உடைந்து சிதறிவிட்ட சிதறல்களுக்கும்…

சகோதரி.சாந்தி பொன்னு
(செப்டம்பர்-அக்டோபர் 2014)

“உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்” (ஏசா.48:10).

பெரிய சத்தத்தோடு கீழே விழுந்து உடைந்து சிதறிவிட்ட என் கண்ணாடியைப் பார்க்கிறேன். அழகான கண்ணாடி, எனக்குப் பிரியமான கண்ணாடி, உடைந்து துண்டு துண்டாகிவிட்டது. அதை இனி ஒட்டுவது எப்படி? என் வாழ்வும் இப்படித்தான் உடைந்துவிட்டதே என்ற எண்ணம் உள்ளத்தை இன்னும் நொருக்கியது. கண்ணீர் பெருகியது. கலங்கிய கண்களுடன் துண்டுகளைப் பொறுக்குவதற்குக் கீழே குனிந்தேன். என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு கண்ணாடித் துண்டிலும் என் முகம். முன்னர் அந்தக் கண்ணாடி என் ஒரே முகத்தைத்தான் காட்டியது. ஆனால் இப்போது ஒவ்வொரு துண்டும் என் முகத்தைக் காட்டியது. ‘மகளே, உடைந்து நொறுங்கியதால் நீ கலங்காதே. முன்னர் நீ ஒருத்தி. நொறுங்கிப்போனதால் இப்போ நீ பன்மடங்காய் பெருகியிருக்கிறாய். பலங்கொண்டு திடமனதோடு முன்செல்’ என்று ஒவ்வொரு கண்ணாடித் துண்டும் என்னுடன் பேசியதுபோலிருந்தது. (இது கற்பனை அல்ல. உண்மையான அனுபவம்)

நான் படித்து ரசித்த ஒரு கவிதையின் சில வரிகள் இவை:

என் காலமெல்லாம் சந்தோஷமாயிருந்தால்
ஆண்டவரின் கண்ணீர் துடைக்கும் கரத்தின் மென்மையை நான் அறியக்கூடுமோ?
நான் ஒருபோதும் களைப்படையாவிட்டால்
நித்திரையளிக்கும் கர்த்தரின் அன்பை நான் உணரக் கூடுமோ?
எனக்கு அருமையானவர்கள் இறந்திராவிட்டால்
நித்தியஜீவனைக் குறித்த எண்ணம் எனக்குள் வேரூன்றியிருக்குமோ?
கஷ்டமும் கண்ணீரும் வேதனையும் நொறுங்குதலும்
கேடென்றெண்ணி நான் கலங்குவதுதான் சரியாகுமோ?

இக்கவியை நான் இப்படி முடித்தேன்:

இவை இல்லாவிட்டால் ஆண்டவர் அன்பை நான் உணரக்கூடுமோ?
அவரின் மார்பில் சாய்ந்திடும் கிருபைதான் கிடைத்திருக்குமோ?

உடைக்கப்பட்ட உலகமும், தேவ இரக்கமும்
நாம் உடைந்துபோன பொருட்களைக் குப்பை என்று கழித்துவிடுகிறோம். ஆனால் தேவனோ, உடைந்து சிதறிவிட்ட ஒவ்வொரு துண்டுகளிலுமிருந்து ஆச்சரியமான புதிய காரியங்களைச் செய்ய ஆயத்தமாயிருக்கிறார். இந்த சிந்தனை நம் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கட்டும். உடைதல் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. நாம் உடைக்கப்பட்ட உலகில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எப்பொழுது தேவ அன்பிலிருந்து மனிதன் தன் உறவை உடைத்துக்கொண்டானோ அன்றிலிருந்து இந்த உலகம் மேலும்மேலும் உடைந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும், தேவன் மனுக்குலத்தைக் கைவிடவில்லை. எப்பொழுது மனிதன் தேவனுடனான உறவை உடைத்தானோ, அப்போதே அந்த உறவை மீண்டும் பெற்றுத்தருவதாக தேவன் வாக்களித்தார்.

