நேச வைராக்கியம்!

சகோதரி.சாந்தி பொன்னு
(ஜூலை-ஆகஸ்டு 2015)

‘நீங்கள் மிக அன்பானவர்தான். ஆனால், எதற்கும் தேவ வார்த்தையை ஆதாரம் காட்டி கண்டித்துப் பேசுவதால், உங்களை நெருங்கப் பயமாயிருக்கிறது’ என்று தன்னைப் பார்த்து ஒரு வாலிபன் வெளிப்படையாகக் கூறியதாக ஒருவர் பகிர்ந்துகொண்டார். அதற்கு அவர், ‘நான் வேதத்தைவிட்டு விலகி நடந்தபோது எனக்கு ஏற்பட்ட துன்ப துயரம் உங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே நான் அப்படிப் பேசுவதுண்டு. இனி உங்கள் இஷ்டம்’ என்றாராம். அதற்கு அந்த வாலிபன், ‘நீங்கள் நீங்களாகவே இருங்கள். அதுதான் நமக்கு இன்று தேவை’ என்றானாம்.

ஆம், தேவனுக்காக, வேத வாக்கியங்களுக்காக யார் வைராக்கியம் காட்டுகிறார்களோ அவர்களை இந்த உலகம் வேறு கண்ணோட்டத்தில்தான் பார்க்கும்; மாத்திரமல்ல சில கிறிஸ்தவர்கள்கூட சற்று வித்தியாசமாகவே பார்ப்பார்கள் என்பதையும் மறுக்க முடியாது. அதிலும், உலகத்திற்கு அடுத்த காரியங்களைக் குறித்து ‘இதிலென்ன தவறு’ என்று இலகுவாகக் கருதுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதும், காலத்திற்கேற்றபடி தேவனுடைய வார்த்தைகள் புரட்டப்படுகின்றதும், மனதுக்கு இதமானபடி கிறிஸ்தவ சத்தியங்கள் திருப்பப்படுகின்றதும், நமது காரியங்கள் நிறைவேறுவதற்காக தேவனுடைய வரையறைகளில் நாமே ஓட்டைகளை உண்டாக்குகின்றதுமான இந்த நவீன காலப்போக்கில், எப்படி தேவவாக்கியத்தை தேவனுடைய வார்த்தையாக ஏற்பது? எப்படி தேவனுக்காக நேச வைராக்கியம் காட்டுவது?

எங்கிருந்து வரும் இந்த நேச வைராக்கியம்

‘சிரைச்சேதம்’ என்பது கிறிஸ்தவர்களுக்குப் பழக்கமான சொல். ஆனால் அதன் வலி என்ன என்பதை நாம், அதாவது, இலங்கை நாட்டுக் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அதிகமாக அனுபவித்திருக்க வாய்ப்பில்லை. ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டார், பவுல் சிரைச்சேதம் பண்ணப்பட்டார், பேதுரு சிலுவையில் தலை கீழாக அறையப்பட்டார் – இவை யாவும் நமது அறிவை நிரப்பிய விஷயங்கள்; பிரசங்கிப்பதற்கு வல்லமையான வார்த்தைகளை அள்ளிக் கொட்டும் சம்பவங்கள். ஆனால், இன்று ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு’ என்ற வாசகம் போய், மெல்ல மெல்ல… அரிந்து அரிந்து… என்று சொல்லப்படுமளவுக்கு சமீபத்திய சம்பவங்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன.

கிறிஸ்தவர்கள் கழுத்தில் வாளால் அரியப்பட்டு கொல்லப்படுகின்ற காட்சிகளை இணையத்தளத்தில் பார்க்க நேரிடும்போது நமது இரத்தம் உறைய வேண்டும்; ஆனால், அதுதான் இல்லை. அது நமது கண்களுக்கு ஒரு காட்சி; அல்லது, மூக்கில் விரல் வைத்துப் பேசப்படும் ஒரு செய்தி, அவ்வளவுதான்! ஆண் பெண் என்றும், குழந்தைகள் என்றும் இவ்வண்ணம் தங்கள் தலைகள் அரியப்படுமளவும், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்காமல், தங்கள் உயிரையே துச்சமாக எண்ணுகிறார்களே, அது யாருக்காக? எதற்காக? ஆட்சி அதிகாரத்திற்காகவா? சொத்து சுதந்திரத்திற்காகவா? செய்த குற்றங்களுக்காகவா? ஆம், குற்றம்தான்; அது என்ன குற்றம்? இயேசுகிறிஸ்துவில் அவர்கள் வைத்த விசுவாசம் – கிறிஸ்துவுக்காய் அவர்கள் காட்டிய நேச வைராக்கியம். அந்த அகோர மரண நேரத்திலும், மறுதலித்து ஓடிவிடாமல் ஆண்டவர் பேரில் தங்களுக்குள் இருந்த நேச வைராக்கியத்தைக் காட்ட அவர்களால் எப்படி முடிந்தது?

“பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; …உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய். உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்…” (ஏசா.54:4-5). அன்று இஸ்ரவேலுக்காக உரைக்கப்பட்ட இந்த வார்த்தைகள் இன்று நமது இருதயத்தைத் தேற்றுகின்றன. நமது பாவங்கள் யாவையும் முதுகுக்குப் பின்னால் எறிந்து, சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டு, அவற்றை முற்றிலுமாய் அழித்து மறந்துவிடுமளவுக்கு, அதற்காகத் தமது ஜீவனையே கொடுக்கு மளவுக்கு நம்மில் அன்புகூர தேவனாலே மாத்திரமே முடியும். இந்த தேவனுக்கு நாம் என்ன பதிலுரை செய்வோம்? தேவன் அருளிய மன்னிப்பின் பெறுமதிப்பை யாராலும் அளவிட முடியாது. இப்படியாக தாமே நம்மைத் தேடி வந்த தேவன், தாமே நம்மில் முதலில் முழுமையாய் அன்புகூர்ந்த தேவன், ‘நானே உன் நாயகர்’ என்று வாக்களித்த தேவன், இவருக்காக சற்றேனும் நமது நேச வைராக்கியத்தைக் காட்டாவிட்டால் நாம் மனிதப் பிறவியாக இருக்கமுடியாது.

ஆனால், உலகமோ அதை வெறும் மத வைராக்கியமாக, ஒரு கடினத் தன்மையாகவே பார்க்கிறது; அதற்கு எதுவும் செய்யமுடியாது. மேலே பார்த்த அந்த சகோதரன், ‘ஆண்டவரே, அடியேன் உம்மில் கொண்டுள்ள நேச வைராக்கியம் இன்னும் இன்னும் எனக்குள் ஜுவாலையாய் பற்றி யெரிய உதவி செய்யும்’ என்று ஜெபித்துக் கொண்டாராம் என்றார். நம் நேசருக்காய் நமது இருதயத்திலே எத்தகைய நேசம் நிறைந்திருக்கிறது என்பதைச் சிந்திப்போம். நமக்குள் நேசம் உண்டு; ஆனால், அது தற்காலிகமானதா? சந்தர்ப்பத்திற்கு ஏற்றதா? சுயநலமானதா? அல்லது, மெய்யாகவே உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கின்ற நேசமா?

பரிசேயன் வீட்டிலே பாவியான ஸ்திரீ

பரிசேயன் வீட்டிலே, ஒரு பாவியான ஸ்திரீ; இன்னும் சொல்லப்போனால் அவள் ஒரு விபச்சாரி என்று எல்லோராலும் அறியப்பட்டவள். தாங்களே பரலோகத்திற்கு நெருங்கியவர்கள் என்று எண்ணுகின்ற ஒரு பரிசேயன் வீட்டுக்கு அழைப்பில்லாவிட்டாலும் செல்லுவேன் என்று எண்ணி தைரியமாய் உள்ளே நுழைவதற்கு அவளுக்கு எங்கிருந்து வந்தது அத்தனை வைராக்கியம்? அவளுக்குள் பற்றி எரிந்துகொண்டிருந்தது ஒரேயொரு காரியம்தான். அவள் இயேசுவைப் பார்க்கவேண்டும்; அவ்வளவுதான்.

