தேற்றும் நல்ல தேவன்

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
(செப்டம்பர்-அக்டோபர் 2014)

(இ). மோசேயினால் எழுதப்பட்ட நியாயப் பிரமாணத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.
மோசேயின் மூலம் செய்ய ஆரம்பித்த பணியை யோசுவாவின் மூலம் செய்துமுடிக்கப் போவதாக வாக்களித்த தேவன், மோசேயினால் எழுதப்பட்ட நியாயப் பிரமாணத்தையும் அவருக்குச் சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில், தேவனுடைய வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு, யோசுவா, மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட நியாயப் பிரமாணத்தை நன்றாக அறிந்தவராகவும் அதன்படி வாழ்பவராகவும் இருக்க வேண்டியது அவசியமாய் இருந்தது. “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப் பிரமாணத்தின் படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக” (யோசுவா 1:7).

யுத்தத்தின் மூலம் வாக்குத்தத்த தேசத்தைக் கைப்பற்றுவதற்கு மோசேயின் நியாயப் பிரமாணத்தின்படி யோசுவா வாழவேண்டும் என்று தேவன் கூறுவது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அக்காலத்தில் “யுத்த வெற்றி ராணுவ பலத்தில் அல்ல, தேவனுடைய வார்த்தையின் வல்லமையிலேயே தங்கியிருந்தது”. ஏனெனில் தேவனே அவர்களுக்காக யுத்தம் செய்பவராக இருந்தார். இதனால் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு மக்கள் தேவனுடைய வார்த்தையின்படி வாழ வேண்டியவர்களாய் இருந்தனர்.

“மோசே கற்பித்த நியாயப்பிரமாணம்” என்பது தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கட்டளைகளாகும். மோசே இவற்றை ஒரு புத்தகமாக எழுதி வைத்திருந்தார் (உபா. 31:9-13). சில வேத ஆராய்ச்சியாளர்கள் உபாகமப் புத்தகத்தையே தேவன் இங்கு குறிப்பிடுவதாகக் கருதுகின்றனர். ஆனால், யோசுவாவின் காலத்தில் மோசே எழுதியவை அனைத்தும், அதாவது, ஆதியாகமம் முதல் உபாகமம் வரை உள்ள வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களும் மோசேயின் நியாயப் பிரமாணம் என்றே அழைக்கப்பட்டது. இப்புத்தகங்களில் யுத்தக் கலையைக் கற்றுக்கொள்ளும் வழிமுறைகள் எதுவும் இராதபோதிலும், இப்புத்தகங்களில் உள்ளவற்றின்படி யோசுவா வாழவேண்டியவராக இருந்தார். ஏனெனில், தேவனுடைய வார்த்தையே மனிதருக்குத் தேவையான பெலத்தையும் ஞானத்தையும் கொடுக்கின்றது. இதனால், யோசுவா “பலங்கொண்டு திடமனதுடையவனாய்” இருப்பதற்கும், “புத்திமானாய் நடந்துகொள்வதற்கும்” தேவனுடைய வார்த்தையின்படி வாழ்பவராக இருக்க வேண்டியது அவசியமாயிருந்தது. அவர், “அதைவிட்டு வலது இடதுபுறம் விலகக்கூடாது” என்று தேவன் தெரிவித்துள்ளார். அதாவது, அவர் வேதாகமத்தின் எந்தவொரு கட்டளையையும் மீறி நடக்கக்கூடாது. அவர், அதன் சகல கட்டளைகளையும் கைக்கொண்டு வாழ வேண்டியவராக இருந்தார். எனவே, வேதாகமத்தில் நமக்கு விருப்பமான பகுதிகளை மாத்திரம் வாசிப்பவர்களாகவோ, அல்லது நமக்கு இலகுவானதாக இருக்கும் கட்டளைகளை மாத்திரம் கைக்கொள்கிறவர்களாகவோ நாம் இருக்கக்கூடாது. வேதாகமத்தை முழுமையாக அறிந்தவர்களாகவும், அதன் சகல கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறவர்களாகவும் நாம் இருக்கவேண்டும். “வேதாகமத்தின் ஒருசில கட்டளைகளை மாத்திரம் கைக்கொள்வது உண்மையான கீழ்ப்படிதல் அல்ல”. ஏனெனில், ஒருவன் ஒரு கட்டளையை மீறினால் சகலவற்றையும் மீறியவனாகவே இருப்பான் (யாக்.2:8-13).

