சகோதரி சாந்தி பொன்னு
(செப்டம்பர்-அக்டோபர் 2015)

புரியாத கேள்விகள், விளங்காத பதில்கள், திருப்தியற்ற நிலைமைகள்… கோபதாபம், கொலைவெறி, வஞ்சகம் சூழ்ச்சி… ஆகிய இவற்றுள் தினமும் மனிதன் சிக்குண்டு மனதிலும் சரீரத்திலும் அதிகமாய் அலைக்கழிக்கப்படுகிறான் என்றால் அதை மறுக்கமுடியாது. இதற்குரிய ஆரம்பம் இன்று நேற்று அல்ல; முதல் மனிதன் எப்போது தன்னிலையிலிருந்து விழுந்தானோ, அப்போதே ஆரம்பித்தது இந்த அவலம். அது அவனது பிள்ளைகளிடத்தில் பரவி, தொடர்ந்து பலவித உணர்வுகளின் போராட்டங்களில் இன்றும் மனிதன் சிக்கித் தவித்து நிற்கிறான்! அதற்காக, கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாமும்கூட இந்த வஞ்சகத்தில் இன்னமும் தடுமாறி நிற்பது நியாயமாகுமா?

இந்த அவல வாழ்விற்கு பலர் பல காரணங்களைச் சொன்னாலும் நாம் யார், எங்கிருந்து வந்தோம், நமது வாழ்வின் நோக்கம் என்ன என்றதான கேள்விகளை நம்மை நாமே கேட்டுப்பார்த்துச் சிந்திப்போமானால், நிச்சயம் நமக்கு ஒரு பதில் கிட்டும். ஆனால் நாமோ நம்மைச் சுற்றிலும் ஒரு வட்டத்தை நாமே போட்டுவிட்டு, இதுதான் நான், இதுதான் கிறிஸ்தவ வாழ்வு, நாமேதான் பரலோகவாசிகள் என்று சொல்லி, தேவாதிதேவன் நம் மீது கொண்டுள்ள அநாதியான அடிப்படையான நோக்கத்தையும், அவர் நம்மை நம்பி அளித்த பொறுப்புக்களையும் மறந்து, தேவனின் வழி என்று சொல்லிக்கொண்டு சுயவழிகளில் சென்றுகொண்டிருக்கிறோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. நாம் வாழ்வில் தடுமாறுகிறோம் என்றால், நாம் கொண்டிருக்க வேண்டிய நோக்கத்தில் நாம் தவறிவிட்டோமோ என்பதைச் சிந்தித்துப்பார்ப்பது நல்லது.

நாம் நமக்கென்று உண்டாக்கப்படவில்லை

“… நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்” (சங்.100:3). நாம் நாமாக உண்டாகவில்லை; நம்மை ஒருவர் உண்டாக்கினார் என்றால், அவர் எதற்காக நம்மை உண்டாக்கினார்? “நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் …” (ஏசா.43:7) என்று கர்த்தர் உரைத்ததாக ஏசாயா அன்று அறிவித்தார். இது இஸ்ரவேலுக்கு உரைக்கப்பட்ட வார்த்தையாயினும், இதுவே மனிதனில் தேவன் கொண்டுள்ள அநாதி நோக்கம். தேவனுடைய மகிமைக்கென்றே, அவருக்கென்றே நாம் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.

இயற்கையையும் ஜீவராசிகளையும் படைத்த தேவன், “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” (ஆதி.1:26) என்று சொன்னதுமன்றி, தமது படைப்பு முழுவதையும் அந்த மனுஷனே ஆளக்கடவன் என்று சொல்லி, தமது சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்து, தமக்குள் இருந்த ஆளுமையின் அதிகாரத்தையும் அவனுக்குள் வைத்தார் என்று காண்கிறோம் (ஆதி.1:26-27). இப்படியாக தேவசாயலில் உண்டாக்கப்பட்ட நாம் அந்த சாயலைத் தவிர வேறு எந்த சாயலை வெளிப்படுத்தலாம்?