நடந்த சம்பவம் நமக்குத் தெரியும் (லூக்கா 7:36-50வரை வாசிக்கவும்). அவள் விருந்து சாலைக்குள் போய், இயேசுவின் பாதங்களின் அருகே பின்னாக நின்று, அழுதுகொண்டு, இயேசுவின் பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமள தைலத்தைப் பூசினாள். அவளையும், அவள் செய்கையை ஏற்றுக்கொண்ட இயேசுவையும் பார்த்து எரிச்சலடைந்த பரிசேயனிடம் இயேசு ஒரு கேள்வி கேட்டார். ஒருவன் ஐந்நூறு வெள்ளிக் காசும், இன்னொருவன் ஐம்பது வெள்ளிக் காசும் ஒரு மனுஷனிடத்தில் கடன்பட்டிருக்க, அவன் அவர்கள் இருவருக்குமே கடனை மன்னித்துவிட்டால், யார் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அநேகம் மன்னிக்கப்பட்டவனே அதிகம் அன்புகூருவான் என்று அன்று பரிசேயன் சொன்ன பதிலைத்தான் இன்று நாமும் சொல்லுவோம். அதற்கு இயேசு: “இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே” என்றார். அன்று இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயன் அல்ல; அந்தப் பெண்ணே விடுதலையையும் சமாதானத்தையும் பெற்றாள். பரிசேயனுடைய வீடு என்றும் பாராமல், அவள் அங்கே சென்று இயேசுவின் பாதத்தைத் தொழுதுகொண்டது, அவளுக்குள் பற்றி எரிந்துகொண்டிருந்த நேசத்தீயின் வெப்பம்தான் என்றால் அது மிகையாகாது.

இது எத்தகைய வைராக்கியம்?

எண்ணாகமம் 25ஆம் அதிகாரத்தில் ஒரு மயிர்கூச்செறியும் சம்பவம் பதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் வனாந்தரத்திலே இருந்த காலப் பகுதி அது. எத்தனையோ அதிசய அற்பு தங்களை மாத்திரமல்ல, அப்பப்போ தேவ கோபத்தையும்கூட கண்டு அனுபவித்த இஸ்ரவேலர், சித்தீமிலே தங்கியிருந்த காலப் பகுதியில் மறுபடியும் சோரம்போனார்கள். தேவனுடைய பிரமாணத்தை மீறி மோவாப் பெண்களோடே வேசித்தனம் பண்ணினார்கள். இதனால் அந்நிய தேவர்களைப் பணிந்து, அவர்களுக்கு இட்ட பலிகளில் புசித்தார்கள். கர்த்தர் பேசாமல் இருப்பாரா? கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலர்மீது மூண்டது. அந்நிய தெய்வங்களைப் பற்றிக்கொண்டவர்கள் வெளிச்சத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள். அன்றைய தினம் அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த வாதையினிமித்தம் மோசேயும் மக்களும் ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், (நடப்பதை அறியாதவனாக என்று நினைக்கிறேன்) ஒரு இஸ்ரவேலன் மீதியானிய பெண்ணை அழைத்துக்கொண்டு அறைக்குள் போனான். இதைக் கண்டான் ஒருவன். அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் மோசேயுடன் ஆலோசிக்கவில்லை. தேவ கோபத்தால் மக்கள் அழிவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மக்கள் தேவனுக்கு விரோதமாக நடப்பதை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. எடுத்தான் ஒரு ஈட்டியை; நேரே சென்றான் அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறைக்கு; அந்த இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் குத்தினான் ஈட்டியால். வேதம் சொல்லுகிறது: “அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்று போயிற்று” (எண்.25:8).

இவன் யார்? இவன் பெயர் பினெகாஸ், ஆசாரியனாகிய ஆரோனின் பேரன்; எலெயா சாரின் மகன். இவனைக் குறித்துக் கர்த்தர் சொன்னது: “…பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான். ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன் படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்” (எண்.25:11-13).

ஏராளமான இஸ்ரவேல் புத்திரர் நின்றிருக்க இந்த பினெகாசுக்கு எங்கிருந்து வந்தது இந்தக் கோபம்? ஆம், அவன் கர்த்தர்மீது வைத்திருந்த பக்தி, நேசம் வைராக்கியமாய் வெடித்து வெளி வந்தது. கர்த்தருடைய இருதய வேதனை அவனுடையதாயிற்று; நடந்துகொண்டிருக்கிற துன்பத்தால் எல்லோரும் துயருற்றிருக்க, இன்னுமொருவன் அதே காரியத்தைத் துணிகரமாய்ச் செய்தபோது பினெகாசுக்குப் பொறுக்கமுடியவில்லை. அவனுடைய வைராக்கிய செயல் இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட சாபத்தையே நிறுத்தி, பாவநிவர்த்தியானது என்று எண்ணும்போது, எத்தனை ஆச்சரியம்!

