நீடிய பொறுமையுள்ள தேவன்

Dr.உட்ரோ குரோல்
(செப்டம்பர்-அக்டோபர் 2014)

‘தேவன் அன்பாகவே இருக்கிறார்’ என்பது சத்திய வேதம் நமக்கு விளம்பும் ஓர் உண்மையாகும். ஆகவேதான் நோவாவின் காலத்து மக்களின் அவிசுவாசத்தை அவர் சகித்துக் கொண்டார்; மோசேயின் காலத்தில் இஸ்ரவேல் மக்களின் கீழ்ப்படியாமையைப் பொறுத்துக் கொண்டார். இயேசுகிறிஸ்துவும் தம் சீடர்களின் அவிசுவாசத்தைச் சகித்தவராய் அவர்களிடம் தம் பொறுமையை வெளிக்காட்டினார். இன்றும் தேவன் நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நம்மை தண்டியாமல், நாம் மனந்திரும்பி அவருடன் ஒரு சரியான உறவைத் தொடருவதற்கு நமக்கு போதிய கால அவகாசத்தையும் தருகிறார். கர்த்தர் ஏன் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறார்? இஸ்ரவேலரின் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, அவர்களை நாம் எளிதில் குற்றப் படுத்திவிட முடியும். ஆனால் நம்முடைய வாழ்வை நாம் சற்றே ஆராய்ந்தால் நம்மிடம் உள்ள குறைவுகளை நாமே கண்டு கொள்ளலாம்.

ஆம், தேவனுடைய பொறுமையும் நீடிய சாந்தமும் நமக்கு அதிகமாய் கிடைக்கிறது. எனவேதான் நாம் நிர்மூலமாகாதிருக்கிறோம். கர்த்தர் நம்மீது நீடிய பொறுமையுள்ளவராய் இருப்பதன் காரணத்தை நாம் இந்த இதழில் ஆராய்வோம். தேவனுடைய இத்தன்மையை நாம் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆரோனும் இஸ்ரவேல் மக்களும் செய்வித்த கன்றுக்குட்டியை யாத்திராகமம் 33ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். மலையிலிருந்து இறங்கிவந்த மோசே அதைக் கண்டதும் தன் கையிலிருந்த சாட்சிகளின் பலகையாகிய, பத்து கற்பனை எழுதியிருந்த பலகைகளை வீசி எறிந்து உடைத்துப் போட்டார்.

“கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்” (யாத்.34:1) என அடுத்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் வருகிறது. மோசே கோபத்தில் அவைகளை வீசி எறிந்த செயல் தவறு என்பதை கர்த்தர் அவருக்கு உணர்த்தினார். எனவே மறுபடியும் அவைகளைத் தான் எழுதித்தருவதாக முன்வந்தார்.

“விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில். உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங்கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங்கூடாது என்றார். அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக் கொண்டு, சீனாய்மலையில் ஏறினான். கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்து போகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகாதயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிர மத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார். மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டான்” (வச.2-8).

இப்பகுதியில் கர்த்தர் தம்மைப் பற்றி மோசேயிடம் விளக்குவதாக நாம் காண்கிறோம். ஏதோ வானத்திலிருந்து வந்த சத்தமல்ல; தேவனைப் பற்றிக் கூறும் ஓர் இரகசிய நூலிலிருந்து அல்ல. தேவனுடைய திவ்ய சுபாவத்தைப் பற்றி கர்த்தர் தாமே மோசேக்குக் கற்றுக்கொடுத்தார். ஒருவரது குணத்தைப் பற்றி நீங்கள் அறிய வேண்டுமெனில், சிறப்பாக தேவனுடையதைத் தெரிந்துகொள்ள அவரது வாய் மொழியையே நாம் கேட்கவேண்டும். இவ்விடத்தில் கர்த்தர் தாம் யாரென்றும் தம்முடைய செயல்பாட்டைப் பற்றியும் மோசேக்கு கற்பிக்கிறார். வசனம் 6இல் கர்த்தர் இரக்கமுள்ளவர்; கிருபையுள்ளவர்; நீடிய சாந்தமுள்ளவர் அதாவது பொறுமையுள்ளவர் என்கிற அவருடைய தன்மைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

நீடிய சாந்தமாக இருப்பது என்றால் என்ன? கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவர் என்று சொல்லும்பொழுது அவர் சினமடைபவர் அல்லர் என்று நாம் கூறலாம். கர்த்தர் சீக்கிரத்தில் ஆத்திரப்படமாட்டார், கொதித்தெழமாட்டார்; தேவன் தம்முடைய தாக்குதலுக்கு அதிக நேரம் எடுக்கிறார். அதிகமான சகிப்புத் தன்மை கொண்டவர். அவர் இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர், அவர் சீக்கிரத்தில் கோபம் கொள்ளாதபடி அதிக பொறுமையுள்ளவர்.

