விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்
(ஜூலை-ஆகஸ்டு 2015)

2. நம்பிக்கையின் பிறப்பிடம்

1சாமுவேல் 17ஆம் அதிகாரத்தில் வரும் நிகழ்ச்சி, உலக பிரகாரமான மனிதர்களை நம்புவதைப் பார்க்கிலும், ஆண்டவரை நம்பிச் சார்ந்திருப்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. வேதாகமத்தில் இந்தப் பகுதி கோலியாத்தும், பெலிஸ்தியர்களும் இஸ்ரவேலரின் சேனைக்கு அறைகூவல் விடுப்பதைக் காட்டுகிறது. கோலியாத்து உரத்த சத்தமாய் விட்ட அறைகூவல், இஸ்ரவேலரே, நீங்கள் உங்கள் சேனையிலிருந்து ஒரு பராக்கிரமசாலியான வீரனை அனுப்புங்கள். பெலிஸ்திய சேனைக்காக நான் போரிட வருகிறேன். நானும் உங்கள் வீரனும் போராடுவோம். யார் ஜெயிக்கிறார்களோ, அவனுடைய சேனை போரில் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். இந்த அறைகூவலை ஏற்று உங்கள் வீரனை என்னுடன் சண்டையிட அனுப்பி வையுங்கள்.

கோலியாத்து ஒரு இராட்சத வீரன். அவனுடைய உயரத்தையும், உருவத்தையும் கண்ட இஸ்ரவேலர் அனைவரும் பயந்தனர். ஒருவனும் அவனுடன் சண்டையிட முன்வரவில்லை.

தன்னுடைய சகோதரர்களான போர் வீரர்களின் சுகநலன் விசாரிக்க வந்த தாவீது என்னும் ஆடு மேய்க்கும் இளைஞன் இஸ்ரவேலரை ஏளனம் செய்து பேசும் கோலியாத்தின் வார்த்தைகளைக் கேட்டான். உடனே “நான் கோலியாத்துடன் சண்டையிடுகிறேன்” என்றான். தாவீது கூறியதைக் கேட்டதும் அவன் இளைஞனாகவும், போர்ப் பயிற்சி இல்லாதவனாகவும் இருந்தபடியால் ஒருவரும் சட்டை செய்யவில்லை. ஏனெனில் கோலியாத்து ஒரு மாபெரும் போர்வீரன், பராக்கிரமசாலி.

தாவீது சவுல் இராஜாவிடம் தன் அனுபவத்தைக் கூறினான். தான் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும்போது தன் ஆடுகளைத் தாக்க வந்த ஒரு சிங்கத்தையும், இன்னொரு முறை ஒரு கரடியையும் எதிர்த்து அடித்துக் கொன்றுவிட்ட அனுபவம் தனக்கு உண்டு என்றான். இந்தக் கொடிய காட்டு மிருகங்களைக் கொன்ற தாவீதுக்கு இந்த மனித மிருகத்தையும் கொல்ல ஆண்டவர் பெலன் தருவார் என்று தன் நம்பிக்கையை அறிவித்தான். இதைக் கேட்ட சவுல் கோலியாத்துடன் சண்டையிடத் தாவீதை அனுப்பச் சம்மதித்தான். ஆனால் போர்வீரன் அணியும் போர்க்கவசங்களை அணிந்துசெல்லுமாறு கட்டளையிட்டான். சவுலின் கவசங்களை தாவீதுக்கு அணிவித்தனர். அவற்றுடன் தாவீது நடந்து பார்த்தான். அவனுக்கு அவற்றை அணிந்து பழக்கமில்லாத தால் அவை வேண்டாம் என்று கூறிவிட்டான்.

இந்தக் கவசங்கள் யுத்தத்தில் பாதுகாப்புக்கென்று மனிதனால் செய்யப்பட்ட உபகரணங்களும் முயற்சியும் ஆகும். தாவீதுக்கு இதற்கு முன் கிடைத்திருந்த வெற்றிகள் அவனுக்கு ஆண்டவர் பேரில் இருந்த நம்பிக்கையால் கிடைத்தவையே. மனிதரால் செய்யப்பட்ட கவசங்கள் உதவி செய்யவில்லை. சவுல் விசுவாசத்தில் குறைவுள்ளவன். அவனுடைய நம்பிக்கை முழுவதும் மனிதனால் செய்யப்பட்ட போர்க்கவசங்கள் மேல் இருந்தது. ஆனால் தாவீது உறுதியான விசுவாசம் உள்ளவன். தாவீதின் நம்பிக்கை முழுவதும் ஆண்டவர் பேரில் இருந்தது.

தாவீது ஐந்து கூழாங்கற்களை எடுத்துத் தன் பையில் போட்டுக்கொண்டான். தன்னுடைய கவணைக் கையில் எடுத்துக்கொண்டான். தன் தடியையும் பிடித்துக்கொண்டு கோலியாத்திடம் ஏறிச்சென்றான். தைரியமாகக் கோலியாத்தை எதிர்கொண்டு தாவீது இப்படிக் கூறினான்:

“அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றைய தினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்;” என்றான் (1சாமு. 17:45,46).

