இதுவரையிலும், இனியும், இப்போதும்!

சகோதரி.சாந்தி பொன்னு
(ஜனவரி-பிப்ரவரி 2015)

“இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை…” (யோசுவா 3:4)

இன்னுமொரு புதிய வருடம், புதிய தீர்மானங்கள், புதிய எதிர்பார்ப்புகள்! ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும், இந்த ஆண்டு எப்படி இருக்குமோ, என்னவாகுமோ என்று நமக்குள் ஏற்படுகின்ற ஒருவித ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு எல்லாமே ஆண்டின் முடிவிலே எந்தக் கணிப்பீடுமின்றி, ஜெயமுமின்றி தணிந்துவிடுவதுண்டு. முன்செல்லவேண்டும் என்ற உற்சாகமும், உறுதியுமுள்ள ஆரம்ப வேகம், நாட்கள் மாதங்கள் கடக்கும்போது குறைந்து, சிலசமயம் மறைந்தும்விடுகிறது. தேவ பிள்ளைகள் நாம் அப்படி இருக்கலாகாது.

இதுவரையிலும்….

ஒவ்வொரு ஆண்டும் அல்ல, ஒவ்வொரு நாளுமே நமக்குப் புதியதுதான். தேவனுடைய கிருபை நாளுக்கு நாள் புதிது புதிதாக நம்மேல் ஊற்றப்படும்போது எதுவும் பழையதாகிப்போக வாய்ப்பே இல்லை. கடந்துபோனவை கடந்து போய்விட்டன. நாளை என்பதுவோ, அடுத்த விநாடி என்பதுவோ மனிதனுடைய கரங்களில் இல்லை. ஆக, நாம் இதோ, இப்பொழுது இருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதற்காக, இது வரையிலும் கடந்துவந்த எதனையும் நம்மால் மறந்துவிடமுடியாது.

இதுவரை நாம் கடந்துவந்த பாதைகள், முகங்கொடுத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், பெற்றுக்கொண்ட வெற்றி தோல்விகள் ஏராளம்! சற்று அமர்ந்திருந்து சிந்தித்தால், பல விஷயங்கள் மனதுக்கு இதமான இனிமையான பசுமையான உணர்வைத் தரும். ஆனால், அநேக காரியங்கள் கசப்பும் துக்கமும் வேதனையும் தருகின்றவையாய் இருக்கும். இன்னும் உண்மைத்துவத்துடன் சிந்தித்தால் நமக்கு நம்மீதே ஒருவித அருவருப்புக்கூட ஏற்படக்கூடும் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.“இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது?” ரோம.6:21) என்று கேள்வி எழுப்பியுள்ளார் பவுல். என்றாலும், இவை யாவும் கடந்துவிட்டன. அவற்றின் சில கூரிய விளைவுகளைச் சரிப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருந்தாலும், நடந்தவை, நடந்து முடிந்தது முடிந்ததுதான். ஆனாலும் அதற்காக நாம் சோர்ந்துபோக வேண்டிய அவசியமேயில்லை. நம்மைநாமே வையவேண்டிய அவசியமுமில்லை. தேவபிள்ளைகளாகிய நமக்கு எதுவுமே வீணுக்கல்ல. கசப்பும் கடினமுமான பாதைக்கூடாகக் கடந்து வந்தும் இன்னமும் நாம் பிழைத்திருக்கிறோம் என்றால் அது தேவனுடைய சுத்த கிருபையே!

ஆகவே, சகலத்தையும் உண்மைத்துவத்துடனும், நன்றியறிதலுடனும், கசப்புணர்வோ தாழ்வுமனப்பான்மையோ இன்றி, அவைகளை தேவனுடைய பாதத்தில் விட்டெறிந்துவிட்டு, நமக்கு முன்னே நீண்டு நெடிதாய் தெரிகிறதும், நாம் இதுவரையிலும் நடக்காததுமான புதிய பாதையிலே நம்பிக்கையோடே முன் செல்லுவோமாக.

இப்போதும்….

இவ்வுலக ஓட்டம் முடியும்வரைக்கும், நாம் இன்னும் அநேக கடின பாதைகளைச் சந்திக்க நேரிடும்! பல போராட்டங்களுக்கு முகங்கொடுத்துத்தான் ஆகவேண்டும். என்றாலும், கடந்துவந்த அனுபவங்கள் மூலமாக நாம் பெற்றுக்கொள்ளுகின்ற தைரியம், நம்பிக்கை, பெலம், பரிசுத்த ஆவியானவருக்குள்ளான வல்லமை எல்லாமே, நாம் எதிர்கொள்ளும் தடைகளை ஜெயம் எடுத்து முன்நோக்கிச் செல்ல நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஆகவே, முந்தியதை, கடந்துவந்ததை, தவறவிட்ட தருணங்களை நினைத்து ஏக்கங்கொள்ளாமல், அதேசமயம், கடந்துவந்த பாதைகளை, தேவன் நடத்திய வழிகளை மறந்தும் விடாமல், அவற்றையே நமது பெலமாகக்கொண்டு, ‘நடத்தியவர் இன்னமும் நடத்துவார்’ என்ற உறுதியான விசுவாசத்துடன் முன்செல்லுவோமாக.