‘இயேசுவே உம்மை நேசிக்கிறோம்’ என்று பலங்கொண்ட மட்டும் பாடுகின்ற நாம், அவருக்காக எந்தமட்டும் வைராக்கியம் காட்டுகிறோம்? பாவத்தைப் பார்த்தாலே தேவனுடைய நாமத்தினிமித்தம் கோபங்கொள்ள வேண்டிய நாமே பாவஞ்செய்யலாமா? பாவத்திற்குத் துணைபோகலாமா? மன்னிப்புக் கொடுக்கின்ற வேளைகள் உண்டு; அதற்காக பாவத்தை ஏற்றுக்கொள்ளலாமா? அதனாலே நமக்கு மாத்திரமல்ல, முழு சமுதாயத்திற்குமே நாம் தீங்கு விளைவிக்கிறவர்களாக ஆக மாட்டோம் என்று சொல்லுவதற்கில்லை.

பினெகாஸ்போல நாம் இன்று ஈட்டியை எடுக்கவேண்டியதில்லை; ஆனால், தேவன் நமது கரங்களில் தந்திருக்கிற அவருடைய பட்டயம் உண்டல்லவா? அதைத்தன்னும் தைரியமாய் எடுக்கிறோமா? எடுத்துவிட்டால் அது தனது வேலையைத் தானே செய்யும். “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி.4:12). இதற்கு மிஞ்சிய ஒரு ஈட்டியைப் பட்டயத்தை எங்கே காண்பது. இது பினெகாசின் ஈட்டியிலும் வலிமைமிக்கது. ஆனால் அதை உயர்த்த வேண்டியது நாமல்லவா? அதற்கு ஒரு தைரியம் வைராக்கியம் நமக்கு வேண்டுமே!

வைராக்கியத்தின் இன்னொரு முகம்

மனுஷருக்கு மாத்திரமா? வைராக்கியத்திற்கும் இரண்டு முகங்கள் உண்டு. வைராக்கியம் நல்லதுதான்; ஆனால் அதனை நல்ல பக்கமா தீயபக்கமா, எப்பக்கம் நாம் திருப்பப் போகிறோம் என்பதில்தான் அதனாலுண்டாகும் நன்மையும் தீமையும் வெளிப்படும். ஒன்று நமது ஆவிக்குரிய வாழ்வில் வைராக்கியமானது, பக்தி வைராக்கியமாய் நேச வைராக்கியமாய் பற்றி எரியலாம். மறுபக்கத்தில், வைராக்கியமானது, மாம்சத்திற்குரிய வைராக்கியமாகவும் வெளிப்படலாம்.

“மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: …பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள்…” (கலா.5:19-21). இங்கே பவுல் குறிப்பிடுகின்ற வைராக்கியம் தீங்கானது. அது, பகை, விரோதம், கோபம், சண்டை, பிரிவினை என்று பலவற்றைப் பிறப்பிக்கும். இந்த வைராக்கியம் சாத்தானைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது. மண்ணுக்கு வைராக்கியம், பொன்னுக்கு வைராக்கியம், தவறான உறவுக்கான வைராக்கியம் என்று எத்தனையோ தீய காரியங்களுக்காக நாம் வைராக்கியம் கொள்வோமாயின், அது நமது வாழ்வையே எரித்துச் சாம்பலாக்கிவிடும். இப்படிப்பட்ட வைராக்கியங்களை நமக்குள் வளர்த்துக் கொள்ளாத படிக்கு எச்சரிக்கையாயிருப்போமாக.

“ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (கொலோ.3:12,13). இந்த அற்புதமான வாக்கியங்கள் நமது வாழ்வில் நம்முடன் இணைந்து செயற்பட நாம் இடமளிப்போமானால், தீமைக்குரிய வைராக்கியம் முளைவிடவே தருணம் கிடைக்காது.

மரணத்தாலும் அழிக்கமுடியாத நேச வைராக்கியம்

“நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டை பண்ணப்படும்” (உன். 8:6,7).

