இயேசுகிறிஸ்து விளம்பின உவமை
சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜூலை-ஆகஸ்டு 2015)

லூக்கா 16 ஆம் அதிகாரம் 1-10 வரையுள்ள வசனங்களில் ஆண்டவர் சொன்ன உவமையின் கருத்தை தியானிப்போம்.  “ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது” (வசனம்1). உக்கிராணக்காரன் என்பதற்கு, ‘அலுவலக மேலாளர், அல்லது நிர்வாக அதிகாரி’ என பொருள்படும். இந்த ஐசுவரியவான் உக்கிராணக்காரனிடம் ஆஸ்தியை எல்லாம் கொடுத்துவிட்டுப் போகிறான். ஆனால் உக்கிராணக்காரன் எஜமானுடைய ஆஸ்தியை அழித்துப்போடுகிறதாக அந்த எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

உக்கிராணக்காரன் எஜமான் அல்ல; அவன் ஒரு நிர்வாக அதிகாரி மட்டுமே. ஆகவே தன்னிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆஸ்திகளைப் பராமரிப்பதே அவனது பணியாகும். அவன் அதை நல்லவிதத்தில் நிர்வகித்து கணக்குக் கொடுக்கவேண்டும். அதை அழித்துப்போடுவதற்கு அவனுக்கு உரிமை கிடையாது. ஆனால் இந்த உக்கிராணக்காரன் தன்னை எஜமான் ஸ்தானத்திலே நிறுத்திக் கொண்டு நிர்வாகம் பண்ணினதினால்தான் இந்த காரியம் நடந்தது.

“அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக் கூடாது என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப் போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்” (வசனம் 2,3) என்றான். எனவே உக்கிராண விசாரிப்பைவிட்டு என்னைத் தள்ளும்போது என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்ய வேண்டியது இன்ன தென்று யோசிக்கிறான்.

ஆகவே, “உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்ய வேண்டியது இன்னதென்று எனக்குத் தெரிய வந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;..” (வசனம் 4) எஜமானிடம் கடன்பட்டவர்களை வரவழைத்தான். ஒருவனைப் பார்த்து: “நீ எஜமானுக்கு பட்ட கடன் எவ்வளவு?” என்று கேட்டான். அவன் “நூறுகுடம் எண்ணெய்” என்றான். அவனை நோக்கி: “நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது” என்றான். பின்பு வேறொருவனை நோக்கி, “நீ பட்ட கடன் எவ்வளவு?” என்றான். அவன் “நூறு கலம் கோதுமை” என்றான். “நீ உன் சீட்டை வாங்கி எண்பது என்று எழுது” என்றான்.

“அநீதியுள்ள அந்த உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக் கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப் பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” (வசனம்8,9).

இந்த உவமையிலே, நூறுகுடத்தை ஐம்பது என்று எழுதுவதினாலும், நூறு கலத்தை எண்பது என்று எழுதுவதினாலும் இது ஒரு கள்ளக்கணக்காக மாறுகிறதே, இதை எஜமான் மெச்சிக்கொள்வானா என்ற எண்ணம் நமக்குள் எழலாம். அந்த உக்கிராணக்காரன் வாய்ப்பை எப்படிப் பயன்படுத்திக்கொண்டான் என்பதை தான் இந்த உவமை விளக்குகிறது.  வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்காகவே அவன் சில காரியங்களைச் செய்கிறான்.

எஜமான் என்னை தள்ளிவிடுகிறான். கொத்துவதற்கு எனக்கு பெலன் இல்லை. பிச்சை எடுப்பதற்கு வெட்கப்படுகிறேன். என்னை இந்த வேலையை விட்டு விலக்கினவுடனே, என்னை தங்களுடைய வீடுகளிலே நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும்படி எஜமானிடம் கடன் வாங்கிய மனிதர்களை வைத்தே நண்பர்களை உருவாக்க பிரயாசப்படுகிறான். நூறுகுடம் எண்ணெய் கடன்பட்டவனை ஐம்பது என்று எழுதச் சொல்லுகிறான். நூறு கலம் கோதுமை கடன்பட்டவனை எண்பது என்றும் எழுதச் சொல்லுகிறான். நூறுக்கு ஐம்பதைத் தள்ளுபடிபண்ணுகிறான். நூறுக்கு இருபதைத் தள்ளுபடிபண்ணுகிறான். இவன் வீட்டைவிட்டு வெளியேறின பிற்பாடு, கடன் வாங்கி தள்ளுபடியைப் பெற்றுக்கொண்டவர்கள் நிச்சயமாய் தனக்கு உதவி செய்வார்கள். தங்கள் வீட்டிலே தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையிலே இதைச் செய்தான். இந்த மனிதன் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் சீக்கிரமாய் செயல்பட்டான்.

