துதி ஆராதனை!

சகோதரி.வ.ராஜ்குமார், இலங்கை
(மே-ஜுன் 2015)

“அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள். அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா” (சங்கீதம் 150:1-6).

“துதி” என்னும் சொல்லின் எபிரெய பதம், “எக்சிகிட்டா” (Excikitta) எனப்படும். இதன் பொருள், “அக உணர்வுகளின் வெளிப்பாடு” என்பதாகும். அதாவது, ஆண்டவரைக் குறித்து நம் உள்ளத்தில் ஏற்படும் இன்ப உணர்வுகளை வாயின் வார்த்தையினால் வெளிப்படுத்துவதே துதியாகும்! சகல சபை மக்களும் ஆராதனைகளில் ஜெபக் கூட்டங்களில் கரங்களைத் தட்டி, “அல்லேலூயா” என்று பாடி தேவனை மகிமைப்படுத்துகின்றனர். இவ்வாறான துதி பலிகள் எங்கும் தொனிக்கின்றன. அது நல்லது! தேவனைக் கருத்துடன் பாடிப்போற்ற வேண்டியது அவசியம்! கர்த்தருக்குப் பிரியமானதும் அதுவே!

நாம் வாழுகின்ற சமுதாயத்தில் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலமானவர்களை, “வாழ்க! வாழ்க!” என்று கோஷம் போட்டு உயர்த்துவதைக் கண்டிருப்பீர்கள். அப்படியானால் சர்வ உலகத்தையும் தமது வார்த்தையினால் படைத்தவரும், ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், சர்வ அதிகாரங்களையும் வல்லமைகளையும் உடையவரும், நம்மை நியாயந்தீர்க்க வருகிறவரும், நித்திய ஜீவனை நமக்கு அளிப்பவருமாகிய நம் ஆண்டவரை நாம் எவ்வளவாய் துதி பாடி, அவர் நாமத்தை உயர்த்த வேண்டும்! மாசற்றவராக, சகல துதிக்கும், வல்லமைக்கும், மாட்சிமைக்கும் பாத்திரரான நமது தேவனுடைய கிரியைகளை எண்ணி, அவரை உயர்த்துவது எத்தனை அவசியமானது!

ஏன் கர்த்தரைத் துதிக்க வேண்டும்?

கர்த்தர் ஒரு நோக்கத்தோடு நம்மை உருவாக்கியுள்ளார். “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்” (ஏசா.43:21). எனவே, கர்த்தருக்கு துதி செலுத்துவதைக் குறித்த நோக்கத்தை வேதாகமத்திலிருந்து நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

அவரைத் துதிப்பதினால் அவரது மகிமை அதிகரிப்பதுமில்லை! துதிக்காமலிருப்பதினால் குறைபடுவதுமில்லை! ஏனெனில், “அவர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்!” ஆகையால், நாம் அவரைத் துதிக்கும்போது, அவரது பிரசன்னம் நம்முடனே கூடவே இருக்கிறது. எந்தப் பொல்லாங்கும் சாத்தானின் சூழ்ச்சிகளும் நம்மை அணுக முடியாது. அது மட்டுமல்ல, கர்த்தர் மீது நாம் கொண்டிருக்கும் நமது விசுவாசமும் பெருகுகிறது! ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அது பெலனையும், ஜீவனையும் தருகிறது!

ஆகவே, ஆராதனையில் துதி வேளை மிக முக்கியம். ஆனால், தேவனை ஆராதித்தால், சுய விருப்பங்கள் நிறைவேற்றப்படும் என்னும் சுய நலத்துடன் செயற்படுகிறவர்களாக நாம் இருக்கக்கூடாது. சிந்தியுங்கள்!

ஆராதனையின் நோக்கம்

தேவன் நமது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வாஞ்சை நமது ஜெபங்களின் உள்நோக்காக இருக்கலாம். ஆனால், நமது ஆராதனையின் உள்நோக்கம் என்ன?

