குருடனுக்கு வழிகாட்டும் குருடன்

இயேசுகிறிஸ்து விளம்பின உவமை
சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜனவரி-பிப்ரவரி 2015)

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உவமைகள் வழியாகக் கற்றுக்கொடுத்த அநேக சத்தியங்களை நாம் தியானித்து வருகிறோம். லூக்கா 6ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு உவமையை தியானிக்கப் போகிறோம்.

“பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா! சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்” (லூக்.6:39-42). தேவ ராஜ்ஜியத்தின் உண்மைகளை கர்த்தர் அநேக உவமைகளின் வாயிலாக போதித்து வந்தார். இந்த உவமையில் தகுதியில்லாத தலைவர்கள், தகுதியில்லாத வழிகாட்டிகள் என்ற இரு காரியங்களை நாம் பார்க்கிறோம்.

ஒரு குருடன் இன்னொரு குருடனைப் பார்த்து நான் உனக்கு வழிகாட்டுகிறேன் என்று சொன்னால் இருவருமே பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஆண்டவர் ஜனங்களுக்கு போதிக்கும்போது, அல்லது உவமையைச் சொல்லும்போது தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நிலைகளை அறிந்தவராய் போதித்தார். அவரைச் சுற்றியிருந்த ஜனங்களோடு மார்க்கத்தலைவர்கள், ஆசாரியர்கள், வேதபாராகர்கள் ஆகியோரும் இருந்தனர். இந்த மார்க்கத் தலைவர்களுக்கு ஏற்றவிதமாகவே இந்த உவமையைச் சொன்னார். தகுதியில்லாத வழிகாட்டிகள், தகுதியில்லா தலைவர்கள் என்று அவர்களைக் கண்டனம் செய்கிறார். பார்வையுள்ள ஒரு சிறு பையன்கூட ஒரு குருடனுக்கு வழிகாட்ட முடியும். ஆனால் ஒரு குருடனுக்கு மற்றொரு குருடன் வழிகாட்ட முடியாது. தகுதியில்லாத தலைவர்களாகிய இந்த மார்க்கத்தலைவர்களைக் குறித்தே ஆண்டவர் இந்த உவமையைச் சொன்னார்.

தரிசனமில்லாதவர்கள்

முதலாவது, இவர்கள் தரிசனமில்லாதவர்கள். குருடன் என்றாலே பார்வையில்லாதவன். குருடர்களுக்கு முன்பாக என்ன நடக்கிறது, அவர்களுக்கு முன்பாக என்ன வருகிறது என்றெல்லாம் அவர்களுக்கு தெரியாது. பார்வை இருந்தால்தான் தெளிவுவரும். தகுதியில்லாத இந்த மார்க்கத் தலைவர்கள் தரிசனமோ, தெளிவோ இல்லாதவர்கள். தரிசனமும் தெளிவும் இல்லாதவர்கள் தேவராஜ்ஜியத்தின் பிள்ளைகளாக இருக்கமுடியாது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவின் போதனைக்குக் கீழ்ப்படிகிறவர்கள், கிறிஸ்துவின் ஆவியால் ஆளப்பட்டவர்கள், திறந்த இருதயத்தோடு வேதத்தைக் கற்றுக்கொண்டவர்கள்தான் வேதத்தைக் குறித்தும் தேவராஜ்ஜியத்தைக் குறித்தும் தெளிவுள்ளவர்களும் தரிசனம் உள்ளவர்களும் ஆவார்கள்.

தலைவராக முற்படுகிறவர்கள்

இரண்டாவதாக, தகுதியில்லாத வழிகாட்டிகளாகிய இந்த மார்க்கத் தலைவர்கள் தலைவர்களாக வேண்டும் என்று துடிப்பவர்கள். தொண்டனாக இருக்கும் ஒருவனுக்கு தலைவனாக ஆகவேண்டும் என ஆசை வந்து விடுகிறது. வெகு சாதராணமான ஒரு மனிதன் ஒரு பெரிய தலைவனாக முற்படுகிறான். நமது சமுதாயத்திலேயும், திருச்சபைகளிலேயும் வேலை ஸ்தலங்களிலே இந்த பதவி போராட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதினால்தான் ஆண்டவர் கூறுகிறார், குருடனாகிய நீ மற்றொரு குருடனுக்கு எப்படி வழிகாட்டியாக மாறமுடியும். அந்நாட்களில் மார்க்க தலைவர்களுக்கு ஒரு பெரிய போராட்டம் இருந்தது. கிறிஸ்து வல்லமையான காரியங்களைச் செய்துவந்தார், வல்லமையாய் பிரசங்கம் பண்ணினார், மரித்தோரை உயிரோடு எழுப்பினார். அவரது வார்த்தை, செயல் எல்லாவற்றிலும் தேவகிருபையும் வல்லமையும் தங்கியிருந்தது. ஆகவே அவர்களுக்குள் ஒரு பயம் வந்தது. எங்கே இந்த இயேசுவானவர் தங்களுடைய பதவிகளுக்கும் தங்களுடைய ஸ்தானத்திற்கும் போட்டியாக வந்துவிடுவாரோ என்று சொல்லி அவர்கள் பொறாமையோடு சதி செய்தார்கள். அவர்களுடைய பொறாமை எண்ணங்களை அறிந்தவராகவே இயேசு, குருடனுக்கு குருடன் வழிகாட்ட முடியாது என்றார்.

“… உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்”(மாற்.10:43,44). ஆண்டவர் உங்களை கனம்பண்ணும்வரை அவரது ஆளுகைக்குள்ளாக இருக்கிறீர்களா? அல்லது வழி காட்டிகளாக, தலைவர்களாக மாற நீங்கள் பிரயாசப்பட்டு குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகிறீர்களா? அவர் உங்களை உயர்த்தும்வரையும் அவரது பலத்த கரங்களுக்குள் அடங்கியிருங்கள்.

வீழ்ச்சிகளை ஏற்படுத்துகிறவர்கள்

மூன்றவாதாக, இந்த தவறான வழி காட்டிகள் வீழ்ச்சிகளை ஏற்படுத்துகிறவர்கள். இவர்கள் தரிசனம் இல்லாதவர்கள், தெளிவில்லாதவர்கள், வழிகாட்டிகளாக தலைவர்களாக வாழ துடிப்பவர்கள் என்று பார்த்தோம். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத இந்த மார்க்கத் தலைவர்கள் கிறிஸ்துவை அறியாத இன்னொருவருக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவார்கள். தாங்கள் மாத்திரமல்ல, மற்றவர்களும் வீழ்ச்சியடைவதற்கு அவர்கள் காரணமாகிறார்கள். தவறான வழிகாட்டியாக யாராயிருந்தாலும் அவர்கள் தரிசன தெளிவில்லாதவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஆண்டவரிடம் தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக நம்மை நாம் மறுபரிசீலனைச் செய்வோம்.

கண்ணில் உத்திரமும் துரும்பும்

அடுத்ததாக, இந்த உவமையிலே இன்னுமொரு காரியத்தையும் நாம் அறிந்துகொள்ளும்படியாக போதிக்கிறார். “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்” (லூக்.6:41,42).

இந்த வசனங்களின் வாயிலாக ஆண்டவர் முக்கியமாக உணர்த்துகிற ஒரு காரியம் மாய் மாலக்காரர்களைக் குறித்து சொல்லப்படுவதேயாகும். அநேக சமயங்களில் மனிதர்கள் மற்றவர்களைக் குறித்து இப்படியாக சொல்லக் கேட்டிருப்போம். இந்த சகோதரன் ஒரு மாய்மாலக்காரன், சில சகோதரிகள் சொல்வார்கள் எனது கணவர் மாய்மாலக்காரர் என்று. இன்னும் சிலர் எங்கள் தலைவர் மாய்மாலக்காரர், வெளியே ஒன்று, உள்ளே ஒன்று என்று வாழ்கிறவர் என்று சொல்வதுண்டு.

கண்ணிலிருக்கிற உத்திரம், துரும்பு இந்த இரண்டின் மூலமாக தேவராஜ்ஜியத்தின் செய்தியை ஆண்டவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார். தேவராஜ்ஜியத்தின் புத்திரர்கள் எப்படிப்பட்டவர்களாய் வாழவேண்டும் என்று போதிக்கிறார். மாயக்காரனே! என ஆண்டவர் அழைப்பதிலிருந்து இந்த மாயக்காரர்கள் யார் என நாம் சிந்திக்கலாம்.

தங்கள் பெருங்குற்றத்தை உணராதவர்கள்

முதலாவது, மாய்மாலக்காரார்கள் என சொல்கிறோமே, இவர்கள் தங்களில் இருக்கக் கூடியதான பெரிய குற்றங்களை உணராதவர்கள், தங்கள் கண்ணில் உத்திரத்தை வைத்திருக்கிறவர்கள். ஆனால் பிறர் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்ப்பார்கள். ஆகவே தான் ஆண்டவர் அவர்களைப் பார்த்து, ‘மாயக்காரனே’ எனச் சொல்லுகிறார். பரிசேயர்கள், சதுசேயர்கள், ஆசாரியர்கள் இவர்கள் தங்களைப் பக்திநெறியிலே வாழ்கிறவர்களென்று வெளிப்படையாய்ச் சொல்லிக்கொண்டார்கள். சீஷத்துவ வாழ்விலே, கிறிஸ்துவை பின்பற்றுகிற வாழ்விலே, ஆயக்காரர் வாழ்விலே அவர்களை பல்வேறுவிதங்களிலே குற்றம் கண்டுபிடிக்க முற்பட்டார்கள்.

