தேவனுடைய இராஜ்யமும் புளித்த மாவும்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(செப்டம்பர்-அக்டோபர் 2014)

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் சத்தியவசன வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். மத்தேயு 13:33இல் ஆண்டவராகிய இயேசு சொன்ன உவமையைக் குறித்து தியானிக்கப் போகிறோம்.

“வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்” (மத்.13:33). நமது வாழ்க்கையிலும், நமது குடும்பங்களிலும், நமது சமுதாயத்திலும் வழக்கமாய் நாம் கையாளுகிற ஒரு சாதாரண காரியத்தின் மூலமாக ஒரு உவமையைச் சொல்லி அதன் மூலமாக தேவராஜ்யத்தை ஆண்டவர் விளக்குகிறார். இந்த உவமையின் மையக் கருத்து என்னவென்றால் தேவராஜ்யம், தேவராஜ்யத்தின் செயல், தேவராஜ்யத்தின் புத்திரர் ஆகியவை உலகத்தையும் உலக செயல்களையும் உலகமக்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்குகிறார்.

ஒரு ஸ்திரீ கொஞ்சம் புளித்த மாவுடன் மூன்றுபடி மாவை முழுவதும் புளிக்கும் வரைக்கும் அடக்கி வைத்தாள். அது முழுவதும் புளிக்க வைத்தது. அப்பம் தயார் செய்வது சாதாரணமான ஒரு காரியமாகும். மாவை எடுத்து அதிலே கொஞ்சம் பழைய புளித்த மாவை வைப்பார்கள். அது அந்த மாவை அப்பம் செய்யும் பக்குவ நிலைக்கு உருவாக்கி விடும். இதைப்போலதான் தேவராஜ்யம் சிறிதாக, ஒரு சாதாரணமான காரியமாக இருந்தாலும் உலகத்தையும், உலகமக்களையும், உலக செயல்பாடுகளையும் அது ஆளுகை செய்ய ஆரம்பிக்கிறது. இந்த உவமையின் மூலமாக சில குறிப்புகளை நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம்.

1. பயன்படக்கூடியது
புளித்தமா பயன்படக்கூடியது. இதைப் போலவே தேவராஜ்யமும், ராஜ்யத்தின் செய்தியும் பயன்படக்கூடியது. உண்மையாகவே இது பயன்படக் கூடியதா என்று ஒரு கேள்வி எழும்பலாம். நம்முடைய வாழ்க்கையில், உறவுகளில் ஏற்படுகிற ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அதற்கான ஆலோசனைகளெல்லாம் திருமறையிலும் அவரது போதனையிலும் உண்டு. இந்தப் போதனைகளை நாம் உண்மையாக கற்றுக்கொள்ளும்போது, அது வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நமக்கு உதவுகின்றது.

தேவனுடைய ராஜ்யத்தின் புத்திரர்கள் உப்பாக, வெளிச்சமாக, மலையின் மேலிருக்கும் பட்டணமாக இருக்கவேண்டும் என்று ஆண்டவர் சொன்னார். உப்பு ருசி கொடுக்கிறது, வெளிச்சம் இருளில் பிரகாசிக்கிறது, மலையின்மேல் உள்ள பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. அதைப்போலத்தான் தேவ ராஜ்யமும், தேவராஜ்யத்தின் புத்திரர்களும் உலகத்திற்கும் உலகமக்களுக்கும் பயன்படக் கூடியவர்கள் ஆவர்.

2. பக்குவப்படுத்தக்கூடியது
இரண்டாவதாக, சிறிது புளித்த மா பிசைந்த மா முழுவதையும் பக்குவப்படுத்தக் கூடியது. தேவனுடைய ராஜ்யம் பயன்படக்கூடியது மட்டுமல்ல, அது பக்குவப்படுத்தக் கூடியது. ரொட்டி செய்வதற்கோ, அப்பம் செய்வதற்கோ அல்லது வேறு ஏதாவது பலகாரம் தயாரிப்பதற்கோ உபயோகப்படுத்தப்படும் மாவு முழுவதையும் ஒரு சிறிய அளவிலான புளித்தமா எவ்வாறு பக்குவப்படுத்துகிறதோ அதேபோலவே தேவ ராஜ்யமும் மனிதர்களைப் பக்குவப்படுத்துகின்றது. நமது வாழ்க்கையிலே நமக்கு நேரிடுகிற சோதனைகள், நாம் சந்திக்கிற போராட்டங்களிலேகூட நாமும் கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சிக்கு நேராக பக்குவமடைய முடிகிறது. தனி மனிதனை மட்டுமல்ல, அது முழு உலகத்தையுமே பக்குவப்படுத்துவதாயிருக்கிறது.

3. பாதிக்கக்கூடியது
கொஞ்சம் புளித்த மா மூன்றுபடி மாவை புளிக்க வைத்தது. அதைப்போல தேவ ராஜ்யத்தின் செய்தி சிறியதுதான், திருப்பணி சின்னதுதான், தேவபுத்திரர் சிறியவர்கள்தான். தேவ ராஜ்யத்தின் வல்லமையானது உலகத்தின் மக்களைப் பாதித்து தன் பக்கமாக இழுத்துகொள்ளும் வல்லமை படைத்தது. அப்.16:31 இவ்விதமாகச் சொல்லுகிறது: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்”.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது நமது வாழ்வில் ஏற்படும் தேவ ஆளுகை, பண்புகள் நமது குடும்பத்தில் உள்ள எல்லாரையும் அவருக்குள் இழுத்துக்கொள்ளும் வல்லமை படைத்தது.

அலெக்ஸாண்டர் நெப்போலியன் போன்றோர் யுத்தத்தினாலே நாட்டை ஆள முற்பட்டார்கள். மனிதர்களை ஆண்டுகொள்ள பிரயாசப்பட்டார்கள். தேவ ராஜ்யமானது யுத்தத்தினால் ஸ்தாபிக்கப்படுகிற ஒன்றல்ல. உள்ளத்தின் அடிப்படையிலே கிரியை செய்து வெளிப்படையாக அது மாற்றங்களை உருவாக்கினது. தேவராஜ்யத்தின் வல்லமையானது நமது உறவுகளை, செயல்களை, பரிசுத்த வாழ்க்கை எல்லாவற்றையும் ஆக்கிரமித்து பெரிய மாற்றங்களுக்குள் கொண்டுவருகிறது. கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளும் போது நாம் புதிய சிருஷ்டியாக மாற்றப்படுகிறோம். இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளோடு ஐக்கியம் கொள்ளும்போது புதிய சமுதாயம் உருவாகிறது.

தேவ ராஜ்யம் பயன்படுத்தப்படக்கூடியது. தேவ ராஜ்யம் பக்குவப்படுத்தக்கூடியது. தேவ ராஜ்யம் பாதிக்கக்கூடியது. எனவே ராஜ்யத்தின் புத்திரராக இருக்கும் நாம் தேவ ராஜ்யத்தின் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களுக்கு எடுத்துச் செல்வோம்.

சத்தியவசனம்