ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜனவரி-பிப்ரவரி 2015

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

இப்புதிய ஆண்டில் பிரவேசித்திருக்கும் நம் ஒவ்வொருவரையும் தேவன் அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக!

ஒரு கொடிதான காலத்திற்குள் வந்திருக்கிறோம் என்பதை நம் தேசத்தில் நடக்கும் காரியங்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது. நமது சபைகள், ஊழியர்கள் மிஷெனரி ஊழியங்கள் பாதுகாக்கப்பட ஊக்கத்தோடு ஜெபிப்போம். சில எதிர்பாராத காரணங்களால் 2015 ஆம் வருட சத்தியவசன காலண்டர் பங்காளர்களுக்கு தாமதமாக அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. தாமதத்திற்கு வருந்துகிறோம். இவ்வூழியத்தை தங்கள் ஆதரவாலும் ஜெபத்தாலும் தாங்கின அனைத்து பங்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆண்டவருடைய நாமத்தில் நன்றி கூறுகிறோம்.

இதுவரையிலும் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ளாத பங்காளர்கள் இவ்வருடத்தில் தங்கள் சந்தாவைப் புதுப்பித்து தொடர்ந்து இணைக்கரம் கொடுத்து தாங்க அன்பாய் கேட்கிறோம். அஞ்சல் வழி வேதபாடத் திட்டத்தில் இணைந்து பயின்றுவருகிற அன்பர்கள் பூர்த்திசெய்த விடைத்தாள்களை எங்களுக்கு அனுப்பிவைத்து அடுத்த பாடத்தைப் பெற்றுக்கொள்ளலாம். Level-1ஐ முடித்து Level-2இல் இணைந்துள்ளவர்களுக்கு முதல் பாடத்தை அனுப்பி வைத்துள்ளோம். சத்தியவசன வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சி, இலக்கியங்கள் ஆகியவற்றின் வாயிலாக தாங்கள் பெற்ற நன்மைகளை எங்களுக்கு எழுதுங்கள்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் ‘இதுவரையிலும், இனியும், இப்போதும்’ என்ற தலைப்பில் எழுதிய செய்தியும், ‘சரியான தீர்மானம் எடுக்கப் பழகுவோம்’ என்ற தலைப்பில் திருமதி ஹேமா ஹென்றி அவர்கள் எழுதிய செய்தியும், நாம் அனுதினமும் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ்வதற்கு ஏற்றவாறு டாக்டர்.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய விசேஷித்த செய்தியும் புத்தாண்டிற்குள் பிரவேசித்திருக்கும் நமக்கு ஆசீர்வாதமாக அமையும். எபேசியர் 6:10-16 வரையிலுள்ள வேதபகுதியை மையமாக வைத்து டாக்டர் தியோடர் எச்.எப் அவர்கள் எழுதிய “விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்” என்ற புதிய வேதபாடம் இனி தொடராக வெளிவரும். சிறுவர் சோலை பகுதியை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் இயேசுகிறிஸ்து வழங்கிய உவமைகளிலிருந்து அளித்த தொடர்செய்தியும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.

இச்செய்திகள் அனைத்தும் உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமாகவும் உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுவதாகவும் அமைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்