ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை

Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2015)

இன்றைய நாள் உங்களுக்கு ஒரு நல்ல நாளாகவும் தேவபக்தியுள்ள நாளாகவும் இருக்க வாழ்த்துகிறேன். பொதுவாக இந்த வாழ்த்துதலை ஒரு நாளின் இறுதியில்தான் நான் கூறுவேன்; இதை ஆரம்பத்திலேயே இங்கு கூறக் காரணம், இந்த இதழில் ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வை கடைபிடித்தல் என்ற தலைப்பில் தியானிக்க இருக்கிறோம். நம்முடைய கிறிஸ்தவ வாழ்வை அழிப்பதற்கு சாத்தான் ஒவ்வொரு நாளும் பல தடைகளைக் கொண்டுவருகிறான். எனவே அவைகளைத் தாண்டி, ஜெயித்து வாழும் வழிகளை நாம் அறிந்திருத்தல் அவசியம்.

இவ்வழிகளை அறிந்துகொள்ள வேதாகமம் நமக்குத் தரும் சிறந்த ஆலோசனைகளில் நான்கினை ஆராய்வோம். ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ சாத்தானை நாம் ஜெயித்தல், தேவனுக்குள் நாம் நிலைத்திருப்பதற்கு தூய ஆவியானவர் செயல்பாட்டை நாம் அனுமதித்தல் ஆகிய இரண்டு காரியங்களும் அடங்கும். நம்முடைய வாழ்வில் நாம் அனுமதிக்கும் காரியங்களைக் கட்டுப்படுத்துவதும், அவ்வாறு அனுமதித்த காரியங்களைத் தக்கவைத்துக் கொள்வதும், அவைகளை செயல்படுத்துவதும் நமது வெற்றியை நிச்சயிக்கும். எனவே நமது வாழ்வில் இக்காரியங்கள் பிரவேசிக்கும் இரண்டு நுழைவாயில்களை – கண் மற்றும் செவி ஆகியவற்றை நாம் மையப்படுத்திக் காண்போம்.

தீயதைக் கேளாதே:

நீங்கள் ஆலோசனை பெற நாடவேண்டிய இடத்தைப் பற்றிய எச்சரிக்கை. “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” என்று சங்கீதம் 1:1-3 கூறுகிறது. ‘பாக்கியவான்’ என்பதை ‘மகிழ்ச்சியடைபவன்’ என்றும் மொழிபெயர்க்கலாம். “சில காரியங்களைச் செய்வதாலும், சில காரியங்களை விலக்குவதாலும் ஒருவன் மகிழ்ச்சியடைவான்” என்று இவ்வசனங்களை நாம் கூறலாம். இதில் “அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்.2:12) என்ற வசனத்தில் வரும் பாக்கியவான்கள் என்ற பதமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அவர் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.

மத்தேயு 5ஆம் அதிகாரத்தில் சமாதானம் பண்ணுகிறவர்கள் (வச.9) என்பதிலும், நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் (வச.6) என்பதிலும் மகிழ்ச்சியை விவரிக்கும் சொல்லாக இயேசு கிறிஸ்து பயன்படுத்துகிறார். இதுவே மகிழ்ச்சியின் வழி; தேவனுடைய வழி. இவ்வசனத்தில் நாம் மகிழ்ச்சியாயிருக்க மூன்று காரியங்களை நாம் செயல்படுத்தவும், மூன்று காரியங்களை நாம் விலக்கவும் வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நாம் விலக்கவேண்டிய காரியங்களை இப்பொழுது கவனிப்போம்.

நீங்கள் துன்மார்க்கருடைய ஆலோசனையைத் தவிர்க்கவேண்டும். தங்களது வாழ்வை தேவ ஆவியானவருக்கு ஒப்புவிக்காத மக்களிடம் சென்று ஆலோசனை கேட்காதீர்கள். ஏனெனில் அவர்கள் தரும் ஆலோசனை உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிக்காது. மாறாக உங்களுடைய கிறிஸ்தவ ஜீவியத்தை சாத்தான் அழித்துப்போடவே அவை உதவும்.