பணியல்ல; தேவநோக்கமே முதன்மையானது:

மேலும், தமக்கு வேலை செய்ய தம்மைச் சேவிக்க யாரும் இல்லையென்று தேவன் மனிதனை உண்டாக்கவில்லை. அவருக்குப் பணிசெய்யவென்று ஏராளமான தேவதூதர்கள் அவருக்குண்டு. மேலும், மனிதன் பாவத்தில் விழுவான், சங்கடப்படுவான், வாழ்வில் போராடுவான் என்பதை முன்அறிந்தவராய், அதைப் பார்த்து ரசிப்பதற்காகவும், அவனுடைய வேதனைமிக்க மரணத்தைப் பார்த்து கைதட்டி ரசிப்பதற்கும் தேவன் மனிதனை உண்டாக்கவில்லை என்பதையும் முக்கியமாக நாம் – கிறிஸ்துவின் பிள்ளைகள் – நாம் உணரவேண்டும். “நமது சாயலாகவும், நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்று தேவன் சொன்னபோதே, மனிதனை அவர் உண்டாக்கியதன் நோக்கம் தெளிவாகிறது. தமது குணாதிசயம், தன்மை, சுபாவம் யாவையும், அதாவது தமது சாயலை அவனுக்குள் தேவன் வைத்தபோதே, தம்மை மனிதன் வெளிப்படுத்தவேண்டும் என்ற தமது நோக்கத்தையும் தேவன் கூடவே வெளிப்படுத்திவிட்டார். தமக்கே சொந்தமாக மனிதனை உண்டாக்கியதால், படைப்புகள் யாவற்றிலும் அவர் மனிதனுக்கு ஒரு விசேஷித்த மேன்மையைக் கொடுத்திருந்தார். ஆம், தேவசாயலை, அவரை நமது வாழ்வில் வெளிப்படுத்துகிற ஒரு பெரிய நோக்கத்தை தேவன் நம் நிமித்தம் படைப்பிலேயே கொண்டிருந்தார்.

அப்படியிருக்க கிறிஸ்தவன் என்பவன் பணிசெய்கிறவன், ஊழியம் செய்கிறவன், அதுவே அவனுடைய முதன்மையான அழைப்பு என்ற தப்பான எண்ணச் சூழலுக்குள் இன்று நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று கேட்டால், ஏதோவொரு பணிதான் பதிலாக அமைகிறது. பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் ஊறித் திளைத்திருப்பதால், வாழ்வில் முக்கியமானதும், முதன்மையானதுமான – தேவனை, தேவசாயலை வெளிப்படுத்துவது – என்ற தேவன் நம்மில் கொண்டுள்ள அநாதி நோக்கத்தை இன்று நம்மில் அநேகர் தவற விட்டுவிட்டு, ஜெபிப்பதற்கே நேரமின்றி பணிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

தேவநோக்கத்தை தவறவிட்ட மனிதனும், அவனை நேசித்த தேவனும்:

தேவதிட்டம் ஆரம்பத்திலேயே கெட்டுப்போனதோ என்று எண்ணுமளவுக்கு ஆதியாகமம் மூன்றாம் அதிகாரம் மனித சரித்திரத்தில் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு சரிவை ஏற்படுத்தியது. தேவனுடைய சத்துராதியான சாத்தான் தேவதிட்டத்தை நிர்மூலமாக்கும் நோக்குடன் தேவனுடைய படைப்புக்கெல்லாம் மகுடமான மனிதனைத்தான் தேடிப்போனான். அற்புத படைப்பான மனிதனின் சிந்தனையில் மெதுமெதுவாக மாறுபாடுகளை ஏற்படுத்தினான். அழகாக ஆனால் வஞ்சகமாக, புத்திமான்போல ஆனால் தந்திரமாக, கரிசனை மிக்கவன்போல ஆனால் சூழ்ச்சி மிக்கவனாக மனிதனை அணுகினான் சாத்தான் (இன்றும் அந்த நிலை தொடருகிறது). சாத்தானின் இந்த சூழ்ச்சி வலையில் விழுந்தான் முதல் மனிதன்.

