ஸ்திரீயின் வித்தாக வந்த மேசியா

Dr.உட்ரோ குரோல்
(நவம்பர்-டிசம்பர் 2015)

தீர்க்கதரிசிகள் முன்னுரைத்ததை நிறைவேற்ற மனுமகவாய் இவ்வையகத்தில் தோன்றிய தேவ மைந்தனின் பிறப்பைக் கொண்டாடும் உங்கள் யாவருக்கும் என்னுடைய அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

வேதபுத்தகத்தின் அநேக பகுதிகளில் பல வம்சவரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றை அநேகர் வாசிக்காது தவிர்த்து விடுகின்றனர். ஆனால் வேதத்தின் ஒவ்வொரு வசனமும் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு தேவமக்களால் நமக்கு அருளப்பட்ட ஓர் அரும்பெரும் பொக்கிஷமாகும். எனவே அப்பகுதிகளையும் நாம் அவசியம் படித்தாக வேண்டும். உதாரணமாக ஆதியாகமம் 5 மற்றும் 11 இல் அநேகருடைய பெயர்கள் காணப்படுகின்றன. இவைகளை நாம் ஏன் அறிந்துகொள்ளவேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கையே.

இவ்விதழில் நாம் இதற்கான பதிலை ஆராய்வோம். இப்பெயர்கள் இங்கு எழுதப்படாவிட்டால் நீங்களும் நானும் சரியான ஒரு மனிதரின் பிறப்பை கொண்டாடுகிறோமா என்பதை நிச்சயிப்பது கடினமே. வம்சவரலாற்றில் நாம் மேசியாவை எதிர்பார்ப்பதை வேதாகமம் நமக்கு விளக்கிக்காட்டுகிறது. இயேசுவின் மரபு வழியைப்பற்றி ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தில் முதல் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டுள்ளது.

ஏதேன் தோட்டத்தில் நடந்த நிகழ்வை ஆதியாகமம் 3:1-6 விளக்குகிறது. சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட ஏவாள் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்து ஆதாமுக்கும் கொடுத்தாள். அவனும் அதனை உண்டான். எனவே மனுக்குலம் பாவத்தில் விழுந்தது. அப்பாவத்திலிருந்து மனுக்குலத்தை மீட்க வந்த கிறிஸ்துவின் பிறப்பு தொடர்பான தீர்க்கதரிசனம் முதன் முதலாக ஆதியாகமம் 3:14,15இல் காணப்படுகிறது:

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்”.

ஒரு சிலருக்குமட்டும் வெளிப்படுத்தப்பட்ட மறைபொருளின் பகுதியிலிருந்து சாத்தானின் தலையை நசுக்க இயேசு ஏவாளின் வழியாக வருவார் என்று அறிகிறோம். ஸ்திரீயின் வித்தாக அவர் தோன்றுவார் என்பதே முதல் தீர்க்கதரிசனமாகும். இத்தீர்க்க தரிசனம் நிறைவேறியதை, “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப் பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” என்று கலாத்தியர் 4:5 காட்டுகிறது.

மனிதர்களுடைய பிரச்சனையைப் புரிந்துகொள்ள அவர் மனிதனாக வரவேண்டும்; மாத்திரமல்ல அதற்கான தீர்வு காண அவருக்கு தெய்வீகமும் தேவைப்படும். எனவேதான் ஆதியாகமம் 3:15 இல் அவர் ஸ்திரீயின் வித்தாகவும் கலாத்தியர் 4:5இல் தேவனுடைய குமாரன் என்பதில் அவருடைய தெய்வீகத் தன்மையும் விளக்கப்படுகிறது.

மேலும் சில தீர்க்கதரிசனங்களைப் பார்ப்போம். அவர் ஆபிரகாமின் வழித்தோன்றல் ஆவார். ஆதியாகமம் 12:1-3இல் தேவன் ஆபிரகாமிடம் அவரைப் பெரிய ஜாதியாக்கி, கடற்கரை மணலைப்போலவும் வானத்து நட்சத்திரங்களைப் போலவும் பெருகப்பண்ணுவேன் என்று வாக்களித்தார். தேவன் அவரை அழைத்தபோது அவருக்கு 75 வயது. ஆனால் அவ்வாக்குறுதி நிறைவேறும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லாதிருந்தது. 99 வயதான பின்னரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு மகனுக்காக அவர் காத்திருந்தார். தனக்கு 100 வயதானாலும் தன்னுடைய மனைவிக்கு 90 வயதாகிவிட்டதே என்றே அவர் கவலைப்பட்டார்.

ஆனாலும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின்படி ஆபிரகாமே இயேசுவின் மூதாதையர் ஆனார். அப்.3:12-25இல் யூதராயிருந்த அப்.பேதுரு எருசலேமின் யூதர்களை நோக்கி: “இஸ்ரவேலரே .. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலைபண்ண வேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். … நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்” என்று கூறினார். பூமியிலுள்ள அனைத்து ஜாதிகளும் ஆபிரகாமின் சந்ததியினாலே ஆசீர்வதிக்கப்படும் என்று உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் யூதர்களுக்கு மாத்திரமல்ல, யூதரல்லாதோருக்கும் இந்த ஆசீர்வாதம் உண்டு.