யோர்தான் நதியோரத்திலே:

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்று முற்பிதாக்களையோ, கர்த்தர் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைக் குறித்தோ நினைத் துப்பார்க்க முடியாத 400 வருட அடிமை வாழ்வு இஸ்ரவேலுக்கு; அந்த உடன்படிக்கையின் தேவன் யார் என்றோ, அவரைத் தொழுது கொள்வது எப்படி என்பதைக் குறித்தோ சிந்திக்கவும் நேரமற்ற கொடுமையான வாழ்வுச் சூழல் அவர்களுக்கு. இந்த அடிமைவாழ்விலிருந்து அற்புதமாக விடுதலையாக்கப்பட்டு, உலகம் காணாததும், இனியும் காணக்கூடாததுமான பிரமாண்டமான விடுதலைப் பயணத்தை ஆரம்பித்து, தேவ சமுகத்தினால் வழிநடத்தப்பட்டவர்கள்தான் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இந்த இஸ்ரவேலர்; வழிநெடுக மகா பயங்கரமான அதிசய அற்புதங்களைக் கண்டு அனுபவித்தவர்கள். நாற்பது வருட வனாந்தரப் பாதையில் தேவ அன்பு, கரிசனை, பாதுகாப்பு, வழிநடத்துதல், தூய வாழ்வுக்குரிய கட்டளைகளைப் பெற்றுக்கொண்டது, என்று அவர்கள் கண்டு கேட்டு அனுபவித்தவை ஏராளம்! ஆனால், எகிப்தைவிட்டுப் புறப்பட்டு கானானுக்குப் பயணமானவர்களில் காலேப், யோசுவாவைத் தவிர இந்த யோர்தான் நதியோரத்திலே, வேறு எவரையும் காணவில்லை. இன்னுமொரு புதிய சந்ததி அங்கே நிற்கிறது. எகிப்திலிருந்து புறப்பட்ட மற்ற எல்லோரும் எங்கே? தேவன் அவர்களைக் கை விட்டாரா? பாதை காட்டாமல் அலையவிட்டாரா? இல்லை. அவர்களுடைய முரட்டாட்டமும், அவிசுவாசமுமே அவர்களது சாவுக்கும், அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட சுதந்திரத்தை அடையாமற்போனதற்கும் காரணமாயிற்று.

யோர்தானுக்கு இக்கரையான வனாந்தர சமதரையைவிட்டு யோசுவாவின் தலைமையில் பிரயாணப்பட்ட இஸ்ரவேலர், சித்தீமிலிருந்து புறப்பட்டு யோர்தான்மட்டும் வந்து இராத்தங்கினார்கள். மூன்று நாட்கள் கடந்து விட்டன. கரைபுரண்டு கொந்தளித்து ஓடிக் கொண்டிருக்கும் யோர்தான் நதியைக் கடந்துவிட்டால், கானானுக்குள் பிரவேசித்துவிடலாம். செய்வதறியாது நின்ற ஜனத்திரளைப் பார்க்கிறான் யோசுவா. போகும் வழி எது என்று அங்கலாய்த்து அவசரப்பட்டு, முன்னே செல்லும் உடன்படிக்கைப் பெட்டியைக் கிட்டி வராமல், அதற்குப் பின்செல்லுங்கள் என்றான். தேவசமுகம் செல்லும்போது, அதன்பின் செல்லுவதுதான் மக்களுக்கு இடப்பட்ட கட்டளை. அச்சமயத்தில் யோசுவா சொன்னது: ‘இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழி யாய் நடந்துபோகவில்லை’ என்பதாகும்.

இதுவரை காணாத வழி:

1. முன்னர் சிவந்த சமுத்திரத்தையே கடந்து வந்திருக்கலாம்; துரத்திவந்த சத்துருக்கள் அழிந்ததைக் கண்டிருக்கலாம். ஆனால், இப்போ வந்திருப்பது சமுத்திரத்தண்டை அல்ல; இது வெறும் நதிதான். என்றாலும், நதியின் தண்ணீர் மின்சார வேகத்தில் பாய்ந்தோடுகிறது. அதற்காக இங்கே கர்த்தர் இரா முழுதும் வேலை செய்யமாட்டார். நதியைப் பிளந்துவிடமாட்டார். மாறாக, கர்த்தருடைய வார்த்தைப்படி அவர்கள்தான் நடக்க வேண்டும். இது விசுவாசத்திற்கு ஒரு சோதனை.

