அநாதி அன்பு!

சகோதரி சாந்தி பொன்னு
(நவம்பர்-டிசம்பர் 2015)

“அவர்(கிறிஸ்து) உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்” (1 பேதுரு 1:20).

மறுபடியும் ஒரு கிறிஸ்துமஸ் காலத்துக்குள் வந்துள்ளோம். ‘தேவாதி தேவன் மனுவானார்’ என்ற கிறிஸ்துமஸ் செய்தி கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் உரியதல்ல. பாவத்தில் சிக்குண்டு, விடுதலைக்காக ஏங்கிக் கலங்கி நிற்கும் ஒவ்வொரு மனுமகனுக்கும் உரிய செய்தி அது.

“இயேசு எனக்காகவே பிறந்தார்; எனக்காகவே வாழ்ந்தார்; எனக்காகவே மரித்தார்; எனக்காகவே உயிரோடெழுந்தார்; என்னைச் சேர்த்துக் கொள்ள மறுபடியும் வருவார்” – இதுவே சுவிசேஷம்!

இந்தச் சுவிசேஷத்தை, நல்ல செய்தியை முழுமனதோடு விசுவாசித்து, தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, இன்றுவரை இந்த உலகில் வாழ்ந்துபோன, வாழ்ந்துகொண்டிருக்கிற, ஏராளமான பேரின் வாழ்க்கையை இந்த சுவிசேஷம் தலைகீழாக மாற்றிவிட்டிருக்கிறது; மாறாத விடுதலையின் நிச்சயத்தையும் மகிழ்ச்சியையும் இது கொடுத்திருக்கிறது. மாத்திரமல்ல, மரணத்தின் பின்னான வாழ்வின் நிச்சயத்தையும் கொடுத்திருக்கிறது. இன்றும் மக்கள் அந்த நிலையான நிறைவான மகிழ்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டு வருகிறார்கள். தேவனுக்கே மகிமை!

மீட்பின் திட்டத்தை முன்னறிந்த தேவன்:

ஆனால், இந்த விடுதலைக்கான சிந்தனை தேவனிடத்தில் தோன்றியது எப்போது என்பதை நாம் சிந்தித்துப்பார்த்ததுண்டா? மனிதன் பாவத்தில் விழுந்த பிற்பாடா? மனிதன் சாத்தானின் வஞ்சக வலைக்குள் அகப்பட்டபோது, தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” (ஆதி. 3:15) என்று சொன்னாரே, அந்த வேளையிலா? அல்லது, “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்று சொல்லி ஆபிராமைக் கர்த்தர் அழைத்தாரே, அப்பொழுதா? அல்லது, மிருங்களின் பலி இரத்தம் மனிதனை விடுவிக்க முடியாது என்று கர்த்தர் கண்டு, இனி என்ன செய்யலாம் என்று சிந்தித்தாரா? அல்லது, தாம் அனுப்பிய எச்சரிப்பின் செய்தியை அறிவித்த தீர்க்கதரிசிகளை உதாசீனம் செய்து, கொலை செய்து தேவ எச்சரிப்பை மக்கள் நிராகரித்தபோது, இனி எதுவும் செய்யமுடியாது என்று எண்ணி, தாமே மனிதனாய்ப்போவோம் என்று தேவனாகிய கர்த்தர் எடுத்த முடிவா இது?

இல்லை! இவை எதுவும் இல்லை. உலகத் தோற்றத்திற்கு முன்னரே கிறிஸ்துவானவர் இரட்சகராகக் குறிக்கப்பட்டவர் என்பதே பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ள மகத்தான செய்தி. ‘ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்’ என்று மனித சரித்திரத்தில் தேவன் தம்மை ஈடுபடுத்திய நிகழ்வின் முதல் வார்த்தை எழுதப்படும் முன்னரே, மனித அறிவினால் கணக்கிடப்பட முடியாத காலங்களுக்கு முன்னரே, தாம் படைக்கப்போகிற படைப்பின் மகிமையையும், அந்த மகிமையை அவன் இழப்பான் என்பதையும், தாம் உருவாக்குகின்ற மனிதனைத் தாம் இழக்கத் தயாரில்லை என்பதையும், இன்னுமொரு லூசிபராக மனிதன் நிரந்தரமாகத் தம்மைவிட்டுத் தள்ளப் படக்கூடாது என்பதையும், அவன் மீட்கப்பட்டு, திரும்பவும் தம்முடன் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் முன்னறிந்தவரே நமது தேவன்.

“அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என்று கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்னபோது, அவருடைய அளவிடமுடியாத அந்த அன்பு, மனுக்குலம் முழுமைக்கும் சாட்சியாக நிற்கும்படி அழைக்கப்பட்ட இஸ்ரவேலுக்கு மாத்திரமல்ல, அந்தச் சாட்சியைப் பெற்றுக் கொண்ட நமக்கும் உரிய ஒரு வாக்குறுதி இது. ‘அநாதி’ என்ற பதத்தின் கணக்கீட்டை எந்த மனித அறிவினாலாவது நவீன தொழில் நுட்பகளினாலாவது கணக்கிட முடியுமா? எவராலும் எதனாலும் அது முடியாது! ஏனெனில், அது தேவனுக்கே உரிய கணக்கு.

தாம் உருவாக்கிய மனிதனை முன்னறிந்த தேவன்: நம்மைக் குறித்து வேதவாக்கியம் சொல்லுவதை இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டும். ‘தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே…” (எபேசி.1:4). ஏதோ தேவன் தாம் விளையாடுவதற்காக மனிதனை உருவாக்கவில்லை. மனிதனின் உருவாக்கம் தேவனுடைய அநாதிதிட்டம். உலகம் தோன்றுவதற்கு முன்னரே, நாம் தேவனுடைய இருதயத்தில் இருந்திருக்கிறோம் என்பதை நினைத்துப்பார்ப்போம். ஆண்டவர் நம்மீது வைத்த அன்பு அநாதியானது. அந்த அநாதி அன்பே அவரை மனிதனாக வரவைத்தது; அந்த மாறாத அன்பே சிலுவையில் வெளிப்பட்டது. அந்த ஒப்பற்ற அன்பு, நம்மைத் தம்முடன் சேர்த்துக்கொள்ள ஆவலாயிருக்கிறது. இந்த அன்பை நாம் வெறும் கிறிஸ்துமஸ் ஆராதனைகளுக்குள்ளும் கீதாராதனை பாடல்களுக்குள்ளும் புதைத்துவிடலாமா?

தேவன் நம்மை முன்னரே அறிந்து வைத்திருக்கிறவர் என்பதைக் குறித்து வேதத்திலே பல நிரூபணங்கள் உண்டு. கர்த்தர் எரேமியாவுக்குச் சொன்ன வார்த்தையை நாம் நினைவுபடுத்துவோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்…” (எரேமி.1:5). மேலும், ‘.. என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது’ (சங்.139:16) என்று தாவீது பாடிவைத்ததையும் நாம் சிந்திக்கவேண்டும். இன்னும், “… உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக” (லூக்.1:13) என்று யோவான் ஸ்நானனின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ளுவது நல்லது.

எல்லாவற்றுக்கும் மேலாக, “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவளுக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (ஏசா.7:14) என்று இயேசுகிறிஸ்துவின் பிறப்பும் முன்னறிவிக்கப்பட்ட ஒன்று என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும். இவை யாவையும் பார்க்கும்போது, ‘இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது’ (சங்.139:6) என்று தாவீதுடன் சேர்ந்து நாமும் சொல்லலாமே! நாம் பிறப்பதற்கு முன்னரே, கர்ப்பத்தில் உருவேற்படும் முன்னதாகவே நம் ஆண்டவர் நம்மை அறிந்துவைத்திருக்கிறார் என்ற சிந்தனை நமது உள்ளங்களை மகிழ்விக்கட்டும். மாத்தி ரமல்ல, நம் ஒவ்வொருவருடைய முடிவையும் கூட அவர் தமது அற்புதமான கரத்தில் கொண்டிருக்கிறவர். இந்த அன்பை என்ன சொல்ல!

