களை நமக்கு வெளிப் படுத்துகிற பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி கூற வேண்டும்.

பரிசுத்த ஸ்தலத்தில் எதிர்ப்புறத்திலிருந்த சமுகத்தப்ப மேஜையின் மீது குத்துவிளக்கின் வெளிச்சம் பிரகாசித்தது. மேஜை வெளிப்படுத்தப்பட்டது. இயேசு தம்மை “ஜீவ அப்பம்” என்று கூறினார் (யோவா.6:35, 48). இயேசு கிறிஸ்து தேவனுடைய ஜீவ வார்த்தையாயிருந்தார் (யோவா.1:1). வேதாகமம் எழுதப்பட்ட தேவவார்த்தை. எனவே நாம் ஜீவ அப்பமாகிய வேத வசனங்களைப் புசிக்க வேண்டும். எழுதப்பட்ட வார்த்தையைப் புசிப்பதன் மூலம், வார்த்தையாகிய இயேசுவைப் புசிக்கிறோம்.

பரிசுத்த ஆவியானவரின் பணி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, போதனை, ஊழியம், அற்புதங்கள் போன்றவற்றை வேத வசனங்கள் மூலம் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகும். அதன்மூலம் இயேசு கிறிஸ்துவைக் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுகிறோம். நம்முடைய ஜெபவேளையின் முக்கியமான மையப்பகுதி, வேதவசனங்களைக் குறித்து தியானம் செய்வதாகும்.

இந்தப் பரிசுத்த ஸ்தலத்தினுள் பொன் தூப பீடம் இருந்தது. மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு நுழையும் வாசலில் தொங்கும் திரைக்குச் சற்று முன்னால் இந்தத் தூபபீடம் காணப்பட்டது. இந்தத் தூபபீடமே விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் ஏறெடுக்கும் இடமாகும். குறிப்பாக மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்தல் இங்கே நடைபெறும். அந்த ஜெப வேளையில், விசுவாசி தன்னுடைய தனிப்பட்ட பாவங்களுக்காக ஜெபம் பண்ணுவான். தண்ணீர்த் தொட்டியினருகில் சுத்திகரிப்பது போன்ற செயல் இது. இங்கே பொன் தூப பீடத்தருகில் மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்வான். நாம் மற்றவர்களுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்வதற்குமுன் நம்முடைய உறவு தேவனுடன் சரியாய் இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

மகா பரிசுத்த ஸ்தலம்

மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசல் தொங்கு திரையானது வருடம் ஒருமுறை ஈடேற்ற நாளன்று மகா பிரதான ஆசாரியனை மட்டும் பாவ நிவாரண பலியின் இரத்தத்துடன் உள்ளே பிரவேசிக்க அனுமதிக்கும்; தவிர வருடத்தின் மற்ற 364 நாட்களிலும் எவரையும் உள்ளே பிரவேசிக்க அனுமதிப்பதில்லை.

ஆனால் இன்று திரை இரண்டாகக் கிழிக்கப்பட்டுவிட்டதால், நாம் யாவரும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் உள்ளே சென்று பார்க்கலாம். தேவனை முகமுகமாய்த் தரிசிக்கலாம். இதைக் குறித்து வேதாகமம் இவ்வாறு கூறுகிறது:

“ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்…”(எபி.10:19,20,21)

இயேசுகிறிஸ்து சிலுவையில் தமது மீட்புப் பணியை முடித்த உடன் தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது என்று மத்.27:51இல் கூறப்பட்டுள்ளது. இந்தத் தியாக பலியால் இயேசு செலுத்தின பிராயச்சித்தத்தினாலும், அவர் சிந்திய இரத்தத்தினாலும், அவர் அனுபவித்த மரணத்தினாலும் தேவன் திருப்தியடைந்துவிட்டார். அவருடைய ஒழுங்கும் நியதியும் காப்பாற்றப்பட்டுவிட்டன. இயேசுகிறிஸ்து சிந்திய இரத்தத்தின் புண்ணியத்தால் எவரும் தேவனுடைய சமுகத்தில் வருவதற்கான பாக்கியம் அருளப்பட்டிருக்கிறது.

எனவே, இந்த ஜெப வேளையில், ஜெப அறையில் நாம் உலகத்தொடர்புகளை விட்டுவிட்டு, தேவனுடைய முன்னிலையில், அவருடைய சமுகத்தில் வந்து அவருடன் உறவாடுகிறோம். இப்படி இந்தத் தனி ஜெப அறையில் மற்றவர்களுக்காகப் பரிந்து வேண்டுதல் செய்யும் பணியையும் முடித்து விட்டு நாம் வெளியேறுகிறோம். மறுபடியும் அடுத்த நாளில் இந்தத் தியான அறைக்கு ஆவலுடன் வரவேண்டும். வெளிவந்த பின் இயேசுவுக்கு உண்மையான சாட்சியாய் நாம் செயல்பட வேண்டும். இயேசு இப்படிக் கூறினார்: “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்”(யோவா.10:9). விசுவாசி தன் தியான அறைக்குச் சென்று, நாம் இந்த அதிகாரத்தில் கண்ட முறையில் அமைதியாய் வழிபாடு செய்துவிட்டு மற்றவர்களுக்காகவும் வேண்டுதல் செய்துவிட்டு வெளியே வந்து இந்த வெளி உலகில் கிறிஸ்துவுக்காகச் சாட்சி கூறச் செல்லலாம்.