அவ்வாறு அவர் சினமடைவாரெனில் அவரது நிலையை சிறிது கற்பனை செய்து பாருங்கள். ‘மூக்கின் மேல் கோபம் வருகிறது’ என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி பயன் படுத்துகிறோம். மூக்குக்கும் கோபத்துக்கும் உள்ள தொடர்பினை ஆராய்வது சிறிது சுவாரசியமான காரியம். பொதுவாக வேகமாக மூச்சை இழுத்து விடும்பொழுது நமது நாசியின் வேகமான அதிர்வை உணரலாம். பொதுவாக இச்செயல் குதிரைகளுடன் தொடர்புடையதாகும். யுத்தத்துக்கு ஆயத்தமாகிச் செல்லும் குதிரைகளிடம் நாம் இதனைக் காணமுடியும். தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில், ஓர் அடர்ந்த காட்டினைக் கடந்து ஒரு குதிரைப் படைத் தலைவர் யுத்த களத்துக்குச் செல்லுவார். அது கோடைகாலமாக இருந்தாலும் படப்பிடிப்புக்காக சிறிது மூடுபனியையும் காட்டுவார்கள். மேலும் குதிரையின் மூக்கின் நெருக்கமான தோற்றத்தையும் காட்டுவார்கள். அந்த குதிரையின் வெளி மூச்சில் அதன் மூக்கு முன்னும் பின்னும் வேகமாக அதிர்வு கொள்ளும். எனவே நாம் ஏதோ ஒரு பயங்கரமான காரியம் நடைபெறப் போகிறது என யூகித்துக் கொள்ளலாம். இதுவே எபிரெய மொழியில் சினத்துக்கான அறிகுறியாகத் தரப்பட்டுள்ளது.

தேவன் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். அவ்வாறு அவர் கோபப்பட்டால் அது ஓர் அசாதாரணமான காரியம். நீடிய சாந்தம் என்பதற்கான எபிரெயச் சொல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று “aph” – இது யுத்தத்துக்குச் செல்லும் குதிரையின் மூர்க்கத்தையும், மற்றொரு சொல்லான “arek” ஒத்திவைத்தல் அல்லது தள்ளிப்போடுதலையும் குறிக்கும். எனவே, வேதாகமத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள நீடிய பொறுமை அல்லது நீடிய சாந்தம் என்ற சொல், கர்த்தர் தம்முடைய சினத்தை அடக்கிக் கொள்ளுகிறார் அல்லது அச்சினத்தைத் தள்ளிவைக்கிறார் என்று பொருளைத் தருகிறது. தேவன் கருணையுள்ளவர். அவர் தமது சினத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாய் உங்களையும் என்னையும் பொறுத்துக் கொண்டிருக்கிறார்.

சத்திய வேதத்திலிருந்து இன்னும் சில உதாரணங்களைக் காண்போம். “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக” என்ற வாக்குத்தத்தமுள்ள முதலாம் கட்டளையை யாத்திராகமம் 20:12இல் நாம் வாசிக்கிறோம். இங்கு “நீடிய” என்ற சொல்லுக்கு பூமியில் நெடுநாட்களாய் என்று அர்த்தமாம். உன்னுடைய தகப்பனுக்கும் தாய்க்கும் நீ உண்மையற்றவனாய் இருந்தாலும் நீ அழிந்துபோவதில்லை. நியாயப்பிரமாண சட்டப்படி நீ கல்லெறியப்படுவதில்லை. ஆனால் நீ உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயானால் உனக்கு நீடிய ஆயுள் உண்டு. நீடித்திருப்பது என்பதும் நீண்ட காலம் என்பதும் ஒரே பொருளாகும்.

