சாபத்திலிருந்து குணமடைதலுக்கு!

சகோதரி சாந்தி பொன்னு
(மார்ச்-ஏப்ரல் 2016)

கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு
நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் (கலா.3:13).

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் புற்றுநோயினாலே பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைக் குறித்து, “இந்தக் குடும்பம் சபிக்கப்பட்ட குடும்பமோ“ என்று பலர் நா கூசாமல் பேசியதை நானே கேட்டேன். பாடுகளுக்குட்பட் டிருக்கின்ற தனி நபரைக் குறித்தோ அல்லது ஒரு குடும்பத்தைக் குறித்தோ, வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், “இவர்களுக்கு ஏதோ சாபம்தான்“ என்ற எண்ணம் பலருடைய மனதில் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது.

பாவம் வந்தது!

சகலத்தையும் படைத்து முடித்த தேவன், எல்லாவற்றையும் நல்லது என்றுதான் கண்டார். தமக்கென்றே, தமது சந்தோஷத்திற்கென்றே, தமது துதியைச் சொல்லிவருவதற்கென்றே, தமது சாயலிலேயே மனிதனைப் படைத்தார் தேவன். ஆனால் மனிதனோ “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று சொன்ன தேவனுடைய வார்த்தையை விட்டு, “நீங்கள் சாகவே சாவதில்லை. உங்கள் கண்கள் திறக்கப்படும், தேவர்களைப்போல ஆவீர்கள்” என்று சர்ப்பம் சொன்னதற்குச் செவிகொடுத்து, ஏதேனிலே சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டு, தேவன் தவிர்த்த கனியைப் புசித்து பாவத்தில் விழுந்தான். தேவன் சொன்னபடியே அந்த நாளில்தானே மனிதன் செத்தான்; அவனுக்குச் சாபம் வந்தது. அவனுடைய கீழ்ப்படியாமை, தேவனுடைய சந்நிதானத்திலிருந்து அவனைப் புறந்தள்ளியது. மனிதனுடைய இந்த விழுகையினாலே சர்வ சிருஷ்டியுமே அழிவுக்குரிய அடிமைத்தனத்தில் அகப்பட்டு, தவித்துநிற்கிறது என்று பவுல் விளக்குகிறார் (ரோமர் 8:20-22). ஆம், மனிதனின் பாவத்தால் முழு சிருஷ்டியும், மனிதன் உட்பட தவித்துநிற்க நேரிட்டது.

பாவத்தின் பயங்கரங்கள்:

பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஒரு மனைவியாக, ஒரு தாயாக மனுஷியின் பங்களிப்பிற்குப் பெரிய கேடு உண்டானது. ஆதாம் செய்த பெரிய தப்பு, தேவனுடைய வார்த்தையைத் தள்ளி, ஸ்திரீயின் வார்த்தைக்குச் செவிகொடுத்ததுதான். அதனால் அவனது சுகவாழ்வுக்கும் கேடு. நல்ல விளைச்சலைக் கொடுத்த பூமி, மனிதனின் நிமித்தம் சபிக்கப்பட்டதால் அது அவனுக்கு முள்ளும் குருக்கும் கொடுக்க ஆரம்பித்தது. “நீ மண்ணாயிருக்கிறாய்; மண்ணுக்குத் திரும்புவாய்” (ஆதி.3:19) என்று கர்த்தர் சொன்னதிலிருந்து, வாழ்நாட்கள் முழுவதும் கஷ்டத்திற்கு முகங்கொடுக்கின்ற மனிதனுடைய முடிவு சாவுதான் என்பது தீர்மானமாயிற்று. இத்தனைக்கும் காரணம் மனிதன் தானே தழுவிக்கொண்ட பாவம்தான்! சாபம் வந்தது:

