புதிய ஆண்டு சந்தோஷகரமாக இருப்பதாக!

2016-newyear2aHappy New Year! இந்த வாழ்த்துதல் புதிய ஆண்டில் பிறந்த சில தினங்கள் கணக்கற்ற முறை அநேக மொழிகளில் கூறப்படும். அகில உலகத்திலும் ஒரே நாள்காட்டி உபயோகிக்கப்படுவதால், Happy New Year என்ற வாழ்த்துதல் உலகம் முழுவதும் கேட்கப்படும்.

எல்லோரும் புதிய வருஷம் சந்தோஷமாயிருக்கட்டும் என்று வாழ்த்துக் கூறிக்கொண்டாலும் சிலருக்கு அது சோகமாகத் தோன்றும். ஏனென்றால் உலகத்தின் பொருளாதாரத்தின் உறுதியற்ற நிலை, அரசியல் குழப்பங்கள் மற்றும் உள்நாட்டிலும் அயல்நாட்டுடனும் காணப்படும் பகை முதலியவை புதிய வருஷம் சந்தோஷகரமாயிருப்பதற்கு சாத்தியமுண்டா? என்று மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது. இந்தக் குழப்பத்திற்கும், கலகத்திற்கும் மத்தியில் கிறிஸ்தவனை சிந்திக்க வைக்க வேண்டிய கேள்விகளாவன: நான் எந்தவிதமாக புதிய வருஷத்தைக் கழிக்கவேண்டும்? இந்த புதிய வருஷத்தை சந்தோஷகரமானதாக்குவதற்காக நான் என்ன செய்யவேண்டும்? என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு இந்தப் புதிய வருஷம் சந்தோஷகரமாயிருப்பதற்கு நான் என்ன செய்யமுடியும்?

புதியவருஷம் சந்தோஷமாயிருப்பதற்கு ஒரு வாழ்த்துதல் போதாது, வாழ்த்துக்கடிதம் அனுப்புவதும், பெற்றுக்கொள்வதும் போதாது. தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். நடக்க வேண்டிய காரியங்களை செய்து தீர வேண்டும். அவ்விதம் புதிய வருஷத்தை சந்தோஷமாக கழிப்பதற்கு கீழ்வரும் ஐந்து தீர்மானங்கள் கொண்ட திட்டம் உபயோகமாயிருக்கும்.

முதலாவது, தேவனிடத்தில் எதிர்பார்த்தலுடனும், நம்பிக்கையுடனும் வாழவேண்டும். தேவன் நமக்கு வாக்குப்பண்ணியுள்ள ஆசீர்வாதத்தையும் ஒத்தாசையையும் விசுவாசத்தோடும் ஜெபத்தோடும் சுதந்தரித்துகொள்ளவேண்டும். உலக சூழ்நிலைகள் எவ்வளவுக்கெவ்வளவு இருளடைந்திருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவ வாழ்க்கை பிரகாசிக்கிறதாயிருக்க முடியும்.

இரண்டாவது, உடன் விசுவாசிகளுடன் ஐக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டும். பரி. பவுல், ஆராதனைக்காகவும், அந்நியோன்யத்திற்காகவும் கிறிஸ்தவர்கள் ஒன்றாகக் கூடுதலின் முக்கியத்தை உணரும்படி அடிக்கடி வற்புறுத்தியிருக்கிறார். ஆவியின் வரங்களை உபயோகிப்பதற்கும் மட்டுமல்லாமல் ஆவியில் முழுமையாய் வளர்வதற்கும், அங்கங்களும் அவயவங்களும் சக்தியும், ஆதாரமும் பெறுவதற்கு சரீரத்தில் இணைந்திருக்க வேண்டியதுபோல கிறிஸ்தவர்களும் ஒரு சரீரத்தின் அங்கங்களாயிருக்கிறோம்.

எபிரேயர் 10:25 இல் “சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறதுபோல நாம் விட்டுவிடாமல்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 1கொரி.14 ஆம் அதிகாரத்திலும் சொன்னபடி எல்லோரும் கூடி தொழும்விதத்தை நாம் முக்கியப்படுத்துவது சரி. ஆனால் அதினிமித்தம் தனி தியான அனுபவத்தின், தனிப்பட்ட ஆவியின் வளர்ச்சியின் முக்கியத்தைக் குறைவாக எண்ணவில்லை.

