அவர் உனக்கு ஜீவத் தண்ணீரைக் கொடுத்திருப்பார்!

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
வேதமும் விளக்கமும்
(ஜூலை-ஆகஸ்டு 2015)

இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களில் உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, அவர் தாம் சொல்வதைப் பல்வேறுவிதமான உருவக விவரணங்களில் சித்தரித்துள்ளமையாகும். எனினும், சில சந்தர்ப்பங்களில் இயேசுகிறிஸ்துவின் உருவக விவரணங்கள் மக்களால் சொல்லர்த்தமாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. வித்தியாசமானதும் தவறானதுமான உபதேசங்கள் கிறிஸ்தவ சபைக்குள் புகுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்களில் உள்ள உருவக விவரணங்களை நாம் சரியான விதத்தில் வியாக்கியானம் செய்து, அவ்வுருவகங்களின் மூலம் அவர் சொல்லும் விஷயத்தைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.

யோவான் எழுதிய சுவிசேஷத்தில் “ஜீவத் தண்ணீர்” என்னும் உருவக விவரணத்தை இயேசுகிறிஸ்து இருதடவைகள் உபயோகித்துள்ளார். 4ஆம் அதிகாரத்தில் சமாரியப் பெண்ணோடு உரையாடிக் கொண்டிருந்த அவர், ஜீவத்தண்ணீரைத் தருவதைப் பற்றி கூறினார் (யோவான் 4:10). அதன் பின்னர் 7ஆம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவரை ஜீவத் தண்ணீராக உருவகித்துள்ளார் (யோவான் 7:38-39). இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் 7ஆம் அதிகாரத்தில் ஜீவத்தண்ணீர் பரிசுத்த ஆவியானவர் என்பதனால், 4ஆம் அதிகாரத்திலும் பரிசுத்த ஆவியானவரையே இயேசுகிறிஸ்து ஜீவத்தண்ணீராக வர்ணித்துள்ளதாகக் கருதுகின்றனர்.

யூதமதப் போதகர்களும் சில சந்தர்ப்பங்களில் பரிசுத்த ஆவியானவரைத் தண்ணீராக உவமித்துள்ளனர். வேதாகமத்தில் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஈவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதும் (அப்.2:38, 10:46, 11:17), யோவான் 4:10இல் ஜீவத்தண்ணீரை இயேசு கிறிஸ்து தேவனுடைய ஈவாகக் குறிப்பிட்டிருப்பதும், பரிசுத்த ஆவியானவரே ஜீவத் தண்ணீராக உவமிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரமாகக் கருதப்படுகின்றது. மேலும், யோவான் ஸ்நானகனுடைய ஊழியத்தின் தொடர்ச்சியாகவே இயேசுகிறிஸ்துவின் இறை பணி இருப்பதனால், யோவான் முன்னறிவித்தபடி இயேசுகிறிஸ்துவின் ஊழியம் பரிசுத்த ஆவியானவரை அருள்வதாகவே உள்ளது. இதனால், அவர் கொடுப்பதாகக் கூறும் ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவர் என்றும் விளக்கப்படுகின்றது.

மேலும், 1 கொரி.12:13இல் பரிசுத்த ஆவியானவரை ஒருவன் பெற்றுக்கொள்வது, தாகந்தீர்க்கப்படுதலாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதும், இயேசுகிறிஸ்து சமாரியப் பெண்ணுக்கு கொடுப்பதாகக் கூறும் ஜீவத்தண்ணீர் பரிசுத்த ஆவியானவர் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

யோவான் 4ஆம் அதிகாரத்தில் ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரோடு தொடர் புற்றுள்ள போதிலும், பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய விவரணமாக இவ்வுருவகம் இயேசுகிறிஸ்துவினால் உபயோகிக்கப்படவில்லை. யோவான் 7ஆம் அதிகாரத்தில், இயேசுகிறிஸ்து மகிமையடைந்த பின்பே, அதாவது அவர் பரமேறிச் சென்ற பின்பே பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவார் என்பதை அறிந்துகொள்கின்றோம் (7:38-39). ஆனால் 4ஆம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து சமாரியப்பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த சமயத்திலேயே ஜீவத் தண்ணீரை அவளுக்குத் தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், இயேசுகிறிஸ்து தாம் மனுமக்களுக்கு அருளும் “ஆவிக்குரிய வாழ்வையே” ஜீவத்தண்ணீராக உருவகித்துள்ளதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