மேலும் தாவீது கோலியாத்திடம் இவைகள் எதற்காக நடக்கப்போகிறது என்பதையும் கூறினான்:

“இன்றைய தினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னைவிட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றைய தினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள் கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்” (வச.46,47).

தாவீதினால் எப்படி இவ்வளவு நிச்சயமாய்க் கூறமுடிந்தது? ஆண்டவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை ஒருநாளும் தவறான இடத்தில் வைக்கப்பட்டதல்ல என்பதை அனுபவபூர்வமாகக் கற்றறிந்திருந்தான். எபேசியர் 6ஆம் அதிகார வாசகத்தின்படி, தாவீது கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்பட்டிருந்தான் (எபே.6:10).

விசுவாசிகளுக்கு இன்றைய அவசரத் தேவை கர்த்தரில் உறுதியாய்த் தரித்திருத்தலாகும். இது கொஞ்சம் கொஞ்சமாகவும், படிப்படியாகவும் பெற்றுக்கொள்ளும் காரியமல்ல. கிறிஸ்து நமக்காகச் சம்பாதித்து வைத்துள்ள ஜெயங்கொண்டவரின் வெற்றி நிலையைப் பெற்றுக்கொள்ளுவதாகும். நாம் இந்தச் சத்தியங்களை அறிந்துணர்ந்து அவற்றின்படி வாழும்போது, நம்முடைய விசுவாசம் மிகவும் தைரியமுள்ளதாகும். ஏனென்றால் ஆண்டவர் நம் வாழ்க்கையில் செயல்படுவதைக் காண்போம். நாம் போராட்டம் ஆரம்பிக்கும் முன் கிறிஸ்துவோடுள்ள நமது உறவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நினைவுகூர வேண்டியது மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே நம்முடைய எதிரிகளை இயேசு கிறிஸ்து வெற்றிகொண்டிருக்கிறார். எனவே வெற்றியில் நாம் கிறிஸ்துவோடு பங்காளிகளானால் போதுமானது.

கோலியாத்துடன் தாவீது சண்டையிடப் போகுமுன் அவனுடைய உள்ளத்தில் எந்தவித சந்தேகக் கேள்விகளும் தோன்றவில்லை. ஆனால் தேவன் அவனுக்குப் போரில் வெற்றியைக் கட்டளையிட்டார். அதுபோலவே விசுவாசியின் உள்ளத்திலும் எவ்வித சந்தேகக் கேள்விகளும் தோன்றக்கூடாது. ஏனெனில் கிறிஸ்து ஏற்கெனவே வெற்றியைச் சம்பாதித்து விட்டார். கோலியாத்தின் மீதுள்ள வெற்றி தாவீது அவனைப் பள்ளத்தாக்கில் சந்திக்கச் செல்லுமுன்னரே பெறப்பட்டுவிட்டது. ஆவிக்குரிய போராட்டத்தில் நமது வெற்றியும் இயேசுகிறிஸ்துவினால் சம்பாதிக்கப்பட்டு விட்டது. நாம் ஆவிக்குரிய போராட்டத்தில் சேருவதற்கு முன்னரே நமது வெற்றி கிறிஸ்துவால் சாதிக்கப்பட்டுவிட்டது.

ஆண்டவருடைய உதவியுடன் நாம் வெற்றிக்காகப் போராட்டம் நடத்துவதில் சிக்கல் ஏதும் இல்லை. நாம் ஒரு வெற்றியைப் பெறும்படி நாம் ஆண்டவரிடம் உதவி கேட்கத் தேவை இல்லை. ஏனென்றால் அவர் நமக்கு வெற்றியை ஏற்கெனவே சம்பாதித்து வைத்து விட்டார். நாம் வெற்றிக்காகப் போராடவில்லை. ஆனால் கிறிஸ்துவில் நமக்கு இருக்கும் வெற்றியிலிருந்து செயல்படுகிறோம். இதுதான் நம்முடைய ஆவிக்குரிய போராட்டத்தின் தன்மை. கிறிஸ்து ஏற்கெனவே வெற்றியைச் சம்பாதித்துவிட்டபடியால், சத்துருவாகிய சாத்தான் அவனுடைய அரணான கோட்டையிலிருந்து சிதறடிக்கப்பட்டான். அவன் இப்பொழுது பிடித்தடக்கப்பட்ட எதிரியாக இருக்கிறான் (எபி.2:14; கொலோ.2:15).