தன்னுடைய தியான அறையிலிருந்து ஜெபம் முடிந்து விசுவாசி வெளியே செல்லும்போது, தனக்கு முன்னே இயேசுகிறிஸ்து செல்லுகிறார் என்று விசுவாசிக்க வேண்டும். இயேசு தம்மை ஒரு நல்ல மேய்ப்பனோடு ஒப்பிட்டுப் பேசினார்.

“அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு அவைகளுக்கு முன்பாக நடந்து போகிறான். ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது” (யோவா.10:4).

இயேசு (நல்ல மேய்ப்பன்) முன்னே செல்லுகிறார். அவர் காட்டுமிடமெல்லாம் அவருக்குப் பின்செல்வது விசுவாசியின் முக்கியக் கடமையாகும். இயேசு இப்படிக் கூறினார். “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக்.9:23).

தியான அறையில் ஜெபத்தியானம் முடித்து வெளியே வரும் விசுவாசி, ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்துத் தன் கடமைகளை முடித்துவிட்டு வெளியே வரும் ஆசாரியனைப் போலத் தன்னை நினைத்துக் கொள்ளலாம். விசுவாசி சமுகத்தப்ப மேஜையைத் தாண்டிச் செல்லும்போது, தேவன் தனக்குத் தினமும் புசித்துத் திருப்தியடைய வேத வசனங்களைத் தந்திருப்பதற்காக நன்றி கூறவேண்டும். பொன் குத்து விளக்கைத் தாண்டிச் செல்லும்போது பரிசுத்த ஆவியானவரை நினைவுகூர வேண்டும். கர்த்தருடைய காரியங்களை வெளிப்படுத்தவும், வேத வசனங்களின் உட்கருத்தை வெளிப்படுத்தவும் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.

விசுவாசி தண்ணீர்த் தொட்டியைக் கடந்து செல்லும்போது, தன்னிடத்தில் ஒன்றுமில்லை. தான் இயேசுகிறிஸ்துவில் இருக்கும்போதுதான் தனக்கு எல்லாம் உண்டு என்பதை உணர வேண்டும். வெண்கலப் பலிபீடத்தைக் கடந்து செல்லும்போது, விசுவாசி தான் இயேசுவோடு பாவத்துக்கு மரித்து, உலகத்துச் சிந்தனைகள், ஆசை இச்சைகள் எல்லாவற்றையும் சிலுவையில் ஒழித்து விட்டதாக உணர வேண்டும். விசுவாசி பவுலுடன் சேர்ந்து இப்படிக் கூறவேண்டும்.

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி எல்லா இடங்களி லேயும், எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2கொரி.2:14). “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி.4:13).

எனவே ஆசரிப்புக் கூடாரத்தை, ஆண்டவரோடு நீங்கள் தினமும் செலவிடும் ஜெபத் தியான நேரமாக கருதுங்கள். ஆரம்பத்தில் சுருக்கமாகச் சில நிமிடங்கள் மட்டும் செலவிடலாம். ஆனால் நீங்கள் தினமும் இந்த தியான நேரம் செலவிடுவதை ஒழுங்காகச் செய்து வாருங்கள் என்று உங்களை உற்சாகப் படுத்துகிறேன். வெகு சீக்கிரத்தில் நீங்களாகவே இந்த தியான நேரத்துக்கு அதிக நேரம் தேவை என்பதை உணருவீர்கள். நீங்கள் உலக சிந்தனைகளை மறந்து, தேவனுடைய சமுகப் பிரசன்னத்தை உணர்ந்து, ஜெபவேளையில் இருக்கும்போது, நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கை செய்து பரிசுத்தமடைகிறீர்கள். ஆவிக்குரிய நிலையில் பலப்படுத்தப்பட்டு திடனடைகிறீர்கள். வேதாகமத்தை வாசித்துத் தியானிக்கும் போதும், மற்றவர்களின் தேவைகளுக்காய் மன்றாடி ஜெபிக்கும்போதும், தேவனுடைய கிருபாசனத்துக்கு முன்பாக நீங்கள் பயபக்தியுடன் நேரத்தைச் செலவிடும்போது, புதுப்பெலனடைவீர்கள்.

இவ்விதமாக நீங்கள் உண்மையுடன் தேவனுடன் நேரம் செலவிடும்போதும், தேவ வார்த்தையைத் தியானிக்கும்போதும், அவருடைய போதனைகளை அனுதின வாழ்க்கையில் பின்பற்றத் தொடங்கும்போதும், நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சியடைவீர்கள். நீங்கள் பலருடைய வாழ்வில் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் கிடைக்க வழி நடத்துகிறவர்களாவீர்கள்.

(முற்றிற்று)

மொழியாக்கம்: Mr.G.வில்சன்