“தேவனுடைய ஈவு என்று இயேசு கிறிஸ்து கூறுவது, அவரால் மட்டுமே மக்களுக்குக் கொடுக்கக்கூடிய நித்திய ஜீவன்” என்பதே இவர்களின் விளக்கமாகும். இதனால் இதை “நித்திய ஜீவனுக்கான தண்ணீர்” என்றும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஈவைப் பற்றியே இயேசு கிறிஸ்து யோவான் 3:16இல் குறிப்பிட்டுள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

உண்மையில், நாம் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டே யோவான் 4ஆம் அதிகாரத்தில் ஜீவத்தண்ணீர் என்னும் உருவகம் எத்தகைய அர்த்தத்தோடு உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திடலாம். ஏனென்றால், ஜீவத்தண்ணீரைப் பற்றிய “பழைய ஏற்பாட்டு அர்த்தங்கள் அனைத்தும் யோவானுடைய சுவிசேஷத்தில் ஜீவத்தண்ணீருக்கு உள்ளது.” பழைய ஏற்பாட்டில் தேவனே ஜீவத் தண்ணீர் ஊற்றாக சித்தரிக்கப்பட்டுள்ளார் (எரே.2:13). ஆனால், சமாரியப் பெண்ணுக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுப்பவராக இயேசு கிறிஸ்து இருக்கிறார். “இது இயேசுகிறிஸ்துவின் தேவத்துவத்திற்கான ஒரு ஆதாரமாகவும் உள்ளது.” மேலும், பழைய ஏற்பாட்டில் எருசலேமிலிருந்து ஜீவத்தண்ணீர் புறப்பட்டு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது (சக.14:8, எசே.47:9). இதை, இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது என்று இயேசுகிறிஸ்து யோவான் 4:22இல் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தாகமாயிருப்பவர்களை தண்ணீரண்டை வரும்படி பழைய ஏற்பாட்டில் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதோடு (ஏசா. 55:1), “நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டு கொள்வீர்கள்” என்றும் ஏசா.12:3இல் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இயேசுகிறிஸ்து சமாரியப் பெண்ணுக்கு ஜீவத்தண்ணீரை மட்டுமல்ல, தேவனுடைய ஈவைக் கொடுப்பதைப் பற்றியும் கூறியுள்ளார். இது தேவனுடைய இரட்சிப்பின் ஈவாகும். எனவே இதனோடு சேர்த்து அருளப்படும் “ஜீவத்தண்ணீர் மானிட இரட்சிப்பாகவே உள்ளது.”

எனினும், இரட்சிப்பின் அனுபவமானது பரிசுத்த ஆவியானவரால் உருவாக்கப்படும் புதுவாழ்வாக இருப்பதனால், இயேசுகிறிஸ்து கொடுக்கும் ஜீவத்தண்ணீர், ஒருவனுடைய இரட்சிப்பின்போது பரிசுத்த ஆவியானவர் மூலம் அவனுக்கு அருளப்படும் புதிய வாழ்வாகவே உள்ளது. உண்மையில், “புதியதோர் ஆவிக்குரிய வாழ்வை மனிதனுக்கு இயேசு கிறிஸ்து கொடுக்கும்போது அவனுக்கு கிடைப்பவை அனைத்தும் ஜீவத்தண்ணீராக உள்ளது.” எனவே, “பரிசுத்த ஆவியானவர் மூலமாக ஒருவனுக்கு கிடைக்கும் புதிய ஆவிக்குரிய வாழ்வைப் பற்றியே இயேசுகிறிஸ்து சமாரியப் பெண்ணிடம் ஜீவத்தண்ணீர் என்று கூறியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.

மக்களுக்கு இயேசுகிறிஸ்து அருளும் ஆவிக்குரிய புதிய வாழ்வே ஜீவத்தண்ணீராக உள்ளது!

சத்தியவசனம்