தேவனுடன் நல்லுறவு கொள்ளுதல்!

Dr.உட்ரோ குரோல்
(மே-ஜுன் 2015)

தேவன் அன்புள்ளவர்; மன்னிக்கிறவர்; ஆனாலும் அவர் சர்வ வல்லவர், சர்வ மகிமையுள்ளவர். ஒரு புழுவைப் போன்ற மானிடராகிய நாம் அவருடன் நல்லுறவு கொள்வது சாத்தியமாகுமா? ஆம். ஆனால், இது உண்மை. மற்ற மனிதர்களுடன் நாம் நல்லுறவு கொள்வது போலவே தேவனுடனும் நாம் நல்லுறவு கொள்ளலாம் என்பது மிக மிக ஆச்சரியத்தைத் தருகிறதல்லவா! ஒரு மனிதருடன் நல்லுறவு கொள்ள முதலாவது அந்த மனிதரைப் பற்றிய அறிவு நமக்கு வேண்டும். அவரை நாம் நம்பலாமா என்ற எண்ணமே நமக்கு ஓங்கி நிற்கும். தேவனை நாம் நம்புவதற்கு நான்கு வழிகள் உள்ளன. அவற்றை அறிந்துகொள்ள வேதாகமத்தில் அவர் தம்மைப் பற்றி விளம்பியுள்ளதை நாம் ஆராய்வோம்.

முதலாவது நாம் தேவனைப் பற்றி அவருடைய வார்த்தையின் மூலமாகவே அறிந்து கொள்கிறோம். அவருடன் நெருங்கிய தனிப்பட்ட நல்லுறவு கொள்ள நாம் அவருடைய வார்த்தையை வாசிப்பதற்கு நேரம் செலவழிக்க வேண்டும். அவைகளில்தான் அவர் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விண்கலத்தில் தளபதியாக ரிக் என்பவர் பணியாற்றினார். அவர் பூமிக்கு இறங்கும் நாளில் அனைத்து நாட்டு மக்களும் அவரது மனைவி ஈவ்லின், ஏழு வயதுடைய மகன் மாத்யூ மற்றும் 12 வயதுடைய மகள் லாரா ஆகியோரும் அவரது வருகைக்காக ஆவலுடன் தொலைக்காட்சிப்பெட்டி முன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் பூமியில் இறங்கவேண்டிய சில வினாடிகளுக்கு முன்னர் துரதிர்ஷ்ட வசமாக அவரது விண்கலம் வெடித்தது. பூமியின் ஈர்ப்பு சக்தி எல்லைக்குள் வரும் வரைக்கும் அனைத்தும் நன்றாகவே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று அவ் விண்கலம் வெடித்து சிதற ஆரம்பித்தது. நாசா கட்டுப்பாட்டு அதிகாரிகள் அவ்விண்கலத்தின் பயணிகளின் குடும்ப உறுப்பினர்களை ஒளி பரப்பில் காட்டாமல் மறைத்துவிட்டார்கள். ஏனெனில் அவ்வதிகாரிகள் அவ்வன்புமக்கள் அடைந்த தாங்கொண்ணா துயரத்தை உலக மக்களுக்குக் காட்ட விரும்பவில்லை.

ரிக்கும் அவருடைய மனைவி ஈவ்லினும் ஆண்டவரை அதிகமாக நேசித்த மக்கள். இந் நிகழ்ச்சியைப் பற்றி ஈவ்லின் கூறும்பொழுது, “கடந்த காலங்களில் என்னுடைய இக்கட்டான பல சூழ்நிலைகளில் தேவன் என்னோடு இருந்தார். எனவே இச்சூழலிலும் அவர் என்னோடு இருந்து என்னை நடத்துவார் என்று நான் நிச்சயமாகவே நம்புகிறேன்” என்று சாட்சியளித்தார். ஈவ்லின் தேவனுடன் நல்லுறவு வைத்திருந்ததால் அவருடைய இருள் சூழ்ந்த நாட்களிலும் மிகக் கடினமான காலங்களிலும் தேவன் அவரை நடத்தினார். இவ்வித நல்லுறவினையே நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும். நமது வாழ்வின் அஸ்திபாரங்கள் ஆட்டம் கண்டாலும், வரும் துன்பங்களை நாம் விவரிக்க முடியாவிட்டாலும், அவற்றை நாம் அறிய இயலாவிட்டாலும், எதிர்பாராத சம்பவங்கள் நேரிட்டாலும் மோசமான காரியங்கள் நடந்தாலும் நாம் தேவனுடன் வலிமையான நல்லுறவு வைத்திருத்தல் வேண்டும்.