மணவாட்டி, தன் மணவாளனில் தான் வைத்திருந்த அன்பின் உன்னத தன்மைகளை இறுதியாக வெளிப்படுத்திய உன்னதப்பாட் டின் ஒரு பகுதிதான் இது. நேசம் மரணத்தைப் போல வலிமை மிக்கது. காலத்தாலோ, கேடுகள் ஆபத்துக்களாலோ அதை யாரும் கொன்று போட முடியாது. இந்த உலகத்திலுள்ள எந்த வித உயரிய விலைக்கும் அதை வாங்க முடியாது; ஏனெனில், அது இலவசமானது. அன்புக்கு விலையே இல்லை; எந்தவொரு ராஜாகூட அதை விலைகொடுத்து வாங்க முடியாது. அன்பு வலுக்கட்டாயமாகப் பெறப்படுவதில்லை; அது தானாக ஊற்றெடுக்க வேண்டும்; தானாக மலரவேண்டும். அந்த அன்பிலே போலித்தனம் இராது; 1கொரி. 13 ஆம் அதிகாரத்தில் பவுல் எழுதிய உயரிய பண்புகளையுடைய அன்பு எப்படிப் போலியாகும்?

அன்பைக் குறித்து பவுல் எழுதிய வார்த்தைகளை நாம் எத்தனைதரம் வாசித்திருக்கிறோம், எத்தனைதரம், விசேஷமாக திருமண ஆராதனைகளில் கேட்டிருக்கிறோம்; அதை மையமாக வைத்து ஏராளமான பிரசங்கங்கள் நமது செவிகளில் விழுந்தன. ஆனால், அந்த அன்பின் வெளிப்பாடு நமது வாழ்வில் எவ்வளவுதூரம் இதுவரையிலும் வெளிப்பட்டது என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். மரணம் நம்மைப் பிரிக்கும்வரை…. என்று உடன்படிக்கை செய்கின்ற திருமணத் தம்பதிகள் எத்தனைபேர் அந்த உடன்படிக்கைக்கு இன்று உண்மையிலேயே உண்மைத்துவமாய் இருக்கின்றனர்? அன்பு, இருதயத்தின் ஆழத்திலிருந்து எழாவிட்டால், அதிலே வைராக்கியம் காணப்பட வாய்ப்பிராது. எப்படிப்பட்ட நபரோ, என்ன சூழ்நிலையோ, மெய்யான நேசம் அந்த நபரை விட்டும் கொடுக்காது; சூழ்நிலையால் தளரவும் மாட்டாது.

தெய்வீகப் பண்பு

உன்னதப்பாட்டின் மணவாட்டி தன் மணவாளனில் வெளிப்படுத்தின நேசம் மிக ஆழமானது. அவளுக்குள் அப்படிப்பட்ட நேச வைராக்கியம் பற்றியெரியக் காரணம், அவள் தன் மணவாளனின் மாசற்ற நேசத்தை உணர்ந்திருந்தாள்; அனுபவித்திருந்தாள். அதனால்தான், “என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்” (உன்.2:16) என்று அவளால் பாடமுடிந்தது. இப்படிப்பட்ட நேசத்தை இன்று நம்மால் காணமுடிகிறதா?

காணமுடியும்! எப்படி? ஆம், இது தெய்வீக பண்புகளில் ஒன்று. இந்த அன்பு தேவனிடமிருந்து கொடையாகப் பெறப்படுகிறது; அவர் தந்திருக்கிற வழிகாட்டலில் வரையறைக்குள் இது அனுபவிக்கப்பட வேண்டியது. தேவனிடமிருந்து கொடையாகப் பெற்றுக்கொள்ளும் இந்த அன்பு நமக்குள் ஊற்றெடுக்கும்போது, அது வைராக்கியமுள்ள அன்பாகப் பெருக்கெடுக்கிறது. பின்னர், நம்மில் அன்புகூர்ந்த தேவனிடமிருந்தும், உலக வாழ்வில் அன்பு செலுத்தும்படி அவர் தந்த உறவுகளிடமிருந்தும் நம்மைப் பிரிக்கக்கூடியவர் யார்? “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?” (ரோ.8:36) என்று பவுல் நேசவைராக்கியம் கொண்டவராக கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய கிறிஸ்தவ உறவிலே இந்த மாசற்ற நேசவைராக்கியத்தை நாம் காணமுடிகிறதா? காண்பது அரிதாகிவருவதற்கு, தேவன் தமது கொடையாக தெய்வீக அன்பை நமக்குள் ஊற்றுவதற்கு நாம் இடமளிப்பதில்லை என்பதுதான் காரணம்.

