தேவ சித்தத்திற்கு முழுமையாக அர்ப்பணித்தல்

சகோ.டேவ் ஓர்ட்லி
(செப்டம்பர்-அக்டோபர் 2014)

நீங்கள் ஒரு திடீர் உலகில் வாழ்கின்றீர்கள். திடீர் கார் கழுவும் இடம் வழியாக நீங்கள் உங்கள் காரை ஓட்டி காரை கழுவலாம். இன்று திடீர் உணவு வகைகளை நமது சமையல் அறையில் உடனடியாக தயாரிக்கலாம். வானொலியில் திடீர் பாடல்கூட கிடைக்கும். ஆனால் வாழ்வில் எல்லாமே திடீர் என்று கிடைக்காது. திடீர் வெற்றியோ திடீர் மகிழ்ச்சியோ கிடைக்காது. அதேபோல் திடீர் முதிர்ச்சியையும் அடைய முடியாது. உடல், மனம், ஆத்துமா ஆகியவற்றின் வளர்ச்சியும் உடனடியாக நேரிடாது. அதற்கு நீண்டகாலம் தேவை. தேவனுடைய சித்தமும் திடீர் என்று பாக்கெட்டில் வருவதில்லை. அது உடனடியாக வெளிப்படாது. ஏதோ தண்ணீர் சேர்த்து, கிண்டினால் தோன்றும் உணவு மாதிரி இல்லை. உங்கள் வாழ்வுக்கு தேவனுடைய சித்தம் அறிய, சரியான பொருட்களைச் சரியான அளவில் சேர்த்து மெதுவாக சமைக்க வேண்டும். தேவனுடைய சித்தத்தைக் குறுக்கு வழியில் ஒருவரும் அறிய முடியாது.

தேவ சித்தத்தை அறிய முதல் படி

தேவனுடைய சித்தத்தை எப்படி காண முடியும் என்று ரோமர் 12:1,2இல் வாசிக்கின்றோம். ரோமர் 12:1ல் பவுல் இப்படியாக எழுதுகிறார்: “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை”. இது சகோதரருக்கு எழுதப்பட்டது என்பதைக் கவனியுங்கள். இது கிறிஸ்தவர்களுக்கு உரியது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத ஒருவன் தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிப்பதில் சிரத்தைக் காட்டமாட்டான். ஆனால் ஒரு கிறிஸ்தவனுக்கு அது இயல்பான விருப்பமாக இருக்கிறது.

ரோமர் 12:1ஆம் வசனம் தேவனுடைய இரக்கங்களைப் பற்றி கூறுகின்றது. ஏன் கிறிஸ்தவர்கள் தேவனைப் பிரியப்படுத்த விரும்புகின்றார்கள்? தேவன் அவர்களுக்கு பல விதங்களில் அவர் அன்பைக் காட்டுவதால் அவர்களது விருப்பம் அதுவாகத்தான் இருக்கவேண்டும். தேவனுடைய சித்தத்தை அறிய விரும்புவது ஏதோ தேவனுக்கு கிறிஸ்தவன் செய்யும் எந்தவொரு சகாயமும் இல்லை. தேவன் அவனுக்காக செய்த எல்லாவற்றிற்கும் சரியாக அவன் தனது கடமையை செய்கிறான். ஒரு விசுவாசியாக, உங்கள் சரீரத்தை தேவனுக்கு ஒப்படைக்க நீங்கள் உந்தப்படுகிறீர்கள். ஏன் சரீரம் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்று நீங்கள் எண்ணலாம். தேவனுக்கு உங்கள் இருதயமும் மனமும் வேண்டாமா? உங்கள் சரீரம் முழு ஆள் தத்துவத்தையும் குறிக்கின்றது. மாமிசமும் எலும்பும் மட்டும் இல்லை. உங்கள் எண்ணம், உங்கள் விருப்பம், உங்கள் உணர்ச்சிகள் உங்களில் ஒன்றி இருக்கின்றது. உங்களிடமிருந்து அவைகளைப் பிரிக்கமுடியாது. உங்கள் முழு ஆள் தத்துவமும் உங்கள் சரீரம் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் முழுமையாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்.

