உன் குடிசையில் தீ பற்றி எரிய தேவன் இடமளிப்பாரா?

(ஜனவரி-பிப்ரவரி 2015)

“கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார். என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா.55:6-8).

உடைந்த கப்பலிலிருந்து உயிர்தப்பிய ஒரு மனிதன், மக்கள் வசிக்காத ஒரு தீவிலே சென்றடைந்தான். அங்குள்ள அசெளகரியமான நிலையிலிருந்து தன்னை சீக்கிரமாய்க் காப்பாற்றும்படி அவன் தொடர்ந்தும் தேவனிடம் ஜெபித்து வந்தான்.

ஒவ்வொரு தடவையும் கடலில் ஏதேனும் கப்பல் வருகின்றதா என அவன் ஏறெடுத்துப் பார்த்தவண்ணம் இருந்தான். ஆனால் எவ்வித உதவியும் அவனுக்கு கிடைக்கவில்லை.

வெறுத்துப்போன அவன், உடைந்த கப்பலின் மிதக்கும் சிதறல்களை வைத்து ஒரு சிறிய குடிசையை அங்கே நிர்மாணித்தான். எஞ்சியுள்ள தன் உடைமைகளைப் பாதுகாக்கவும், மிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் அது உதவியாக இருந்தது. எனினும் உச்சி வெயிலில் அந்த ஓலைக் குடிசை தீப்பற்றி எரிந்து நாசமானது.

‘தேவனே, இதை நீர் எப்படி எனக்குச் செய்யலாம்’ என்று மிகுந்த வேதனையுடன் அவன் அழுது ஜெபித்தான். மறுநாள் காலையில், அந்த தீவிற்கு அருகாமையில் வந்த ஒரு கப்பலின் இரைச்சல் ஒலியைக் கேட்ட அவன், உடனடியாக விழித்துக்கொண்டான்.

சில மனிதர்கள் அவனைக் காப்பாற்றும்படி கரைக்கு வந்தார்கள். ‘நான் இங்கிருப்பதை எப்படி நீங்கள் அறிந்துகொண்டீர்கள்?’ என மீட்புக் குழுவினரிடம் கேட்டான். ‘உனது புகை சமிக்ஞையை நாங்கள் கவனித்தோம்’ என அவர்கள் பதிலளித்தார்கள்.

விஷயங்கள் மிகவும் மோசமாகும் தருணத்தில் நாம் இலகுவில் அதைரியமடைகின்றோம். எனினும் நாம் மனதில் சோர்ந்துபோய் விடக் கூடாது. ஏனெனில் பலவிதமான வேதனை துன்பங்களின் மத்தியிலும் தேவன் நமது வாழ்வில் கிரியை நடப்பித்து வருகின்றார்.

அடுத்த தடவை உங்களது சொந்த குடிசை தீப்பற்றி எரியுமானால், அது தேவனுடைய கிருபையின் அருளைப் பெறத்தக்கதான ஒரு புகை சமிக்ஞை என்பதை மறந்துவிடாதீர்கள்.

எல்லாவிதமான தீமையின் மத்தியிலும், தேவன் எனக்கான சாதகமான பதிலை வைத்திருக்கின்றார் என உங்கள் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் வேதாகமம் நமக்கு எப்போதும் தைரியத்தையே தருகின்றது.

நீ சொல்வாய்: ‘என்னால் முடியாது’ என்று.

தேவன் கூறுவார்: “மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்” என்று (லூக்.18:27).

நீ சொல்வாய்: ‘என்னை யாருமே நேசிக்கவில்லை’ என்று.

தேவன் கூறுவார்: “நான் உங்களில் அன்பாயிருக்கிறேன்” என்று. (யோவான் 3:16; 13:34)

நீ சொல்வாய்: ‘என்னால் முன்செல்ல இயலாது’ என்று.

தேவன் கூறுவார்: “என் கிருபை உனக்குப் போதும்” என்று. (2கொரி.12:9, சங். 91:15)

நீ சொல்வாய்: ‘பயமாக இருக்கிறது’ என்று.

தேவன் கூறுவார்: “பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே தந்துள்ளேன்”என்று. (2தீமோ. 1:7)

நீ சொல்வாய்: ‘என்னால் செய்ய முடியாது’ என்று.

தேவன் கூறுவார்: “பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய உனக்குப் பெலனுண்டு” என்று. (பிலி. 4:13)

நீ சொல்வாய்: ‘என்னால் சாத்தியமில்லை’ என்று.

தேவன் கூறுவார்: நான் “கிருபையை பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்” என்று. (2 கொரி. 9:8)

நீ சொல்வாய்: ‘இது சரிவராது’ என்று.

தேவன் கூறுவார்: “சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்”என்று. (ரோமர் 8:28)

நீ சொல்வாய்: ‘நானே என்னை மன்னிக்க மாட்டேன்’ என்று.

தேவன் கூறுவார்: “இதோ, நான் உன்னை மன்னிப்பேன்” என்று. (1யோவான் 1:9, ரோமர் 8:1)

நீ சொல்வாய்: ‘என்னால் சமாளிக்க முடியவில்லை’ என்று.

தேவன் கூறுவார்: உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவேன் என்று. (பிலி. 4:19)

நீ சொல்வாய்: ‘அடிக்கடி கவலைப்படுகிறேன்’ என்று.

தேவன் கூறுவார்: “உங்கள் கவலைகளையெல்லாம் என்மேல் வைத்துவிடுங்கள்” என்று. (1பேதுரு 5:7).

நீ சொல்வாய்: ‘எனக்கு விசுவாசமில்லை’ என்று.

தேவன் கூறுவார்: “அவனவனுக்கு ஏற்ற விசுவாச அளவின்படியே பகிர்ந்தளித்துள்ளேன்” என்று. (ரோமர் 12:3)

நீ சொல்வாய்: ‘நான் தனிமையில் இருக்கிறேன்’ என்று.

தேவன் கூறுவார்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று. (எபி.13:5)

நீ சொல்வாய்: ‘நான் அறிவுள்ளவனல்ல. நீதியுள்ளவனல்ல’ என்று.

தேவன் கூறுவார்: “கிறிஸ்துவே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” என்று. (1கொரி. 1:30)

நீ சொல்வாய்: ‘என்னால் போராட முடியாது’

தேவன் கூறுவார்: “உன் வழிகளிலெல்லாம் செவ்வைப்படுத்துவேன்” என்று. (நீதி.3:5-6)

சத்தியவசனம்