பெத்லெகேமின் நோக்கம்

கலாநிதி.சாம் கமலேசன்
(நவம்பர்-டிசம்பர் 2015)

“நாம் புத்திர சுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” (கலா.4:4,5).

பவுல் கலாத்தியா சபைக்கு எழுதும்போது கிறிஸ்தவர்களாயிருப்பதினால் கிடைக்கும் எழுச்சி பற்றி எழுதினார். அவைகளைப் பற்றிய சில அதிசயங்களும், அங்கு இருந்தன. ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்குரிய சுதந்திரத்தின் நிச்சயத்தில் அவர்கள் குறைவு பட்டிருந்தனர். இந்த உண்மையை கிறிஸ்தவர்களுக்கு எடுத்துக்காட்ட ஒரு பெரிய ஆஸ்திக்கு சுதந்தரவாளியான ஒரு சிறு பிள்ளையின் உதாரணத்தைப் பயன்படுத்துகின்றார்.

“பின்னும் நான் சொல்லுகிற தென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறு பிள்ளையாயிருக்கும் காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்” (கலா.4:1,2).

அந்தக் குழந்தை வளர்ந்து அனுபவங்கள் பெற்று கடந்துவரும்பொழுது ஆரம்பத்திலிருந்த அவனுக்குரியதான “எல்லா” ஆஸ்திகளுக்கும் உரியவனாய் மாறுகின்றான். “இப்பொழுது” பவுல்: “இதைத்தான் நீங்கள் அறிய வேண்டுமென்றிருக்கிறேன்” (கலா.4:9) என்கிறார். நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்தவர்கள்; நீங்கள் அவருடைய பிள்ளைகள். எனவே அதினால் உண்டாயிருக்கிற எல்லா நிச்சயம், அனுபவம் மற்றும் ஆனந்தத்திற்குள்ளும் நீங்கள் பிரவேசித்து அதனுடைய எல்லா சுதந்தரத்தையும் பெற்று வாழ வேண்டும்.

இயேசுவின் முதலாம் வருகை யில் “திரித்துவம்” செயல்படுவதை நாம் இந்த வசனத்தில் பார்க்கமுடிகிறது. எப்படியெனில்,

முதலில் காலம் நிறைவேறினபோது தேவன் தமது குமாரனை அனுப்பினார் – பிதாவின் அன்பு!

இரண்டாவதாக, “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவரும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவரும்”

– குமாரனின் தாழ்மை!

மூன்றாவதாக “நாம் புத்திர சுவிகாரத்தை அடையும்படி” – தேவ ஆவியின் சுதந்திரம்!

1. பிதாவின் அன்பின் இரகசியம்:

“தேவன் குமாரனை அனுப்பினார்” – இயேசு தேவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஊழியனான தேவகுமாரன். “தேவன் தம்முடைய குமாரனை கொடுத்தார்” – இதை இயேசு யோவான் 3:16 இல் சொல்லியிருக்கிறார். இயேசு தேவனின் பரிசு! “நான் பிதாவினிடத்திலிருந்து வந்தவன்” என யோவான் 5:43இல் கூறினார். இயேசுகிறிஸ்து அவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை விருப்பத்தோடும், கீழ்ப்படிதலோடும் ஏற்றுக்கொண்டார். இது குமாரனின் கீழ்ப்படிதல்.

ஆம், இயேசு தேவனின் பரிசு! – ஆம், ஆனாலும் “கீழ்ப்படிதல்” என்பதே கிறிஸ்துமஸின் அடிப்படையாகும். யோவான்ஸ்நானன், “தேவனால் அனுப்பப்பட்டார்”. ஆனால் இயேசுவோ, “தேவனிடமிருந்து வந்தார்”. பெத்லெகேமில் இயேசு பிறந்ததினால் அவரது வாழ்க்கை அங்கு ஆரம்பமானது என்று நாம் வேதத்தில் காணமுடியாது. அவர் வார்த்தையாக இருந்தார். அந்த வார்த்தை மாம்சமானது. “முன்பு ஏற்கனவே இருந்த நித்தியமான குமாரன்”. நமக்காக காணப்படும் வகையில் உண்மையாக வெளிப்பட்டார். தேவனுக்குரிய அனுபவமும், அன்பும் ஒரு ஒழுங்குமுறையின் படியும், அல்லது சட்டதிட்டங்களுக்கு உடன் படாத தன்மையுமாயிராதபடிக்கு, ஜீவன், விடுதலை, வெற்றி, சந்தோஷம் போன்ற வைகளை அளிப்பதற்காக வெளிப்பட்டார்.

தேவன் குழந்தையாய் மாறினார். ஆம், இது பிதாவின் அன்பின் இரகசியம்!

2. குமாரனின் தாழ்மையிலுள்ள அற்புதம்:

அவர் “ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்கு கீழானவருமாவார்”. கன்னி மரியாளின் மூலமாய் அவர் நம்முடைய துன்பம், கஷ்டம், துயரம், சோதனை, வெற்றி, சந்தோஷம், பசி, தாகம், களைப்பு போன்ற அனுபவங்களுக்குள்ளாக பிரவேசித்தார். நம்முடைய பாவத்தைத் தவிர, மற்ற எல்லா மனித அனுபவங்களிலும் பிரவேசித்தார்.