ஜீவபலி

நீங்கள் ஜீவபலியாக இருக்கவேண்டும். ஒரு காலத்தில் மிருகங்களைக் கொன்று தேவனுக்குப் பலி செலுத்தி, தேவனுடைய இரக்கத்தைத் தேடினார்கள். மிருகங்களின் இரத்தம் அவர்களது பாவங்களை மூடும் என்று கருதப்பட்டது. ஆனால், தேவ ஆட்டுக்குட்டியான இயேசு ராஜா, இறுதி பலியாக இறங்கி வந்தார். “கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்” (1 பேதுரு 3:18).

ஆனால் இப்போது நீங்கள் “ஜீவபலி”யாக (ரோமர் 12:1) இருக்கவேண்டும். ஒரு காலத்தில் “பலி” என்பது இறந்த ஒன்றோடு சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அது உங்கள் வாழ்வில் ஒரு பகுதியாகும். நீங்கள் உங்களை முழுவதுமாக தேவனுக்கு ஒப்படைக்கும் போது, உங்கள் வாழ்வாகிய ஜீவபலி தேவனுக்கும் ஏற்றதாக இருக்கிறது. தேவனுக்கு உங்களைக் கொடுப்பதே “புத்தியுள்ள ஆராதனை” (ரோ.12:1) ஆகும். தேவன் உங்களை ஜீவபலியாக ஏற்பது மட்டுமல்ல, நீங்கள் உங்களை அவருக்கு கொடுக்க வேண்டும் என விரும்புகிறார். நீங்கள் அவருக்கு உங்களை முழுவதுமாக ஒப்படைத்து அவரைச் சார்ந்து வாழ்வதை விரும்புகிறார்.

உலகத்துக்கு ஒத்துப்போகாமல் மறுரூபமாகுங்கள்

ரோமர் 12:2ல் “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்று வாசிக்கின்றோம். இந்த உலகத்திற்குரியதை அல்ல; மறு உலகத்திற்கு ஏற்றவைகளை நோக்கி ஒவ்வொரு விசுவாசியும் ஓடவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இரட்சிப்பு, அவரோடு ஐக்கியம், பரலோகத்தில் ஒரு வீடு, தேவனோடுகூட ஒப்புரவாகுதல் ஆகிய இவைகளுக்குதான் ஒரு விசுவாசி முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இவ்வுலகத்தில் முக்கியமாகக் கருதப்படுவது எதுவோ, அது அநித்தியமானது. பணம், புகழ், புதிய உடுப்புகள் போன்ற உலகம் முக்கியத்துவம் கொடுக்கும் பொருள்கள் யாவும் நித்தியமானவை அல்ல. இந்த மாதிரி நிலையில்லாத காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விசுவாசிகள் உண்மையாகவே முக்கியமானது எதுவோ அதை இழந்து விடுகிறார்கள். அதைவிட பெரிய இழப்பு, அவர்கள் தேவனைத் துக்கப்படுத்துவதுதான்.

அதற்கு பதிலாக, “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (வச.2). உலகம் உங்களை எளிதாக அதன் வழிக்கு கவர முடியும். ஆனால் வேதம் அதைவிட சிறப்பானதை உங்களுக்குத் தருகின்றது. நீங்கள் கிறிஸ்தவனாகும்போதே ஒரு புதிய சிருஷ்டியாக மாறுகின்றீர்கள். உங்களுடைய மதிப்பீடுகள் வேறுபடும். உங்கள் நோக்குகள் புதிதாகும். நீங்கள் தேவனையே பிரியப்படுத்த விரும்புவீர்கள். உங்கள் உள்ளான மனிதன் மாற்றப்படுவதால் உங்கள் வெளி நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் எங்கெல்லாம் போகிறீர்கள், என்ன செய்கின்றீர்கள், எப்படி காணப்படுகின்றீர்கள் என்பது முக்கியம்.