“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப் படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” (மத்.7:1,2). பழைய கால வீடுகளிலே மரக்கட்டை உத்திரம் பெரிய அளவிலே இருக்கும். அந்த உத்திரத்தினால்தான் அந்த வீடு நிலைநிற்கும். அந்த உத்திரம் பார்வைக்கு மறைந்திருக்காது. எல்லார் கண்களிலும் படும்படியாக பெரியதாக இருக்கும். ஆகவேதான் ஆண்டவர் உன்னிடத்திலுள்ள பெருங்குற்றத்தை உணராமல் மற்றவர்களிலிருக்கிற துரும்பைப் போன்ற காரியங்களைப் பார்க்கிறதென்ன? எனச் சொல்லுகிறார். நமது வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட உத்திரம் போன்ற காரியங்கள் இருக்கின்றனவா என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

பிறரின் சிறிய குற்றத்தை பெரிதாக எண்ணுகிறவர்கள்

இரண்டாவதாக, நாம் சந்திக்கக்கூடிய அநேக குடும்பங்களுக்குள்ளே மாமியார் மற்றும் மருமகள்களுக்கிடையில் இப்படிப்பட்ட காரியத்தை நாம் பார்க்கலாம். மருமகள் காபி தயாரிக்கும்போது சீனி போட மறந்திருக்கலாம். ஆனால் அதற்காக அங்கே ஒரு பெரிய போராட்டமே நடந்துமுடிந்துவிடும். ஆனால் அந்த மாமியாரிடமும் இதைப்பார்க்கிலும் வேறொரு பெரிய தவறுதல் நேரிடக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கலாம். அதை மறந்துவிட்டு மற்றவரிடம் உள்ள சிறிய குற்றத்தையே பெரிதுபடுத்தி பார்க்கிறவர்கள். இந்த மாயக்காரர்கள் யாரென்றால், பிறரின் சிறிய குற்றத்தைப் பெரிய குற்றமாக எண்ணுகிறவர்களாகவும், அதையே பேசுகிறவர்களாக, சிந்திக்கிறவர்களாக, நியாயந்தீர்க்கிறவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களிடத்தில் காணப்படுகிற சிறிய குற்றத்தை அது சிறியதாக, காணப்படாத அளவு இருந்தாலும், சின்ன சின்ன பெலவீனமாக இருந்தாலும் அதைக் குறித்து எவ்வளவு மணிநேரம் பேசுகிறீர்கள்? அதைப் பேசி, பேசியே எவ்வளவு பெரிதாக்கி விடுகிறீர்கள். சிந்தித்துப் பார்ப்போம்.

பிறரை மாத்திரம் திருத்த முயலுகிறவர்கள்

மூன்றாவதாக, தன்னைத் திருத்திக்கொள்ள முயற்சிசெய்யாமல், பிறரை திருத்த முயலுகிறவர்களே இந்த மாயக்காரர்கள். இவர்கள் கண்ணில் இருப்பது உத்திரம். அது கண்ணை அழுத்திக் கொண்டிருப்பதாலே அவர்களது பார்வையை மறைத்துவிடுகிறது. ஆனால் தன்னிலுள்ள பெருங்குற்றத்தை மறைத்து, மற்றவரிடத்தில் உள்ள சிறிய குறைகளை மாத்திரம் பார்க்கிற குருடாட்டமும், தன்னிடத்திலுள்ள குறைகளைச் சரிசெய்துகொள்ள இயலாமல் மற்றவர்களை மாத்திரம் திருத்த முயலுகிற குருடாட்டமுமாகிய உத்திரத்தை எடுத்தால்தான் அவர்களது பார்வை சரியாகும்.

தங்களுடைய வாழ்வில் இருக்கிற பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெறாமல் மற்றவர்களுடைய தவறை சுட்டிக் காண்பித்து அவர்களைத் திருத்த முற்படுகிறவர்கள் மாயக்காரர்களாக இருப்பார்கள். எனவே நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்துபார்ப்போம். உண்மையாகவே நாம் தேவராஜ்ஜியத்தின் பிள்ளைகளாயிருக்கிறோமா? அல்லது மாய்மாலமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா?

தங்களிடத்திலுள்ள பெருங்குற்றத்தை உணராதவர்கள், பிறரிடத்திலுள்ள சிறிய குற்றத்தையே பெரிதாக எண்ணுகிறவர்கள், தங்களைத் திருத்திக்கொள்ள முயலாமல் மற்றவர்களை திருத்த முயலுகிறவர்கள் இப்படிப்பட்ட மாய்மாலமான குருட்டாடமான வாழ்விலிருந்து மனந்திரும்பவும், நம்முடைய மனக்கண்கள் திறக்கப்படுவதற்கும் கர்த்தருடைய ஆவியானவர் தாமே உதவிசெய்து வழிநடத்துவாராக!

சத்தியவசனம்