மூன்றாவது, தெய்வீக செல்வங்களை நமதாக்கிக் கொள்ளவேண்டும். வரலாற்றின் முழுவதிலும் தேவன் பலவான்களை அழிப்பதற்கு பலவீனர்களையும், பெரியவனைத் தோற்கடிக்க சிறியவனையும், ஞானவானை பிரமிக்க வைப்பதற்கு முட்டாளையும் தெரிந்தெடுத்தார் என்று பார்க்கிறோம். அது கிதியோனுடைய 300 பேர்க் கூட்டமோ அல்லது தாவீது கோலியாத்தைத் தனியாக சந்தித்ததோ அல்லது ஏழ்மைப்பட்ட ஒரு தாய் தன் பிள்ளைக்காக விண்ணப்பம் செய்ததோ, “மக்கள் அவருடைய பெலத்தைத் தங்களுடையதாக்கிக் கொண்டு, அவரது வல்லமையை வெளிப்படுத்தினபோதுதான் தேவன் தன்னையே வெளிப்படுத்தினார்” என்று பார்க்கிறோம்.

ஆனால், ஆண்டவருடைய செல்வங்களை நமதாக்கும்பொழுது கவலைக்கும் வேதனைக்கும் இடமுண்டாகலாம். அப்பொழுது நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டியது என்னவென்றால், தனக்கு விடுதலைவேண்டும் என்று வேண்டியபோதும் ஆண்டவர் பவுலுக்குக் கொடுத்த பதிலே: “என்னுடைய கிருபை உனக்குப் போதும்; பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்” (2கொரி.12:9) என்பதேயாகும்.

நான்காவது, நாம் நம் ஆண்டவரின் வழிகளையே உறுதிப்படுத்த வேண்டும். அநேகந்தரம் நம்மையும், நம்முடைய தேவனுடைய ஊழியத்தையும் நம்முடைய கெட்டிக்காரத் தனத்தாலும் நம்முடைய சொந்த வழிகளாலும் பாழ்படுத்துகிறோம். நம்முடைய திட்டங்களை நாமே வகுத்து ஆண்டவருடைய ஆசீர்வாதங்களை நாடுவதற்கும், அவரது திட்டங்களை அறிந்து அவைகளில் செயல்பட்டு அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?

யோவான் 15ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் திராட்சச்செடியும், அதனுடைய கொடிகளைப் பற்றிய உவமை ஆவியில் நிறைந்த ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கிடைக்கக்கூடிய வாழ்க்கைக்கு அறிகுறியாயிருக்கிறது. திராட்சச்செடியானது தன்னுடைய முயற்சியினால் அல்ல; திராட்சக்கொடியுடன் இணைந்திருப்பதாலேயே கனி கொடுக்கிறது. கனி கொடுக்கும் கொடி திராட்சச்செடியின் பெலனையும் ஆதாரத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆகையால் இயேசுவானவரைச் சார்ந்து இயங்குவோமானால் அவரில் ஆவியின் கனி கொடுக்கும் பிள்ளைகளாயிருப்போம்.

இறுதியாக, சாதாரண காரியங்களுக்காக தேவனை துதிக்கவும் அதற்குரியவர்களைப் பாராட்டவும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். ஆண்டவரின் படைப்பு, சூரிய அஸ்தமனத்தின் சிறப்பு, இயற்கை அழகு, அதிகாலை அமைதி, குழந்தையின் புன்னகையின் அழகு, உணர்ச்சி மிகுந்த ஸ்பரிசம், நன்றி தெரிவிக்கும் மனப்பான்மை முதலிய சாதாரண காரியங்களையும் சந்தோஷம் நிறைந்த மக்கள் பாராட்டவும், பிரியப்படவும் கற்றிருப்பார்கள். மேலும் பல சிறிய சாதாரண காரியங்கள் விலைமதிப்பற்றவைகளாக இருந்தபோதிலும் யாரும் அவற்றை அனுபவிக்கக்கூடும் அல்லவா?

மேற்கூறியவைகளை நிறைவேற்றுவதன் மூலம் புதிய ஆண்டு நமக்கு சந்தோஷகரமாய் இருப்பதாக!

சத்தியவசனம்