உண்மையில், தேவனுடைய வார்த்தையே நமக்கு அவசியமான பலத்தைத் தந்து நம்மை ஞானவான்களாக்குகிறது. இதனால்தான், “வேதவசனம் எவர்களில் நிலைத்திருக்கிறதோ அவர்களே பலவான்களாகவும் பொல்லாங்கனை ஜெயிப்பவர்களாகவும் இருப்பதாக” யோவான் தெரிவித்துள்ளார் (1யோவான் 2:14). அப்போஸ்தலனாகிய பவுலும் “வேதவசனம் விசுவாசிப்பவர்களுக்குப் பெலன் செய்வதாகக்” குறிப்பிட்டுள்ளார் (1தெச.2:13). அதுமாத்திரமல்ல, “தேவனுடைய வார்த்தை பேதைகளை ஞானிகளாகவும் மாற்றுகிறது” (சங்.19:7). இதனால்தான், யுத்தம் செய்வதற்கு அவசியமான பெலத்தையும் ஞானத்தையும் பெற்றுக் கொள்வதற்கு, அக்காலத்தில் எழுத்து வடிவம் பெற்றிருந்த தேவனுடைய வார்த்தையான நியாயப்பிரமாணத்தின்படி வாழ தேவன் யோசுவாவுக்கு அறிவுறுத்தினார். “நியாயப் பிரமாணத்தை அன்றாடம் தியானித்து அதன்படி வாழாத நிலையில் யோசுவாவினால் இஸ்ரவேல் மக்களைத் தலைமை தாங்கி அவர்களை யுத்தத்தில் வழிநடத்த முடியாதிருந்தது”. உண்மையில், யுத்தம் செய்வதற்கு மாத்திரமல்ல, நாம் எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு வேண்டிய பெலனையும் ஞானத்தையும் தேவனுடைய வார்த்தையே நமக்குத் தருகிறது. இதனால் நாம் எந்தக் காரியத்தை செய்பவர்களாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தையின்படி வாழ்கிறவர்களாக இருக்க வேண்டும். “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்” (சங். 119:1) என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

தேவனுடைய வார்த்தையின்படி வாழும் போது மாத்திரமே வெற்றி கிடைக்கும் என்பதனால், இவ்விதமாக வாழ்வதற்கு யோசுவா என்ன செய்யவேண்டும் என்பதையும் தேவன் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்:

“இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” (யோசு.1:8).

தேவனுடைய அறிவுறுத்தலின்படி, நாம் அவருடைய வார்த்தையின்படி வாழ்வதற்கு, அது நம்முடைய அன்றாட உரையாடலின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். இதனால்தான், “நியாயப்பிரமாணப் புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியக்கூடாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எப்பொழுதும் தேவனுடைய வார்த்தை ஒருவனுடைய வாயில் இருக்கவேண்டுமென்றால், அவன் எப்பொழுதும் அதைப் பேசுகிறவனாக இருக்கவேண்டும். இதனால்தான், “.. நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக் கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசவேண்டும்” (உபா.6:7) என்று தேவன் அறிவுறுத்தியுள்ளார்.

அதாவது, நமது சகல உரையாடல்களிலும் தேவனுடைய வார்த்தை இருக்கவேண்டும். அன்றாடம் நாம் அநேக காரியங்களைப் பேசுகின்றோம். ஆனால் தேவனுடைய வார்த்தையைப்பற்றி பேசுவது மிக மிகக் குறைவாகவே உள்ளது. இதனால்தான் அநேக கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையின்படி வாழ்வதில்லை. அதேசமயம், நாம் எதைப்பற்றி பேசினாலும், எத்தகைய கருத்தை முன்வைத்தாலும் அது வேதாகமத்திற்கு ஏற்றவிதத்தில், அதை எவ்விதத்திலும் முரண்படுத்தாத விதத்தில் இருக்கவேண்டும். நாம் எடுக்கும் தீர்மானங்கள், மற்றவருக்குக் கொடுக்கும் ஆலோசனைகள் அனைத்தும் தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றவிதத்தில் இருக்கவேண்டும். நாம் எதைப்பற்றி பேசினாலும், தேவனுடைய வார்த்தைகள் நம்முடைய வாயிலிருந்து வரவேண்டும்.