நாம் இப்பொழுது இரண்டு தீர்க்கதரிசனங்களைப் பார்த்தோம். ஒன்று அவர் ஸ்திரீயின் வித்தாக அதாவது ஒரு மனிதனாக வர வேண்டும். இரண்டாவதாக அவர் ஒரு யூதராக ஆபிரகாமின் சந்ததியில் வரவேண்டும்.

ஆபிரகாமுக்கு ஈசாக்கு மற்றும் இஸ்மவேல் என்று இரண்டு குமாரர்கள் இருந்தனர். தேவனுடைய திட்டத்தின்படி இயேசுகிறிஸ்து மேசியாவாக ஆபிரகாமின் சந்ததியில் தோன்ற வேண்டும். ஆயினும் இஸ்மவேலின் வழியாக அல்ல; ஈசாக்கின் வழியிலே பிறக்கவேண்டும். லூக்கா 3ஆம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு அவருடைய தாயாரின் பரம்பரை பட்டியல் காணப்படுகிறது. லூக்கா 3:34இல் அவர் யாக்கோபின் குமாரன். “யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்” என்று உள்ளது.

ஸ்திரீயின் வித்தாக (எண்ணிக்கைக்கடங்காதவர்கள்) வந்தவர்களில் இயேசுகிறிஸ்து ஆபிரகாமின் பரம்பரை என்பதால் எதிர்பார்ப் பின் வாய்ப்பு குறைந்தது. பின்னர் ஈசாக்கின் வழியே வந்தார் என்பதால் அது ஐம்பது விழுக்காடாகக் காணப்படுகிறது. ஈசாக்குக்கு யாக்கோபு மற்றும் ஏசா என இரண்டு குமாரர்கள் இருந்தனர். ஏசா மூத்தவராக இருந்தாலும் இயேசு இளைய குமாரனான யாக்கோபின் வம்சத்தில் தோன்றினார்.

யாக்கோபு மரணப்படுக்கையில் இருக்கும்பொழுது தன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க விரும்பினார் (ஆதி.49:8). எனவே பன்னிரண்டு பேரையும் அழைத்து வித்தியாசமான காரியங்களை அவர்களிடம் கூறினார்.

“சிமியோனும் லேவியும் கோபமும் மூர்க்கமுமானவர்கள்”. “ரூபன் சேஷ்டபுத்திரனாயிருந்தாலும் நிலையானவன் அல்லன்”. “நப்தலி ஒரு பெண்மான்; இசக்கார் ஒரு பலத்த கழுதை” என்று கூறிவிட்டு, யூதாவைப் பற்றி “யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின் மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன் முன் பணிவார்கள். யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதும் இல்லை, நியாயப் பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவனிடத்தில் சேருவார்கள்” (ஆதி. 49:8-10) என்றும் கூறினார். 12 குமாரர்களிலிருந்து யூதா என்ற ஒரு குமாரனின் வம்சத்தைத் தேவன் தெரிந்தெடுத்தார். இவ்வாறு மேசியாவின் பரம்பரைப் பட்டியலைப் பார்க்கும்போது இயேசுவிலே இவை அனைத்தும் நிறைவேறுகிறது.

மத்தேயு நற்செய்தி நூலில் தரப்பட்டுள்ள வம்சவரலாறிலே மூன்று 14 தலைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்து வினுடைய வம்ச வரலாறு என மத்தேயு 1:1 குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதில்லை என்பது தாவீது அரசரை குறிக்கிறது என சிலர் கூறுகின்றனர். ஆனால் தாவீதும் மேசியாவுக்காகக் காத்திருந்தார் என்பதால் அச்செங்கோல் தாவீதைக் குறிக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஏசாயா 11:1-2 இல் “ஈசாயென்னும் அடி மரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்” என நாம் வாசிக்கிறோம்.

யூதாவின் பரம்பரையிலிருந்து ஈசாயின் குடும்பத்துக்கு நாம் வருகிறோம். இந்த உறவை பவுல் ரோமர் 15இல் கையாண்டுள்ளார். ஈசாயின் குடும்பத்தைச் சேர்ந்த இயேசுவே மேசியா என்று பவுல் சொல்லுகிறார். ரோமருக்கு எழுதின நிருபத்தில் பவுல் 62 பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். அதில் ஒரு வசனத்தில் மாத்திரம் 4 பழைய ஏற்பாட்டுப் பகுதிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஏசாயா 11ஆம் அதிகாரம், ஈசாயின் வேர் என்பது மேசியாவைக் குறிப்பிடுகிறது. ஈசாயின் வேர், யாக்கோபில் தோன்றும் நட்சத்திரம் மற்றும் யூதாவின் செங்கோல் ஆகிய இவற்றை மேசியாவுக்கான அடையாளக் குறியீடுகள் என நாம் கொள்ளலாம். ஈசாய் என்பவருக்கு தாவீது என்ற பெயருடைய ஒரு மகன் இருந்தார். நற்செய்தி நூல்களை நாம் வாசிக்கும்பொழுது இந்த தாவீதின் வம்சத்தில் இயேசு பிறந்தார் என்று நாம் அறிந்துகொள்ளலாம். பின்னர் தாவீதிலிருந்து ஆபிரகாம் வரைக்கும், இறுதியாக அப்பரம்பரை பட்டியல் தேவன் உண்டாக்கின ஆதாம்வரைக்கும் காணப்படுகிறது. “இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை” என தாவீதுக்கு வாக்களிக்கப்பட்டது.