தேவன் நீடிய சாந்தமுள்ளவர் என்றால் அவர் கோபப்படமாட்டார் என்று பொருளாகுமா? அவரிடம் கோபமுண்டு; ஆனால் அக்கோபத்தைச் செயலில் காட்டமாட்டார். அதைத் தாமதப்படுத்துவார். நீங்கள் அவரைச் சீண்டினாலும் அவர் அவசரப்பட்டு சினமடைவதில்லை. அவர் அருளுடையவர், இரக்கமுள்ளவர். எனவே தமது கோபத்தை செயலில் காட்டுவதற்கு நீண்ட பொறுமையுள்ளவராய் இருக்கிறார். “தேவன் நல்லவர்; அவர் இறைவன்; ஒரு பரம தகப்பனைப் போல உள்ளவர் சினமடைவாரா?” என்ற கேள்வியை நீங்கள் எழுப்புவீர்களாயின் தேவனைப் பற்றிய உங்கள் அறிவு மிகக் குறைந்தது என்றே நான் கூறுவேன். தேவன் சினமடைவதற்கு அநேக காரியங்கள் உள்ளன. மக்கள் விசுவாசிக்க மறுப்பது; அதாவது, அவிசுவாசம் அவரது கோபத்தை எழுப்பும் ஒரு காரணியாகும். சத்திய வார்த்தையாகிய அவரது வசனமும் அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது. அதனை நாம் அறிந்து கொள்ள தேவன் விரும்பும்பொழுது, அது எனக்குரியதல்ல; நான் அதனை நம்பமாட்டேன் என்று சொல்கின்றனர். நாம் நம்ப மறுக்கும் பொழுது, நம்முடைய அவிசுவாசம் தேவனைக் கோபப்படுத்தும்.

தேவனுடைய பொறுமையை 1பேதுரு 3:18-20 அழகாக விளக்குகிறது: “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.”

இப்பகுதியிலும் ‘நீடிய பொறுமை’ என்ற சொல் காணப்படுகிறது. தேவன் ஏன் நீடிய பொறுமையோடு இருக்கவேண்டும். தேவன் சத்தியத்தைக் கூறும்பொழுது நாம் விசுவாசிப்பதில்லை. நம்முடைய அவிசுவாசம் அவரை கோபப்படுத்துகிறது. ஆனால் அவருடைய நீடிய பொறுமை அக்கோபத்தை வெளிப்படுத்த நீண்ட நாளாகிறது. தேவன் இல்லை; மோட்சமும் நரகமும் இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகளிடமும் அவர் நீடிய பொறுமையுடன் இருப்பதை நான் காண்கிறேன்.

இங்கே அப்.பேதுரு நோவாவின் காலத்தில் வெளிப்பட்ட தேவனுடைய கோபத்தைப் பற்றி எழுதுகிறார். நோவா 120 ஆண்டுகளாக நீதியைப் பிரசங்கித்தார். தேவன் தம்முடைய கோபத்தை அடக்கிவைத்திருந்தார். அவர் சினமடைந்தது உண்மைதான். ஆனால் அதன் விளைவு யாது? உலகளாவிய ஒரு பெரு வெள்ளம் ஏற்பட்டது. அம்மக்கள் மனந்திரும்ப தேவன் நீண்டதொரு 120 ஆண்டுகள் கொடுத்திருந்தார். ஆயினும் அவர்கள் தேவனைத் தேடவில்லை.

தேவன் இரக்கமுள்ளவர்; அந்த இரக்கத்தினாலே, மனதுருக்கத்தினாலே அவர் நீடிய பொறுமையுடன் இருந்தார் என்று நாம் அறிந்து கொள்ளலாம். அதுபோலவே இன்றும் தேவன் பொறுமையுடன் இருக்கிறார். ஒரு நாள் வரும்; அன்று அழிவின் வெள்ளம் நம்மேல் புரண்டோடி வரும். அது நியாயத்தீர்ப்பின் நாள். “நீ உன்னுடைய பாவத்திலிருந்து மனந்திரும்ப அநேக வாய்ப்புகளைத் தருகிறேன். நீ என்னிடம் விசுவாசத்தில் வருவதற்கு பொறுமையுடன் காத்திருக்கிறேன். ஆனால் நீ அவைகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையெனில் நியாயத்தீர்ப்பு உனக்கு வருகிறது” என்று கூறுகிற தேவனாய் அவர் இருக்கிறார்.