அன்று மோசே கோபப்பட்டு உடைத்தது வெறும் கற்பலகைகளை அல்ல. மலையடி வாரத்தில் இஸ்ரவேலர் உடைத்துப்போட்ட தேவனுடைய கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகளையே மோசே உடைத்தான். கற்பனைகளை உடைத்ததால் கர்த்தர் இஸ்ரவேலை அழிக்கவில்லை; பதிலுக்கு அந்த உடைக்கப்பட்ட கற்பனைகளைத்தான் தேவன் மறுபடியும் எழுதிக்கொடுத்தார்.

தாவீது கட்டியாண்ட சமஸ்த இஸ்ரவேல் இரண்டாக உடைந்தது. ஆனாலும், கர்த்தர் தாம் தாவீதுக்கு அருளிச்சொன்ன வாக்குத் தத்தத்தை நிறைவேற்றத் தயங்கவில்லை.

காலத்துக்குக் காலம் மனிதன் உடைக்கப் பட்டவைகளையே சந்திக்கிறான். சிறுவனாயிருக்கும்போது உடைகின்ற பொம்மைகள் விளையாட்டுப்பொருட்களை அழுகையோடு தூக்கி எறிந்து விடுகிறான். இன்றைய சிதைந்த சமுதாயத்தில் சிறுவயதிலேயே எதிர்காலமே உடைந்துவிட்ட நிலைமை மனிதனுக்கு. உடைந்துபோன நம்பிக்கைகள், சிதறிப்போன கனவுகள், நிறைவேறாத திட்டங்கள், காற்றாய்ப்போன இலட்சியங்கள் இப்படி எத்தனை! மரணம் நம்மைப் பிரிக்கும் வரைக்கும் என்று தேவ சந்நிதானத்தில் செய்த உடன்படிக்கைகளே உடைந்து சிதறும்போது ஒவ்வொரு மனிதனுடைய இருதயமும் கிழிந்து துண்டாய்ப்போகிறது. எதிர்காலத்தில் ஆறுதல், வயது முதிர்ந்தபின் பாதுகாப்பு என்ற நம்பிக்கை சிதறிப்போய் இன்று எத்தனைபேர் ஏக்கத்துடன் தங்கள் தலையணையை இரவில் கண்ணீரினால் நனைக்கிறார்கள். இவ்விதமாக மனிதன் உடைபடுதலை தன் வாழ்வில் ஏதோவொரு விதத்தில் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான். இதனால் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களும், தங்களை தாங்களே முடித்துக்கொண்டவர்களும்தான் எத்தனை!

அப்படியானால் தேவன் இவற்றைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறாரா? இல்லை, தமது பிள்ளைகளின் உடைபடுதல் வேதனைப்படுதலில் தேவன் மகிழ்ந்திருக்கிறவர் அல்ல. ஆனால், தமது பிள்ளைகளின் விஷயத்தில் ஒவ்வொரு உடைதலிலும் அவர் ஒரு நன்மை வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28). இந்த வசனம் நம் எல்லோருக்கும் மனப்பாடம். என்றாலும் உடைபடும்போது நாம் கலங்கிவிடுகிறோம், அது ஏன்?

இயேசு சிலுவையிலே உடைக்கப்படாத வரைக்கும் எங்கிருந்து மனிதனுக்குச் சகாயம் கிடைத்திருக்கும்? அன்று ஸ்தேவான் என்ற ஒரு மனுஷன் நொறுக்கப்பட்டிராவிட்டால் சவுல் என்பவன் பவுலாக வெளிவந்திருப்பானா? சீஷர்கள் நொறுக்கப்பட்டிராவிட்டால் சுவிசேஷம் யூதேயாவைவிட்டு வெளியே சென்றிருக்குமா? யோவான் மாத்திரம் நாடு கடத்தப்பட்டு பத்மு தீவில் சிறை வைக்கப்பட்டிராவிட்டால் அருமையான வெளிப்படுத்தல் விசேஷம் உலகிற்குக் கிடைத்திருக்குமா? ஏராளமான இரத்த சாட்சிகள், ஏராளமான மிஷெனரிகள், ஏராளமான சுவிசேஷ ஊழியர்கள் தங்கள் வாழ்வை நொறுக்கப்பட அர்ப்பணித்திராவிட்டால் இன்று நாம்தான் பாவப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்போமா?