2. செங்கடலைக் கடந்து மனுஷ சஞ்சார மற்ற வனாந்தரத்தில் சுதந்திரமாக வந்துசேர்ந்த அவர்களுக்கு வனாந்தரம் சொந்தமாகாது. யோர்தானைக் கடந்து வாக்களிக்கப்பட்ட சுதந்தர பூமியைச் சென்றடைந்தாலும், அது யாருமற்ற வனாந்தரம் அல்ல; அங்கே பல இன மக்கள் வசிக்கின்றனர். கர்த்தர் சொற்படி அவர்களைத் துரத்தி முறியடித்து ஜெயம் எடுத்து, பூமியைச் சுதந்தரிப்பது இஸ்ரவேலின் பொறுப்பு. இது விசுவாசத்திற்கு ஒரு சவால்.

3. உலகத்து ஜாதிகளைப்போல அல்லாமல், இது வேறுபட்ட வித்தியாசமான ஜாதி. நீதியும் பரிசுத்தமுமான வாழ்வுக்குரிய கட்டளை, நல்வாழ்வுக்கான நற்பண்புகள், தவறுகளுக்குத் தண்டனை என்று சகலத்தையும் கொடுத்து இதுவரை தேவன் அவர்களை வனாந்தரத்திலே நடத்திவந்தார். இனிமேல் தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, உலகத்தாரைப்போல அல்லாது நீதியாய் வாழ்ந்து, இதுவரை நடத்திவந்த தேவனை உலகுக்குப் பறை சாற்றுவது இஸ்ரவேலின் பொறுப்பு. இது விசுவாசத்தின் வெளிப்பாடு.

4. இதுவரை வானத்திலிருந்து மன்னா, இறைச்சி; மலையிலிருந்து தண்ணீர். ஆனால் இனிமேல் மன்னா கிடையாது. சுதந்திர பூமியைப் பயிரிட்டு உணவைத் தேட வேண்டும். இது விசுவாசத்திற்கு ஒரு பயிற்சி.

5. இதுவரை அடிமைகளும் பரதேசிகளுமாயிருந்தவர்கள், இனிமேல் அழைத்த தேவனுக்குள் இவர்கள் சுதந்தரவாளிகள். இந்த சுதந்தரத்தைப் பயன்படுத்தி தேவனைச் சுதந்திரமாகச் சேவிக்கலாம். அல்லது, அவரை விட்டும் விலகலாம். அது அவர்களுடைய தெரிவு. இது விசுவாசத்திற்கு ஒரு அக்கினி சோதனை.

இனியும்….

ஆனாலும், யோர்தான் நதிக்கரையோரத்திலோ, கானான் பிரவேசத்திற்குப் பின்னரோ அழைத்த தேவன் அவர்களைவிட்டு விலகவில்லை என்பதற்குச் சாட்சியாக உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு முன்னே சென்றது. இனி அவர்கள் நடக்கப்போவது இதுவரை நடக்காத புதிய பாதையாயினும், தேவசமுகம் அவர்களுக்கு உண்டு. அதுதான் விசுவாச பாதையின் நடுமையம். யோர்தான் நதியோரத்திலே உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு நின்ற ஆசாரியரின் கால்கள் தண்ணீரில் பட்ட மாத்திரத்திலே தாம் சொன்னபடியே கர்த்தர் யோர்தானைக் குவியச்செய்தார். ஜனங்கள் யோர்தானைக் கடந்துசெல்லுமட்டும் அந்த உடன்படிக்கைப் பெட்டி நதியின் நடுவிலே நின்றது. பின்னரும் அது அவர்களை நடத்திச் சென்றது. தேவசமுகம் அவர்களுடன் இருந்தது.

