சீடத்துவ வாழ்க்கையின் அடிப்படை

இயேசுகிறிஸ்து விளம்பின உவமை
சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மே-ஜுன் 2015)

லூக்கா 14 ஆம் அதிகாரம் 26-30 வரை ஆண்டவர் சொன்ன உவமையில் சீடத்துவ வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்துகிறார். சீடத்துவ வாழ்க்கை வாழ முற்படுகிறவன் எப்படி தன் ஆரம்பத்தைத் தொடங்க வேண்டும் என்று விளக்குகிறார்.

“பின்பு அநேக ஜனங்கள் அவரோடே கூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து, யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (லூக்.14: 25-27) என்றார்.

சீடத்துவ வாழ்வைக் குறித்து போதித்துக் கொண்டிருந்தபோது, அவர் ஒரு உவமையைக் கூறுகிறார்: “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற் போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: இந்த மனுஷன் கட்டத் தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ் செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ? (28-30).

ஒரு கோபுரம் கட்ட முற்படுகிறவன் அதை கட்ட ஆரம்பித்த பிறகு, கட்ட முடியாமற் போனால் அநேகர் பரியாசம் பண்ணுவார்கள். எனவே, அவன் கட்டத்தொடங்கி முடிக்க திராணியில்லாமல் போவதைக்காட்டிலும், அவன் முதலாவது கட்டித் தீர்ப்பதற்கு தனக்கு நிர்வாகம் உண்டோ என்று கணக்குப் பார்க்கக்கடவன் என்று ஆண்டவர் போதித்தார்.

அதைப்போன்று சீடத்துவ வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பதாக, ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அவருக்காக வாழ முற்படுவதற்கு முன்பதாக, அவருடைய திருப்பணியிலே ஈடுபடுவதற்கு முன்பதாக நாம் செய்யவேண்டிய காரியங்களைக் குறித்தும் திருமறை நமக்குப் போதிக்கிறது.

முதலாவது, தீர்மானம் எடுப்பது அவசியமாகும். கோபுரம் கட்டுவதற்கு முன்பதாக அதை கட்டலாமா, வேண்டாமா என தீர்மானிப்பது முக்கியம். அதுபோலவே, சீடத்துவ வாழ்க்கைக்கு செல்லலாமா? வேண்டாமா?, ஆண்டவருடைய திருப்பணிக்குச் செல்வதா? வேண்டாமா? இவைகளையெல்லாம் முதலாவது நன்கு யோசித்து பார்த்து தீர்மானிப்பது அவசியம். கோபுரம் கட்டுகிறவன் அதை கட்டி முடிக்க நிர்வாகம் உண்டா? என எவ்வாறு தீர்மானிக்கிறானோ அவ்வாறே நமது வாழ்க்கையிலும் தீர்மானங்கள் மிக முக்கியமானது. தீர்மானம் ஒழுங்கற்று போனால் அது முழுவதும் ஒழுங்கற்று போய்விடும். சீடத்துவ வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பதாக ஆராய்ந்து தற்பரிசோதனை செய்து ஜெபித்து தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாவதாக, திட்டமிடுதல் அவசியம். தீர்மானித்தால் மாத்திரம் போதாது. திட்டமிடவும் வேண்டும். திட்டமிடுதல் என்பது வேறு, கவலைப்படுதல் என்பது வேறு. கவலைப்படாதே என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். ஒருநாளும் திட்டமிடாதே என்று ஆண்டவர் சொல்லவில்லை. கோபுரத்தைக் கட்டுகிற ஒருவன் தன்னை யாரும் பரியாசம் பண்ணாதபடி என்ன செலவாகும்? இதை எப்படி முடிப்பேன், அதைச் செய்ய தனக்குத் திராணி உண்டா என்பதையெல்லாம் சோதித்து அறிந்து திட்டமிடவேண்டும். திட்டமிடுதலை தவறு என வேதாகமம் போதிக்கவில்லை. நாம் திட்டமிட்டுவிட்டு கவலைப்பட்டு கொண்டிருக்கவும் கூடாது. கவலைப்படுதலை விட்டு விட வேண்டும். சீடத்துவ வாழ்வைத் துவங்குவதற்கு முன்பதாக தீர்மானிக்கவேண்டும். அதன்பின்பு திராணி உண்டா, பெலன் உண்டா என சிந்தித்து திட்டமிட வேண்டும்.