அவர் ஏழ்மையைப் பகர்ந்து கொண்டார். நம்மில் சிலருக்கு தெரிந்த வரைக்கும் அவர் தனிமையில் வாழ்ந்தவர். நம்மில் சிலர் உணர்ந்தவரைக்கும் அவர் அவமானத்தைச் சகித்தார். இருந்தபோதிலும், தன்னுடைய பிதாவினிடமிருந்த அவருடைய உறவு துண்டிக்கப்படாமலிருந்தது.

“பிதாவினுடைய சித்தத்தை செய்வதில் களிகூர்ந்து”, அவரிடம் உள்ள உடைக்கப்படாத உறவை கண்டார்.

ஒன்றை விரும்புவதும் அதை அடைவதும் தேவனைத்தவிர யாராலும் முடியாது. நான் விரும்புவதற்கு எனக்கு திறமை உண்டு. ஆனால் விரும்பிய அனைத்தையும் பெறுவதற்கு எனக்கு பலம் இல்லை. பரலோகத்துடன் உள்ள உடைக்கப்படாத உறவானது தேவனின் விருப்பத்தை நிறைவேற்ற நான் கொண்ட வாஞ்சையை பொறுத்தே அமைகிறது. பிறகு நான் அவரின் வல்லமையையும், நான் எதை வாஞ்சிக்கின்றேனோ அதையும் அடைய முடியும்.

தன்னிடம் ‘அதிகாரம்’ உண்டு என்று பெருமை பாராட்டிய பிலாத்துவை அவர் சந்தித்து, “உனக்கு தேவன் கொடுத்த அதிகாரம்” மட்டும்தான் உண்டு. “நானோ என் பிதாவின் சித்தத்தைச் செய்யவதற்கு இங்கு இருக்கிறேன்” என்று இயேசு கூறினார். இவ்விதமாய் இவ்வுலகம் நம்மை கீழ்ப்படுத்த முயற்சிக்கும் போது நமக்கு ஏற்படும் பயத்தை மேற்கொள்வதற்கு வழியை அவர் கற்பித்தார். எனவே நாமும், உடைக்கப்பட முடியாத பரலோக ஐக்கியத்துடன் வாழமுடியும்.

இயேசுவைப்பற்றி மக்கள் சொல்லும்போது, “இந்த மனிதன் வாழ்ந்ததைப்போல யாரும் வாழவில்லை. இந்த மனிதன் பேசினதுபோல யாரும் பேசவில்லை”. யார் இவர்? பிசாசுகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே! இவர் காற்று, கடல், நிலம், மரணம் போன்றவைகளின் மீது அதிகாரம் வைத்திருக்கின்றாரே! யார் இவர்? அவர்தான் ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும், நியாயப் பிரமாணத்திற்குட்பட்டவருமானவர். நமக்கு சந்தோஷம், சமாதானம், விடுதலை, சுதந்திரம் ஆகிய இவைகளைக் கொடுத்து தண்டனைக்குக் கீழ் வாழும் நமக்கு விடுதலையுண்டாவதற்காக அவர் பூரண விடுதலையுடனும், பூரண சந்தோஷத்துடனும், பிதாவுக்குப் பூரண கீழ்ப்படிதலுடனும் நாம் வாழும் இந்த கோளில் வாழ்ந்து நம்முடைய பாவங்களுக்காக துன்பப்பட்டார்.

3. தேவஆவியின் சுதந்திரத்தின் அதிசயம்:

மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார் (கலா.4:6).

“நாம் சுவிகார புத்திரத்தை அடையும்படிக்கு”

  • தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்! – பெத்லேகேம்
  • எனது தண்டனையைப் பெறும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்தார்! – கல்வாரி
  • திரும்பவும் உயிர்த்தெழுந்து பரிந்து பேசு வதற்காக சதாகாலமும் ஜீவிக்கிறார்! – காலியான கல்லறை
  • தேவன் தனது குமாரனின் ஆவியாகிய பரிசுத்த ஆவியை ஊற்றினார்! – பெந்தெகோஸ்தே நாள்

பவுல், 2 கொரி.5:21 இல் இவ்வாறு எழுதுகிறார்: “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்”. விசுவாசத்தினாலே என்னை “இயேசுகிறிஸ்துவுக்குள்” வைப்பதற்கு “என்னுடைய இடத்தில் ” அவரை வைப்பதற்கு தேவன் முற்பட்டார்.

ரோமர் 8:15,16இல், பவுல் “அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாமும்கூட அவரை நோக்கி கூப்பிட முடியும். அவர் நம்முடைய பிதா, அவர் நமது சொத்து, நம்முடைய எல்லாவற்றிற்கும் காரணமானவர். நமது எல்லா ஆசீர்வாதத்திற்கும், பொருளுக்கும் வாக்குத்தத்தத்துக்கும் வேதத்தின் வசனத்திற்கும் மேலானவர் அவர்தாம். இங்கே பெத்லெகேமின் நோக்கம் இருக்கிறது! நம்மை மீட்கவும், அவருடைய பிள்ளைகளாயிருந்து சந்தோஷம், சுதந்தரத்துடன் வாழ நம்மை தெரிந்தெடுக்கவுமே!

இக்கிறிஸ்துமஸ் நாட்களில் தேவனைச் சார்ந்து வாழுங்கள்! இயேசுகிறிஸ்துவுக்குள் ளாக எல்லாக் காரியங்களிலும் வாழ்வீர்களாக!! ஒருநாள் நீங்கள் அவருடன் வாழ்வீர்கள்!!!

சத்தியவசனம்