சர்வவல்லவரும் ஒருவரும் சேரக்கூடாதவருமான தேவனுடன் நாம் எவ்வாறு நல்லுறவு கொள்ள முடியும்? இந்த கேள்விக்கு பதில் எளிமையானதே. தேவன் ஒரு புத்தகத்தில் தம்மைப்பற்றி அனைத்தையும் அதில் எழுதியுள்ளார். அவருடைய அப்புத்தகமான சத்திய வேதத்தை நாம் வாசிக்கும்பொழுது அவரைப் பற்றிய பல காரியங்களை நாம் அறிந்து கொள்ளுகிறோம். அந்த அறிவின் மூலமாக தேவனுடைய உண்மைத்துவத்துடன் நாம் நல்லுறவு கொள்ளுவதை அறிந்துகொள்ள நான்கு கேள்விகளுக்கு பதில் காண்போம்.

கேள்வி 1: நமக்கு முன் வாழ்ந்த பக்தர்களுக்கு மட்டுமே அவர் உண்மையாக இருந்தாரா அல்லது இக்காலத்திலுள்ள நமக்கும் அவர் உண்மையாக இருக்கிறாரா?

உங்களில் சிலர் கிறிஸ்தவப் பெற்றோரை உடையவர்களாய் இருக்கலாம். என்னுடைய தாத்தா, பாட்டியும் ஆழ்ந்த கிறிஸ்தவ விசுவாசத்தில் ஊன்றியவர்கள். நான் அவர்களை மிகவும் நேசித்தேன். அவர்களுக்கு தேவன் உண்மையாக இருந்ததை நான் கவனித்திருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு உண்மையாயிருந்தவர் எனக்கும் உண்மையாய் இருப்பாரா? அவர் என்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு உண்மையாயிருப்பாரா? முதலாம் நூற்றாண்டு மக்களுக்கு உண்மையாயிருந்த தேவன் 21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நமக்கும் உண்மையாயிருக்கிறாரா? இக்கேள்விகளுக்கு வேதாகமம் தரும் பதில் என்ன? “ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்..” என்று கூறுகிறது (உபா.7:9). அவர் என்றைக்கும் நமக்கு உண்மையுள்ளவர் என்பதையே “ஆயிரம் தலைமுறைகள்” என்று வேதாகமம் குறிப்பிடுகிறது. “உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்;”(சங்.119:90) என்ற வசனமும் இதனையே வெளிப்படுத்துகிறது.

வேதாகமத்தின் 150 சங்கீதங்களும் எனக்கு பிடித்தமானவை. அதிலும் எஸ்ராகியனாகிய ஏத்தானின் சங்கீதமாகிய 89 என்னைக் கவர்ந்த சங்கீதங்களில் ஒன்று. அதன் ஆரம்ப வசனம் “கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்” என்றுள்ளது. “எனக்கு முன்னிருந்த மக்களுக்கு நீர் உண்மையாக இருந்ததுபோல எனக்கும் உண்மையாக இருப்பீரா? என்ற வினாவுக்கு, “ஆம், நான் தலைமுறை தலைமுறையாக உண்மையுள்ளவராகவே இருப்பேன்” என்ற பதிலை அவர் அளிப்பார் என்று சத்திய வசனம் உறுதிப்படுத்துகிறது.

