விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர்.எச்.எஃப்
(ஜனவரி-பிப்ரவரி 2015)

அத்தியாயம் – 1

ஒவ்வொரு விசுவாசியும் இடைவிடாமல் எப்போதும் ஆவிக்குரிய போராட்டத்தைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறான். இந்த உலகமும், மாமிசமும், சாத்தானும் எப்படியாவது விசுவாசியைத் தோற்கடித்துவிட வேண்டுமென்றும், சோர்ந்துபோகச் செய்யவேண்டும் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அநேக கிறிஸ்தவர்கள் தேவன் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் சர்வாயுதவர்க்கத்தைப் பயன்படுத்தாததால், தங்கள் ஆவிக்குரிய போராட்டத்தில் தோல்வியைச் சந்திக்கிறார்கள்.

எபேசியர் நிருபம் 6ஆம் அதிகாரம் ஒரு விசுவாசிக்கு வரும் ஆவிக்குரிய போராட்டங்களையும், விசுவாசி பயன்படுத்தும்படி தேவன் கொடுத்திருக்கும் சர்வாயுத வர்க்கத்தையும் விளக்கிக்கூறுகிறது. ஒரு விசுவாசி தான் யாருடன் போராடுகிறான் என்று அறிந்திருக்க வேண்டும். அவன் போராட்டத்தில் வெற்றி பெற கிறிஸ்துவுக்குள் அவனுக்கு இருக்கும் ஆதார சக்திகள் எவையென்று அறிந்து செயல்பட்டால்தான் ஆவிக்குரிய போராட்டத்தில் வெற்றிபெற்று, வளமான வெற்றி வாழ்க்கை வாழமுடியும்.

எபேசியர் 6ஆம் அதிகாரம் 10 முதல் 20 வரை உள்ள வசனங்களின் இந்த ஆராய்ச்சியின் நோக்கம், “விசுவாசி இயேசுகிறிஸ்துவுக்குள் வெற்றியைக் கண்டடைய உள்ள ஆதார சக்திகள் எவை?” என்பதைப் புரிந்து கொள்ள உதவவேண்டும் என்பதே.

எபேசியர் நிருப புத்தகத்தில் மூன்று சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்படுவதாக உள்ளன.

முதலாவதாக, இயேசுகிறிஸ்துவுக்குள் ஒரு விசுவாசியின் உயர்வான நிலையைக் குறித்த போதனை காணப்படுகிறது. இது முதல் மூன்று அத்தியாயங்களில் காணப்படுகிறது. கிறிஸ்துவைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்தப் பரிபூரணமான நிலை சொந்தமானது. இந்த நிலை குறித்த போதனையானது, கிறிஸ்து ஒரு விசுவாசிக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

இரண்டாவதாக, ஒரு விசுவாசி கிறிஸ்துவுக்குள் பெற்றிருக்கும் உயர்வான நிலையின் அடிப்படையில், இந்தப் பூமியில் அவன் நடத்தும் ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்துப்பேசுகிறது. எபேசியர் நிருபத்தின் கடைசி மூன்று அதிகாரங்களிலும் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆறாம் அதிகாரம் 9ஆம் வசனம் வரை இந்தக் கருத்தைப் பற்றிய விளக்கத்தைக் காணலாம். இந்தப் பகுதி ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அல்லது நடத்தையில் கிறிஸ்து அவன் என்ன சாதிக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்று காட்டுகிறது.

மூன்றாவதாக, எபேசியர் நிருபம் ஒரு விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டத்தைக் குறித்துக் கூறுவதுடன் முடிவடைகிறது. இங்கே விசுவாசியின் மூலமாக கிறிஸ்து செயல்படுவதைக் காண்கிறோம்.

“இந்தப் போராட்டம் ஏன்?” “எபேசியர் நிருபம் ஏன் ஒரு யுத்தக்களத்தில் முடிவடைகிறது?” என்றெல்லாம் சிலர் கேட்கக்கூடும்.