இன்றைக்கு நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது?  ஆண்டவர் சொல்லுகிறார்: ஒளியின் பிள்ளைகளைக் காட்டிலும் இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் அதிக புத்திசாலிகள் என்று. ஏனென்றால் ஒளியின் பிள்ளைகளுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. ஒளியின் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் கொடுக்கப்படுகிறது. கிருபை கொடுக்கப்படுகிறது. இவ்வளவையும் பெற்றும் ஒளியின் பிள்ளைகள் வாய்ப்புகளைப் பயன்படுத்தவில்லையே என்று ஆண்டவர் வருத்தப்படுகிறார். இந்த அநீதியான உக்கிராணக்காரன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தனக்கு நண்பர்களைச்  சம்பாதித்தான்.

அருமையான தேவபிள்ளையே, உன்னுடைய வாழ்க்கையிலே நீ எப்படி இருக்கிறாய்? தேவன் உனக்கு கொடுத்த வாய்ப்புகளை உதாசீனப்படுத்துகிறாயா, உனக்கு வந்த சூழ்நிலைகளை ஆதாயப்படுத்தியிருக்கிறாயா? ஆண்டவர் நமக்கு கிருபைகளையும், தாலந்துகளையும், திறந்த வாசலையும் கொடுத்து இருக்கிறார். இதை நீ பயன்படுத்தியிருக்கிறாயா? இந்த வாய்ப்புகளை நீ பயன்படுத்தியிருந்தால் உன்னதமான நிலையில் தேவன் உன்னை வைத்திருப்பார். இதுவரையிலும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் போயிருந்தால் இந்த உவமையின் வாயிலாக கற்றுக்கொண்டபடி வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

இரண்டாவதாக, இந்த உக்கிராணக்காரன் வாய்ப்புகள் மூலமாக நண்பர்களை சம்பாதித்தான். உக்கிராண பொறுப்பில் இருக்கும்போது உக்கிராணக்காரன். கடன் வாங்கியவர்களுக்கு அவன் தள்ளுபடி பண்ணினதினாலே வேலை போனாலும் தனக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டான். அதைத் தான் ஆண்டவர் சொல்லுகிறார்: “… அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” (வசனம் 9). நித்திய வீட்டிலே உன்னை ஏற்றுக் கொள்ளும்படி நண்பனைச் சம்பாதித்துக் கொள். பணத்தினாலே, அநீதியான பொருள் களினாலே, அழிந்துபோகிற ஆஸ்திகளினாலே நீ ஆண்டவருக்காக சேவை செய்து, அதன் மூலமாக ஒரு கூட்ட ஜனம் ஆண்டவரிடம் வருமானால் உன் ஆஸ்தி ஐசுவரியத்தின் மூலமாக மீட்கப்பட்ட ஜனங்கள் உனக்கு நண்பர்களாக மாறிவிடுகிறார்கள். நாம் நினைக்கிறோம், பணத்தினாலே என்ன செய்யமுடியும் என்று. தேவப்பணிகளுக்கு பணத்தைப் பயன்படுத்தும் பொழுது, அதன் மூலம் தேவனுடைய ராஜ்யம் விருத்தியடையும். அநேக நண்பர்கள் நித்தியத்திலே கிடைப்பார்கள்.

மூன்றாவதாக, அந்த எஜமான் உக்கிராணக் காரனை புத்தியாய் செய்தான் என்று மெச்சிக்கொண்டான். அந்த உக்கிராணக்காரன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளைச் சீக்கிரமாய் பயன் படுத்திக்கொண்டான். நண்பர்களை உருவாக்கி கொண்டான். எஜமானால் மெச்சிக்கொள்ளப் பட்டான். நாம் ஒன்றை யூகமாகப் புரிந்துகொள்ளலாம். எஜமான் அவனை மெச்சிக்கொண்டதினாலே எஜமான் கண்களில் அவனுக்கு தயை கிடைத்தது.

வாய்ப்புகள் ஒரு முறை வரும். தொடர்ந்து வராது. சில வாய்ப்புகள் பலமுறை வரும்.

சில வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரேயொரு முறை மட்டும் தான் வரும்.

வாய்ப்புகள் ஒருமுறை வந்தாலும், பலமுறை வந்தாலும் அதை ஆண்டவருக்காகவே பயன்படுத்துவோம்.