நமது நோக்கமெல்லாம் தேவனையும், அவருடைய நாமத்தையும் மாத்திரம் உயர்த்தும் துதி பலியாக ஏறெடுக்கப்பட வேண்டும் என்பதாகவே இருத்தல் வேண்டும். நன்மைகளைத் தரும் நமது அப்பாவிடமிருந்து நமக்குத் தேவையானதை, ஜெபத்தினால் தெரியப்படுத்திப் பெற்றுக்கொள்ள நினைப்பது தவறில்லை. ஆனால், துதிபலிகள் என்பது வேறுபட்டது. அது தேவனை மாத்திரமே உயர்த்துவது ஆகும்.

துதி ஆராதனைகள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று, விதிமுறைகள் கூறி அதற்கு நாம் வரையறை கணிக்க முடியாது. வேதத்தில் உள்ள பாத்திரங்கள், கர்த்தர் தங்கள் வாழ்க்கையில் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும், எதிரிகளை வெல்லச் செய்ததையும் நினைத்து, நன்றியால் உள்ளம் நிறைந்து பூரிப்படைந்து துதித்தார்கள்! அவைகளின் நிமித்தமாய் வந்த வார்த்தைகளே துதிபலிகள்!

இவ்வண்ணமாகத் துதித்து, தேவனை மகிமைப்படுத்தி, தேவனோடுள்ள ஐக்கியத்தை அவர்கள் மேலும் வலுப்படுத்தினர். இவ்வாறாக அவர்கள் தேவன்பால் கொண்டிருந்த அன்பு பெருகியது. அருமையானவர்களே, சுயநலமான எண்ணங்களுக்கும், நோக்கங்களுக்கும் துதி ஆராதனையில் இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்! நாம் ஆண்டவருடன் கொண்டிருக்கும் உறவின் வெளிப்பாடு ஜெபம்! அந்த உறவினிமித்தம் நாம் அவருக்கு உள்ளார்ந்த மனதுடன் ஏறெடுப்பது ஆராதனை!

இன்றைய கிறிஸ்தவர்களின் துதிகள்…

துதி, ஸ்தோத்திர பலிகள் செலுத்துவது குறித்து புத்தகங்களாக வெவ்வேறு வகையில் இன்று வெளிவந்து கொண்டிருக்கிறது. அது நல்லதுதான்! அதனை வாங்கி வாசிப்பதில் தவறில்லை. இதன் மூலம் தேவனைத் துதிக்கும் விதங்களை அறிந்துகொள்ளலாமே தவிர, அதுவே துதியாக மாறிவிடாது. ஆனால், நம்மில் அநேகர், ‘வேதாகமம் தேவையில்லை! ஸ்தோத்திரபலி புத்தகம் மாத்திரம் போதும்!’ என்ற அபிப்பிராயத்தில், ஸ்தோத்திர பலிகளை மடமடவென்று வாசித்துவிட்டு, கர்த்தரைத் துதித்துவிட்டதாக எண்ணுகின்றோம்.

பிரியமானவர்களே! அவர் நமது உள்ளத்தைக் காண்கின்ற தேவன், “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;” என்கிறார் கர்த்தர் (ஏசா.29:13).

துதி நாம் நினைத்த காரியத்தை நடப்பிக்குமா….

சிலர் ஏழு நாட்கள் தொடர்ந்து ஆண்டவரைத் துதித்தால், ‘நாம் நினைத்த காரியம் நடக்கும்’ என்று வேதாகமத்தின் அர்த்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நம் இருதயத்தின் கிரியைகளினால் தேவனைப் பிரியப்படுத்தாதபடி, புத்தக வழிபாடுபோல வாயினாலே மாத்திரம் செய்யப்படுகின்ற சுயநலமுள்ள துதியினால் ஏழு நாட்கள் அல்ல, எழுபது நாட்கள் துதித்தாலும் நமது பிரச்சனைகள் மாறப்போவதில்லை.