சாத்தானின் குரலுக்குச் செவிகொடுத்த மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனது உண்மை; தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து சாத்தானின் யோசனையைத் தனது சிந்தனைக்குள் உள்வாங்கியதும் உண்மை; ஆனால் இவை யாவற்றினதும் விளைவாக, தனக்கு நல்லது என்பதை தானே தீர்மானிக்க முடியும் என்ற நிலையைத் தனக்கு ஏற்படுத்திக் கொண்ட துணிகர செயலினால் மனிதன் தனக்குத்தானே தேவனானான் என்பதுதான் எல்லாவற்றுக்கும் மேலான உண்மை. இதுதான் அவன் செய்த மகா தப்பு; இதுவே மனிதனை விழத்தள்ளிய மகாபாவம். தேவசாயலை வெளிப்படுத்தவேண்டிய மனுஷன் அதிலே தவறி, பாவத்தின் சாயலைத் தன்னில் தானே தரித்துவிட்டான்.

தன்னைத் தேவனுக்குச் சமமாக்க நினைத்த சாத்தான், ‘நீயும் தேவனாகலாம்’ என்ற சிந்தனையை மனிதனுக்குள்ளும் வஞ்சனையாய் விதைத்து, தன்னைப்போலவே அவனும் தேவ சமுகத்திலிருந்து தேவனால் தள்ளப்பட்டுப் போக வஞ்சகமாகத் திட்டமிட்டான். ஆனால், பாவத்தில் சிக்குண்டு விழுந்துபோன மனிதன், தன் வெட்கநிலையைக் கண்டான். தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டபோது, அவரது சந்நிதியில் தான் நிற்கமுடியாது என்பதைத் தானே உணர்ந்துகொண்டு தன்னைத் தானே ஒளித்துக்கொண்டான். அது சாத்தானுக்கு விழுந்த முதல் அடி.

பெருமையும் அகங்காரமும்தான் சாத்தானின் குணமே தவிர, வெட்கமும் குற்ற உணர்வும் சாத்தானின் குணம் அல்ல; ஆனால் அவை மனிதனுக்குள் உருவெடுத்தது தேவ கிருபை அல்லவா! மேட்டிமையாலும் பெருமையாலும் தன்னை உயர்த்த எண்ணிய சாத்தானை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளிவிட்டபோது (எசேக். 28:16) அவனுடைய இருதயத்தில் குற்ற உணர்வு உண்டானது என்றோ, கர்த்தர் அவனுக்காய் இரங்கினார் என்றோ எழுதப்படவில்லை. இவன் விசித்திரமாய்ச் செய்யப்பட்ட விசித்திர மோதிரம்; ஞானத்தால் நிறைந்தவன். பூரண அழகுள்ளவன்; தேவனுடைய தோட்டமாகிய ஏதேனிலே இருந்தவன்; காப்பாற்றுகிற தற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூப் என்றெல்லாம் புகழப்பட்டவன் (எசேக்.28:12-15). ஆனால் மனிதன் தேவசாயலில் படைக்கப்பட்டான்; சாத்தானோ தேவசாயலில் படைக்கப்பட்டிருக்கவில்லை. இங்கேதான் மனிதனுக்கும் சாத்தானுக்கும் மகாபெரிய வேறுபாடு!

தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதன், சாத்தானின் வஞ்சகத்தில் விழுந்தபோதும், அவனுக்குள் உண்டான வெட்கமும் குற்ற உணர்வும் அவனை வேறுபடுத்திக் காட்டியது. மனிதன் பிசுாசு அல்ல; பிசாசின் வஞ்சகத்தில் பிடிபட்டவன். அப்படிப் பிடிபட்டதற்காக தேவன் அவனை வெறுக்கவில்லை; தள்ளிவிட வில்லை. தமது நோக்கத்தை உடைத்துவிட்டதற்காக அவர் மனிதனை அழித்துப்போடவுமில்லை. ‘நீ எங்கே இருக்கிறாய்’ என்று அன்போடுதான் கூப்பிட்டார். ஆதாம் ஏவாள் எந்த நிலையில் இருந்தார்கள் என்று தேவனுக்குத் தெரியாதா, என்ன? தெரிந்தும், அவர்களைச் சங்கடப்படுத்தாமல் அன்போடு பேசினார். ‘நீ நிர்வாணி என்று யார் உனக்குச் சொன்னது’ என்று அன்போடு விசாரித்தார். அவனைக் குற்றப்படுத்தி, சினங்கொண்டு வார்த்தைகளைக் கொட்டாமல், ‘நான் விலக்கின கனியைப் புசித்தாயா’ என்று கர்த்தர் கேட்டது நம்மைச் சிந்திக்கவைக்கட்டும். ஆதாம் ஏவாளையும், ஏவாள் சாத்தானையும் குற்றஞ்சாட்டி தம்மைக் குற்றமற்றவர்கள் போல காட்டியபோதும், தேவன் அவர்களை வையவுமில்லை; தள்ளிவிடவுமில்லை; அழித்துவிடவுமில்லை. மாறாக, ‘உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்’ என்று மனிதனுக்காகத் தாம் வகுத்திருந்த மீட்பின் திட்டத்தை, மனிதனை வஞ்சித்த சாத்தானிடமே சவாலாக முழங்கினார் கர்த்தர். விழுந்துபோன நிலையிலும் தேவன் மனிதனை நேசித்தாரே!