உங்களுக்கு நான் கூறும் ஆலோசனை என்னவெனில், நீங்கள் வெகு சீக்கிரம் மனந்திரும்புங்கள். அவருடைய பொறுமை எல்லையைத் தாண்டும் நேரத்தையும், அவருடைய நியாயத்தீர்ப்பின் நாள் வரும் வேளையையும், அவிசுவாசத்துக்கு எதிரான அவருடைய சாந்தம் முடிவடையும் காலத்தையும் நீங்களும் நானும் அறிய மாட்டோம். இனி காலம் செல்லாது; எனவே கவனத்துடன் இருப்போம்.

தேவனுடைய கோபத்தைத் தூண்டிவிடுவதில் நமது கீழ்ப்படியாமையும் மற்றொரு காரணியாகும். எண்ணாகமம் 14ஆம் அதிகாரத்தில் கர்த்தர் இஸ்ரவேலரை அழிக்காதபடிக்கு அவரிடம் மோசே மன்றாடுவதைக் காண்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக முணுமுணுத்தனர். தேவன் அவர்களுக்குக் கொடுத்த நன்மைகளில் திருப்தியடையாமல் அதிகமாய் அவரிடம் எதிர்பார்த்தனர். எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை விடுதலை செய்து, பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்துக்கு அவர்களை அழைத்துச் செல்ல தேவன் விரும்பினாலும், அவர்களுக்கு மனதில்லாதிருந்தது. அவிசுவாசத்தினாலும் கீழ்ப்படியாமையினாலும் அவர்கள் கானானுக்குள் பிரவேசிக்க மறுத்தனர். வசனம் 11ல் கர்த்தர் மோசேயை நோக்கி: “எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எது வரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?” என்று தேவன் வினவுகிறார். மக்கள் விசுவாசிப்பதற்காக பல வழிகளில் தம்மை வெளிப்படுத்துகிறார். உலகில் தம்மை ஒரு நாத்திகவாதி என கூறுபவரும் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து மெய்யான ஒரே தேவனை அறிந்துகொள்ள வாய்ப்புகள் உண்டு.

தேவன் “எதுவரைக்கும் அவர்கள் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? எதுவரைக்கும் அவர்கள் எனக்கு கீழ்ப்படியாமல் இருப்பார்கள்” என மோசேயிடம் கூறிய அவர், “நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்” (வச.12).

“நீ எனக்கு உண்மையாயிருந்தாய்; நீ என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தாய்; வழியில் நான் உனக்குக் கூறிய யாவையும் விசுவாசித்தாய். ஆனால் இந்த ஜனங்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே நான் அவர்களை அழித்துவிடட்டும். உன்னை பெரிய ஜாதியாக்குவேன்” என்றார். இதற்கு மோசே கூறும் பதிலைக் கவனியுங்கள்:

“மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே. கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித் தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். ஒரே மனிதனைக் கொல்லுகிறது போல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்: கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக்கூடாதே போனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே. ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. உமது கிருபையினுடைய மகத்துவத்தின் படியேயும், எகிப்தை விட்டது முதல் இந்நாள் வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்” (எண்.14:13-19).

மோசேயைப்போல தன்னுடைய இருதயத்திலே உங்களை வைத்து, உங்களுக்காக ஜெபிக்கும் ஒருவர் இருப்பாரெனில் அது மகா உன்னத ஆசீர்வாதமல்லவா? இத்தகைய மக்களே உங்கள் நாட்டுக்கு பிரதமராகவும், அதிபதியாகவும் வரவேண்டும். உங்கள் சபையை முன்னின்று நடத்துபவராகவும், உங்கள் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கும்படி வாஞ்சியுங்கள். அவர்கள் தேவனிடம், “நிச்சயமாகவே, இவர்கள் பாவம் செய்தனர்; உமக்கு உண்மையாயிருக்கவில்லை; உமக்கு கீழ்ப்படியவும் இல்லை, உம்மை விசுவாசிக்கவும் இல்லை. ஆனாலும் தேவரீர் பொறுத்தருளி இவர்கள் மனந்திரும்ப இன்னும் ஒரு வாய்ப்பைத் தாரும்” என ஜெபிக்கும் மக்கள் நமக்குத் தேவை. திறப்பின் வாயிலில் நிற்கும் மனிதராக நீங்கள் முன்வர ஆயத்தமா?