அடுத்ததாக, பாவிகளுடைய வழியில் நம்மை அழைத்துச் செல்லும் எதையும் செய்யக்கூடாது. ‘வழி’ என்பது எபிரெய மொழியில் சாதாரணமாக சாலை அல்லது பாதை அல்லது வாழ்க்கை முறை என்று பொருள்படும்.

தேவ ஆவியினால் நடத்தப்படாதவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றாதீர்கள். அவர்களுடைய ஆலோசனைகளையும், குறிக்கோள்களையும் கடைபிடிக்காதீர்கள். அவர்களைப் போல் பேசுவதும், அவர்களைப்போல் எண்ணுவதும், அவர்கள் காணும் காட்சிகளைக் காண்பதையும், அவர்கள் உடுத்துவதைப்போல் அணிவதையும் தவிர்க்கவும். உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை முன்னேறவிடாமல், அதனைப் பாழாக்கும் மக்களுடைய வாழ்க்கை நெறிகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

சங்கீதக்காரர் நீதியற்ற துன்மார்க்கர்களுடைய பாதையை நாம் தவிர்க்கவேண்டும் என்று எச்சரிக்கிறார். அடுத்ததாக, பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் அமரக்கூடாதென்றும் ஆலோசனை தருகிறார். இங்கு ‘உட்காருவது’ என்ற சொல் எபிரெய மொழியில் ‘வசிப்பது’ என்ற பொருளாகும்.

மேலும், தேவனை பரியாசம் பண்ணுபவர்களுடைய ஆலோசனையைக் கேட்பதும், அத்தகையவர்களுடன் சகவாசம் கொள்ளுவதும் தவறு என்று சங்கீதக்காரர் கூறுகிறார். அவர்களுடன் நீங்கள் நட்பு கொள்ளுவீர்கள் எனில் உங்களது ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியின் பாதையில் செல்லுகிறீர்கள் என்பது தெளிவு. எனவே பரியாசக்காரர்களுடைய வழியைப் பின்பற்றாமலும், அவர்களுடன் வாசம் பண்ணாமலும் இருங்கள். வேறுவிதத்தில் கூறினால், துன்மார்க்கர் உங்களை அழைத்துச் செல்லும் இடங்களுக்குச் செல்லாதீர்கள், அவர்களுடைய மாதிரியைப் பின்பற்றாதிருங்கள், உங்களுடைய நண்பர்களின் வற்புறுத்தலுக்காக உங்களுடைய கொள்கைகளை விட்டு விடாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் தேவனுடைய சித்தம் இன்ன தென்று அறிந்து அதனையே செய்யுங்கள்.

மேலும், நீங்கள் செய்ய விரும்பாததைச் செய்யாதீர்கள். இதுவே பாவிகளுடைய வழியில் நிற்பது ஆகும். இங்கு நிற்பது என்பது வசிப்பது அல்லது தங்குவது என்று பொருள். கிறிஸ்தவ வாழ்விலிருந்து வழுவிப்போகும் மக்களுடன் பழகுவதற்கு நமக்கு வாய்ப்பு வரலாம். ஆனாலும் அவர்களுடன் ஒத்து வாழவோ அல்லது தங்கிவிடவோ கூடாது.

ஓரிடத்தில் பாவம் காணப்படும் எனில் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவதே நலம். இதுவே வேதாகமம் நமக்குக் காட்டும் வழி. நடத்தல், நிற்றல், அமர்தல் என்ற தொழிற் பெயர்கள் பாவத்தில் அமிழ்ந்து போவதற்கான நிலைகளை நமக்குத் தெளிவாக்குகிறது.

நடக்காதே, நிற்காதே, உட்காராதே என்ற கட்டளைகள் எதிர்மறையாகத் தோன்றினாலும், மாறான மற்றொரு காரியத்தை வேதம் நமக்குப் போதிக்கிறது. அதாவது கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அதில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (வச.2).

நான் வேதத்தை வாசித்து, அதை தியானித்து என் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் நேரங்கள் அதிகமானால், சாத்தானை எதிர்த்து நிற்கும் நேரம் குறைவாக இருப்பதை என் வாழ்வில் நான் கண்டிருக்கிறேன். வேதத்தில் குறைவான நேரத்தை செலவிடும்பொழுது சாத்தானுடன் போராட அதிக நேரம் தேவைப்படுவதையும் அறிந்துள்ளேன்.

கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு நாளினுடைய வெற்றி மற்றொரு நாளின் வெற்றியை எளிதாக்கும். இன்றைய வெற்றி நாளைய முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு படியாயிருக்கிறது. நீங்கள் உங்களுடைய நண்பர்கள், வகுப்பறைகள், இணைய தளம் இவைகள் வழியாக ஆலோசனைகளைப் பெறமுடியும். ஆனால் அவைகள் நல்ல ஆலோசனைகள்தானா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். மகிழ்ச்சியாய் இருப்பதற்கும், ஒரு வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் தேவனுடைய வசனத்திலிருந்து நாம் சிறப்பான வழிகாட்டுதலைப் பெறமுடியும். மற்ற ஆலோசனைகளில் உள்ள நன்மை தீமைகளை வரையறுக்க வேதமே ஒரு சிறந்த வழிகாட்டி. எனவே நீங்கள் ஆலோசனைகளைப் பெறும் இடத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். வேதாகமத்துக்குத் திரும்புங்கள்.

தீயதைப் பாராதே:

நாம் நம்முடைய கண்களைக் குறித்து கவனமாக இருக்கவேண்டும். நமது கிறிஸ்தவ வாழ்வைத் தோல்வியுறச் செய்வதற்கு சாத்தான் நுழையும் வாசல்களில் கண்கள் முக்கியமானதாகும். யோபுவின் சரித்திரத்தில் 31ஆம் அதிகாரத்தை நாம் ஆராய்வோமெனில் இதனை நன்கு அறிந்துகொள்ளலாம். யோபு புத்தகம் எழுதப்படும்பொழுது அவர் எத்தனை வயதுடையவராயிருந்தார் என்பதை நாம் அறியோம். ஆனால் அவர் ஒரு செல்வந்தர் என்பதையும், திருமணமாகி தனித்தனியே வசித்து வந்த மகன்களையும் மகள்களையும் உடையவராய் இருந்தார் என்பதையும் நாம் வாசிக்கிறோம். ஒருவேளை அவர் அதிக வயதுடையவராய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கும் சோதனைகள் வந்தன. அவரது செல்வம் அனைத்தையும் இழந்த பின்னரும் அவர் கூறுகிறார்: “நான் என் கண்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டதால் என்னுடைய ஆத்துமாவை சோதிக்கும் காரியங்களை என் கண்களால் பார்க்கமாட்டேன்” என்று. “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1). “முதியவரான முட்டாளைப்போல ஒரு முட்டாள் கிடையாது” என்று ஒரு பழமொழி கூறுவார்கள். பதினாறு வயதினிலே சோதனைகள் நின்றுவிடாது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். எந்த வயதிலும் இச்சைகள் வர வாய்ப்பு உண்டு. எனவே என் கண்களுக்கு கட்டுப்பாடு விதித்து, என்னை சோதனைக்கு ஆளாக்கும் காட்சிகளிலிருந்து என் கண்களை உடனடியாக விலக்கியே ஆகவேண்டும்.

அநேக பாவங்கள் பார்வையின் வழியாகவே ஆரம்பமாகிறது என்று வேதம் சொல்லுகிறது. வேதத்தின் ஆரம்ப புத்தகத்தில் ஏதேன் தோட்டத்தில் ஏவாளை நாம் காண்கிறோம். “அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்” (ஆதியாகமம் 3:6).

பாவம் எவ்வாறு ஆரம்பமானது? கனியைப் பறித்ததாலோ, அல்லது அதனை இச்சித்து அம்மரத்தின் அருகே சென்றதாலோ அல்ல; மாறாக, அவள் அங்கே நின்றுகொண்டிருந்த பொழுது, அக்கனியைப் பார்த்தாள். அவளுடைய பாவம் அவள் கண்களின் இச்சையிலிருந்து ஆரம்பமானது.

“அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது” (ஆதி.13:10). அவன் செய்த ஒரு முட்டாள்தனமான காரியம் எதுவெனில், பாவமான ஜனங்களின் மத்தியில் வசித்ததாகும். அதைத் தெரிந்துகொள்ள அவனுக்கு உதவியது அவனுடைய கண்கள்.