அன்பான தேவன் மனிதனைத் துரத்தினாரா?

ஆம், தேவன் தமது சமுகத்திலிருந்து மனிதனைத் துரத்திவிட்டார்; ஆனாலும் அவனை நேசித்தார். பாவத்தால் கறைப்பட்ட மனிதன், மகா பரிசுத்தமான தேவசந்நிதானத்தில் நிற்பது எப்படி? அவன் சாம்பலாகிவிடமாட்டானா? கர்த்தர் ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாம் ஏவாளை அனுப்பிவிட்டதுமன்றி, அவர்களைத் துரத்திவிட்டு, ஏதேன் தோட்டத்துக்குள் மனிதன் போகாதபடிக்கு வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும் வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தது ஏன் என்று வாதிடுகிறவர்கள் பலர்.

மனிதன் மனிதன்தான்; அவனுடைய பார்வை குறுகியது. தேவனாகிய கர்த்தரோ தூரநோக்குடையவர்; அவர் முடிவையும் அறிந்து வைத்திருக்கிறவர். இந்த தேவன் தமக்கென்று தாமே அன்பாக உண்டாக்கிய மனிதனை அழிந்துபோக விட்டுவிடுவாரா? இந்த இடத்திலே சில விஷயங்களை நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

1.மனிதன் வாழ்வதற்காகப் படைக்கப்பட்ட வனே தவிர சாவதற்கு அல்ல.

மனிதன் என்றும் தமது உறவில் நிலைத்திருக்கவேண்டும் என்பதற்காகவே அல்லாமல், அவன் செத்துப்போகவென்று தேவன் அவனை படைக்கவில்லை. மனிதன் தேவசாயலிலே படைக்கப்பட்டபோது, அவனும் சாவாமை உள்ளவனாகவே படைக்கப்பட்டிருந்தான். அவனுக்குள்ளிருந்த சுதந்திரத்தில் குறுக்கிட்டு அவனை அடிமையாக்கிக் கொள்ளாத தேவன், அந்த சுதந்தரத்திற்கு, சுயவிருப்பத்திற்கு, ஒரு பரீட்சையை அனுமதித்திருந்தார்.

“தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் …” (ஆதி.2: 16,17). இந்த ‘ஆனாலும்’தான் இன்றும் நமக்கும் சவாலாக இருக்கிறது. “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதி.2:17) என்று வாசிக்கிறோம். இது ஆலோசனையோ அறிவுரையோ அல்ல. இது கட்டளை. புசித்தால் ‘சாகவே சாவாய்’ என்று கர்த்தர் சொன்னதிலிருந்தே, மனிதன் சாவதற்காகப் படைக்கப்படவில்லை என்பது புலனாகிறது.