எந்தவொரு பிரச்சனையும் தேவனுடைய பிள்ளைகளுக்கு வீணுக்கு வருவதில்லை. ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு நோக்கம் இருக்கும். அவற்றை நமக்கு ஆசீர்வாதமாக மாற்ற நமது தேவனால் முடியும். சந்தோஷங்களைப் பார்க்கிலும், கஷ்ட துன்பங்கள்தான் நமக்கும், தேவனுக்கும் இடையேயுள்ள உறவை மேலும் உறுதிப்படுத்த ஏதுவாகிறது. அப்போது, எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழு இருதயத்தோடு தேவனை துதிக்கும் துதி நமக்குள்ளிருந்து தானாகவே எழும் என்பதில் சந்தேகமில்லை!

அப்படியானால், எரிகோ மதிற்சுவர் துதி சத்தத்தினால் இடிந்துவிழுந்தது எப்படி? பவுலும், சீலாவும் பாடித் துதித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது சிறையிருப்பு தகர்க்கப்பட்டது எப்படி? இந்த இரண்டு சம்பவங்களையும் சற்று ஆழமாக சிந்திப்போமானால், நம்முடைய துதிக்கும், அவர்களுடைய துதிக்கும் உள்ள வித்தியாசத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

மதிற்சுவரைத் தகர்த்திய துதி

யோசுவா 6ஆம் அதி. இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவா பணித்தபடியே, “…ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்துவிழுந்தது” (யோசு.6:20). யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கானான் நாட்டிற்கு வழிநடத்திச் செல்லுவதற்கு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு தலைவன். கானான் தேசத்தை அடைவதற்கு முன்னர் யோர்தானையும், அநேக நாடுகளையும் கடக்கவேண்டியதிருந்தது. ஒவ்வொரு காரியங்களையும் தேவ சமுகத்தில் நின்று, தேவ சத்தத்திற்கும், தேவ ஆலோசனைக்கும் செவிகொடுத்து ஒவ்வொரு தடைகளையும் தாண்டி யோசுவா ஜனங்களை வழிநடத்திச் சென்றார்.

இப்படியாகவே தேவ திட்டப்படி இஸ்ரவேல் கானான் தேசத்தைச் சுதந்தரித்தனர். யோசுவா சுய பலத்தையோ, மக்கள் பலத்தையோ நம்பாது, தேவனுடைய சத்தத்திற்கு மாத்திரம் செவிகொடுத்த சிறந்த தலைவனாகவும், தேவ பலத்தையே சார்ந்திருந்து தேவனோடு சஞ்சரித்த தேவனுடைய ஊழியக்காரனாகவும் இருந்தான். இப்படிப்பட்ட யோசுவா, எரிகோ அலங்கம் இடிந்து விழுவதற்கு, ஆண்டவர் கூறிய ஆலோசனையின்படி, எக்காளம் ஊதி ஆர்ப்பரித்தபோது அலங்கம் இடிந்து விழுந்தது. இங்கு தேவனைத் துதித்து ஆர்ப்பரித்த காரியத்தை மாத்திரம் பார்க்கின்றோம். ஆனால் வெற்றிக்குள் மறைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான காரணம் ‘விசுவாசத்துடன் கூடிய கீழ்ப்படிதலே’ ஆகும்.

இதே இஸ்ரவேல், யோர்தானைக் கடப்பதற்கும், ஆயி பட்டணத்தைப் பிடிப்பதற்கும், தேவனால் யோசுவாவுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை வேறு. இங்கு அவர்கள் எக்காளத்தை ஊதி ஆர்ப்பரிக்கவில்லை. எனவே, ஒவ்வொரு பிரச்சனைகளையும் மேற்கொள்வதற்கு தேவனைத் துதிப்பது மாத்திரம் வழி அல்ல. தேவபிள்ளைகளாக அவருடைய வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு விசுவாசித்து, கீழ்ப்படிவதே முக்கியம் ஆகும்.

இன்று கர்த்தர் நம்மோடு கூடவே இருப்பதை நம்மால் உணர முடிகிறதா? தேவ ஆலோசனையை நாம் நாடுகிறோமா? தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிகிறோமா? நமது எண்ணங்களும், செயல்களும் எப்போதும் தேவனோடு இசைந்து, தேவனுக்காக செயல்படுகின்றதா? அப்போதுதான் ஒவ்வொரு பிரச்சனைகளையும் கடப்பதற்கு சரியானபடி தேவனிடமிருந்து ஆலோசனையை நாம் பெறமுடியும்.