தேவ ஜனங்களை நடத்த தேவன் தெரிந்து கொண்ட மோசேயும் தன்னுடைய கண்களினால் கண்ட நிகழ்ச்சியால் அவர் ஒரு கொலைகாரனாக மாறினார். “மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப் போட்டான்” (யாத்.2:11,12). அவருடைய ஒரு சாதாரண பார்வை ஒரு கொலையில் முடிந்தது.

ஆகான் எரிகோ பட்டணத்திலிருந்து எடுக்கக்கூடாத சில பொருட்களை எடுத்து தனது கூடாரத்தில் மறைந்து வைத்தான் (யோசுவா 7:20).இதனை அவன் யோசுவாவிடம் அறிக்கையிட்டான். “அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச் சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக் கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்” (யோசுவா 7:20,21). அவன் அவைகளைக் கண்டிராவிட்டால் அதனை இச்சித்து எடுத்திருக்கமாட்டான். அதனைப் பார்த்தது தவறல்ல; ஆனால் பார்வையிலிருந்தே இச்சை வந்தது. அந்த இச்சையை தனது செயலில் காட்டினான்.

தாவீது அரசனும் தனது பார்வையினாலேயே பாவத்துக்குட்பட்டான். “மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான். ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருக்கும்போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்” (2 சாமு.11:1,2). எருசலேம் மலைப்பிரதேசமான ஒரு பட்டணம். எனவே அங்கு கட்டப்பட்ட வீடுகள் படிகளைப்போல இறக்கத்தில் இருக்கும். தாவீது அரசரின் அரண்மனை ஓர் உயரமான இடத்தில் அமைந்திருந்ததால் பத்சேபாளை அவரால் எளிதாகக் காண முடிந்தது.

அந்த வேளையில் அவர் தன் பார்வையை அகற்றியிருந்தால் தனது ஆட்களை அனுப்பி அவளைக் குறித்து விசாரிக்கவும், தனது அரண்மனைக்கு அழைத்துவரவும் அவளுடன் விபச்சாரம் செய்யவும், உரியாவை கொலை செய்யவும் நேரிட்டிருக்காது. அவை யாவும் ஒரு பார்வையினால் நடந்த பாவமான காரியமாகும்.

ஆம், பிரியமானவர்களே, “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது” என்று சங்.34:15 கூறுகிறது. கர்த்தருடைய கண்கள் நம்மேல் நோக்கமாயிருக்கிறது. நாம் தேவனை நோக்கிப் பார்க்கிறோமா அல்லது நமது ஆன்மீக வாழ்வைப் பாதிக்கும் காரியங்கள்மேல் நோக்கமாயிருக்கிறோமா?

நான் இணைய தளத்திலும், பலவகையான பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காணப்படும் பாவமான காரியங்களில் என் கண்களை செலுத்துகிறேனா? என்னைப் பாவத்துக்குள்ளாக்கும் பார்க்கக்கூடாத காரியங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேனா? இந்த கேள்விகளுக்கான பதில்களைக் கொண்டே நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியடைந்துள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் ஏன் தேவனோடு பின்வரும் உடன் படிக்கையை செய்துகொள்ளக் கூடாது? “தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்க மாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது” (சங்.101:3). என்னை பாவத்துக்குள்ளாக நடத்திச்செல்லும் எதனையும் நான் பார்க்க மாட்டேன். அப்படியே பார்க்க நேரிடினும் அதனை உற்று நோக்கமாட்டேன். அதனை நீக்கிவிடுவேன் அல்லது அதனை விட்டு அகன்றுவிடுவேன்.

