பாவத்திற்கான நிவாரணம்

Dr.தியோடர்.எச்.எஃப்
(செப்டம்பர்-அக்டோபர் 2014)

மிகவும் நம்பவே முடியாத கஷ்டத்திற்குள்ளாக வாழ்ந்த ஒருவனைப் பற்றிய ஒரு அதிசயமான கதை சில வருடங்களுக்கு முன் கூறப்பட்டது. அந்தக் கதை வெளியாகி 6 மாதங்களுக்குப் பின், அந்தக் கதை தவறானது என்ற செய்தியும் வந்தது. அவன் தன்னைப் பற்றி உண்மையற்ற தகவல்களைக் கூறியிருக்கிறான். சிலர் கிறிஸ்தவர்களாக வாழ்வதும் இப்படித்தான் இருக்கிறது.

யோவான் 1:6-10 வரையுள்ள வேதப்பகுதியில் ஆவிக்குரிய வாழ்வில் பாவிகளாய் வாழ்கின்ற மூன்று விதமான மக்களைக் குறித்து எழுதுகிறார். நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்ட சிலருக்கு பாவத்தைக் குறித்து அறிவே இல்லாமல் இருக்கலாம். ஆனால் விசுவாசிகளைப் பொருத்தவரையில், தேவன் எல்லா மாய்மாலங்களையும் வெளிப்படுத்துகிறவர் என்று அறிந்துகொள்ள வேண்டும். மறைவாக இருக்கும் பாவம் வெளிப்படுத்தப்பட்டு அதற்கான நிவாரணத்தைப் பெறும்வரை ஒரு விசுவாசியின் இருதயத்தில் அமைதி தங்க முடியாது.

இந்த மூன்று விதமான மக்கள் தங்களிடத்தில் உள்ளது எது என்றும், தங்கள் வார்த்தையும் நடக்கையும் எப்படி இருக்கிறது என்றும் கவனித்துப் பார்க்கவேண்டும். தேவன் அவர்களைப் பற்றியும், அவர்களின் தண்டனையைப் பற்றியும் என்ன சொல்கின்றார் என்று கவனிக்க வேண்டும். அதேவேளையில் பாவத்தில் வாழும் மக்களுக்கு என்ன நிவாரணத்தை தேவன் அளித்திருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

1. பாவம் செய்கிறவர்கள்
ஆவிக்குரிய வாழ்வில் பாவிகளாய் வாழ்கிற ஒருவிதமானவர்கள், “தேவனோடு தங்களுக்கு ஐக்கியம் இருக்கிறது” என்று கூறியும் இருளில் நடப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால், அவர்களது வாழ்வும் நடக்கையும் அவர்கள் கூறுவதைப் பொய்யாக்குகின்றது. “தேவனோடு ஐக்கியமாயிருக்கிறோம்” என்று கூறுகிற அப்படிப்பட்டவர்கள், தங்களிடம் நித்திய ஜீவன் உண்டு என்றும், தாங்கள் தேவனுக்குப் பயந்து வாழ்பவர்கள், கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்வுக்குரிய எல்லா அம்சங்களையும் உடையவர்கள் என்றும் எண்ணக்கூடும். ஆனால் அவர்களே இருளில் நடப்பவர்கள்.

நாம் தேவனோடு ஐக்கியம் உள்ளவர்கள் என்று கூறி இருளில் நடந்தால், நமக்குள் உண்மை இல்லை என்று யோவான் கூறுகின்றார். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதினால் பாவம் செய்யவே மாட்டோம் என்று யோவான் சொல்லவில்லை. ஆனால், தொடர்ந்து பாவத்தில் வாழ மாட்டோம் என்று கூறுகிறார்.

இந்த வகை மக்களைத் திருத்த இரு வழிகள் உண்டு. “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” என்று 1யோவான் 1:7 கூறுகிறது. ஆகவே முதல் சிகிச்சை “ஒளியில் நடப்பதாகும்”. “ஒளியின்படி நடவுங்கள்” என்று வேதம் கூறவில்லை. நாம் நடப்பது எங்கு நடக்கிறோம் என்பதைப் பொருத்தது. நாம் ஒளியில் நடக்கவேண்டும். ஒளியில் நடப்பது என்னவென்றால், அது தேவபிரசன்னத்தில் நடப்பதாகும். அதுவே பாவத்தைக் குறித்த உணர்வை நமக்குத் தரும்.

