காரணங்களை மறக்கச் செய்யும் காரியங்கள்

திரு.எம்.எஸ்.வசந்தகுமார்
(நவம்பர்-டிசம்பர் 2015)

மானிட வாழ்விலுள்ள மிகப்பெரிய குறைபாடு, அவன் எவைகளை மறக்க வேண்டுமோ அவைகளை மறக்காமலும், எவைகளை மறக்கக்கூடாதோ அவைகளை மறந்துவிடுவதுமேயாகும். அர்த்தமற்ற சம்பவங்கள், அவசியமற்ற சஞ்சலங்கள் அனைத்தும் அவன் மனதை ஆட்கொண்டுவிடுவதனால், ஆசீர்வாதமாய் அமையும் சத்தியங்களும், ஆனந்தத்தை அளித்திடும் சம்பவங்களும் அவன் மனதில் நிலைத்திருப்பதேயில்லை. இதனால், காரணங்களை மறக்கும் காரியங்களில் அவன் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. அதாவது, அவன் செய்யும் அநேக காரியங்கள் கடமைக்காகவும் கட்டாயத்திற்காகவும் செய்யப்படுகின்றதேதவிர, அதைச் செய்வதற்கான காரணம் என்னவென்பதும், அதன் சிறப்பம்சம் முக்கியத்துவம் என்பனவும் அவனால் மறக்கப் பட்டுவிடுகின்றன. கிறிஸ்தவர்களாகிய நாம் மட்டும் இதற்கு விதிவிலக்கானவர்கள் என்று கூறமுடியாது.

கிறிஸ்தவர்களாகிய நாமும், மற்றவர்களைப் போலவே அவர்கள் மத்தியில் வாழ்வதனால், அவர்களைப் போலவே நாமும் அநேக சமயங்களில் மறக்க வேண்டியவைகளை மறக்காமலும், மறக்கக்கூடாதவைகளை மறந்தும் விடுகிறோம். இதனால்தான், வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை நாம் ஆசரித்து வந்தாலும்கூட, பலதரப்பட்ட காரியங்களிலும் ஈடுபட்டு அதன் முக்கியமான சில காரணங்களை முழுவதுமாக மறந்துவிடுகிறோம். பரம்பரை பரம்பரையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆசரித்து வருகின்றபடியினால் அந்தப் பழக்கத்தை விட்டுவிடக்கூடாது என ஒரு சாரார் எண்ணுகையில் மறுசாரார், மற்ற மதத்தவர்களுக்கு திருநாட்கள் இருப்பதுபோல கிறிஸ்தவர்களாகிய நமக்கு இப்பெருநாள் உள்ளது என கருதுகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பற்றி இம்மாதிரியான காரணங்கள் நம் மனதில் இருப்பதனால், நம் மனதில் இருக்கவேண்டிய உண்மையான காரணங்களை மறந்தேவிடுகிறோம். இவ்வாறு நாம் மறந்துவிடும், ஆனால் மறக்கக்கூடாத முக்கிய காரணங்கள் சிலவற்றை, இவ்வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு முன்பாக சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

கிறிஸ்துமஸின் நடைமுறையை அனுசரிக்க மறத்தல்:

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடுவதற்காக பல காரியங்களில் ஈடுபடும் நாம் அநேகமாக மறந்துவிடும் காரியம்தான் அதன் நடைமுறையை அனுசரிப்பதாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை எந்த அளவுக்கு எளிமையான முறையில் அனுசரிக்க வேண்டும் என்பதை மறந்தவர்களாக, கடன்பட்டாவது பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகிறோம். மற்ற மதத்தினர் எவ்வாறு தங்கள் திருநாட்களை பட்டுப் புடவைகள், பலகாரங்கள், பட்டாசு வெடிகள் சகிதம் வெகு அமர்க்களத்துடன் கொண்டாடுகிறார்களோ, அதைப்போலவே நாமும் செயல்பட ஆசைப்படுகின்றோம். இதனால் கிறிஸ்துமஸின் நடைமுறையை அனுசரிக்க முழுவதுமாக மறந்துவிடுகிறோம். இதற்குக் காரணம், இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருவதற்காய் ஆசரிக்கப்படும் இப்பண்டிகை நாளில், அவரது பிறப்பின் சம்பவங்களைப் பற்றி சிந்தித்துப்பாராமல், நம்மைச் சுற்றியுள்ளோர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை முக்கியமாக கருதி செயல்படுவதாகும்.