இத்தகைய ஒரு உறுதிமொழியையே இஸ்ரவேல் மக்கள் எருசலேமுக்கு ஏறிச்செல்லுகையில் பாடிக்கொண்டு போவார்கள்: “பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ் செய்யும் வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது” (சங்.123:1,2). எனவே நீங்கள் வெற்றியுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டுமெனில் ஜெயம் கொடுக்கும் தேவனையே நோக்கியிருக்க வேண்டும். பாவங்கள் நிறைந்து காணப்படும் நமது சமுதாயத்தை செவிமடுக்கும் காரியங்களில் நீங்கள் கவனமாக இருத்தல் வேண்டும். என்னைக் கடந்துசெல்லும் சில காரியங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதிலேயே நான் மூழ்கிவிடக் கூடாது. நாம் பார்க்கக்கூடாத காரியங்களைத் தவிர்த்து விடுவோமானால் சாத்தானை வெற்றிகொள்வது எளிதாகும். ஒருநாளை வெற்றியுள்ளதாக்க இரண்டு காரியங்கள் உண்டு. இன்று நமது வளர்ச்சியைத் தடுக்கும் சாத்தானின் முயற்சிகளை முறியடித்து அவனை நாம் ஜெயிக்கவேண்டும். இரண்டாவதாக தேவனுடைய ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணி, நம்முடைய வாழ்வைக் கட்டுப்படுத்தி நம்மை ஜெயமாக நடத்துவதற்கு அவருக்கு நம்மை ஒப்புவிக்க வேண்டும்.

போகாத இடந்தன்னில் போக வேண்டாம்

சோதனையைத் தேடி நீங்கள் எங்கும் செல்லவேண்டாம். “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே” என்று 1பேதுரு5:8-9 சொல்லுகிறது. இதிலிருந்து நாம் மூன்று காரியங்களை அறிந்து கொள்ளுகிறோம்:

1. சோதனையில் நீங்கள் தனியாக இல்லை. “சாத்தான் என்னைக் குறிவைத்திருக்கிறான்” என்று சொல்லாதீர்கள். அப்படியல்ல; அவன் நம் அனைவருக்குமே குறிவைக்கிறான். உலக முழுவதுமுள்ள கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளும் உங்களைப் போலவே சோதனையின் பாதையைக் கடந்துகொண்டுதான் வருகிறார்கள்.

2. நாம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். சாத்தான் என்ன செய்கிறான், அதை எவ்வாறு செய்கிறான் என்பதை அறிந்துகொண்டு அதற்கு விலக வேண்டும்.

3. சாத்தானுக்கு எதிராக நாம் துணிந்து நிற்கவேண்டுமெனில் நம்முடைய விசுவாசத்தில் உறுதியாக இருக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தையில் நிலைத்திருக்கும் பொழுதே நமது விசுவாசமும் உறுதியாக இருக்க முடியும். நமது வாழ்வில் அவனை அனுமதிக்காதவாறு எச்சரிப்புடன் இருக்க வேண்டும்.

வெற்றியுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவனுடைய வார்த்தையில் நம்முடைய நேரத்தைச் செலவிடவேண்டும். அதிக நேரத்தை வேதத்தில் செலவிட்டால் சாத்தானை எதிர்ப்பதில் அதிக வெற்றியும் குறைந்த நேரத்தை செலவிட்டால் குறைந்த வெற்றியும் அடைவீர்கள்.

சோதனை எல்லா இடங்களிலும் உண்டு. நாம் அதனை சந்தித்தாக வேண்டும். பழைய ஏற்பாட்டில் சிம்சோனின் வாழ்க்கையை நாம் அறிவோம். “சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு, திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்” (நியா.14:1,2). “நான் விரும்பியதை எனக்குக் கொடுங்கள். அதுதான் என்னுடைய தேவை” – இந்த உரையாடல் உங்களுடைய வாழ்க்கையிலும் காணப்படுகிறதா?

சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டான் என்று வாசிக்கிறோம். அவன் திம்னாத்துக்குச் சென்றிருக்காவிட்டால் அப்பெண்ணைப் பார்த்திருக்கமாட்டான். அவன் சென்ற இடம் அவனுக்கு சோதனையாக அமைந்தது. அவனுடைய தகப்பனாரும் தாயாரும் “சிம்சோன், நம்முடைய உறவினர்களில் சிறப்பான பெண் இல்லையா?” என்று கேட்டார்கள். அவன் உண்மையுள்ளவனாக இருந்திருந்தால், தான் இன்னும் அவர்களைப் பார்க்கவில்லை என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவன் சென்ற இடமோ அவனை அழிவின் பாதைக்கு நடத்திற்று.

ஆதியாகமம் 13இல் லோத்தைப் பற்றி வாசிக்கிறோம். “ஆபிராம் மிருக ஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான். அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம் போட்டதும், தான் முதல் முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம் பண்ண ஏதுவில்லாமற்போயிற்று. ஆபிராமுடைய மந்தை மேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.

ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான். அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும் முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.” (ஆதி.13:2-10)

சோவார் என்பது சோதோம் கொமோராவுக்குப் போகும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறு பட்டணம் ஆகும். “அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப் போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான். சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்” (ஆதி.13:11-13). சோதோமின் மக்கள் சாதாரண பாவிகள் அல்லர்; அவர்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாயிருந்தனர். லோத்து தனது ஆன்மீக வாழ்வில் தோல்வியைச் சந்திக்கக் காரணம், அவன் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டதாகும். அவ்விடத்தின் சோதனையை அவனால் வெற்றிகொள்ள முடியவில்லை.

நீங்கள் ஏழையாயிருப்பதோ, நகரத்தின் மோசமான இடத்தில் குடியிருப்பதோ தவறல்ல. ஆனால் நன்னெறியற்ற நிறுவனத்தில் பணியாற்றவும், தேவ பயமற்ற ஊழியக்காரர்களுடன் நட்புறவு கொள்வதையும் தவிர்த்துவிடுவது நல்லது. தேவபக்தியுள்ள யோபு, தனது பிள்ளைகள், ஆஸ்தி மற்றும் ஆரோக்கியம் யாவையும் இழந்து அதிகமான மன அழுத்தத்தில் இருந்தார். அவரது நண்பர்கள் அவரை அநேக காரியங்களில் குற்றப்படுத்தினர்.

ஆனால் அவரோ, “இதோ, நான் முன்னாகப் போனாலும் அவர் இல்லை; பின்னாகப் போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியைசெய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன். அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக் கொண்டேன்” (யோபு 23:8-12) என்று பதிலளித்தார்.

யோபு, தன்னுடைய பேரிடறின் காலத்திலும், வாழ்க்கையின் சரிவு நிலையிலும் தேவனைக் காணமுடியவில்லை. ஆனால் தன்னை தேவன் காண்கிறார் என்பதை அவர் உறுதியாக நம்பினார். நீதியின் பாதையைவிட்டு அவர் விலகவில்லை. தனது துன்பத்திலிருந்து மீண்டுவிடுவோம் என்று அவர் நம்பினார். சோதிக்கப்பட்டபின் பொன்னாக விளங்குவேன் என்ற நிச்சயமுடையவராய் இருந்தார். ஏனெனில் அவர் சுயமாக சோதனையை நோக்கிச் செல்லவில்லை.

எனவே நாம் வெற்றியுள்ள வாழ்வு வாழ்வதற்கு, நாம் செல்லும் பாதையில் கவனமாயிருத்தல் வேண்டும். பாவத்தைக் காண்போமானால் அங்கிருந்து விலக வேண்டும்.

உங்களுடைய செயல்களில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

இந்த ஆலோசனையை வேதப்புத்தகம் முழுவதிலும் நாம் காணமுடியும். முக்கியமாக அநேக வேத சித்தாந்தங்களை விளக்கிய பின்னர் அப்.பவுல், “நீங்கள் கற்றுக்கொண்டவைகளில் நிலைத்திருங்கள்” என்று ஆலோ சனை கூறுகிறார் (ரோமர் 12:9-21). ஆனால் நம் காலத்து சமுதாயமோ, அவர்கள் மனம் போல நடக்கவே விரும்புகிறார்கள். நாம் பாவிகள் என்பதாலும் உண்மையான மனந்திரும்புதலுக்கும் நம்முடைய வாழ்வுக்கு தேவனுடைய அன்பு முக்கியம். எனவேதான் அவர் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதும் மற்றவர்களுக்கு பிரயோஜனமாய் இருப்பதுமான ஒரு வாழ்வு வாழவேண்டும் என்கிறார். உங்களைச் சுற்றிலும் இருப்பவர்களை மதியுங்கள். அவர்களுடன் ஒத்து வாழுங்கள். அவர்கள் செய்த தீமைக்கு பதில் செய்யாதிருங்கள். தீமையை வெறுத்து நன்மையைச் செய்யும் பொழுது சோதனைக்குள் விழ வாய்ப்பு இருக்காது என பவுலடிகளார் கூறுகிறார்.