ஒரு விசுவாசி கிறிஸ்துவுக்குள் பெற்றிருக்கும் உயர்ந்த நிலையையும், ஒவ்வொரு விசுவாசியும் அந்த நிலையில் நடத்தவேண்டிய வாழ்க்கையையும் எபேசியர் நிருபம் எடுத்துக் காட்டியதற்குப்பின், அதற்காகப் போராட வேண்டியதின் அவசியத்தைப் பற்றி ஒரு வேளை குறிப்பிட்டிருக்கலாம். எபேசியர் நிருபம் முழுவதிலும் “விசுவாசிக்காகக் கிறிஸ்து வெற்றி சிறந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். நான்காம் அதிகாரம் 8ஆம் வசனத்தில் “சிறைப்பட்டவர்களை சிறையாக்கி” என்று காண்கிறோம். இப்படி உங்களைச் சிறையாக்கி வைத்திருந்தவர் களைத் தேவன் சிறையாக்கிவிட்டு உங்களைச் சுதந்தரவாளிகளாக்கியிருக்கிறார்.

இப்படி நாம் கிறிஸ்துவுக்குள் வெற்றி சிறந்தவர்களானால் இந்தப் போராட்டம் எதற்கு? “பர்வதத்தின் உச்சியில் தங்கியிருக்க விரும்புவது” விசுவாசிகளின் தன்மையாக இருக்கிறது. மறுரூப மலையில் யாக்கோபோடும், யோவானோடும்கூட இருந்து மறுரூபமடைந்த இயேசுவைக் கண்ட பேதுரு, அங்கேயே மலையின்மேல் கூடாரம் அமைத்துத் தங்கலாம் என்று விருப்பம் தெரிவித்தான் அல்லவா? அவர்கள் இயேசுகிறிஸ்துவை தமது சர்வ மகிமையிலும் கண்டதுமன்றி அவருடன் மோசேயும், எலியாவும் பேசிக்கொண்டிருப்பதையும் கண்டார்கள். இது ஒரு மகா பெரிய அற்புதக் காட்சியாக இருந்தபடியால், பேதுரு இயேசுவிடம் இப்படிக் கூறினான். “ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்” (மத்.17:4). ஆனால் அது இயேசுவின் திட்டமல்ல. அவர்கள் கீழே இறங்கிச்செல்ல வேண்டியதிருந்தது. ஒருவன் என்றென்றும் பர்வதத்தின் உச்சியில் தங்கியிருக்க முடியாது. அவன் இறங்கிச் சென்று உலக வாழ்வின் கடமைகளில், இயேசுவுக்கு ஊழியம் செய்யவேண்டும். இயேசு செய்த கிரியைகளைத் தாங்களும் செய்யவேண்டும்.

ஆவிக்குரிய போராட்டங்களுக்கான காரணங்கள்

ஒரு விசுவாசி ஆண்டவருக்காக வாழ்ந்து கொண்டிருக்கும்போது எதிர்பார்த்து ஆயத்தமாயிருக்க வேண்டிய ஆவிக்குரிய போராட்டங்களுக்கு மூன்று காரணங்கள் உண்டு.

முதலாவது விசுவாசிகள் ஆவிக்குரிய போராட்டத்தைச் சந்திக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மத்தியிலேயே ஒரு துரோகி இருக்கிறான். இந்தத் துரோகி, மனிதனுடைய பழைய சுபாவமாகிய “மாம்சமே”. ஒருவன் கிறிஸ்துவைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது அவனிடமிருக்கும் பழைய சுபாவம் முற்றிலுமாக அகன்று போவதில்லை. எனவே ஒவ்வொரு விசுவாசியின் வாழ்விலும் பழைய சுபாவத்துக்கும், புதிய சுபாவத்துக்கும் இடையில் ஆவிக்குரிய போராட்டம் ஏற்படும்.

கலாத்தியர் 5:17 இவ்வாறு கூறுகிறது: “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” (Contrary). இங்கு கிறிஸ்துவுக்குள் நமக்கு இருக்கும் சுயாதீனத்தை நம்முடைய மாம்சம் எதிர்ப்பதைக் காண்கிறோம். மாம்சம் எப்போதும் நம்மை ஆசை இச்சைகளுக்கு அடிமையாக்க முயற்சிக்கிறது. மாம்சத்தின் மூலம் சாத்தான் நம்மை ஆசை காட்டி இழுக்கிறான். இயேசு ஒரு தடவைப் பேதுருவைக் கண்டித்து இப்படிக் கூறினார்: “சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறது போலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்” (லூக்கா 22:31,32).