மோசேயும் தேவனிடம் இதைத்தான் வேண்டிக்கொண்டார். இந்த ஜனங்கள் உண்மையற்றவர்கள்; கீழ்ப்படியாதவர்கள்; ஆனாலும் நீர் இவர்களிடம் இன்னும் பொறுமையாக இரும் என்றே ஜெபித்தார். அவரது மன்றாட்டுக்கு இரங்கி, தேவன் இஸ்ரவேலை அழிக்கவில்லை. அவர்களது முறுமுறுப்பையும், முறையற்ற செயல்களையும், கீழ்ப்படியாமையையும், விசுவாசக் குறைவுகளையும் அவர் பொறுத்துக்கொண்டார். தாம் அவர்களுக்கு உறுதியளித்த தேசத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.

ஆனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் யார்? கீழ்ப்படியாத, விசுவாசியாத மக்கள் அந்த வனாந்தரத்திலே அழிந்து போயினர். அவர்களுடைய சந்ததியினரே அத்தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டனர். அவிசுவாசத்துக்கும், கீழ்ப்படியாமைக்கும், பாவத்துக்கும் நிச்சயமாக தண்டனைகள் உண்டு. ஆனாலும் தேவன் இரக்கமுள்ளவரும் நீடிய பொறுமையுமுள்ளவராய் இருப்பதினால் மக்களைத் தண்டிக்கும் செயலில் இறங்காமல் தாமதம் செய்கிறார்.

தேவன் தம்முடைய சினத்தை உங்களிடம் காட்டாமல் அடக்கி வைத்துள்ளார். நீங்களும் மற்றவர்கள் மேல் உள்ள உங்கள் கோபத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமல்லவா?

ஒருவருக்கு தேவைப்படும் உங்கள் இரக்கத்துக்கும் உதவிக்கும் உள்ள இடைவெளியைவிட, உங்களுக்குத் தேவைப்படும் தேவனுடைய இரக்கத்துக்கும் உதவிக்கும் உள்ள இடைவெளி அதிகமானது. நாம் தேவனுக்கு செய்துவரும் தீமையைவிட, மற்றவர்கள் நமக்கு அதிக தீமையைச் செய்துவிட முடியாது. நம்மைவிட தேவன் பரிசுத்தர், தேவன் நம்மேல் உள்ள தம்முடைய சினத்தைத் தள்ளிப்போடுவாராயின், நாம் ஏன் நம்முடைய கோபத்தை பொறுத்துக்கொள்ளக் கூடாது?

ஆலயத்தில் சிறு குழந்தைகள் அழும் பொழுது, அதன் தாய் உடனடியாக அதனை வெளியே அழைத்துச்சென்று அமைதிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறீர்கள். நீங்கள் ஏன் சிறிது பொறுமையுடன் இருக்கக்கூடாது? தேவன் உங்கள்மேல் பொறுமையுடன் இருக்கிறாரே!

உங்கள் சபையின் புதிய போதகர், பழைய போதகரைப் போல செயல்படாதபொழுது, அவரிடம் நீங்கள் இன்னும் சிறிது பொறுமையாக இருக்கலாமே! உங்கள் உடன் ஊழியர்கள், வீட்டுப் பணியாளர்கள், நம்முடைய இளைய தலைமுறையினர் நடத்தும் மன்றங்கள், கவனக்குறைவான கணவர், அக்கறையற்ற அயலார், கீழ்ப்படியாத வாலிபர்கள், வளர்ச்சியற்ற கிறிஸ்தவர்கள், புரிந்துகொள்ளாத மக்கள், உங்களுடைய வயதான பெற்றோர், உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகள் இவர்கள் அனைவரிடமும் தேவன் நம்மிடம் காட்டும் பொறுமையில் சிறிதளவாவது நாம் காட்டலாம் அல்லவா? நாம் ஆவியின் கனியான நீடிய பொறுமையை வெளிப்படுத்த சிறிதாவது முயற்சிகள் எடுக்கிறோமா?

“ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத். 5:48).

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்