இன்று, பல நாடுகளில் கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசத்தினிமித்தம் எத்தனை ஆயிரம் மக்கள் தலை வெட்டப்பட்டு செத்து மடிந்துவிட்டார்கள். எத்தனைபேர் உபத்திரவத்தின் குகையிலே போடப்பட்டிருக்கி றார்கள். அவர்கள் எல்லாரும் பின்வாங்கிப் போய்விட்டார்களா? அவர்கள் பொன்னாக விளங்கவில்லையா?

உடைக்கப்பட நீ ஆயத்தமா?
கிறிஸ்தவ விசுவாசியே! உடைக்கப்படாமல் ஒன்றுமே உருவாவதில்லை என்பதை அடிக்கடி மறந்தவனாய், சுகபோகத்தையும், செழிப்புள்ள வாழ்வையும், இலகுவான பாதைகளையும் நீ நாடிப்போவது ஏன்? “…கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்” (யோவான் 12:24). ஒன்று கோதுமை மணி நிலத்தில் விழுந்து உடைந்து சாகவேண்டும்; அதற்கு முன் அமைதியாய் கிடக்கிற நிலம் உடைக்கப்பட வேண்டும். இயற்கையில் இயல்பாக நடைமுறையிலுள்ளதையே இயேசு உவமானமாக விளங்க வைத்தார். ஒரு தாய் சாவின் நுனிவரை போய்த் திரும்பாவிட்டால் தன் கையில் தவழும் குழந்தையைக் காண்பது எப்படி? பிறக்கின்ற குழந்தை அழாவிட்டால் அதன் சுவாசப்பை முதல்மூச்சை வெளிவிடுவது எப்படி? இயற்கை விதியே இப்படியிருக்கும்போது, நமது ஆவிக்குரிய வாழ்வுமாத்திரம் உடைபடுவதற்கு விலகியிருப்பது எப்படி?

ஆக, வியாதியோ வேதனைகளோ, துன்ப துயரங்களோ, இழப்போ இறப்போ, பிரிவுகளும் பிளவுகளுமோ எதுவும் மனித வாழ்வில் நேரிடத்தான் செய்கின்றன. இப்படிப்பட்ட சமயங்களில் ‘இது ஏன்?’ என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது. இவற்றைத் தேவன் பாராமல் இருக்கிறாரா? இல்லை. தமது பிள்ளைகள் உடைக்கப்படும்போதும் தேவனுடைய கண்கள் அவனை நோக்கிக்கொண்டே இருக்கும். ஆனாலும், உடைபட்ட நிலையில் எவனொருவன் தேவனிடம் மனந்திரும்புகிறானோ அவனைத் தேவன் அழிவுக்கு விடவே மாட்டார் என்பது வேத சத்தியம். தம்மோடுள்ள உறவை உடைத்துப்போட்ட மனிதனைத் தன்னும் தேவன் கைவிட்டாரா? வாக்குப்படியே தாமே மனிதனாக வந்து அவனை மீட்டாரல்லவா! ஆகவே, ‘ஏன் நான்’ என்ற கேள்வியை விடுத்து, ‘எப்படி நான்’ என்று கேள்வியைத் திருப்பிப்போடுவோம். அப்பொழுது உடைந்துபோன வாழ்வின் துண்டுகளுக்குள்ளேயே நாம் அதிக பெலமடைந்திருப்பதைக் காணும்படி கர்த்தர் நமது கண்களைத் திறப்பார்.

ஒரு டாக்டரின் சாட்சி இது: “படிப்புக்காக தூர தேசத்திற்குப் போன என்னை ஆண்டவர் தனிமையில் நிறுத்தி, என் எல்லா நிலைகளிலும் என்னை நொறுக்கித் துண்டாக்கிவிட்டார். ஆனால், அந்த ஒவ்வொரு துண்டிலும் தேவனுடைய அன்பை வல்லமையை நான் கண்டேன். அது மகா பெரிய அற்புதம். நான் உடைக்கப்பட்டிராவிட்டால் ஒரு பெரிய ஆசீர்வாதத்தை இழந்திருப்பேன்” என்றாள் அவள்.