இயேசு நம்மில் அன்புகூர்ந்தார்; இந்த அன்பின் ஆழம் அகலம் உயரத்தை நம்மால் அளவிடமுடியாது. அவ்வளவாக நம்மில் அன்பு கூர்ந்த நேசரிடம் நாம் காட்டும் நேசம் எப்படிப்பட்டது. அவர் நமக்காகத் தமது ஜீவனைக் கொடுக்குமளவுக்கு அன்பு வைத்தார். மரணத்தைச் சந்திக்க நேர்ந்தபோதும் நம்மீது கொண்டிருந்த வைராக்கியத்தை அவர் தளர்த்தவில்லை. அவருக்குள் நம்மைக் குறித்துப் பற்றியெரிந்து கொண்டிருந்த நேசத் தீதான் நம்மைக் கட்டி வைத்திருந்த பாவக்கயிற்றைச் சுட்டெரித்து, நம்மை மீட்டது. இந்த உன்னத அன்பின் மேன்மையை உணர்ந்ததால்தான், இயேசுவின் சீஷர்களும், பின்னால் ஸ்தேவானும், பவுலும், பின்னால் மரித்த இரத்த சாட்சிகளும் கிறிஸ்துவின் நிமித்தம் மரணத்தைச் சந்திக்க நேர்ந்தபோதுங்கூட கிறிஸ்துவில் அவர்கள் கொண்டிருந்த வைராக்கியத்திலிருந்து பின்வாங்கிப் போகாதது ஏன் என்பது நமக்கு விளங்கும். இவர்களுக்குள் பற்றியெரிந்த அந்த நேசத்தீ நமக்குள்ளும் எரிகிறதா?

என் காரியம் என்ன?

இறுதியாக ஒரேயொரு சிந்தனையை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ‘தேவனுடைய அன்பைப் புரிந்துகொள்ளாதவன், அந்த பரிசுத்த அன்பின் வெளிப்பாடாக தேவனிடமிருந்து மன்னிப்பையும், விடுதலையையும் பெற்றுக்கொள்ளாதவன் எவனும், அந்த அன்பின், மன்னிப்பின், விடுதலையின் பிரதி பலிப்பை வெளிப்படுத்த முடியாது. அந்த அன்பை, மன்னிப்பை, விடுதலையைப் பெற்றவனால் கர்த்தரில் அவன் கொண்டிருக்கும் நேச வைராக்கியத்தை அவனால் அடக்கி வைக்கவும் முடியாது. மேலும், அவனால் தன் வாழ்க்கைத் துணையில், உறவுகளில், சகோதரனில் மாசற்ற அன்பை வெளிப்படுத்தாமலும் இருக்க முடியாது. இவை நடந்தால், துன்ப துயரத்தின் மத்தியிலும், பாவ சோதனைகள் சூழ்ந்தாலும், கர்த்தருக்காக அழகான வாழ்வை நம்மால் வாழமுடியும்!

இப்படியிருக்க தழும்பிய கிறிஸ்தவ வாழ்வு நமக்கு எதற்கு? கர்த்தருக்கு, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் நாம் வைராக்கியம் காட்டமுடியாதபடி இந்த சமகாலத்தில் நமக்கு ஏகப்பட்ட தடைகளை இந்த உலகமும் அதன் அதிபதியும் அள்ளி வீசியிருக்கிறார்கள். கர்த்தருக்குக் கீழ்ப்படிவதால் உலக இன்பங்கள் பலவற்றை விட்டொழிக்கவேண்டி ஏற்படும். அதனாலேயே பலர் தடுமாறிப் போகின்றனர். நாமும் எவ்வளவு இலகுவாக வழிவிலகிப் போய்விடுகிறோம்.

நமக்குக் கவசங்களாய் அமைந்துள்ள தாராளமான சாக்குப் போக்குகளையும், தர்க்கங்களையும் விலக்கி, நமது நேசருக்காய் நாம் கொண்டிருக்கும் நேசம் மெய்யானால், பயமின்றி, உலகம் நம்மைத் தள்ளி வைத்தாலும்கூட நமது நேசருக்காய் நேசவைராக்கியத்துடன் அவருக்குச் சாட்சிகளாக வாழ தேவ ஆவியானவர் தாமே நமக்கு பெலனளிப்பாராக.

சத்தியவசனம்