பிறப்பும் இறப்பும் உயிர்த்தெழுதலும்:

கிறிஸ்துவின் முதலாம் வருகை அநாதியாய் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாயிருந்தபோதும், அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பாவமில்லாதவராய் சிலுவையில் தொங்கி மரித்ததனால் தேவ திட்டம் முழுமை பெறவில்லை. தேவன் அவரை உயிரோடே எழுப்பினார். அந்த உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் நமக்கு மீட்பும் இல்லை; நமது வாழ்வுக்கும் நம்பிக்கை கிடைத்திராது என்பதை இந்த கிறிஸ்துமஸ் ஆரவாரத்தில் நாம் மறந்துபோகக்கூடாது. இதைத்தான் பவுலடியார், ‘கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எங்கள் பிரசங்கமும் விருதா; உங்கள் விசுவாசமும் விருதா” (1கொரி. 15:14) என்று எழுதியுள்ளார். ஆக, மனிதனாய் வந்து பிறந்த இயேசு, சிலுவை மரணத்தை ஏற்றிராவிட்டால் இன்று நாம் எங்கே? மரித்த இயேசு உயிர்த்தெழுந்திருக்காவிட்டால் உலகில் வாழ்ந்த பிரமுகர்கள் பட்டியலில் ஒருவராக இயேசுவும் சேர்க்கப்பட்டிருப்பாரே தவிர, மனுக்குலத்திற்கு நித்திய வாழ்வின் நிச்சயம் ஏது?

நமது ஆண்டவரோ சாவின் கூரை ஒடித்து, பாதாளத்தை வென்று உயிரோடே எழுப்பப்பட்டார். ‘தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார், அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது’ (அப்.2:24). இந்த மகிமையின் உயிர்த்தெழுதல் சரித்திரத்தில் நிகழ்ந்திராவிட்டால், இயேசுவும் உலகில் மறக்கப்பட்டோரில் ஒருவராயிருந்திருப்பார். அவர் பிறந்ததை நினைவுகூருவது கூட, உலகின் பிரமுகர்களை நினைவுகூரும் வரிசையில் நிகழக்கூடும்.

அநாதி சிநேகம்

ஆனால், கிறிஸ்துவின் பிறப்பு தேவனால் அநாதியாய் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. மனிதனைத் தேவன் மண்ணினாலே உருவாக்கி, தமது ஜீவசுவாசத்தை அவனது நாசியிலே ஊதுவதற்கு முன்னரே அவர் மனிதனை நேசித்ததால் இது தீர்மானிக்கப்பட்டது. சகலத்தை முன்னறிந்தவரும், முடிவையும் தமது கரத்தில் கொண்டிருக்கிறவருமாகிய நேசபிதாவால் இது தீர்மானிக்கப்பட்டது. ‘நான் உருவேற்படும் முன்னரே என் ஆண்டவர் என்னை அறிந்தவர்; நான் உருவேற்படும் முன்னரே என் மீட்புக்காகத் தம்மைக் கொடுக்கத் தீர்மானித்தவர்!’

இந்த அன்பை எப்படி நம்மால் துச்சமாக எண்ணமுடியும்? அந்த அளவிடமுடியாத அன்பை இன்று நாம் என்ன செய்கிறோம்? மனுக்குலத்திற்கு ஒரு கொண்டாட்டம் ஒரு பண்டிகை தேவை என்பதற்காக இயேசு வந்து பிறக்கவில்லை. நித்திய நித்தியமாய் மனுஷன் வாழவேண்டிய பரலோக ராஜ்யத்தின் செய்தியைச் சுமந்துகொண்டே இயேசு வந்து பிறந்தார்.