ஒளியில் நடப்பதற்கு, ஒருவன் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். வேத வார்த்தையின் வெளிச்சம் ஒருவருடைய இருதயத்தில் வந்து, அவருக்கு பாவத்தைப் பற்றி உணர்த்த வேண்டும். அதே வெளிச்சம் தேவனுடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தி, அவரை பக்தியோடு பார்க்கத் தூண்டும். இயல்பான மனிதன் இதை செய்ய முடியாது.

அடுத்த சிகிச்சை, இரத்தத்தால் கழுவப்படுதலாகும். “இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி.9:22) என்று வேதம் கூறுகின்றது. கிறிஸ்து சிந்தின இரத்தத்தில் இரட்சிப்பின் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று நியாயப்படுத்துதலும், மற்றொன்று பரிசுத்தப்படுத்துதலும் ஆகும்.

நியாயப்படுத்துதல் இரட்சிப்பை முழுமையாக்காது. அது இரட்சிப்பின் ஆரம்பமே. நியாயப்படுத்துதல் மூலம் தேவன் அவருடைய பார்வையில் நம்மை நீதிமான்களாக அறிக்கையிட்டு, பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கிறார். பரிசுத்தப்படுத்துதல் மூலம் இந்த வாழ்வில் பாவத்தின் ஆளுகையிலிருந்தும் அதின் வல்லமையிலிருந்தும் நாம் விடுவிக்கப்படுகிறோம். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம்மை தொடர்ந்து கழுவிக்கொண்டே இருக்கிறது. இவ்வுலக வாழ்வில் நமது பாவ சுபாவத்தை முற்றிலுமாகக் களைந்துவிடுவதைக் குறித்து அல்ல, பாவத்தின்மேல் ஜெய மெடுப்பதைக் குறித்தே நாம் கற்றுவருகிறோம். நாம் மரித்து தேவனை சந்திக்கும்போது, நமது சரீரம் பாவத்திலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறும். அப்பொழுது நம் இரட்சிப்பு முழுமை அடையும்.

2. பாவ சுபாவம் இல்லை என்று கூறுபவர்கள்
“நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1யோவான் 1:8) என்று வாசிக்கிறோம். இவ்வசனத்தில் ஒருவித பக்தியான கூட்டத்தைக் காண்கிறோம். இவர்கள் தாங்கள் பரிசுத்த கிறிஸ்தவர்கள் என்றும், தங்களுக்குள் பாவ சுபாவம் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

ஒளியில் நடக்கும் கிறிஸ்தவர்கள், தேவனுடைய பரிசுத்தத் தன்மையையும் பாவத்தின் குணாதிசயத்தையும் அறிந்தவர்கள். தங்களுக்கு பாவ சுபாவம் உண்டு என்றும் அறிந்தவர்கள். தங்கள் பாவ சுபாவம் தீய விருப்பங்களிலும் தேவனுடைய திட்டப்படியல்லாமல் உலகத்துக்கேற்ற மதிப்பீடுகளிலும் வெளிப்படுகிறது என்றும் அறிவார்கள்.

தங்களுக்குள் பாவம் இல்லை என்று கூறுபவர்கள் நிலை என்ன? தங்களை வஞ்சித்துக் கொள்கின்றனர் என்று தேவன் கூறுகிறார். அவர்கள் தங்களையே வழிவிலக செய்கின்றனர். தேவனும், மக்களும்கூட அவர்களது பொய்யான கூற்றினால் ஏமாற்றப்படமாட்டார்கள். இந்த மாதிரி ஆவிக்குரிய பாவிகளுக்கு நிவாரணம் என்ன? 1 யோவான் 1:9ல் வாசித்த படி, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”. “அறிக்கை” என்பது ‘நாம் பாவிகள் என்பதை ஒத்துக்கொள்வதாகும்’. இதன் அர்த்தம் என்னவென்றால், தேவன் பாவத்தைப் பற்றி என்ன கூறுகிறாரோ அதையே நாமும் கூறுவோம். இப்படிச் செய்யும் போது நமது பாவத்தை ‘தவறு’ என்றோ, அல்லது ‘பலவீனம்’ என்றோ கூறமாட்டோம். ஆனால் அதை தேவன் அழைப்பது போல் ‘பாவம்’ என்றே கூறுவோம். நீங்கள் பாவம் செய்திருந்தால் அதை தேவனிடம் அறிக்கையிட வேண்டும். அறிக்கையிடும்போது தேவன் மன்னிப்பதாக நமக்கு வாக்களித்திருக்கிறார்.