மூன்றாவதாக, காக்கப்பட வேண்டும். மற்றவர்களுடைய பரியாசத்துக்கு ஆளாகாதபடி காக்கப்படுதல் அவசியம். கட்டி முடிக்க முடியாமல் போனால், அவனைத் திராணியில்லாதவன் என்று பரியாசம் பண்ணுவார்கள். நாம் தீர்மானித்து திட்டமிட்டதை எந்த உணர்ச்சிவசத்துடனும் செயல்படுத்தாதபடி, தேவ சமுகத்தில் அமர்ந்திருக்கும்போது காக்கப்படுவோம்.

ஆண்டவர் உன்னை திருப்பணிக்கு அழைத்திருக்கிறார். அவரது வார்த்தையைக் கேட்கும்பொழுது நீ உணர்ச்சிவசப்படாதே. கர்த்தருடைய சமுகத்தில் அமர்ந்திருந்து கர்த்தரே தேவன் என்று அறிந்துகொள். கர்த்தருடைய சமுகத்தில் அமர்ந்திருக்கும்போதுதான் நம்முடைய பெலவீனம் தெரியும், ஆண்டவரின் வல்லமையும், மகிமையும் தெரியும். ஆகவேதான் அமர்ந்திருந்து கர்த்தரே தேவனென்று அறிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது கிடைக்கிற ஆலோசனையைக் கைக்கொள்ளும்போது அதில் நாம் நிலைத்திருப்போம். சீடத்துவ வாழ்க்கைக்கு, நம்மை முழுவதுமாய் அர்ப்பணிக்கும்போதும், ஆன்மீக காரியமாக தீர்மானிக்கும்போதும், உலகப்பிரகாரமான காரியங்களிலும், குடும்ப காரியங்களிலும் முடிவெடுக்கும்போது நாம் கர்த்தருடைய சமுகத்தில் அமர்ந்திருந்து திட்டமிட்டு தீர்மானித்து காரியத்தைச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அதன் முடிவும் நன்றாக இருக்கும்.

இதேபோன்று, லூக்கா 14:31-33 வரை சொல்லப்பட்ட உவமையிலும் சீடத்துவத்தைப் பற்றியே ஆண்டவர் போதிக்கிறார். “அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனை பண்ணாமலிருப்பானோ? கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக் கொள்வானே”.

கோபுரம் கட்டுகிறவனைக் குறித்து சொல்லப்பட்ட உவமையிலே அவன் தீர்மானிக்க வேண்டும், திட்டமிட வேண்டும் என பார்த்தோம். ஆனால் இந்த உவமையில் ஒரு ராஜாவைக் குறித்து சொல்லப்படுகிறது. இந்த ராஜாவினிடத்தில் பதினாயிரம் சேவகர்கள் இருக்கிறார்கள். எதிரி ராஜாவின் சேனையில் இருபதினாயிரம் சேவகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலே பதினாயிரம் சேவகர்களைக் கொண்ட ராஜா உட்கார்ந்து, எதிரியை எதிர்க்க முடியுமா, அவனை ஜெயிக்க முடியுமா என கணக்குப் பார்க்கவேண்டும்.

ஆண்டவராகிய இயேசுவானவர் சீடத்துவ வாழ்க்கையிலே நாம் சந்திக்கப்போகிற பிரச்சனைகள் அல்லது நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த உவமையிலே சொல்லுகிறார். பதினாயிரம் சேவகர்களைக் கொண்ட ராஜா தனது பெலனை ஆராய்ந்து பார்க்கவேண்டும். தன்னுடைய பெலன், திராணி இவைகளைக் கொண்டு படை பலம் அதிகமுள்ள எதிரியான ராஜாவை எதிர்க்க முடியுமா? ஜெயிக்க முடியுமா என்பதை சுய மதிப்பீடு செய்யவேண்டும். இது மிகவும் முக்கியமானது.