இதுவரை நாம் நடக்காத பாதை

இன்று, கரைபுரண்டோடிய யோர்தானின் பயமுறுத்தலுக்கும் மேலாக பத்துமடங்கு பயமுறுத்தல் நமக்குண்டு. நமது பரமகானான் பாதையை முடக்கி, நம்மை மடக்கிப்போட பல தந்திரங்கள் வலைவிரிக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக நமக்கு முன்னே செல்ல ஒரு உடன் படிக்கைப் பெட்டி கண்கள் காணும்படி இல்லை. ஆனால், பரிசுத்த இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்து நம்மோடு நமக்குள்ளே இருக்கிறார். இந்த விசுவாசத்திலேதான் நமது கிறிஸ்தவ ஓட்டம் நிலைபெற்றிருக்கிறது. இன்று நம்மை நடத்த யோசுவாவும், ஆசாரியரும் இல்லை. ஆனால், மகா பிரதான ஆசாரியரும், பெரிய மேய்ப்பருமான கிறிஸ்து இன்று வழிகாட்டியாக அல்ல; வழியாகவே நம் முன்னே நிற்கிறார். அன்று ஜனங்கள் தமக்கு முன்சென்ற அந்த சாட்சிப்பெட்டியை மாத்திரமல்ல, யோர்தான் நதியின் பயமுறுத்தும் ஓட்டம், எரிகோவின் வானளாவிய மதில் போன்ற தடைகளை அவர்கள் தங்கள் கண்களாலேயே கண்டனர். ஆனால் இன்று நாம் கண்களால் காண்கின்ற தடைகளைவிட, கண்களுக்குத் தெரியாத பல பயமுறுத்தல்கள், வழுவிப்போகப்பண்ணுகின்ற பல கவர்ச்சிகள், கானல் நீராய் நின்று கவர்ந்திழுக்கும் மாயைகள், சொல்லிமுடியாத உள்மனப் போராட்டங்கள் என்று ஏராளமான தடைகள் நமது பரம கானான் பயணத்தைத் தடைசெய்ய கங்கணங்கட்டி நிற்கின்றன. அதிலும் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே பல போலித்தனங்கள், கள்ள உபதேசங்கள், கள்ளத்தீர்க்கதரிசனங்கள் என்று பல காரியங்கள் நம்மைத் திசைதிருப்பிக் கொண்டே இருக்கின்றன.

ஆனால், அன்று எப்படி கர்த்தர் இஸ்ரவேலுடன் இருந்தாரோ, அதற்கும் அதிகமாக இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நமக்கு ஏற்படுத்தித் தந்ததும், திரைச்சீலை கிழிந்து தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டதுமான அந்த மேலான கிருபை, இன்றும் தேவன் நம்முடன் நமக்குள் இருக்கிறார் என்ற உறுதியை நமக்கு வழங்கியிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருக்கிறார். சர்வாயுத வர்க்கம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உள் மனதைக் குழப்பி பயணத்தைத் தடைசெய்கின்ற எண்ணங்களாகிய அரண்களை நிர்மூலமாக்கத்தக்க தேவபெலம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. பயமுள்ள ஆவிக்குப் பதிலாக, இன்று நமக்கு பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவி அருளப்பட்டுள்ளது (2தீமோ. 1:7). அன்று இஸ்ரவேலுக்கு வாக்களிக்கப்பட்டது, கானான் தேசம். ஆனால் இன்று, அழியாததும் மாசற்றதும் வாடாததுமான சுதந்திரத்துக்கேதுவான ஜீவனுள்ள நம்பிக்கை (1பேதுரு 1:4) நமக்கு அருளப்பட்டிருக்கிறது. பின்னர் முன்செல்ல ஏது தயக்கம்?

நாம் பிரவேசித்துவிட்ட இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்ன நடக்கும் என்பதை நாம் அறியாமல் இருக்கலாம். இந்த ஆண்டு நமக்கு எதிர்பாராத சவால்களைக் கொண்டுவரலாம். நாம் கொண்டுள்ள விசுவாசத்தை உடைத்தெறியத்தக்க சம்பவங்கள் நேரிடலாம். அதற்காக அன்றைய இஸ்ரவேல்போல நாம் தடுமாறவேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் செய்யவேண்டியதெல்லாம், குபீரிட்டுப் பாய்ந்தோடும் தண்ணீரில் கர்த்தருடைய சொற்படி தங்கள் கால்களை வைக்க வேண்டிய ஒன்றுதான். அவர்களும் வைத்தார்கள்; யோர்தான் குவிந்து ஓடியதல்லவா! இன்று நாமும் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிப்பிடித்தவர்களாய், இலக்கு மாறாதவர்களாய், தேவனுக்காய் வைராக்கியம் கொண்டவர்களாய் நமது கால்களை கொந்தளிக்கின்ற இந்த உலக வெள்ளத்திலே வைப்போமாக. மிகுதியைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார்.

இப்புதிய ஆண்டு நமக்குக் கர்த்தருக்குள்ளான புதிய புதிய அனுபவங்களையும், விசுவாச வளர்ச்சியையும் உறுதியையும் தந்து, கர்த்தருக்காய் நாம் இதுவரை செய்யாத புதிய காரியங்களைச் செய்யவும், அநேகரை தேவனண்டை வழிநடத்துகின்ற பணியிலே பலத்த ஜெயம் பெறவும் நம் ஒவ்வொருவரையும் தேவாவியானவர் ஆசீர்வதிப்பாராக.

சத்தியவசனம்