ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மே-ஜுன் 2015

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

ஜெயம் கொடுக்கும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன இலக்கியப்பணி வாயிலாக அநேகர் ஆசீர்வாதம் அடைந்துவருவதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். ஆசிய கண்டத்தில் அநேக நாடுகளில் பூகம்பங்கள் ஏற்பட்டு வருகிறதைக் கேள்விப்படுகிறோம். குறிப்பாக நேபாள நாட்டிலும் இந்தியாவின் வட இந்திய மாநிலங்களின் சில பகுதிகளிலும் அதிகமான உயிரிழப்புகளும் பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கிறதை அறிகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜெபிக்கவும் அவர்களுக்கு உதவவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். இவைகளெல்லாம் நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துக் கொண்டிருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இயேசுகிறிஸ்து கடைசி நாட்களில் ஏற்படும் அடையாளங்களைக் குறித்துப் போதிக்கும்போது, “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும் கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” என்று கூறினார் (மத்.24:7,8). எனவே நாம் அவருடைய வருகைக்கு ஆயத்தப்பட்டவர்களாக வாழ்வோம்.

சத்தியவசன ஊழியப்பணி வாயிலாக இன்னும் அநேகர் நற்செய்தியை அறியவும், மனந் திரும்பவும், ஆவிக்குரிய வாழ்வில் கட்டப்படவும் ஜெபியுங்கள். அஞ்சல் வழி வேதப்பாடத் திட்டத்தில் இணைந்து சத்தியங்களைக் கற்றுக்கொள்ள அழைக்கிறோம். விசுவாசப் பங்காளர் சந்தாவை இது வரைப் புதுப்பிக்காதவர்கள் தயவுசெய்து புதுப்பித்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் சபை அக்கினியாய் பற்றி எரியட்டும் என்ற தலைப்பில் திருச்சபை கட்டப்படுவதைக்குறித்தும், பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எழுதியுள்ளார்கள். சகோ.வசந்தகுமார் அவர்கள் ‘இனிமையற்ற இவ்வுலகின் வழிகள்’ என்ற தலைப்பிலும், Dr.உட்ரோ குரோல் அவர்கள் ‘தேவனுடன் நல்லுறவு கொள்ளுதல்’ என்ற தலைப்பிலும்,  சகோதரி வனஜா அவர்கள்  ‘துதி ஆராதனை’ என்ற தலைப்பிலும் செய்திகளை எழுதியுள்ளார்கள். மற்றும் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களுடைய புதிய ஏற்பாட்டு வேதபாடமும்,  Dr.தியோடர் எச்,எஃப் அவர்கள் எழுதிய “விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்” என்ற தொடர் செய்தியும், சிறுவர் சோலை பகுதியும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் அனைத்தும் உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்