இயேசுகிறிஸ்து பிறந்தது மாடமாளிகையில் அல்ல, மண் குடிசையிலேயே ஆகும். அவர் செல்வச் செழிப்பில் அல்ல, ஏழ்மைக் கோலத்திலேயே பிறந்தார். அவருடைய பெற்றோர் வசதி படைத்தவர்கள் அல்ல; எளிமையானவர்களே ஆவர். முதன்முதலாக அவரைத் தரிசிக்க வந்தவர்கள், சமுதாயத்தில் மேலிடத்திலுள்ளவர்கள் அல்ல, சாதாரண மேய்ப்பர்களே. கிறிஸ்துமஸ் பண்டிகையானது வீண் ஆடம்பரங்களும் பகட்டுமின்றி, எளிமையான முறையில் அனுசரிக்கப்படவேண்டும் என்பதையே இவை யாவும் நமக்குப் புலப்படுத்துகின்றன. எனவே, அனாவசியமான காரியங்களில் ஈடுபட்டு நாம் மனதில் வைத்திருக்க வேண்டிய அவசியமான காரணமான அதன் நடைமுறையை அனுசரிக்க மறந்துவிடாமல், எளிமையான முறையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆசரிப்போமாக.

கிறிஸ்துமஸின் நன்மையை அனுபவிக்க மறத்தல்:

நம்மில் அநேகர், வருடம் தவறாமல் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆசரித்து வந்தால் கூட, அதன் நன்மையை அனுபவிக்க நாம் மறந்து விடுவதனால், அது அர்த்தமற்ற வெறும் கொண்டாட்டமாக மாறிவிடுகின்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையானது இயேசுகிறிஸ்துவின் மானிட பிறப்பை நினைவூட்டும் திருநாள் என்பதை நாம் அறிந்திருந்தாலும்கூட, அதனால் நமக்கு ஏற்பட்ட நன்மை என்ன என்பதை மறந்துவிடுகின்றோம். இதனால் இப்பண்டிகையானது நமக்கு எவ்விதமான ஆசீர்வாதமும் அற்றதாகவே உள்ளது.

இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ள வரவில்லை, மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று பார்த்துவிட்டு வருவோம் என்பதற்காகவும் இவ்வுலகிற்கு அவர் விஜயம் செய்யவில்லை. மாறாக, நமக்கு நன்மை செய்யவேண்டும் என்னும் நோக்கத்துடனேயே “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலி.2:7), ‘அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்’ (மத்.1:21) என்பதே அவருடைய பிறப்பைப் பற்றி அறிவிக்கப்பட்ட சத்தியமாகும். இச்சத்தியமானது மனிதர்களாகிய நமக்கு நன்மை அளிப்பதாயுள்ளதால் இந்த நன்மையை மறந்தவர்களாக கிறிஸ்துமஸை ஆசரிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இந்த நன்மையை மனதில் கொண்டவர்களாக இப்பண்டிகையை கொண்டாடினால் மட்டுமே நாம் பிரயோஜனமான முறையில் இந்நாளை திருநாளாக ஆசரித்துள்ளோம் என்று சொல்லலாம். எனவே, எதை மறந்தாலும் இந்த நன்மையை அனுபவிக்க மறந்துவிடாமல் இருப்போமாக.

கிறிஸ்துமஸின் நன்றியை அளிக்க மறத்தல்:

கிறிஸ்து பிறப்பு பண்டிகையானது நமக்கு நன்மையளிப்பதாய் இருப்பதனால் அந்த நன்மையை அனுபவிக்க மறந்துவிடாமலிருக்க வேண்டிய நாம், அந்த நன்மைக்காய் நம் நன்றிகளைச் செலுத்தவும் மறந்துவிடாமலிருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடந்தோறும் கொண்டாடும் நாம், பலருக்கு நம்முடைய உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக நமக்கு பரிசுகளைத் தந்தவர்களை மனமுவந்து பாராட்டுகிறோம். வாழ்த்து மடல்களை அனுப்புபவர்களுக்கு நம் வாழ்த்துக்களையும் நன்றியுடன் தெரிவிக்கிறோம். புத்தாடை வாங்கித் தருபவர்களைப் புகழ்கிறோம். ஆனால் இவையெல்லாம் நமக்கு கிடைக்க காரணமாயிருந்த இயேசு கிறிஸ்து தன்னையே நமக்குத் தந்த போதிலும்கூட, அவருக்கு நமது நன்றிகளைத் தெரிவிக்கமட்டும் ஏனோ நாம் மறந்துவிடுகிறோம்.

இயேசுவின் பிறப்பை முதலில் தரிசிக்கச் சென்ற மேய்ப்பர்களும், இச்செய்தியை அவர்களுக்கு அறிவித்த தேவ தூதரும், கர்த்தர் மனுக்குலத்திற்கு செய்த நன்மைக்காய் அவருக்கு நன்றி செலுத்தியது நாம் மறவாது மனதில் வைத்திருக்கவேண்டிய விஷயமாய் உள்ளது. “மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டத்தின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்” (லூக்.2:20). இயேசுவின் பிறப்பை இவர்களுக்கு அறிவித்த தூதனும், பரமசேனையின் திரளுடன் சேர்ந்து தேவனை துதித்தான் (லூக்.2:13,14). தங்களுக்காக இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வராதபோதிலும் கூட, தேவனுடைய நன்மையான ஈவை எண்ணி அவருக்குத் தங்கள் நன்றிகளைத் தேவதூதர்கள் தெரிவித்தார்கள்.