உனக்கு நம்பிக்கை உண்டு
பிரியமானவனே! உடைக்கப்பட்ட குடும்ப உறவுகள், உடைந்து நொறுங்கிய இருதயம், வியாதியால் உடைந்த சரீரம், சிதைந்துவிட்ட நம்பிக்கைகள், அன்பாய் நேசித்த நேசத்தில் கீறல் விழுந்ததால் ஏற்பட்ட உடைவுகள், தவறான வாழ்வினால் இனிச் சீர்செய்ய முடியாத நிலையில் உடைந்து சுக்குநூறாகி விட்ட வாழ்வு… இப்படி ஏதொவொரு விதத்தில் உடைந்துபோயிருக்கும் அருமையான மகனே, மகளே, இதில் எதுவும் ஆச்சரியமில்லை. ஏனெனில் உடைந்த உலகில் இதுதான் யதார்த்தம். ஆனால் இவற்றை நீ எவ்வண்ணம் கண்ணோக்குகிறாய் என்பதில்தான் உன் வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது. துயரம், பேரழிவு, கசப்பு போன்ற மனநோக்கில் உன் உடைவுகளை நீ நோக்கினால் அது உன்னை அழித்தேபோடும்.

மாறாக, உன் உடைந்துபோன ஒவ்வொரு துண்டிலும் தேவனுடைய ஆலோசனையை, தமது நித்தியமான சித்தத்திற்கு ஏற்ப ஏதோவொரு விதத்தில் பயன்படக்கூடிய ஒரு தேவ திட்டத்தை நீ காண்பாயானால், உடைக்கப்பட்டதே நல்லது என்று நீ நிச்சயம் சொல்லுவாய். பலவேளைகளிலும் தேவசித்தத்தை உடனடியாக நம்மால் காணமுடியாமற் போகக்கூடும். இங்கேதான் ‘நம்பிக்கை’ கிரியை செய்ய வேண்டும். “கஷ்டங்களின் பாரம் நம் கழுத்தைச் சுற்றிக்கட்டப்பட்ட கழுத்துக் கல்போல் தொங்குவதாகத் தோன்றும். ஆனால், உண்மையில் அதுவே முத்துக் குளிப்பவனை முத்துக்களைத் தேடும்போது அவனை ஆழத்தில் நிற்கச் செய்ய அவசியமான பாரமாகும்” என்றார் ஒரு தாயார்.

நாம் ஆண்டவரை அதிகமாக நேசிக்க நினைத்தால், தனித்த வனாந்தர அனுபவங்களையும், ஏழு மடங்கு சூடேற்றப்பட்ட அக்கினிச் சூளையையும் எப்படித் தவிர்ப்பது? எப்பொழுது நாம், “ஆண்டவரே, என் சிலுவையை என்னைவிட்டு அகற்றி என்னைத் தண்டியாதேயும். என்னை உமது சித்தத்திற்குக் கீழ் அடங்கச் செய்து சிலுவையை நேசிக்கச் செய்து எனக்கு ஆறுதல் அளியும். எப்படியாவது உமது நாமம் என் வாழ்வில் மகிமைப்பட என்னை நடத்தும்” என்று நம்மை ஒப்புவிக்கிறோமோ அப்பொழுதுதான் நாம் தேவனுடைய வல்லமையை நமது உடைக்கப்பட்ட வாழ்வில் நம்மால் அனுபவிக்க முடியும். மாறாக, பாடுகளையும் உடைக்கப்படுதலையும் விலக்கி, களியாட்டத்திலும் சுகபோகத்திலும் வாழ விரும்பினால் உயிர்த்தெழுந்தலின் மகிமையை இழந்துவிடுவோம்.

தேவபிள்ளையே, உடைக்கப்பட்ட நிலையில் இன்று வாழுகின்றாயா? உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாயா? கலங்காதே, உன் வாழ்வின் உடைந்துபோய் சிதறிக்கிடக்கின்ற ஒவ்வொரு துண்டுகளுக்கும் நம்பிக்கை உண்டு. உடைந்த நிலையிலேயே உன்னைத் தேவ கரத்தில் ஒப்புவித்துவிடு. உடைக்கப்பட்ட ஒவ்வொரு துண்டையும் கொண்டு தேவன், நீ நினைத்திராத மேலான அழகான நிலையான ஒன்றை உருவாக்குவார். ஆனால், உடைந்த நிலையிலும் நீ உன்னைக் கொடுக்கத் தயாரா?

சத்தியவசனம்