கர்த்தரே நம்முடைய பெலனானவர்

ஆண்டவர் நமக்கு வெற்றியைச் சம்பாதித்துத் தந்தது மட்டுமல்ல, அவர் நமக்குள் தங்கியிருந்து நம்மைப் பெலப்படுத்திக் கொண்டிருக்கிறார். கிறிஸ்து நமக்குள் வாசமாயிருக்கிறபடியால், நாம் அவரிடமிருந்து பெலனைப் பெற்றுக்கொள்ளுகிறோம். அவரே நம் பெலனானவர் என்று அறிகிறோம்.

ஒரு விசுவாசி வெற்றி சிறந்த ஒரு இடத்தில் இருக்கிறான். அவனுடைய பொறுப்பு தன் நிலையைக் காத்துக்கொள்வதாகும். அதைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டியதில்லை. எபேசியர் 6:11,13 வசனங்கள் நாம் ‘நிற்க’ வேண்டும்; ‘நிலைநிற்க’ வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதுதான் கிறிஸ்துவில் நமது நிலையைக் காத்துக்கொள்ளுதல் ஆகும்.

இதற்கு ஒரு உதாரணத்தை வெளி. 2:25, 26இல் காணலாம். தியத்தீரா திருச்சபைக்கு இயேசுகிறிஸ்து சொன்னது என்ன? “உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள். ஜெயங்கொண்டு, முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்”. இங்கே நாம் பார்ப்பது என்னவென்றால், “ஜெயங்கொள்ளுதல்” என்பது, ஒரு விசுவாசி கிறிஸ்துவில் தன் நிலையைக் காத்துக்கொள்வதைக் குறிக்கிறது என்பதாம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பிலதெல்பியா திருச்சபையாரிடம் கூறியது: “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. ஜெயங் கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்,…” (வெளி.3:11,12).

இயேசுகிறிஸ்துவுடன் நாம் ஒன்றாய் இருப்பதால் கிடைக்கும் அதிகாரம், பலம் இவற்றுக்கு இணையானது வேறு எதுவும் இல்லை. எபேசியர் 6ஆம் அதிகாரத்தில் ஒரு விசுவாசிக்கு யுத்தத்துக்கு தேவையான அணிகலன் சர்வாயுத வர்க்கம். வெளிப்படையான தற்காப்பு உபகரணம் வழங்கப்படுவதற்குமுன் அவனுக்கு உள்ளான சக்தி அருளப்படுகிறது. இந்தச் சர்வாயுத வர்க்கம் சரியாக வேலை செய்ய வேண்டுமானால் நம் உள்ளம், சித்தம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோடு நமக்குள்ள விசுவாசத் தொடர்பு ஆகியவை சரியாக அமைந்திருக்க வேண்டும்.

எபேசியர் 6:10 இவ்வாறு கூறுகிறது: “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்”. “பலப்படுங்கள்” என்னும் சொல்லை “பலப்படுத்தப்படுங்கள்” என்றும் மொழிபெயர்க்கலாம். பவுல் இங்கே கிரேக்க மொழியின் நிகழ்கால அமைப்பில் எழுதியிருக்கிறார். இதன்பொருள் “தொடர்ந்து பலப்படுத்தப்படுவீர்களாக” என்பதாம். 1கொரி.16:13 கூறுகிறது: “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்”.

எபேசியர் 6:10இல் மூன்று கிரேக்கச் சொற்கள் உள்ளன. அவை வல்லமை அல்லது பலம் என்பதன் பல்வேறு பொருள்களைக் குறிப்பிடுகின்றன. “பலப்படுங்கள்” என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் சொல்லின் பொருள் பலப்படுத்துதல், பலத்தினால் இடைகட்டுதல் என்பன. இது ஒரு மனிதன் தன்னை ஒரு ஆடையினால் மூடுவதுபோல, பலத்தினால் மூடிக்கொள்வதைக் குறிக்கிறது. இது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு செயலைக் குறிக்கிறது என்று அறிந்துகொள்ளுகிறோம். மேலும் இது ஒரு கட்டளை என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் பலப்படுத்தப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

‘வல்லமை’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சொல், வெளியில் காட்டப்படும் இன்னொருவருடைய வல்லமையைக் குறிக்கிறது. இங்கு கிறிஸ்துவின் வல்லமையைச் சார்ந்திருக்கும் விசுவாசியின் வல்லமையைக் குறிக்கிறது.

இங்கு ‘சத்துவம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சொல், சிறப்பாக வல்லமையினால் மூடப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. இயேசுகிறிஸ்துவின் வல்லமையினால் விசுவாசி மூடப்பட்டிருக்கிறான். கிறிஸ்து விசுவாசியினுள் தங்கியிருப்பதால், அவரே அவனுக்கு வல்லமை ஆகிறார். கொலோ.1:27 இல் இந்தக் கருத்தே இப்படிக் கூறப்பட்டுள்ளது “கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்”.

கொலோ.1:29இல் இப்படி வாசிக்கிறோம்: “அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.” (களைப்படையும் வரை). இது எபே.1:19இல் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே வல்லமையைக் குறிக்கிறது:

“.. தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்”.

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்