மனுக்குலம் இந்த உலகிற்குரியவர்களல்ல; பாவத்துடன் மாண்டுபோகிறவர்கள் அல்ல; அவர்களுடைய வாழ்வு பரலோகத்திற்குரியது என்ற நல்ல செய்தியுடனேதான் இயேசு வந்து பிறந்தார். இல்லையானால் அவரது பிரசங்கம், ‘மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது’ (மத்.4:17) என்று ஆரம்பித்திருக்காது. அந்த ராஜ்யத்தின் பிள்ளைகளாகும் தகுதியை இழந்திருந்த நம்மைப் பிதாவோடு ஒப்புரவாக்குமுகமாகவே இயேசு சிலுவையை ஏற்றுக்கொண்டார். தேவன் தமது அநாதித் திட்டப்படி அவரை உயிரோடே எழுப்பினார்.

நாம் இன்று கொண்டாடுவது,

மரித்துப்போன ஒருவரை அல்ல; ஜீவனுள்ள தேவனை;

நம்மை மறுபடியும் தம்முடன் சேர்த்துக் கொள்ள மேகங்களின் மீது வெளியரங்கமாக வர இருக்கிறவரை;

தமது குற்றமில்லாத மாசற்ற விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே நம்மை மீட்டு, தமது உயிர்ப்பினாலே அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்திரத்திற்கேதுவாக ஜீவனுள்ள நம்பிக்கையை நமக்குத் தந்தவரை!

புறப்படுங்கள்!!!

அநாதியாய் நம்மில் இத்தனை அன்புகூர்ந்த நம் ஆண்டவரை இன்று நாம் என்ன செய்கிறோம்? அவருடைய பலி தற்செயலானது மல்ல, மனிதன் பாவத்தில் விழுந்து முழு உலகமும் தேவனுடைய கட்டுப்பாட்டை மீறிய பிற்பாடு தேவன் போட்ட திட்டமும் அல்ல. சகலத்தையும் அறிந்த சர்வவல்ல தேவனுடைய அநாதித்திட்டம். அவர் நம்மை அநாதியாய் சிநேகித்தவர். ஏற்ற காலத்தில் மனுஷனாக உலகில் வந்து உதித்தவர். தாம் உலகிற்கு வந்த நோக்கத்தைப் பூரணமாய் முடித்து பரத்துக்கு ஏறிப்போனவர். குறிக்கப்பட்ட காலத்தில் தம்முடன் நம்மைச் சேர்த்துக் கொள்வதற்காக மறுபடியும் திரும்ப வருவார்.

ஆகையால், என்றும்போல கொண்டாட்டங்களில் களித்திராதபடி, தேவன் நம்மீது கொண்டுள்ள அநாதி அன்பை நினைந்து, புறப்பட்டுப்போவோமாக. தேவன் மனுக்குலத்தில் வைத்த அந்த அநாதி அன்பை உணராமல் தெரியாமல் அழிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கும் மக்களிடம் அந்த அன்பை வெளிப்படுத்துவோமாக. துக்கத்திலும், நம்பிக்கை இழந்த நிலையிலும், குறைவிலும் இருக்கிற மக்களிடம் ஆறுதலின் நற்செய்தியை அறிவிப்பதுடன் நிற்காமல், நமக்கென்று இருப்பதையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முன் செல்லுவோமாக. ஏனெனில், தம்மை நமக்காக முழுமையாகக் கொடுக்குமளவுக்குத் தேவன் நம்மில் அநாதியாய் அன்புகூர்ந்தாரல்லவா!

“… விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அனுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்” (எபேசி.3:17-19).

பவுலடியாரின் இந்த ஜெபம் இன்று நமக்குரியதாகட்டும். வாசகர்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் அன்பின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

சத்தியவசனம்