அப்படியானால், மனிதர்களாகிய நமக்காக, நமக்கு நன்மையளிப்பதற்காக வந்தவருக்கு நாம் நமது நன்றிகளைத் தெரிவிக்க மறந்து விடுவது முறையாகுமா? எனவே இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகையில், அவருடைய நாமத்தைத் துதிக்கும் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்கு செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் (எபி.13:15) என்பதை மறந்துவிடாது, கிறிஸ்துவின் பிறப்பினால் நமக்குக் கிடைத்த நன்மைக்காக நமது நன்றிகளை அவருக்கு செலுத்தவேண்டும்.

கிறிஸ்துமஸின் நற்செய்தியை அறிவிக்க மறத்தல்:

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும்போது பொதுவாக எல்லோரும் அதன் நற்செய்தியை அறிவிக்க மறந்துவிடுகிறோம். விருந்து, விழா என பண்டிகையை விமரிசையாய்க் கொண்டாடும் நாம், பண்டிகையின் அமர்க்களத்தில் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க மறந்துவிடுகின்றோம். கிறிஸ்துமஸ் பண்டிகை நமக்கு அளிக்கும் நற்செய்தி என்னவென்பதை ஆண்டவரை அறியாதவர்களுக்கு அறிவிக்க மறப்பது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயமாகும். இதில் தேவதூதர்களின் செயல் நமக்கு நல்லதோர் உதாரணமாய், நம் கடமையை நமக்கு நினைவூட்டும் செயலாய் உள்ளது. இயேசுபிறந்தார் என்னும் நற்செய்தியை, அதை அறியாத மேய்ப்பர்களுக்கு அவர்கள் அறிவித்தனர் (லூக்.2:9-12). தங்களுக்கு நன்மையளிக்காத செய்தியைத் தேவதூதர் மற்றவர்களுக்கு அறிவித்தால், மனிதர்களாகிய நமக்கு நன்மையளிக்கும் செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க நாம் மறந்துவிடலாமா?

மற்ற மதத்தினர் தங்களுடைய பண்டிகை நாட்களில் தாங்கள் தயாரிக்கும் இனிய பலகாரங்களை கிறிஸ்தவர்களாகிய நமக்கும் கொண்டுவந்து தருவது நம் நாட்டுப்பழக்கம். அவர்கள் மனம் புண்பட்டு விடக்கூடாது, பக்கத்து வீட்டில் அவர்கள் வாழ்வதினால் அவர்களுடன் இன்முகத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காய் அவர்கள் தருபவற்றை மலர்ந்த முகத்துடன் நாம் வாங்கிக் கொள்கின்றோம். மட்டுமல்ல, அவர்களது செயல்களுக்கு பிரதி உபகாரமாக நாமும் கூட கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தவுடன் நாம் தயாரிக்கும் பலகாரங்களை அவர்களுக்குக் கொடுக்கின்றோம். அத்தோடு, நம்மை நாடி வருபவர்களுக்கு உதவி உபகாரம் என்று பணத்தை அள்ளிக்கொடுப்பவர்களும் உண்டு. உறவினர்களுக்கெல்லாம் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றோம். இத்தகைய காரியங்களில் நாம் ஈடுபடுவதால், நாம் முக்கியமாக மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டியதை முழுவதுமாக மறந்து விடுகின்றோம்.

நாம் மற்றவர்களுக்கு எவ்வளவுதான் பரிசுகளையும் பணத்தையும் அள்ளிக் கொடுத்தாலும், அவர்களுக்கு இரட்சகரான இயேசுவைக் கொடுக்காவிட்டால், நம்முடைய உதவி உபகாரங்கள் அனைத்தும் பிரயோஜனமற்றவைகளாகவே இருக்கும். இயேசுகிறிஸ்து கிறிஸ்தவர்களுக்காக மட்டும் பிறக்கவில்லை. மாறாக, அவரது பிறப்பு, “எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியாகும்”(லூக்.2:10).

எனவே நாம் மற்றவர்களுக்கு எதைக் கொடுத்தாலும் “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்” (லூக்.2:11) என்னும் நற்செய்தியை அவர்களுக்கு அறிவிக்காமல் இருந்துவிடக்கூடாது. இயேசுகிறிஸ்துமட்டுமே நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடிய விலைமதிப்பற்றதும், எப்போதும் வைத்திருக்கக் கூடியதுமான பிரயோஜனமான பரிசாகும் என்பதை மறந்துவிடாமலிருப்போமாக.