தேவசித்தத்தைப் பகுத்தறியும் திறன்

தேவனுக்காக வாழும் வாழ்வில் அநேக சிலாக்கியங்கள் உண்டு. அவைகளில் மிகச் சிறந்தது என்னவெனில், “தேவனுடைய சித்தம் இன்னதென்று பகுத்தறியும்” திறனாகும் (ரோ.12:2). “பகுத்தறிவது” என்பது இரு அர்த்தங்களைக் கொண்டது. ஒன்று, தேவன் என்ன விரும்புகிறார் என கண்டுபிடிப்பதாகும். இரண்டாவது, அவ்வாறு கண்டுபிடித்தப்பின் அதை செய்வதைத் தெரிந்துகொள்வதாகும். இதனால் ஒரு முக்கிய கருத்தைக் கற்றுக் கொள்கிறீர்கள். தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, அது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பையும் ஏற்கிறீர்கள்.

தேவனுடைய சித்தம் மூன்றுவிதமாக ரோமர் 12:2இல் விளக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாக, அது “நன்மையானது”. அவரது சித்தத்தைச் செய்வது எளிதாக இல்லாமல் இருந்தாலும் அது நன்மை பயக்கும். என்றாவது ஒருநாள் அவரைப் பின்பற்றி அவருடைய சித்தத்தின்படி வாழ்ந்த வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, “ஆண்டவரே, உமது சித்தமே சிறந்தது” எனக் கூறுவீர்கள்.

இரண்டாவதாக, அவரது சித்தம் “பிரியமானது”. நீங்கள் உங்கள் வாழ்வை அவருக்குக் கொடுத்தால் அவர் பிரியப்படுவார். உங்கள் வாழ்வு அவருக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே அதைச் சிறப்பாகப் பிரயோஜனப்படுத்துவார். தேவன் உங்கள் வாழ்வை அங்கீகரித்தால், நீங்கள் அவரது திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமே.

மூன்றாவதாக, தேவனுடைய சித்தம் “பரிபூரணமானது”. அப்படியானால் உங்கள் வாழ்வை தேவனிடம் பயமில்லாமல் ஒப்படைக்கலாம். பெரிய நிகழ்விலிருந்து சிறிய காரியம்வரை, உங்கள் வாழ்விற்கு ஒரு சரியான திட்டம் இருக்கின்றது. தேவன் தவறமாட்டார் என்று நிச்சயத்தோடு நீங்கள் இருக்கலாம்.

புதிய கண்ணோட்டம்

நீங்கள் தேவனுக்கு உங்களை கொடுத்து விடும்போது, உங்கள் வாழ்வில் சில உண்மையான மாற்றங்களைக் காண்பீர்கள். வாழ்க்கைக்கான உங்கள் குறிக்கோள்கள் மாறும். ஒருவேளை முற்காலத்தில், மகிழ்ச்சி என்பது பிரபலமாக இருப்பதோ அல்லது ஒரு பகுதிநேர வேலை கிடைப்பதோ என்று நீங்கள் எண்ணியிருக்கலாம் அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பகல் கனவுகள் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கலாம். ஒரு புது வேலையில் அமர்ந்து, அதிக சம்பளம் பெற்று அழகான பொருட்களை வாங்குவது பற்றிய கனவுகள் உங்களை மகிழ்வித்திருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான போக்கு உங்களைத் திருப்தி செய்யாததை உணர்வீர்கள். வெற்றியை நீங்கள் வேறுவிதமான கண்ணோட்டத்துடன் அணுகுவீர்கள். தேவனுக்காக உங்கள் வாழ்வை செலவு செய்தால்தான் உண்மையாகவே நீங்கள் பணக்காரர். அவர் விரும்புவதை செய்யும்போதுதான் உண்மையான மகிழ்ச்சி அடைவீர்கள். இதை ஒரு உதாரணத்தின் மூலம் ஊர்ஜிதப்படுத்தலாம்.

ஒரு அலுவலகத்தில் சிறப்பாக பணிசெய்து வெற்றியோடு வாழ்ந்துவரும் ஒருவர் அயல் நாட்டுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் என்று வைத்துக்கொள்வோம். இது அவருக்கு ஒரு பெரிய சிலாக்கியம், பதவி உயர்வு, அயல் நாட்டில் வாழ கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம், பயணம் செய்யும் வாய்ப்பு என்றெல்லாம் எண்ணலாம். அவருடைய நண்பர்கள் அவரை வாழ்த்தி அவர் ஏதோ ஒரு பெரிய அதிர்ஷ்டசாலி என்று நினைப்பார்கள்.