தேவன் தவிர்த்துவிட்ட கனியை மனிதன் புசித்தபோது அவன் தேவகட்டளையை மீறிவிட்டான், அவன் பரீட்சையில் தோற்றுவிட்டான். சாத்தான் சொன்னதுபோல (ஆதி. 3:4) மனுஷன் சாகவில்லை; அதற்காக அவர்கள் தேவர்களாகவுமில்லை. பதிலுக்கு அவர்களின் கண்கள் திறந்தது. திறவுண்ட கண்களால் அவர்கள் தங்கள் நிர்வாணத்தைத்தான் கண்டார்கள். பாவமும் வெட்கமும் ஒன்று சேர அவர்கள் தாங்களாகவே தேவசமுகத்தை விட்டுவிலகி ஒளித்துக்கொண்டனர். சரீர சாவு மாத்திரமல்ல, தேவனை அணுகமுடியாதபடி அவர்கள் தேவனைவிட்டும் முற்றிலுமாய் பிரிக்கப்பட்டனர். வாழ்ந்திருப்பதற்கென்று உண்டாக்கப்பட்ட மனிதனுக்கு இப்போ அவனது சரீரத்திலும் ஆத்துமாவிலும் சாவு நேர்ந்தது. இந்த நிலையில் மனிதனைக் குறித்த தேவநோக்கத்தை சாத்தான் தகர்த்து விட்டதுபோலவே தென்பட்டது. ஆனால், அந்த இடத்திலேயே மனிதனுக்காகத் தாம் வகுத்து வைத்திருந்த மீட்பின் திட்டத்தை தேவனாகிய கர்த்தர் பிரகடனப்படுத்திவிட்டார்.

2.தேவன் அன்பினிமித்தம் மனிதனைத் துரத்திவிட்டாரே தவிர, வெறுத்ததால் அல்ல;

அன்பான தேவன் ஏதேனைவிட்டே மனிதனைத் துரத்தியது ஏன்? “பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத் தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவ விருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய வேண்டும் என்று … (ஆதி.3:22). இதுவே, தேவ அன்பின் வெளிப்பாடு.

பாவ நிலையிலிருந்த ஆதாமும் ஏவாளும் ஜீவவிருட்சத்தின் கனியை உண்டு, நித்திய நித்தியமாகவே பாவத்திற்கு நித்திய அடிமைகளாகி, தேவனை விட்டு நித்தியமாய் பிரிந்து, நித்திய நரகத்தில் உழலவேண்டியவர்கள் ஆவார்கள். மனிதனை அன்பாகவே படைத்த தேவன் அவன் பாவத்தில் நித்தியமாக மாண்டு போக விட்டு விடுவாரோ, இல்லையே!

தேவாதி தேவன் தம்முடைய மகிமைக் கென்று உருவாக்கிய நம்மை உலகத்தோற்றத்தின் முன்னரே கண்டுகொண்டவர் (எபேசி. 1:4). அதேசமயம், ‘அவர் (கிறிஸ்து) உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து …’ (1பேது.1:20) என்ற வசனத்திலிருந்து மனிதனுக்குரிய இரட்சிப்பு, அவன் பாவத்தில் விழுந்த பிற்பாடு அல்ல, உலகம் தோன்றுவதற்கு முன்னரே தேவனால் நியமிக்கப்பட்டு விட்டிருந்தது என்பது தெளிவு.

3.தேவநோக்கத்தில் மீட்கப்பட்ட மனிதன்:

இப்படியிருக்க, தேவன் தமது உன்னத படைப்பாகிய மனிதனை சாத்தானின் கைகளில் விட்டுவிடுவாரா? வார்த்தையின்படி மீட்பராகிய கிறிஸ்து உலகிற்கு வரும்வரைக்கும், அந்த மீட்பிற்காக மனுமக்களை கர்த்தர் ஆயத்தப்படுத்திய வழிவகைகள் ஏராளம். அவற்றைத்தான் நாம் பழைய ஏற்பாட்டில் படிக்கிறோம். ஏற்றகாலத்தில் கிறிஸ்து வெளிப்பட்டு, மனுக்குலத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்தார். மீண்டும் மனுஷன் தம்முடன் ஒப்புரவாகி உறவில் வளருவதற்கும், நித்தியவாழ்வின் நிச்சயத்தைப் பெறவும் கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சாவதற்கென்று படைக்கப்படாத மனுஷன் சாவைத் தழுவியபோதும், தேவன் தாமே மனுஷனாகி, தம்மோடு நித்தியமாய் வாழுகின்ற கிருபையை அருளினார்.

அவர் அருளிய மீட்பைப் பெற்றுக் கொள்ளுகின்ற ஒவ்வொருவரும் கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்தும்படி அவருடைய முகத்தின் பிரகாசத்தைப் பெற்றுக்கொள்கிறான். அதாவது தேவநோக்கத்தை முன்னெடுக்கின்ற கிருபையை அவன் பெற்றுக்கொள்கிறான். அந்தக் கிருபை நமக்கும் அருளப்பட்டுள்ளது.

