ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மார்ச்-ஏப்ரல் 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இம்மாதத்திலும் இச்சஞ்சிகை வாயிலாக தங்களைச் சந்திக்க தேவன் கொடுத்த கிருபைக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம். மார்ச் ஏப்ரல் முழுவதும் பங்காளர் குடும்பங்களில் கல்வி இறுதியாண்டுத் தேர்வு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் எழுதி வரும் அனைத்து பங்காளர் குழந்தைகளுக்காகவும் நாங்கள் பாரத்துடன் ஜெபித்து வருகிறோம். தேர்வுதாள்களை திருத்தம் செய்கிற ஆசிரியர்களும் நல்லவிதமாக திருத்தம் செய்வதற்கும், ஜெயங்கொடுக்கிற ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் சிறந்த வெற்றிகளைத் தந்தருளவும் தொடர்ந்து வேண்டுல் செய்கிறோம்.

கடந்த இதழில் நாங்கள் அறிவித்திருந்தபடி லெந்துகால சிறப்புக்கூட்டங்கள் யாவும் அனைத்து இடங்களிலும் ஆசீர்வாதமாக நடைபெற தேவன் கிருபை செய்தார். இந்தக் கூட்டங்களுக்கு உதவி செய்த பங்காளர்கள், சத்தியவசன பிரதிநிதிகள், சபை குருவானவர்கள் யாவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

மே 16ஆம் தேதி அறிவிப்பு செய்துள்ள நம்முடைய சட்டசபைத் தேர்தலுக்காக நாம் ஜெபிக்கக் கடமைப்பட்டுள்ளோம். எந்தவொரு லஞ்சமும் ஊழலும் இல்லாத உண்மையான ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், கலகமில்லாமல் அமைதலுள்ள ஆட்சி காணப்படவும், கிறிஸ்தவத்தை புறக்கணிக்காத அதை ஆதரிக்கக்கூடிய சரியான நபர்கள் எழும்பவும் மன்றாடுவோம்.

இவ்விதழில் கிறிஸ்துவின் பாடு மரணங்களை குறித்த சிறப்புக்கட்டுரைகளில், இயேசுகிறிஸ்துவின் கல்லறைவரை சென்ற சில நபர்களைக் குறித்து ‘அச்சத்தை அகற்றிய அன்பு’ என்ற தலைப்பில்  Dr.உட்ரோ குரோல்  அவர்கள் விளக்கியுள்ளார்கள். இயேசுகிறிஸ்து தேவாலயத்தைச் சுத்திகரித்த சம்பவத்தை மையமாக வைத்து சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களும், ‘சாபத்திலிருந்து குணமடைதலுக்கு..’ என்ற தலைப்பில் கிறிஸ்து நமக்காக சாபமானார் என்ற சத்தியங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். மேலும் ‘கல்லறையில் எத்தனை நாள்’ என்ற தலைப்பில்  Dr.தியோடர் எச்.எஃப். அவர்களது சிறப்புச் செய்தியும், ‘உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையை’ப் பற்றி சகோ. பிரகாஷ் ஏசுவடியான் அவர்களது செய்தியும் இடம் பெற்றுள்ளது. வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய ‘இனிமையற்ற இவ்வுலகின் வழிகள்’ என்ற தொடர் செய்தியும்,  Dr.தியோடர் எச்.எஃப். அவர்களுடைய ‘விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்’ என்ற தொடர் செய்தி வழக்கம்போல் பிரசுரமாகியுள்ளது.  இக்கட்டுரைகள் யாவும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

சத்தியவசன பங்காளர்கள் நேயர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்