ஆனால் அதேபோல் ஒருவர் தேவன் தன்னை அயல்நாட்டில் பணிபுரிய மிஷெனரியாக அழைக்கிறார் என்று, வேலையை ராஜினாமா செய்து அயல்நாட்டிற்குப் போக ஆயத்தப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். சிலர் அவர் ஏதோ வினோதமான முட்டாள்தனமான முடிவு எடுக்கிறார் என்று கருதுவார்கள். ஏதோ அவர் தனது வாழ்வைக் கெடுத்துக் கொள்வதுபோல் பார்ப்பார்கள். ஆவிக்குரிய காரியங்களில் சிறிதும் ஈடுபாடு அற்றவர்களுக்கு, பணம்தான் அர்த்தம் உள்ளதாகத் தோன்றும்.

புதிய சந்தோஷம்

நீங்கள் தேவனுக்கு உங்கள் வாழ்வை ஒப்படைக்கும்போது, உங்கள் வாழ்வு வித்தியாசமாக காணப்படும். நீங்கள் வித்தியாசமான வழிகளில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். தேவனோடு செலவழிக்கும் நேரம் மிக முக்கியமாக இருக்கும். அவர் வார்த்தையாகிய வேதம் உயிருள்ளதாக இருக்கும். முழுநாளும் நீங்கள் தேவனோடு பேசிக்கொண்டிருக்கும் அனுபவம் ஏற்படும். அவரோடு எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டும், அவரது உதவியை கேட்டுக் கொண்டும் இருப்பீர்கள். தாவீது கூறுவது உங்கள் அனுபவமாக இருக்கும். “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங்.16:11).

உங்களைச் சுற்றிலும் தேவனை தங்கள் இரட்சகராக, அறியாத மக்களைக் கவனிக்க ஆரம்பிப்பீர்கள். அவர்களோடு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வீர்கள். எப்படியாவது அவர்கள் கிறிஸ்தவர்களாக வேண்டும் என்று ஜெபிக்க ஆரம்பிப்பீர்கள். உங்கள் உடமைகளை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்க ஆரம்பிப்பீர்கள். அவைகள் தேவனுடைய பரிசு என்று உணருவீர்கள். கார், கேமிரா, கிட்டார், எல்லாமேதான். சில கிறிஸ்தவர்கள் பரிசுகளைக் கொடுத்தவரை எண்ணிப் பார்க்காமல் பரிசுகளுக்கு முதலிடம் அளிப்பதால் வாழ்வில் குழம்பிப் போயிருக்கிறார்கள். அவர்களது பிரதான ஆசை என்னவெனில், தேவனை சேவிப்பதற்குப் பதிலாக மேலும்மேலும் பொருட்களை வாங்குவதாகும். இதைக் குறித்து இயேசு, “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டை பண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” (மத்.6:24) என்று கூறினார்.

தேவனுக்கு உங்களை முழுமையாக ஒப்படைத்துவிட்டால் நீங்கள் வாழ்க்கையை வித்தியாசமாகப் பார்க்க ஆரம்பிப்பீர்கள். அப்பொழுது நீங்கள் எப்படி உங்கள் நேரத்தைச் செலவழிக்கிறீர்கள் என்பதைக் குறித்துக் கவனமாக இருப்பீர்கள். உங்கள் வாழ்வு தேவனுக்கு அருமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். உங்கள் மகிழ்ச்சி உலகத்தின் பொருட்களை அல்ல, தேவனையே சார்ந்திருக்கும், (1யோவான் 2:15-17ஐ வாசிக்கவும்).

எனவே இப்பொழுதே தேவனுக்கு உங்களை அர்ப்பணியுங்கள். தேவனுக்கு உங்களை அர்ப்பணிப்பதற்கு சிறந்த காலம் எது? அது இப்பொழுதே, உங்கள் வாலிப வயதில்தான். வாழ்நாள் முழுவதும் நீங்கள் அவரை சேவிக்கலாமே. இதற்கு பிரசங்கி புத்தகத்தில் ஒரு நல்ல ஆலோசனை உண்டு: “தீங்கு நாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும் … அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை” (பிர. 12:1,7).

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்