“நான் உனக்கு விலக்கிய விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ” என்று கர்த்தர் கேட்டதற்கு ஆதாம் ஸ்திரீயில் குற்றஞ்சுமத்த, ஸ்திரீ சர்ப்பத்திற்கு விரல் நீட்டினாள். “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய் என்றார் (ஆதி.3:14). இங்கே சபிக்கப்பட்டிருப்பாய் என்று கர்த்தர் சொன்னபோது, சர்ப்பம் தேவனுடைய நியாயத் தீர்ப்புக்கு உட்பட்டாயிற்று என்று அர்த்தம் பெறும். இதனுடன் எல்லா மிருகங்களும் சாபத்திற்குட்பட்டன. மாத்திரமல்ல, பாவத்தில் விழுந்த மனிதனின் நிமித்தம் பூமியும் சபிக்கப்பட்டது (ஆதி.3:17). பூமி இனி நல்ல பலனை மனிதனுக்குக் கொடுக்காது. உயிரினங்களுக்குச் சாபம், பூமிக்குச் சாபம்; மனுஷனுக்கும் சாபம். இதற்குக் காரணம் மனுஷனுடைய பாவம். மனிதன் தேவ சமுகத்திலிருந்து விலக்கப்பட்டு, நித்திய சாபத்திற்கு ஆளானான்.

மனுஷியும் மனுஷனும் பாவத்தின் தண்ட னையைச் சந்திக்க நேர்ந்தாலும், தேவனாகிய கர்த்தருக்கும் அவர்களுக்கும் இடையே மாசு படிந்த பாவத்திரை விழுந்ததனாலே, தேவ சமுகத்திலிருந்து இருவரும் விலக்கப்பட்டார்கள். இது மனுஷனின் தலையில் விழுந்த மகா கொடிய தண்டனை. தேவனோடு உறவாடி மகிழ்ந்த மனிதன், தேவ சமுகத்திலிருந்து தள்ளப்பட்டான். பாவத்தின் கொடிய விளைவான இதுவே மனுஷனுக்குச் சாபமானது. ஆக, மனிதன் பாவம் செய்தான்; அதன் விளைவு அவனுக்குச் சாபமானது.

மனிதன் தானே தழுவிக்கொண்ட பாவத்திலிருந்து அவன் விரும்பினாலும் தன்னை விடுவிக்க முடியாதபடிக்கு பாவம் அவனை அடிமைகொண்டது. மனுஷன் நிர்கதியானான். தேவனோடு உறவாடவென்றே படைக்கப்பட்டவன், தன் கீழ்ப்படியாமையாலே அந்த நித்திய உறவை தகர்த்துப்போட்டான். சுதந்திரமாக பாவத்தைத் தழுவியவனால், உடைந்துபோன அந்த பரிசுத்த உறவை ஒட்டவைக்க முடியாதிருந்தது. தேவனிடமிருந்து பிரிக்கப்பட்ட இந்தச் சாபம் முழு மனுக்குலத்தையுமே தாக்கியது. இல்லையானால், ஆதாம் ஏவாளுக்குப் பிறந்த மூத்த மகனே கொலையாளியாக மாறியிருப்பானா?

சாபமும் அநாதி திட்டமும்:

பாவத்தையும் அதன் விளைவான சாபத்தையும் சுமந்துகொண்ட மனிதன் பாவத்திலேயே மரித்துப்போக கர்த்தர் விட்டு விடவில்லை. அந்த ஏதேன் தோட்டத்தில்தானே மேசியாவைக் குறித்த தம்முடைய முதலாவது தீர்க்க தரிசனத்தைக் கர்த்தர் அறிவித்தார். “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்” என்பதே அது (ஆதி.3:15). இது அந்த சந்தர்ப்பத்திலே கர்த்தரால் தீர்மானிக்கப்பட்ட தீர்மானம் அல்ல. வேதம் சொல்லுகிறது: “அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து” (1பேதுரு1:20). ஆம், மனுக்குலத்தின் மீட்பு, அது தேவனுடைய அநாதி திட்டம்.