நம்முடைய ஆத்துமாக்களுக்கு எதிரி சாத்தானே. கிறிஸ்துவுக்குள் நாம் அடைந்துள்ள இரட்சிப்பைக் குறித்து அவன் பொறாமைப்படுகிறான். நாம் கிறிஸ்துவோடு கொண்டிருக்கிற உறவையும், பற்றுறுதியையும் அழித்துவிட முயற்சிக்கிறான். சாத்தான், விசுவாசிகளைப் பின்னுக்கு இழுத்துத் தனக்குச் சாதகமாக்க முயற்சிக்கிறான். வேதாகமம் நம்மை இப்படி எச்சரிக்கிறது: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்;” (1 பேதுரு 5:8,9).

ஆவிக்குரிய போராட்டத்துக்குரிய இரண்டாவது காரணம், ஒரு விசுவாசி கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபையில் ஒரு அங்கமாயிருக்கிறான். ஏதேன் தோட்டத்தில் தேவன் சாத்தானுக்குச் சாபத்தை அறிவித்ததுமுதல், சாத்தான் கிறிஸ்துவை அழிக்க முயற்சித்துக்கொண்டே இருந்திருக்கிறான். எனவே கிறிஸ்துவோடு இணைந்திருக்கிற எவனும், குறிப்பாக அவருடைய சரீரத்தின் அங்கமாய் இருக்கும் ஒருவன் சாத்தானின் தாக்குதலுக்கு ஆளாகிறான். வேதாகமம் முழுவதிலும் சாத்தான் இயேசுவை அழித்துவிட செய்த முயற்சிகள் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனுக்குலத்தின் பாவத்திற்காக மரிக்க கிறிஸ்து இந்த உலகத்தில் ஒரு பாலகனாகப் பிறப்பதற்காக ஒரு மானிட சரீரத்தை ஏற்றுக்கொண்டபோது, அவரைக் குழந்தைப்பருவத்திலேயே கொலை செய்துவிட முயற்சித்தான். சாத்தானின் இந்தத் திட்டத்தை ஏரோது நிறைவேற்றினான். பெத்லகேமிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இருந்த இரண்டு வயதுக்குக் குறைவான ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொன்றுவிடக் கட்டளையிட்டான் (மத்.2:16). என்றபோதிலும், சாத்தானைவிட ஞானத்தில் சிறந்த தேவாதி தேவன் செய்த ஒழுங்கின்படி யோசேப்பும், மரியாளும் இயேசு பாலகனுடன் பெத்லகேமைவிட்டு வெளியேறித் தப்பிவிட்டனர். இயேசு காப்பாற்றப்பட்டார். தேவன் யோசேப்புக்குத் தரிசனமாகி குழந்தையுடன் மரியாளையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்குப் போய்விடும் படி அறிவித்திருந்தார்.

பின்னர் சாத்தான் இயேசுவைப் பாவம் செய்யத் தூண்டினான். சாத்தான் இயேசுவிடம் ஒரு தேவாலயத்தின் உப்பரிகையிலிருந்து தாழக் குதிக்கும்படி கூறினான். அப்பொழுது தேவன் தமது தூதர்களைக்கொண்டு அவரை ஏந்திக் காப்பாற்றுவார் என்றான். அதற்கு இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்” (மத்.4:7). இயேசு சிலுவையில் தொங்கி உயிர்விட்டபோது, சாத்தான் தன் திட்டம் வெற்றி அடைந்துவிட்டதாக நம்பினான். ஆனால் மரித்த இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வெற்றி சிறந்தாரே. தமது உயிர்த்தெழுதலின் மூலம் இயேசு மரணத்தையும், சாத்தானையும் வெற்றி கொண்டதை நிரூபித்தார். பின்னர் இயேசு சாத்தானின் பிரதேசத்திலிருந்து வெளியேறிப் பரமேறிப் பரலோகத்தில் தம் பிதாவிடம் சென்று சேர்ந்தார்.

எனவே சாத்தான் இனிமேல் கிறிஸ்துவைத் தாக்க முடியாது. அதனால் அவன் கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபையைத் தாக்கிக்கொண்டிருக்கிறான். கிறிஸ்து அங்கே இல்லாத போதிலும் திருச்சபையிலிருக்கும் விசுவாசிகளைச் சாத்தான் எளிதில் தாக்கலாம் என்ற போதிலும் கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபைதான் இறுதியில் வெற்றி பெறும். ஏனென்றால் கிறிஸ்து இப்படி கூறியுள்ளார்: “…இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்.16:18).

விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய போராட்டம் வர மூன்றாவது காரணம், தேவனுடைய திட்டத்தில் உட்பட்டிருக்கும் ஒன்று. “இயேசு இந்த உலகத்தை ஒருநாள் நீதியாக அரசாளுவார்” என்பதாகும். இது ஒரு எதிர்காலத்தைக் குறிப்பிட்டாலும் ஆவிக்குரிய போராட்டம், தேவன் மனிதருடன் செயல்படும் காலத்தைக் குறிப்பிடலாம். அப்போஸ்தலனாகிய யோவான் பரலோகத்திலிருந்து இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்குத் திரும்பி வருவதைக் குறித்த ஒரு தரிசனத்தைக் கண்டான். அவன் கூறுவதைக் கேளுங்கள்: “பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார்” (வெளி.19:11).

மேலும் அப்.17:31இல் ஒரு தீர்க்கதரிசனம் கூறப்படுகிறது: “மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந் தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.” இந்த வசனம் நியாயத்தீர்ப்பின் முழு அதிகாரத்தையும் தேவன் தம் குமாரனிடத்தில் ஒப்படைத்திருக்கிறார் என்று வெளிப்படுத்துகிறது. சாத்தானுக்கு இது தெரியும். எனவே தீய சக்திகளோடு ஒரு கடைசியான, பயங்கரமான மோதல் உண்டு. அது சாத்தானின் மற்றும் அவனைச் சேர்ந்த தீய சக்திகள் அனைத்துக்கும் இறுதியான முடிவைக் கொண்டுவரும். வெளிப்படுத்தல் 1:18இல் இயேசு கூறுகிறார்: “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்”. வெளி. 20:10இல் சாத்தானின் இறுதி முடிவு பற்றி இப்படி வாசிக்கிறோம்: “மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.”

விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவோடு ஆளுகை செய்வதிலும், நியாயத்தீர்ப்பு செய்வதிலும் பங்கேற்க வேண்டியிருப்பதால், நாம் இப்போது சாத்தானின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். சாத்தானும், அவனுடைய தூதுவர்களும் இந்த உலகம் தங்களுக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறார்கள். எனவே இவர்களை நியாயந்தீர்க்கக் கிறிஸ்துவோடு நாம் உட்காரும்போது நமக்கு இந்தப் போராட்டம் வரும். தேவன் தன்னை அழிக்க நெருங்கி வருகிறார் என்பது சாத்தானுக்குத் தெரியும். அதனால் அவன் சபையைத் துன்புறுத்துவதில் அதிகக் கவனம் செலுத்துகிறான். இப்படிச் சாத்தான் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் கூடப் பரிசுத்த ஆவியானவர் தீமையைக் கட்டுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். “அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது; ஆனாலும் தடை செய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது” என்று 2 தெச. 2:7 கூறுகிறது.

திருச்சபை ஆரம்பிக்கப்பட்ட பெந்தெகொஸ்தே நாளிலிருந்து விசுவாசிகளின் மூலமாகப் பரிசுத்த ஆவியானவர் இந்தக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்துகொண்டேயிருக்கிறார். என்றாலும் நாம் இறுதியான போராட்டத்திற்குக் கிட்ட நெருங்கிவிட்டோம் என்பது இப்போது தெளிவாகிறது.

எனவே அப்போஸ்தலனாகிய பவுல், எபேசு சபையாருக்கு நிருபம் எழுதும்போது கடைசிப் பகுதியில் குறிப்பிட்டிருக்கும் விசுவாசிகளின் ஆவிக்குரிய போராட்டம் பற்றிய காரியங்கள் அவசியமானவையும், சரியான நேரத்தில் கூறப்பட்ட வார்த்தைகளுமாகும். இந்தப் போராட்டம் குறித்து பயத்தினால் விசுவாசிகள் ஒடுங்கிப்போக வேண்டியதில்லை. மத்தேயு 16:18இல் கூறப்பட்டிருக்கும் வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ளவேண்டும். “மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்