ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

செப்டம்பர்-அக்டோபர் 2014

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று நீடிய பொறுமையாயிருக்கிற அன்பின் ஆண்டவர் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

தேவராஜ்யத்தின் நற்செய்தியை வானொலி, தொலைகாட்சி, இணையதளம், இலக்கியம் ஆகிய ஊடகங்கள் வழியாக அநேகமாயிரம் ஜனங்களுக்கு கொண்டுசெல்ல தேவன் பாராட்டி வரும் கிருபைகளுக்காக அவரை ஸ்தோத்தரிக்கிறோம். எங்களோடு இணைந்து இவ்வூழியத்தை ஜெபத்தினாலும் காணிக்கையாலும் தாங்கி வரும் விசுவாசப் பங்காளர்களுக்கு எமது நன்றியைத் தெரிவிக்கிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தாங்கள் அடைந்துவரும் ஆசீர்வாத நன்மைகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். தங்களது நண்பர்கள் மற்றும் உடன் விசுவாசிகளின் விலாசங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துவீர்களென்றால், அவர்களுக்கு சத்தியவசன மாதிரி பிரதிகளை அனுப்பி வைப்போம்.

சத்தியவசன ஊழியமும், மதுரையிலுள்ள சகல பரிசுத்தவான்களின் ஆலயமும் இணைந்து நடத்தும் விசேஷித்த கூட்டங்கள் வருகிற அக்டோபர் மாதம் 24, 25, 26 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. இக்கூட்டங்களில் மதுரையிலும் அருகாமையிலுள்ள பங்காளர்களும் பங்குபெற்று ஆசீர்வாதம் பெற அன்புடன் அழைக்கிறோம். சத்தியவசன பாடல் பாகம்-21 வெளிவந்துள்ளது. இதில் கருத்தாழமிக்க இனிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்விதழில் தேவனுடைய நீடிய பொறுமையைக் குறித்து டாக்டர்.உட்ரோ குரோல் எழுதிய சிறப்பு செய்தி இடம்பெற்றுள்ளது. நமது வாழ்விலும் பொறுமையை கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமென்பதை இச்செய்தியின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. உடைக்கப்படும், நொறுக்கப்படும் அனுபவங்களின் வழியாக கடந்துசெல்லும்போது நமக்கு இருக்கும் நம்பிக்கையைக் குறித்து சகோதரி.சாந்தி பொன்னு அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். நம்முடைய பாவத்திற்கான நிவாரணத்தை அடையும் வழியைக் குறித்து டாக்டர்.தியோடர் எச்.எப் அவர்கள் எடுத்துரைக்கிறார்கள். பாடுகளில் ஒரு கிறிஸ்தவனின் மனோபாவம் எப்படி இருக்கிறது என்பதைக் குறித்து சகோ.பிரேம்குமார் அவர்கள் எழுதியுள்ள செய்தியானது பாடுகளின் வழியாகச் செல்லும் நம்மை ஆறுதல்படுத்துகிறதாயிருக்கிறது. சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் எழுதிவரும் உவமை தொடரும், சகோ.எம்.எஸ்.வசந்தகுமார் யோசுவாவிலிருந்து எழுதிவரும் தொடர் செய்தியும் வழக்கம்போல் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் வாயிலாக மிகுந்த ஆசீர்வாதமடைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்