இதைப்போலத்தான் சீடத்துவ வாழ்க்கையை துவங்கும்போது நாம் சந்திக்கப் போகிற பிரச்சனைகள் ஏராளமாயிருக்கலாம். நற்செய்தியை அறிவிக்கும்போது எதிரியான சாத்தான் பலமாக நம்மோடு போராடலாம். பலவிதமான சோதனைகளைத் தரலாம். அந்த சமயத்திலே முதலாவது நமது பெலனை நாம் மதிப்பீடு செய்யவேண்டும். வேதம் சொல்லுகிறது; ஒருவன் தன் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் கண்டுபிடித்தால் அவன் இடறல் அடையமாட்டான். இதை அறிந்து கொள்ளும் வண்ணமாக நாம் ஆண்டவருடைய சமுகத்தில் காத்திருக்கவேண்டும். நம்மை சுய மதிப்பீடு செய்யவேண்டும். அதுபோல நமது எதிராளியின் பெலத்தையும், எதிரியின் வல்லமையையும் மதிப்பீடு செய்து ஆராய வேண்டும். இப்படி செயல்படுவோமானால் எவ்வளவு பெரிய சேனையையும் யுத்தத்தில் நாம் ஜெயங் கொள்ள முடியும்.

கிறிஸ்தவ வாழ்க்கை, ஊழியம் என்பது போராட்டமான ஒரு யுத்த களத்திற்கு சமம். யுத்தத்தில் ஜெயம் பெற வேண்டுமென்றால் நம்மைக் குறித்தும், எதிரியின் வல்லமையைக் குறித்தும் சரியாய் மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். லூக்.14:32 ஆம் வசனத்தில், “… கூடாது என்று கண்டால் .. தூரத்தில் இருக்கும் போதே ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கு ஏற்றவைகளைக் கேட்டுக்கொள்வானே” என்று வாசிக்கிறோம். உவமையின் நடுமையக் கருத்துக்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர வார்த்தைக்கு வார்த்தை நாம் அர்த்தம் கொள்ள ஆரம்பித்தால் ஆண்டவர் என்ன நோக்கத்திற்காக சொன்னார் என்பதை விட்டுவிட்டு நாம் எங்கேயோ தூரம் போய்விடுவோம். இதை சிலர் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்றால், எதிராளியான அந்தச் சத்துருவோடு போராடும்போது நம்முடைய பெலன் குறைந்துபோனால் எதிராளியிடம் சென்று சமாதானத்துக்கேதுவானவைகளை செய்து கொள்ளலாமே என்று சொல்லுவார்கள். அது தவறானதாகும். ஆண்டவர் அப்படிச் சொல்லவில்லை. ஒன்று நம்மை சுய மதிப்பீடு செய்யவேண்டும். மற்றொன்று எதிராளியின் பெலனை மதிப்பீடு செய்யவேண்டும்.

எதிராளியை மேற்கொள்வதற்கு தேவ பெலனை கூட்டிக் கொள்ளவேண்டும். ஆண்டவருடைய ஒத்தாசையோடும், ஆவியானவரின் ஆலோசனையோடும் செயல்படவேண்டும். எதிரியாளியோடு ஐக்கியம் கொள்ளவேண்டும் என்ற பொருளில் அல்ல. ஊழியம், கிறிஸ்தவ ஜீவியம், ஆண்டவருடைய திருப்பணி, அருட்பணி எல்லாமே ஒரு போராட்டமான யுத்தகளம். யுத்தத்திலே நாம் இரண்டு காரியங்களைச் செய்யவேண்டும். ஒன்று நம்மை நாம் சுய மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். இரண்டாவது எதிராளியைக் குறித்து சரியான மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

“சாத்தானுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” (2கொரி.2:11).

சத்தியவசனம்