இவ்வளவாய் நம்மில் அன்புகூர்ந்த தேவன் அன்று ஆதாம் ஏவாளிடமும், பின்னர் ஆபிராமிடமும், தொடர்ந்து இஸ்ரவேல் ஜாதியிடமும் ஒன்றைத்தான் எதிர்பார்த்தார். தம்மை உலகுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்றே, ‘இஸ்ரவேலின் தேவன்’ என்று தமக்கு ஒரு நாமத்தையும் கொடுத்தார். ஆனால், இஸ்ரவேல் தேவநோக்கத்திலிருந்து பின்வாங்கியது. ஆனாலும், தாவீதுக்குச் சொன்னபடி, அதே இஸ்ரவேல் சந்ததியிலிருந்தே இரட்சகரை அனுப்பினார் தேவன். “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” (கொலோ.1:15). அவருக்குச் சாட்சிகளாகவும் (அப்.10:41), அவரைப் பிரதிபலிக்கிறவர்களாகவும் முன்னர் சீஷர்களும் இன்று கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட அவரது பிள்ளைகள் நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம். நியமிக்கப்பட்டிருக்கிறோம். ‘… இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2கொரி.4:6). நமது இருதயத்தில் பிரகாசித்த அந்த ஒளியை நாம் மறைத்து வைப்பது எப்படி?

நமது வாழ்வின் ஒரே நோக்கம்:

பாவத்துள் மாண்டுபோயிருக்கிற இந்த உலகில் கிறிஸ்துவே தேவன் என்பதற்குச் சாட்சிகளாய், சிலுவையில் வெளிப்பட்ட இரட்சிப்பை அறிவிக்கிறவர்களாக மாத்திரமல்ல, அவரை வாழ்வில் வெளிப்படுத்துகிறவர்களாய் வாழவே தேவன் நம்மை அழைத்து இரட்சித்திருக்கிறார். இதைத் தவிர வேறொன்று நமக்கு இருப்பது எப்படி? அப்படியிருக்க, கோபம் பொறாமை எரிச்சல் என்று நமது அழகான வாழ்வைப் பாழடித்து, கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக்கொள்வதில் இன்னமும் தாமதம் காட்டுவது ஏன்? நமது வாழ்வில் தேவன் கொண்டிருக்கும் நோக்கத்தை உதாசீனம் செய்து, நமக்கென்று பாதைகளை வகுப்பதும் ஏன்? நமக்கிருப்பது ஒரே வாழ்வு; அந்த வாழ்வில் நமக்கு இருக்கவேண்டியதும் ஒரே நோக்கம்தான். கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட நமது தேவனுடைய சாயலை – கிறிஸ்து இயேசுவை – அவரது குணாதிசயத்தை சிந்தையைத் தரித்துக்கொண்டு, வாழ்வினாலும் பேச்சினாலும் கிரியையினாலும் எல்லாவற்றாலும் கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்தி, அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனுமக்களை அந்த இரட்சகர் அண்டைக்கு வழிநடத்துவது தவிர வேறு என்ன நோக்கம் நமக்கு இருக்கமுடியும்?

பிள்ளைகளே, நமது வாழ்வு அழகானது, மேன்மையானது, அற்புதமானது. மெய்த் தேவனாகிய கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்துகின்ற உன்னத நோக்கத்தை தேவன் நம்மீது கொண்டிருக்கிறார் என்றால், தேவன் நம்மில் கொண்டிருக்கிற அன்பு எத்தனை உன்னதமானது என்பதை நாம் உணரவேண்டும். கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளும் அந்த உன்னத நோக்கத்தில் வாழும்போது, தேவனே நமக்குள்ளும் நமக்கூடாகவும் நற்கிரியைகளை நடப்பிக்கிறவராயிருக்கிறார். தேவபணிகள் நம் வாழ்வில் தாமாகவே தொடரும்.

ஆகவே, நமது வாழ்வின் அடிப்படை நோக்கிலிருந்து தவறிவிடாமல், பாவ சுபாவங்களைக் களைந்தெறியவும், கிறிஸ்துவின் சுபாவத்தைத் தரித்துக்கொள்ளவும் தேவாவியானவர் கரங்களில் நம்மைத் தருவோமாக. ஆமென்.