கிறிஸ்துமஸ் நாயகரை அறிய மறுத்தல்

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் நாம் இதற்குமுன் அறிந்துகொண்ட நான்கு காரணங்களையும் மறக்காமலிருந்தும், அதன் நாயகரை அறிய மறந்துவிடுபவர்களாய் இருந்தால் பண்டிகை கொண்டாடுவதில் எவ்வித பிரயோஜனமுமில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் அநேகர், அதன் நாயகரான இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களாக – அவரை முற்றிலுமாய் மறந்தவர்களாக, உல்லாசமாய்ப் பொழுதைப் போக்குவதையே தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களது பண்டிகைக் கொண்டாட்டங்கள் எதிலும் இயேசுகிறிஸ்துவுக்கு இடமே இருப்பதில்லை. அவரைப் பற்றிய நினைவே அற்றவர்களாக கிறிஸ்துமஸ் திருநாளைக் கழித்துவிடுகின்றனர். இது, நம் மத்தியில் இல்லாத ஒருவருடைய பிறந்த தினத்தை நாம் கொண்டாடும் அர்த்தமற்ற செயலுக்கொப்பானது. கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்த தின விழாவாயிருப்பதால், அவரில்லாமல் அத்தினத்தை நாம் கொண்டாடலாமா? அவரை மறந்துவிட்டு அவரது பிறந்ததினத்தை நாம் கொண்டாடுவதில் அர்த்தம் எதுவுமில்லை.

இத்தனை வருடங்களாக நாம் இயேசு கிறிஸ்து இல்லாமலேயே அவருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடியிருக்கலாம். ஆனால் இம்முறை பண்டிகையை கொண்டாடுவதற்கு முன் நாம் நம்மைப்பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்போம். நமது வாழ்வில் இயேசுகிறிஸ்து இருக்கின்றாரா? நம் இதய நாயகராக அவர் நம்முடன் இருக்கின்றாரா? அவரது பிறந்தநாளை நாம் அவருடன் சேர்ந்தே கொண்டாடவேண்டும். பொதுவாக எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டத்திலும், அப்பிறந்த நாளுக்குரியவருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். மற்றவர்களது கவனம் முழுவதும் அந்நபர் மீதே பதிந்திருக்கும். அவரை மகிழ்வுடன் வைத்திருப்பதே மற்றவரது நோக்கமாயிருக்கும். வாழ்த்துக்கள், பரிசுகள் அனைத்தும் அவருக்கே கொடுக்கப்படும். அன்றையத்தின உணவுகூட அவருக்கு விருப்பமானதாகவே அமைந்திருக்கும். சகலவற்றிலும் அவரைத் திருப்திபடுத்துவதிலேயே மற்றவர்கள் ஈடுபடுவர்.

அத்தோடு, அவரது மகிழ்வில் மற்றவர்களும் பங்கேற்று அந்நாளைச் சிறப்பான நாளாக மாற்றிவிடுவர். சாதாரண மனிதனொருவனுடைய பிறந்த நாளில் நாம் அவர் நலனுக்காக இத்தனை காரியங்களைச் செய்தால், நமக்காக இவ்வுலகுக்கு வந்த இயேசுகிறிஸ்துவுடைய பிறந்த நாளில், அவருக்கு நாம் எத்தகைய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவரை நாம் மறந்துவிட முடியுமா?

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முன்பு நாம் அவரை அறியாதவர்களாயிருந்தால், அவரை நம் வாழ்வில் இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் நம் வாழ்வில் நாயகராக நம்முடன் இருக்க வேண்டும். அதன்பின் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் அவருக்குப் பிரியமான விதத்தில் இத்திருநாளை ஆசரிக்கவேண்டும். பிறந்தநாள் என்றால் பிறந்தநாளுக்குரியவருக்கு நாம் பரிசுகள் கொடுப்பது வழக்கமல்லவா? தன்னையே நமக்காகக் கொடுத்தவருக்கு, அவரது பிறந்தநாள் பரிசாக நாம் எதைக் கொடுக்கலாம்? நம்மை முற்றிலுமாக அவர் பாதத்தில் அர்ப்பணிப்பதைவிட வேறெதையும் நம்மால் அவருக்குக் கொடுக்க முடியுமா?

ஆம், நம்மைத்தான் நாம் அவருக்குக் கொடுக்க வேண்டும். அதுவே அவர் மனதுக்கு மகிழ்வைக் கொடுக்கும் பரிசாக அமையும். வழக்கமாக இவ்வுண்மைகளை மறந்துவிடும் நாம் இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இவைகளை மறந்துவிடாமல் இருக்க தேவன்தாமே அருள் புரிவாராக!

சத்தியவசனம்