பரலோக பொக்கிஷம்!

சிறுவர் சோலை
(ஜூலை-ஆகஸ்டு 2015)

இங்கிலாந்து தேசத்திலே இரண்டு சகோதரர்கள் ஒன்றாய் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவன் வியாபாரியாக மாறி நிறைய பணம் சம்பாதித்தான். இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தான். ஆனால், அவன் இறந்தபோது, மிக கொஞ்சபேர்தான் அவனுக்காக கவலைப்பட்டனர். இன்றும்கூட அவனை நினைத்துப் பார்ப்பவர்கள் மிகக் கொஞ்சம் பேர்தான்.

ஆனால், மற்ற சகோதரனோ, ஒரு மிஷனரி மருத்துவராகப் படித்து ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். அவரிடம், அதிக பணம் இருக்கவில்லை. அவர் ஏழையாக மரித்தார். ஆனாலும், அவர் இன்னொரு விதத்தில் செல்வந்தனாக இருந்தார். இன்றுகூட மக்கள் அவரைப் பற்றி பேசுகின்றனர்.

ஆப்பிரிக்காவுக்குச் சென்ற அந்த மிஷனரியின் பெயர்தான் டேவிட் லிவிங்ஸ்டன். அவர் அநேக மக்களுக்கு உதவி செய்தார். ஆப்பிரிக்க நாட்டையே அசைத்தார் என்று கூடச் சொல்லலாம். அவர் இயேசுவைக் குறித்து அவர்களுக்குக் கூறினார். அநேக அடிமைகளுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார். தேவனுக்கும் மற்ற மக்களுக்கும் அவர் செய்த சேவையின் நிமித்தம், அவர் மரித்த பின்னர், இங்கிலாந்திலுள்ள ஆலயமொன்றில், ராஜாக்கள் மற்றும் மாபெரும் மனிதர்களோடுகூட, இவருடைய உடலையும் அடக்கம் செய்தார்கள்.

டேவிட் லிவிங்ஸ்டன் இல்லாதிருந்தால், அவருடைய சகோதரனைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஏனெனில் அவருடைய சகோதரன் மரித்தபோது, “இவர் டேவிட் லிவிங்ஸ்டனின் சகோதரன்” என்று அனைவராலும் பேசப்பட்டார். மேலும் அவரது சகோதரன் இவ்வுலகில் வாழ்ந்தபோது பொக்கிஷங்களை, அதாவது சில உலக செல்வங்களை உடையவராக வாழ்ந்தார். ஆனாலும், இவர்கள் இருவரில் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தவர் டேவிட் லிவிங்ஸ்டனே என்றுதான் சொல்ல வேண்டும்.

நீங்கள் இவ்வுலகில் வாழ்ந்து மரிக்கும் போது உங்களிடத்தில் இருக்கும் பொக்கிஷம் எப்படிப் பட்டதாயிருக்கும்? “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம் .. பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” (மத்.6:19,20) என்று இயேசு சுவாமி சொன்னார். அதாவது அழிந்துபோகக்கூடிய அல்லது திருடர் திருடக்கூடிய பணம், மற்றும் உலக பொருட்களை சேகரிப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடாதீர்கள். ஆனால், “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்” என்றார். நாம் இயேசுசுவாமிக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வதன் மூலம், அவருக்குப் பணி செய்வதன் மூலம் நம்முடைய பொக்கிஷங்களை பரலோகத்திலே சேர்த்து வைக்கமுடியும்.

அருமை தம்பி, தங்கையரே, இது உண்மையான காரியமல்லவா? ஆம், இயேசு சுவாமிக்கு நம்மை முழுவதுமாக ஒப்புக் கொடுத்துவிடும்போது, இவ்வுலகில் நமக்குத் தேவையானவற்றை எல்லாம் அவர் கவனித்துக்கொள்வார். அவருக்காக நாம் செய்பவற்றை அவர் கணக்கில் வைத்துக் கொள்ளுவார். நிச்சயமாக ஒருநாள் நாம் அதன் பலனை அவரிடமிருந்து பெறுவோம். இப்பொழுதே ஜெபம் செய்து அவருக்காக வாழ தீர்மானம் பண்ணுங்கள்.

ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்துவைத்து, அங்கு உம்மைச் சந்திக்கும்போது நீர் சந்தோஷப் படத்தக்கதான ஒரு வாழ்வு வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.”

சத்தியவசனம்