பாடுகளில் கிறிஸ்தவனின் மனோபாவம்

சகோ.ஆ.பிரேம்குமார்
(செப்டம்பர்-அக்டோபர் 2014)

பாடுகள் உன் வாழ்வில் இருக்குமானால் பாவம் உன் வாழ்வில் உண்டு என்று கூறும் போதனை நம் மத்தியில் பரவி வருகிறது. இது ஒரு தவறான போதனையாகும். பாவத்தினாலும் பாடுகள் வரலாம். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அப்படியல்ல. பாவம் காரணமாய் இல்லாமலும் பாடுகள் வரலாம் என்பதற்கு யோபு ஒரு நல்ல உதாரணம். “விசுவாசத்திற்காகப் பாடுபடுவது என்பது நாம் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்பதைக் காட்டவில்லை. மாறாக நாம் உண்மையாயிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது” என்றார் ஒருவர். அது எவ்வளவு உண்மை. பாடுகள், தேவன் நம்மை அன்பு செய்யவில்லை என்பதையோ அல்லது தேவன் நம்மை அன்பு செய்தபோதிலும், தீமையை அகற்றும் சக்தியற்றவர் என்பதையோ காட்டவில்லை. பாடுகள் நம் வாழ்வில் ஏற்படும் விபத்துக்களும் அல்ல, பாடுகள் தேவனுடைய கோபத்தை அல்ல, தேவனுடைய கிருபையையே காட்டுகிறது.

“ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டி ருக்கிறது” (பிலி.1:29).

பாடுகள் கிருபையின் கொடையாகும். தேவன் கிறிஸ்தவர்களுக்குப் பஞ்சு மெத்தையில் நடப்பது போன்ற வாழ்வை வாக்குப்பண்ணவில்லை. ஒரு கிறிஸ்தவனின் வாழ்வில் பாடு இருக்குமானால் அவன் தேவ பக்தியில் குறைந்தவன் என்று கூறுவது தவறு. மாறாக தேவபக்தியுள்ளவர்களே பாடுபடுவார்கள் என பவுல் எழுதுகிறார்: “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2தீமோ.3:12).

நாம் பாடுபடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். இது நாம் பாடுகளைத் தேடிப்போக வேண்டும் என்பதைக் குறிக்கவில்லை. அநேகர் ஞானமில்லாமல் காரியங்களைச் செய்வதாலும் பாடுபடுவதுண்டு. ஆனால் கிறிஸ்துவினிமித்தமாகப் பாடுபடுவது ஒரு சிலாக்கியம். “நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மை செய்து பாடுபடும் போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்” (1பேதுரு 2: 20,21).

தேவன் கோபத்தினால் நமக்குப் பாடுகளைக் கொடுப்பதில்லை. கிருபையினாலே அனுமதிக்கிறார் என 29ஆம் வசனம் வெளிப்படுத்துகிறது. “அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது”. இங்கு ‘அருளப்பட்டிருக்கிறது’ என்ற சொல் ‘கிருபை’ என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும். இரட்சிக்கப்படுவதற்கு மாத்திரமல்ல, பாடுபடுவதற்கும் அவர் கிருபை கொடுக்கிறார். இரட்சிப்பும், பாடுகளும் தேவனுடைய கிருபையின் கொடைகள்!

பிள்ளைப்பேற்றிற்காக காத்திருக்கும் தாய்க்கு பிரசவ வலி எடுக்காவிட்டால் மருந்தை ஊசியின்மூலம் செலுத்தி வலியை ஏற்படுத்துவார்கள். பிரசவ வலி மிகவும் வேதனையானதுதான். ஆனால் அப்படி வேதனைப்படாவிட்டால் பிள்ளை வெளியே வராது. அவ்வாறே பாடுகள் இல்லையேல் மகிமையும் இல்லை (1பேதுரு 1:7). தேவன் ஆளுகை செய்கிறார். அவர் தீமையையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். அவர் அனுமதியில்லாமல் நமது வாழ்வில் எதுவும் நிகழாது. தேவன் தனது திட்டத்தை நிறைவேற்ற பாடுகளையும் ஊடகமாகப் பயன் படுத்துகிறார். கிறிஸ்துவும் பாடுகள் மூலம் இரட்சிப்பை சம்பாதித்து தேவதிட்டத்தை நிறைவேற்றினார். தேவன் பாடுகள் மூலம் நம்மைப் பெலப்படுத்தி முதிர்ச்சியடையச் செய்கிறார். நம்மை முழுமைப்படுத்துகிறார். கிறிஸ்துவின் சாயலை நம்மில் தோன்றப் பண்ணுகிறார்.

நாம் பாடுபடும் அநேக வேளைகளில் தனியாகப் பாடுபடுவதாக எண்ணுகிறோம். “ஐயோ, எனக்குள்ள பாடுகள் வேறு யாருக்குமே இல்லை” என்று சுயபரிதாபத்தில் மூழ்கியிருப்பவரும் உண்டு. எலியாவும் தான் மாத்திரமே பாடுபடுவதாக நினைத்தார். இன்னும் ஏழாயிரம் பேர் இருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை. பாடுகள் நம் எல்லோருக்கும் பொதுவானது. எனவேதான் பவுல் “நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.” (பிலி.1:30) என்கிறார். பிலிப்பியரும், பவுலும் ஒரே விசுவாசத்திற்காகப் பாடுபட்டனர். பவுல் சரீரப்பிரகாரமாகவும் மானசீகப்பிரகாரமாகவும் பாடுபட்டார் (பிலி.1:15,17). அவர் இயேசுவுக்காக அதிகமாய் அடிக்கப்பட்டார், காவலில் வைக்கப்பட்டார், கல்லெறியுண்டார், கள்ளச் சகோதரரால் பாடுபட்டார். பொருளாதார ரீதியாகவும் கஷ்டம் அனுபவித்தார் (2கொரி.11:23-28). பவுல் எந்த சுவிசேஷத்திற்காகப் பாடுபட்டாரோ, அதே சுவிசேஷத்திற்காக பிலிப்பியரும் பாடுபட்டனர். பவுலும் பிலிப்பியரும் பாடுகளில் ஐக்கியம் கொண்டனர்.

