குற்றவாளி!

சிறுவர் சோலை
(மே-ஜுன் 2015)

மாலாவும் ரோஸியும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் மாலா ரோஸியின் வீட்டிற்கு வந்தாள். இருவரும் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். மாலாவும் கொஞ்ச நேரத்தில் தன் வீட்டுக்கு சென்றுவிட்டாள். “அம்மா, மாலா என்னுடைய பொம்மையை திருடிக்கொண்டு போய்விட்டாள்” என அழுதபடியே ரோஸி அம்மாவிடம் வந்தாள். “ரோஸி, நீ நிச்சயமாகதான் சொல்கிறாயா?” என அம்மாக் கேட்டார்கள்.

“ஆமாம் அம்மா, நாங்கள் இருவரும் அந்த மரத்துக்கடியில் உட்கார்ந்திருந்தோம். இப்போது மாலா வீட்டுக்குப் போய்விட்டாள். எனது பொம்மையைக் காணவில்லை” என்றாள் ரோஸி. “சரி, வா, போய் பார்க்கலாம்” என்றார்கள் அம்மா. இருவரும் அந்த மரத்துக்கடியில் சென்று பார்த்தனர். “இதோ, இங்கே இருக்கிறது எனது பொம்மை” என மரத்திற்கு மறைவாக இருந்து பொம்மையை சிரித்துக்கொண்டே ஓடிப்போய் தூக்கினாள் ரோஸி.

ரோஸி, நீ “மாலாவைப் பற்றி நீ ஒரு பொய் சொன்னாய். இப்போது ஒரு கெட்ட பிள்ளையாக நடந்துகொண்டாய் அல்லவா?” என்று கேட்ட அம்மாவிடம், ரோஸி “இல்லையே, மாலாதான் பொம்மையை எடுத்திருக்கக்கூடும் என நினைத்தேன்” என்றாள் ரோஸி.

“ஆம், நாம் வந்து பார்த்திராவிட்டால், இன்னும் நீ மாலாவைப்பற்றி அப்படித்தான் எண்ணிக்கொண்டிருப்பாய். அது மாத்திரமல்ல, மற்றவர்களிடமும் கூட நீ போய், மாலா உன் பொம்மையை எடுத்துக்கொண்டு போய்விட்டதாக கூறியிருப்பாய். அவர்களும் மாலாவை ஒரு திருடி என எண்ணியிருப்பார்கள்” என்றார்கள் அம்மா. “அது பெரிய தவறா அம்மா” எனக் கேட்டாள் ரோஸி.

“ஆம், மகளே இதைத்தான் இயேசுசுவாமி கூறினார். மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். அப்பொழுது, நீங்களும் குற்றவாளிகளாக தீர்க்கப்படாதிருப்பீர்கள் என்று. அதாவது, மற்றவர்களைப்பற்றி, வீணான காரியத்தை நினைத்து, பொய் பேசக்கூடாது. அப்படிச் செய்யும்போது இயேசுசுவாமி மாத்திரமல்ல, மற்றவர்களும் நம்மை கெட்டவர்களாக எண்ணுவார்கள்” என்றார்கள் அம்மா. “நான் செய்தது பிழைதான் அம்மா” என தன் தவறை உணர்ந்தாள் ரோஸி.

“உன் பிழையை உணர்ந்ததற்காக சந்தோஷப்படுகிறேன். மகளே, இயேசு சுவாமியும் உன்னை மன்னிக்கக் காத்திருக்கிறார். இனி மேல் அவ்விதம் செய்யாமலிருக்க உதவி கேட்டு அவரிடம் ஜெபிப்போமா?” என்றார்கள் அம்மா. “சரி” என ரோஸியும் கூற இருவரும் ஜெபித்தார்கள்.

ஆம், அருமை தம்பி, தங்கையரே உண்மையை அறிந்தோ, அறியாமலோ நாம் மற்றவர்களை குற்றப்படுத்தலாகாது. அதை இயேசு சுவாமி வெறுக்கிறார். நீங்கள் அவ்விதம் நடந்துகொண்டது உண்டா? அது பிழை என்பதை உணர்ந்து ஆண்டவரிடம் மன்னிப்பு கேளுங்கள். இனி அப்படி மற்றவர்களை குற்றப்படுத்தாதீர்கள்!

“மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்கா திருங்கள். அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்” (லூக்.6:27).

சத்தியவசனம்