தேவனுடைய வார்த்தை நம் உரையாடலின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாம் “இரவும் பகலும் அதைத் தியானிப்பவர்களாக இருக்க வேண்டும்” என்றும் தேவன் அறிவுறுத்தியுள்ளார். இரவும் பகலும் என்பது, “தொடர்ச்சியாக” என்னும் அர்த்தமுடைய எபிரெய மரபுத் தொடராகும். அதாவது, ஒருநாள் தேவனுடைய வார்த்தையைத் தியானித்துவிட்டு, மறுநாள் வேதத்தையே வாசிக்காமல் இருப்பவர்களாகவோ, அல்லது நாம் விரும்புகிற நேரங்களில் அல்லது நமக்கு வசதிப்படும் வேளைகளில் அல்லது நெருக்கடியான சூழ்நிலைகளில் மாத்திரம் தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கிறவர்களாகவோ இராமல், அன்றாடம் இதைச் செய்பவர்களாக இருக்கவேண்டும். சில கிறிஸ்தவர்கள் இது தேவனுடைய ஊழியர்களுக்கு அல்லது வேதபாரகர்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல் என்று கருதுகின்றனர்.

இன்னும் சிலர் இரவில் நித்திரைகொள்ள முடியாமல் இருக்கும் வயோதிபர்களுக்கான ஆலோசனை என்று கூறுகின்றனர். ஆனால் இவைகள் தவறான கருத்துக்களாகும். கிறிஸ்தவர்கள் அனைவரும் அன்றாடம் தொடர்ச்சியாகவும், கிரமமான முறையிலும் வேதாகமத்தைத் தியானிக்கிறவர்களாக இருக்கவேண்டும். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் நியாயப்பிரமாணத்தைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது சகல பெற்றோரினதும் கடமையாக இருந்தது (உபா.6:6-7, 11:18-20). புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தினந்தோறும் வேதாகமத்தை ஆராய்ந்துபார்த்த “பெரோயா” என்னும் பட்டணத்திலிருந்த கிறிஸ்தவர்களே அதிக நற்குணசாலிகளாக இருந்தனர் (அப்.17: 11). இதைப்போலவே நாமும் அன்றாடம் தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பவர்களாக இருக்க வேண்டும்.

யோசுவாவுக்குத் தேவன் கொடுக்கும் அறிவுறுத்தலே முதலாம் சங்கீதத்திலும் உள்ளது. இவ்விரு வசனங்களிலும் “தியானம்” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், சில மதங்களில் இருப்பதுபோல மனிதர் மவுனமாய் இருந்து சிந்திப்பதைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் மவுனமான தியானமுறை இருக்கவில்லை. மேலும், தியானம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் மவுனமான செயலை அல்ல, சத்தமிட்டுச் செய்யும் செயலையே குறிக்கின்றது. இதனால் வேதாகமத்தின் சில வசனங்களில் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்கும் (ஏசா.31:4), புறாவின் புலம்பலுக்கும் (ஏசா.38:14), மானிட பேச்சுக்கும் (சங்.37:30, 71:24) இச்சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்காலத்தில் மவுனமான வாசிப்பு பெரும்பாலான மக்கள் அறியாத தொன்றாகவே இருந்தது. பொதுவாக மனிதர் ஓரளவு சத்தத்துடன் வாசிப்பதையே தம் பழக்க மாகக் கொண்டிருந்தனர்.

மேலும், தியானம் என்பதை சொல்லர்த்தமாக “முணுமுணுத்தல்” என்றும் மொழிபெயர்க்கலாம். எனவே, தேவனுடைய வார்த்தையை அன்றாடம் தியானிக்கவேண்டும் என்று தேவன் கூறும்போது, ஓரளவு சத்தத்துடன் பல தடவைகள் மறுபடியும் மறுபடியுமாக ஒரு வேதப் பகுதியை வாசிக்கும்படியே கூறுகின்றார். இது, ஒருவன் தனக்குள்ளேயே, ஆனால் ஓரளவு சத்தத்துடன் தன்னோடு பேசும்விதத்தில் வேதத்தை வாசிக்கும் முறையாகும்.

அதேசமயம், இது, குறிப்பிட்ட வேதப் பகுதியை பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்தும், சிந்தித்தும் பார்க்கும்விதத்தில் பல தடவைகள் வாசிக்கும் முறையாகவும் உள்ளது. இவ்விதமாக வேதாகமத்தை வாசிக்கும்போது மாத்திரமே தேவனுடைய வார்த்தை நம்முடைய மனதில் ஆழமாகப் பதியும். நாமும் அதின்படி வாழ்கிறவர்களாக இருப்போம்.

சத்தியவசனம்