என்னுடைய தாத்தா ஒரு மின்சார பணியாளர். மின்சார சாதனங்கள் அனைத்திலும் அவர் திறமை பெற்றவர். விளக்குகளுக்கு மின் இணைப்புக் கொடுப்பதிலும், வீட்டில் மின் இணைப்புகளை அளிப்பதிலும் எனக்கும் அவர் பயிற்சி அளித்தார். ஆனால் அவரிடத்தில் நான் கண்ட ஓர் ஆச்சரியமான காரியம், அவர் பிரதான மின்தொடர்பை துண்டிக்காமலேயே அவ் வேலைகளைச் செய்வார். ஆனால் எனக்கு மின்சாரம் என்றாலே பயம். எனவே எந்தவொரு மின்சார தொடர்பான வேலைகளை நான் செய்ய வேண்டியிருந்தாலும் பிரதான மின் இணைப்பை துண்டித்து விட்டுதான் செய்வேன். என்னுடைய தாத்தா அவ்வப்பொழுது தவறாக மின் கம்பியைத் தொட்டதால் மின்சார அதிர்ச்சிகளைப் பெற்றதும் உண்டு. ஆனாலும் என்னுடைய தாத்தா மிகவும் எளிமையானவர். ஒரு சிறிய சபையில் உதவி குருவானவராக பணிபுரிந்தவர். அவருடைய வாழ்வின் இறுதி கட்டத்தில் புற்று நோயால் மரித்தார். அவருடைய இறுதி வாரங்களில் அவர் படும் வேதனைகளை ஒரு சிறு பையனாக அவரருகே இருந்து நான் கவனித்து வந்தேன். அவருக்கு வலிநிவாரணி மருந்துகள் தரப்பட்டாலும் அதிக வேதனையில் துன்பப்பட்டார். ஆனாலும் அவர் எந்தவொரு முறையிடுதலும் இன்றி தேவன் தன்னுடைய வாழ்வில் செய்த நன்மைகளையும் அவருடைய உண்மையையுமே பேசி வந்தார். என் தாத்தாவுக்கு நீர் உண்மையாய் இருந்தது போலவே எனக்கும் நீர் உண்மையாய் இருப்பீரா என்ற என் கேள்விக்கு “நான் கர்த்தர்; நான் மாறாதவர்” என்று கர்த்தருடைய வார்த்தை எனக்குக் கூறிற்று. தேவன் தமது உண்மையிலிருந்து மாறாதவர். தேவன் தமது பரிபூரணத்தினாலும் உண்மையினாலும் ஒவ்வொரு தலைமுறைக்கும் அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டு பக்தர்களிடம் அவர் காட்டிய உண்மையை வாசித்திருக்கிறேன். “ஆதாமுக்காக, மோசேக்காக, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இம்மக்களிடம் அவர் காட்டிய உண்மைக்காக நன்றி சொல்லுகிறேன்”. ஆனால் அது அநேகமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாயிற்றே என்று நீங்கள் நினைக்கலாம். அவர் காலங்களைக் கடந்து நிற்பவர். எனவே தேவனுக்கு கடந்தகாலம் என்பது கிடையாது. அவர் அன்று காட்டிய உண்மையை இன்றும் கடைபிடித்து வருகிறார்.

நான் பிறந்தபொழுது இருந்த உலகம் இப் பொழுது மாறிவிட்டது. நம்முடைய உலகில் முன்னர் மதிக்கப்பட்ட அநேக காரியங்கள் இப்பொழுது மதிப்பிழந்துவிட்டன. எனது பேரக் குழந்தைகளின் காலத்தை நினைக்கிறேன். தேவன் அவர்களுடைய உலகத்திலும் உண்மையாக இருப்பாரா? ஆம், நீங்கள் தேவனுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்களானால் அவர் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் உண்மையுள்ளவராய் இருப்பார். முதலாம் நூற்றாண்டில் தமது உண்மையைக் காண்பித்தவர் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் உண்மையுள்ளவராய் இருப்பார். ஏனெனில் அது அவரது தன்மை.

ஒவ்வொரு தலைமுறையினரும் தமது சந்ததியினரிடம் தமது தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பர். எனது பெற்றோரின் உண்மை என்னை பாதித்தது. நானும் தேவனுடனான வாழ்விலே உண்மையாய் நடக்க அது தூண்டுதலாய் இருந்தது. காலங்கள் மாறினாலும் சந்ததிகள் கடந்தாலும் தேவன் தமது உண்மையில் மாறமாட்டார். தேவனுடைய காரியங்களை நாம் வேதாகமத்துக்கு திரும்பி அறிந்துகொள்ளலாம்.

கேள்வி 2: என்னுடைய உபத்திரவங்களில் தேவன் உண்மையுள்ளவரா?

நமது தவறுகளை தேவன் பொறுத்துக் கொள்வாரா? ஆம், அவர் உண்மையுள்ளவர். என் சோதனைகளில் நான் தோல்வியடையும் பொழுதும் அவர் என்னைக் கைவிட மாட்டார்.

“ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக் கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப் படுகிறது நன்மையென்று நினைத்து, இந்த உபத்தி ரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாத படிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்தி சொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன் வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே” (1 தெசலோனி. 3 : 1-3).