கி.மு. சுமார் 700 ஆண்டுகளில் ஏசாயா இதையே தீர்க்கதரிசனமாக; “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்” (ஏசா.9:6) என்று உரைத்தார். இது ஆச்சரியமாக உள்ளதல்லவா? அதாவது தாவீதின் அரச பரம்பரையில் மேசியா தோன்றுவார். மேசியா இந்த இராஜாங்கத்தை ஆட்சி செய்வார் என்ற பொருளில் அவர் கூறினார்.

மேலும் லூக்கா முதல் அதிகாரத்தில் காபிரியேல் தூதன் மரியாளிடம், “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்” (லூக். 1:31-33). தாவீதின் சிங்காசனம் இயேசு கிறிஸ்துவுக்கு உரிமையாகும் என்று உறுதியளிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் உரைத்துள்ள பரம்பரை பட்டியலை நாம் கவனமாகப் படித்தால் மத்தேயு 1:1கூறும் “ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு” என்பதை விளங்கிக்கொண்டு நாம் சரியான நபரின் பிறந்தநாளையே கொண்டாடுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம்.

தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஏழுபேரை நாம் இதுவரை பார்த்தோம். இவற்றில் ஏதேனும் ஒன்று நிரூபிக்கப்படாவிட்டால் இஸ்ரவேலின் இரட்சகர் இயேசுகிறிஸ்து என்று நம்மால் கூற முடியாது. இன்று பெத்லெகேமின் மாட்டுத் தொழுவில் பிறந்த குழந்தையை நாம் மையப்படுத்தி வாழ்த்துமடல்கள், நிகழ்ச்சிகள், வேத வாசிப்பு பகுதிகள், கீத ஆராதனைகள் யாவையும் செய்கிறோம். ஆனால் அவரைத் தேடிவந்த ஞானிகளோ குழந்தையை நாடவில்லை. தாவீதின் வழித்தோன்றலையே தேடிவந்தனர். ஈசாயின் முன்னோரான யூதா, யாக்கோபு, ஈசாக்கு மற்றும் ஆபிரகாம் சந்ததியில் வந்தவரைத் தேடி பணிந்துகொள்ள வந்தனர்.

அவர்கள் வம்சவரலாறு யாவையும் அறிந்த ஞானிகளாய் இருந்திருக்கலாம். தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்போகும் வாரிசை வாஞ்சித்து வந்தனர். எனவே நீங்களும் இயேசுவை முன்னணையில் பாலகனாகப் பார்க்காதீர்கள். இந்த மகவே தாவீதின் சிங்காசனத்துக்கு உரிமையாளரும், உலகத்துக்கு இரட்சகருமாக ஏற்படுத்தின தேவனுடைய அநாதி வரலாற்றை நோக்குங்கள்.

இத்தனை சாட்சிகள் இருந்தும் பழைய ஏற்பாட்டு புத்தகங்களை விசுவாசிக்கும் யூதர்கள் இயேசுவை ஒரு தீர்க்கதரிசியாகவே கருதுகின்றனர். காரணம் அவர்கள் புதிய ஏற்பாட்டு நூல்களை விசுவாசிப்பதில்லை. பவுல் தன்னைப் பற்றி “நான் யூதனாகப் பிறந்தேன், ஆயினும் இவைகளை நான் அறியாதிருந்தேன். இயேசுகிறிஸ்துவே எனக்கு அதை வெளிப்படுத்தினார்” என்று கூறியுள்ளார்.

நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாய் இருந்தாலும், உங்களுடைய நம்பிக்கைகளையும் விசுவாசத்தையும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, வேதபுத்தகத்தை திறந்த மனதுடன் வாசியுங்கள். அப்பொழுது யூதர்கள் மற்றும் உலகமக்கள் அனைவருக்கும் மேசியாவாக அவதரித்த இயேசுவின் பிறந்த நாளையே நாம் கிறிஸ்துமஸ் எனக் கொண்டாடுகிறோம் என்பது தெளிவாகும்.

உலகப்பிரகாரமாக நாம் எந்த சந்ததியாராய் இருந்தாலும் இயேசுவுக்குள் புது சிருஷ்டியாகும்பொழுது ஒரு புதிய குடும்பத்தினராய் மாறுகிறோம். நீங்கள் தேவனுடைய குடும்பத்தினர். நாம் யாவரும் இரட்சகராகிய இயேசுவுக்குள் ஒன்றாக இணைகிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்