சிறைச்சாலையைத் தகர்த்திய துதி

அப்.16:20இல் பவுலும், சீலாவும் கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டவர்களாக சிறை வைக்கப்பட்டிருப்பதை வாசிக்கின்றோம். அந்த நிலையிலும், நடு ராத்திரியிலே ஜெபம் பண்ணி தேவனை துதித்துப் பாடினார்கள்.

என்ன நடந்தது? பூமி அதிர்ந்தது! எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று! நன்றாகக் கவனியுங்கள். இங்கு அவர்களது நோக்கம் சிறையிருப்பை துதி பலிகளினால் தகர்க்க வேண்டும் என்பதல்ல. மாறாக, கால்கள் தொழு மரத்தில் மாட்டி வைக்கப்பட்ட நிலையிலும், வலி வேதனையிலும் கர்த்தரை உயர்த்தும் துதி பலிகளால் நிரம்பியவர்களாக, அவர்களின் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் தேவனோடு உறவாட வேண்டும் என்பதாகவே இருந்தது.

ஒருவேளை கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, விடுதலை பெற வேண்டும் என்னும் எண்ணத்துடன் துதித்திருப்பார்களானால், கட்டுகள் கழன்றதும் தப்பி ஓடியிருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மாறாக, சுவிசேஷ பாரத்தோடு அவர்கள் இருந்தபடியினால், சிறைச்சாலைக்காரனும் அவன் வீட்டாரும் இரட்சிக்கப்பட்டனர்!

ஒருவேளை அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால், ‘நான் துதித்தேன், தேவன் என்னை விடுதலையாக்கினார்’ என்று கூறி, தப்பித்து ஓடியிருப்போம். ஆனால், அந்த இடத்தில் தேவன் கட்டுகளை உடைத்ததின் நோக்கம் ஒரு வீட்டாரின் இரட்சிப்புக்காகவே! எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழு இருதயத்தோடு பவுலும் சீலாவும் தேவனைத் துதித்தார்கள். இதுவே உண்மையான துதி!

பிரியமானவர்களே! வேதாகமத்தில் மோசே, மிரியாம், தெபோராள், அன்னாள் போன்ற இவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தரிடத்திலிருந்து வெற்றியைப் பெற்றவுடன் கர்த்தரைப் புகழ்ந்து பாடினார்கள். சங்கீதக்காரனைப் போல, கர்த்தரைத் துதிக்கும் துதி நம் வாயிலிருக்குமானால், கர்த்தருக்குள் நம்மைத் திடப்படுத்தி, தோல்வியிலும்கூட கிறிஸ்துவுக்குள் ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ளலாம். தோல்வியிலும் விசுவாசம் வளரும்! தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறிவிடும்!

ஆகவே, கர்த்தரைத் துதிக்கும் துதி அவசியம். ஏனெனில், துதிகளின் மத்தியில் அவர் வாசம் பண்ணுகிறார்! துதிகளில் பிரியப்படுகிறார்! கர்த்தரைத் துதிக்கும்போது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலமின்றி, வெறும் உதடுகளிலிருந்து துதி வராதபடி, நம் உள்ளத்திலிருந்து, நன்றி உணர்வோடு, தேவன் நமக்கு பாராட்டிய அவருடைய பெரிதான கிருபைகளையும், கிரியைகளையும் நினைவுகூர்ந்து தேவனை மனதார துதிப்போமாக!

பிரியமானவர்களே! தேவன் நம்மை ஏற்படுத்தின நோக்கத்தை நிறைவேற்றுவோம். அவரது படைப்புகளை எண்ணித் துதிப்போம். மகத்துவம், மாட்சிமை, மகிமை அவருக்கே உரியது. தேவ ஆலோசனையைப் பெற்றவர்களாக, தேவ சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாக, பிரச்சனைகளைக் கடந்துசென்று, தேவ சித்தத்தை நிறைவேற்றுவோமாக. ஆமென்.

சத்தியவசனம்