தீமைகள் நம்மை எதிர்க்கும்பொழுதும் தேவன் நம்மைக் காத்துக்கொள்ளுவார். இதுவே கல்வாரியில் தமது சீடர்களுக்காக ஏறெடுத்த கிறிஸ்துவின் ஜெபம். “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவான் 17:15). அதாவது சோதனைகளின் மத்தியிலும் அவர் நம்மைக் காப்பதற்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார். இது அவரது பண்பு நலன்களில் ஒன்றாகும். ஆனால் நீங்கள் பாவம் செய்யும் பொழுது அவரது உண்மையை நீங்கள் சோதிக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா?

அப். பவுல், “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவரா யிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனை யோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1கொரி.10:13) என்று எழுதியுள்ளார். நமது சோதனைகளிலும் தேவன் தமது உண்மையில் மாறாதவராய் இருக்கிறார். அவர் முந்தின தலைமுறைகளில் உண்மையாய் இருந்ததுபோலவே இன்றும் எனக்கு உண்மையாய் இருக்கிறார். இது எவ்வளவு ஆச்சரியமான காரியம்!

கேள்வி 3: நான் சோதனையில் தவறிவிட்டேன் என்றால் என்ன நிகழும்?

தேவன் அப்பொழுதும் என்னை மன்னிப்பதற்கு உண்மையுள்ளவராய் இருக்கிறாரா? சோதனைக்கு நீங்கலாகியிருப்பது ஒரு காரியம். அதில் விழுந்துவிடுவது மற்றொரு காரியம். ஆனால் தேவனுடைய வாக்குறுதியானது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9) என்று அறிவிக்கிறது.

சில நேரங்களில் தேவன் நம்மை தண்டிப்பதைவிட நாம் நம்மையே தண்டித்துக் கொள்ளுகிறோம் என்பது ஆச்சரியமான விஷயம்! தேவன் நம்மை தண்டிப்பவரல்லர். ஏனெனில் சில காரியங்களை நமக்கென்று வைத்துக்கொள்ளுகிறோம். தேவன் என்னை மன்னிக்கிறவர் என்றால் நான் எனது கிரியைகளில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தேவன் நமக்கு நித்திய இரட்சிப்பைத் தர வல்லவராய் இருக்கிறார்.

“அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோ.1:12).

“வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ள வருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.” (யூதா 24,25) என்ற புகழுரையில் “வல்லமையுள்ளவர்” என்ற சொல்லை கவனித்தீர்களா? மேலும், “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவான் 10:27-29) என்று பிதா தரும் நித்திய இரட்சிப்பைப் பற்றி இயேசு அறிவிக்கிறார்.

தேவன் நமக்கு நித்திய இரட்சிப்பைத் தருகிறார் எனில் அவருடைய நோக்கம் என்ன? தேவன் நம்முடைய நித்திய இரட்சிப்புக்கு ஒரு பாதுகாப்பான வழியையும் வைத்திருக்கிறார். அது நிலையானது. ஏனெனில் நமக்காக இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராய் இருக்கிறார் (1யோவான் 2:1). அவர் நமக்காக விண்ணப்பம் செய்கிறார் (எபி.7:25). நமக்குள்ளேயே பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிறார் (எபே.4:30).

நமது இரட்சிப்புக்குப் பின்னர் நமது கிரியைகளால் வரும் பாவத்தை தேவன் நீக்கிப் போடவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நமது இரட்சிப்பும் கிரியைகளினால் உண்டாயிருக்கும். கிருபையினால் இரட்சிக்கப்பட்டோம், அவரது இரக்கத்தின் வல்லமையினால் நிலைநிற்கிறோம்.

என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். தேவன் என்னை மன்னிக்க விருப்பமாயிருக்கும்பொழுது நான் எனது நடக்கையை ஒழுக்கமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் உண்மையுள்ள தேவனுடன் நல்லுறவு கொள்ள வேண்டும். தேவன் ஒவ்வொரு தலைமுறைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. உங்கள் வாழ்வின் மிகக்கடினமான சோதனைகளின் மத்தியிலும் அவர் உங்களுக்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார். அச்சோதனைகளில் நீங்கள் இடறி விழுந்துவிட்டாலும் அவர் உங்களை மன்னித்து சுத்திகரிக்க உண்மையுள்ளவராய் இருக்கிறார்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்