3. பாவம் செய்ததை மறுக்கும் மக்கள்
ஆவிக்குரிய வாழ்வில் பாவிகளாய் வாழ்கின்ற மூன்றாவது கூட்ட மக்களை 1யோவான் 1:8ல் காண்கிறோம். “நமக்குப் பாவமில்லை என்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது”. இந்தவிதமான விசுவாசிகளினிடத்தில், அவர்களது பாவம் அவர்களிடமே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் இருதயத்தில் அதை நன்றாக அறிவார்கள். ஆனால் வெளிப்படுத்தப்பட்ட பாவத்தை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். இதுவொரு பெரிய வஞ்சனையும் அநீதியும் ஆகும். இரட்சிப்பைப் பெறாத ஒருவனால் மட்டுமே இது கூடும். லூக்கா.18ஆம் அதிகாரத்தில் இப்படிப்பட்ட ஒரு பாவியை பார்க்கின்றோம். “பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம் பண்ணினான்” (லூக். 18:11,12). இந்தப் பரிசேயன் தான் பாவி என்று ஒத்துக்கொள்ள மனதில்லாது இருந்தான். தேவனுக்கு முன்பாக தான் செய்துவந்த ஆவிக்குரிய செயல்களைப் பட்டியல் போட்டுக் காட்டி பெருமை பாராட்டினான். அந்த ஆயக்காரனைவிட நான் நல்லவனாக இருக்கிறேன், நல்லவனாக நினைத்தேன். ‘நான் எந்த பாவமும் செய்யவில்லை’ என்பதே அவனது பெருமை.

இந்த மாதிரியான பாவி தேவனைப் பொய்யராக்குகிறான். இவன் அவரை சத்தியத்திற்கு தேவனாக ஏற்கவில்லை. இந்த மாதிரி மனிதர்கள் இயேசுவை நல்லவராகவும், நல்ல போதகராகவும் காண்கிறார்கள். ஆனால் அவர் இவ்வுலகில் வந்து, பாவம் அற்றவராக வாழ்ந்து, நம் பாவத்திற்காக சிலுவையில் மரித்தார் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. ‘நாங்கள் பாவம் செய்யவில்லை’ என்று கூறும்போது வேதத்தில் வெளிப்பட்ட இயேசுகிறிஸ்துவையே ஏற்க மறுக்கின்றார்கள். பாவத்தை ஏற்காததால், பாவத்தில் தொடர்கின்றனர். தங்களுக்கு பாவமில்லை என்பதால், அவர்கள் தேவனைப் பொய்யராக்குகின்றனர். அவரது வார்த்தை அவர்களுக்குள் இருக்காது. இரட்சிப்புக்கு வழிநடத்தும் ஒளியிலிருந்து விலகி, தாங்களாகவே தெரிந்துகொண்ட இருளில் வாழ்கின்றனர். இந்த கூட்டத்தினர் ஆவிக்குரிய பாதையில் வழிதவறினவர்கள். தங்கள் பாவங்களிலிருந்தும், தேவனைப்பற்றிய தவறான எண்ணங்களிலிருந்தும் இவர்கள் மாறாவிட்டால், நித்திய தண்டனைக்கு ஆளாவார்கள். இவர்களுக்கு நிவாரணம் என்ன? தங்கள் பாவத்திற்காகவும் இயேசுகிறிஸ்து இரத்தம் சிந்தினார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

“இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:24-26).

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் பாவத்தை மன்னிப்பதற்கான வல்லமையைப் பெற்றுள்ளது. ஒரு பாவியின் கடனை தேவன் மன்னிக்க விரும்புகிறார். ஆனால் அவனும் தேவனோடு சேர்ந்து தனக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை உணர்ந்தால்தான் மன்னிக்கப்படுவான். அந்த இரட்சகர் இயேசுகிறிஸ்துவே.

ஒரு பாவி தேவனிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுகிறிஸ்து தன் இரட்சகர் என்று விசுவாசிக்கும்போது நித்திய ஜீவன் அவனுடையதாகிவிடும்.

மொழியாக்கம்: Mrs.Edrina Jeyasingh

சத்தியவசனம்