நம்முடைய வாழ்க்கை முறைகள், நாம் செய்கின்ற காரியங்கள், நாம் செல்லும் இடங்கள், நாம் காணும் காட்சிகள், நாம் கேட்கும் காரியங்கள் இவை யாவும் சாத்தான் நம்முடைய வாழ்வில் பிரவேசிக்கும் நுழைவாயில்கள். அவனையும் ஜெயிக்க வேண்டும்; அதே வேளையில் ஆவிக்குரிய வாழ்வில் நாம் முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்வை தேவ ஆவியானவர் கட்டுப்படுத்த நம்மை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

எனவே ஒவ்வொரு நாளும் நாம் சாத்தானை ஜெயிக்க வேண்டும்; மேலும் என்னுடைய முழு ஆத்துமாவுடன் தேவனுக்கு ஊழியம் செய்ய என்னை அவருக்கு ஒப்புவிக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களையும் வெளியரங்கமாய் காணப்படும் நமது செயல்களையும், செல்லும் இடங்களையும், நம்முடைய செவி வழியாக உள்ளே செல்வதையும், கண்ணின் காட்சிகளையும் நாம் தணிக்கை செய்து கவனமாய் வாழும்பொழுது, சாத்தானுடைய தந்திரங்களை நாம் ஜெயிப்பது உறுதி.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் பாதையில் நாம் கனிகொடுக்க, “…நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (யாக்.1:22) என்று யாக்கோபு தனது நிருபத்தில் அறிவுறுத்துகிறார். நாம் கேள்விப்பட்டிராத காரியங்களை நாம் செயல்படுத்த முடியாது.

கிறிஸ்தவ வாழ்வைப் பற்றிய அறிவு இல்லையெனில் அத்தகைய வாழ்வை நடத்துவது கடினம். தேவனுடைய வார்த்தையில் நேரம் செலவழித்தால் மாத்திரமே அதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே வேதத்தை வாசியுங்கள். அதிகமதிகமாய் வாசிக்க சாத்தானுடைய சோதனைகளுக்கு தப்பிக்கொள்ள முடியும். “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” (யாக்.1:27). இவ்வுலகில் கறைதிறையற்றவர்களாய் வாழ்வதையும், விதவைகள் அனாதைகள் ஆகியோரை விசாரிப்பதையும் யாக்கோபு இங்கு தொடர்புபடுத்துகிறார். ஆனால் அது இரட்சிப்புக்கு வழிநடத்தாது. இரட்சிப்பை தேவகிருபையினால் மாத்திரமே நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். தேவனுக்குப் பிரியமான காரியங்களை நாம் அதிகமாக செய்யும்பொழுது, சாத்தானைப் பிரியப்படுத்தும் காரியங்களை நாம் ஒருபொழுதும் செய்யமாட்டோம்.

‘செயலற்ற மனம் சாத்தானின் பட்டறை’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

உங்களுடைய முன்னோர்களும் பெற்றோர்களும் இதனை கூறிவருகின்றனர். இன்று நீங்களும் உங்களுடைய பிள்ளைகளுக்குக் கூறி வருகிறீர்கள். இது இன்றும் உண்மையே. எனவே தேவ ஊழியத்தைச் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள் எனில் கிறிஸ்தவ வாழ்வில் முன்னேறிச் செல்வது உறுதி. சாத்தானுடைய மிரட்டல்களை அற்பமாக எண்ணாதிருங்கள். அவன் உங்களைத் தொந்தரவு செய்யவில்லை என்று நினைப்பீர்கள் எனில் அவன் மறைவாக உங்களுக்கு வலைவிரித்திருப்பான். உங்களையும் என்னையும் மாத்திரமல்ல, உலகமெங்குமுள்ள சகோதர சகோதரிகளையும் அவன் சோதித்துக் கொண்டிருக்கிறான்.

எனவே, தேவனுடைய வசனத்தின் வழி காட்டுதலின்படி நாம் வாழ்வோம். அதற்கு வேத வாசிப்பில் அதிக நேரம் செலவழிப்போம். உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். இதுவே சத்திய வேதம் நமக்குக் காட்டும் வழி. நீங்கள் வெற்றியுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வு வாழ தேவன் உதவி செய்வாராக.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்