இன்று இதனை வாசிக்கும் நண்பனே, நீ கிறிஸ்துவினிமித்தம் பாடுபடுவாயானால் மற்றவர்கள் உன்னைக் கேலி செய்து ஒதுக்குவார்களானால் நீ வெட்கப்படாதே. நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதனால் உன் பெற்றோர் உன்னை ஒதுக்கி நண்பர்கள் உன்னைவிட்டு விலகிவிட்டார்களென்று எதையோ இழந்து விட்டோமே எனக் கலங்காதே. உன்னைப் போலப் பாடுபடுகிறவர்கள் அநேகர் உண்டு. ஒருவேளை நீ பாடுபடுகையில் மற்றக் கிறிஸ்தவர்கள் அருகில் இல்லாமலிருக்கலாம். ஆனால் தேவன் உன்னோடு இருக்கிறார்.

சாமுவேல் கணேஷ் என்பவரை ஒரு பிராமணக் குடும்பத்திலிருந்து தேவன் தெரிந்துகொண்டார். கிறிஸ்தவர்களை எதிர்த்து கிறிஸ்தவக் கூட்டத்தை நடத்தியவர்களின் இசைக் கருவிகளை உடைத்தவர். ஆனால் அவரையும் இயேசு தொட்டார். அவர் கிறிஸ்தவனாகிவிட்டார். பிராமணக் குடும்பம் என்பதால் அவரை வீட்டைவிட்டே விரட்டிவிட்டார்கள். அப்பொழுது “நான் உன்னைத் திக்கற்றவனாக விடேன்” என்ற சத்தம் அவர் காதில் ஒலித்தது. தேவன் அவரை உயர்த்தி மிக வல்லமையாக உபயோகிக்கிறார். பாடுகளில் தேவன் நம்மோடு இருப்பது நமக்கு எத்தனை பெரிய ஆறுதல்.

“ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்” (1பேதுரு 4:16). சாது சுந்தர்சிங், செல்வச் செழிப்பில் திகழ்ந்தவர். அவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு காடுகளில் அலைந்து திரிந்து தேவனுக்கு ஊழியம் செய்தார். பல பாடுகளை அனுபவித்தார். ஒருமுறை சிலர் அவரைக் கல்லெறிந்து அவர் செத்துவிட்டாரென நினைத்து ஒரு கிணற்றில் போட்டார்கள். இப்படிப் பல பாடுகளை அனுபவித்த சாது சுந்தர்சிங் பாடுகளைக் குறித்துக் கூறியது என்ன? “கிறிஸ்துவுக்காக சிலுவை சுமக்கும் பாக்கியம் இந்த உலகில்தான் கிடைக்கிறது” என்றார். கிறிஸ்துவிற்காக பாடுபடுதலை ஒரு பாக்கியம் என்றார்.

நீ பாடுபடும்போதும் தேவன் உன்னோடு இருக்கிறார். நீ பாடுபடுவதற்கு உனக்குக் கிருபை கொடுக்கிறார். மற்றவர்களும் உன்னைப் போல பாடனுபவிக்கிறார்கள் என்பதனையும், தேவன் உன்னை உபத்திரவப்படுத்துபவர்களை உபத்திரவப்படுத்தி உன்னை இளைப்பாறுதலுக்கு உட்படுத்துவார் என்பதையும் மறவாதே. எனவே, பாடுகளைப் பாதகமான காரியங்களாக அல்ல, தேவனை மகிமைப்படுத்த தேவன் கொடுத்த சந்தர்ப்பங்களாக எண்ணி தேவனை மகிமைப்படுத்து. பாடுகள் தேவகிருபையால் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அவை கிறிஸ்துவின் சாயலுக்கு உன்னை மாற்ற தேவன் பயன்படுத்தும் ஆயுதம் என்பதனையும் மறவாதே. பாடுகள் உன் விசுவாசத்தைப் பெலப்படுத்தி உன்னைச் சுத்தி கரித்து முதிர்ச்சியுள்ளவனாக மாற்றும். பாடுகள் மூலம் தேவன் உன்னை தனது சாயலுக்கு மாற்றுகிறார். எனவே நாமும் பவுலோடு சேர்ந்து பாடுகளில் சந்தோஷப்படுவோமே!

கிறிஸ்து நமது ஜீவனாயிருந்தால், நாம் அவருடைய மக்கள்மேல் கரிசனையுள்ளவர்களாய் இருந்து அவர்களுக்காக சந்தோஷத்துடனும், தரிசனத்துடனும் ஜெபிப்பதுடன் (பிலி.1:1-11) நமது ஜீவனாகிய கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எந்த சூழ்நிலையிலும் சந்தோஷத்துடன் அறிவிக்கத் தயாராக இருப்பதுடன் எந்த சூழ்நிலையிலும் அவரை மகிமைப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொள்ளுவோம் (19-30).

ஆம்! கிறிஸ்து நமது ஜீவனென்றால் அவரை நம் வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டும்.

சத்தியவசனம்