நியாயப்பிரமாணமும் சாபமும்:

பாவத்தில் விழுந்த மனிதனுக்கு கர்த்தர் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து வாழ்வின் ஒழுக்க நெறியைக் கற்பித்தார். செய் என்றும் செய்யாதே என்றும் சொல்லப்பட்ட பிரமாணங்கள் மனிதனை பாவத்திலிருந்து விடுவித்ததா? இல்லை. “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக. ஜனங்கலெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்” (உபா.27:26). “அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்” (உபா.28:15).

ஆக, நியாயப்பிரமாணம் பாவத்திலிருந்து மனிதனை விடுவிக்கமுடியாது.ஏனெனில், மனிதனுடைய பாவ நிலைமையின் காரணத்தால், அவனது சொந்தப் பிரயத்தனத்தால் பிரமாணங்கள் முழுவதையும் அவனால் கடைப்பிடிக்க முடியாது. ஆக, நியாயப்பிரமாணம் செய்தது என்ன? “பாவம் இன்னதென்று நியாயப் பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே” (ரோ.7:7) என்று பவுல் விளக்குகிறார்.

பாவத்தைச் சுட்டிக்காட்ட முடிந்த நியாயப் பிரமாணத்தினால் மனிதனை விடுவிக்க முடியாதுபோனது. ஆனால் அது தீர்ப்பளிக்கும். எப்படி? “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர்6:23). இதற்கு வேறு மாற்றுவழி இல்லை. பாவம் செய்கிறவன் சாகவேவேண்டும். அதுமாத்திரமல்ல, “ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்” (யாக்.2:10) என்றும் எழுதப்பட்டுள்ளது. நியாயப்பிரமாணத்தைச் சார்ந்துகொண்டால் நாம் சாபத்துக்கு ஆளாவோம்; அதாவது, மரண தண்டனைக்கு உட்படுவோம். “நியாயப்பிரமாணத்தின் சாபம்” என்பது மரண தண்டனையைக் குறிக்கிறது. ஆம், நியாயப் பிரமாணம் நம்மை நியாயந்தீர்க்கிறது. பாவம் செய்கிறவன் சாகவேண்டும். இதற்கு மாற்று வழியாக நாம் செய்யும் எந்தவொரு புண்ணிய காரியங்களோ, சன்மார்க்க வாழ்வோ, உலகம் காட்டும் எந்த வழியோ மனிதனை பாவப்பிடியிலிருந்து மீட்கமுடியாது. ஆம், எந்தவகையிலும் மரண தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாத, தன்னைத்தானே மீட்க முடியாத நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டதுதான் அவன் தனக்குச் தானே சம்பாதித்துக்கொண்ட “சாபம்” ஆகும். சாபம் நீங்குமா?

“நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது” (கலா.3:11). அப்போ மனினுக்கு விடிவு எங்கே? அழிவுக்கென்று தேவன் அவனைப் படைக்கவில்லையே! ஆகவே, பாவத்திலும் அதனாலுண்டான சாபத்திலும் சிக்கித் தவித்த மனுஷனை மீட்பதற்கென்றே தமது மேன்மைகளையெல்லாம் துறந்து, தேவன் தாமே மனிதனானார்.

மனிதனாய் வந்துதித்த இயேசு ஒருவரைத் தவிர, உலகில் பிறந்த, பிறக்கின்ற எந்தவொரு மனிதனும் பரிசுத்தனல்ல. பரிசுத்தராகிய இயேசு ஒருவரே மனிதனை ஆட்டிப்படைக்கின்ற பாவத்தைப் பரிகரித்து, அதனால் விளைந்த சாபத்தைப் போக்கி, மறுபடியும் தேவனோடு நம்மை ஒப்புரவாக்க வல்லவராயிருந்தார். நமது பாவங்களைத் தாமே சுமந்து, “தேவனே என் தேவனே” என்று கதறுமளவுக்கு பிதாவின் முகத்திலிருந்து மறைக்கப்பட்டு, பாவத்திற்கான முழு விலைக்கிரயத்தையும் இயேசு சிலுவையிலே செலுத்தினார். “மரத்திலே தூக்கப்பட்டவன் சபிக்கப்பட்டவன்” (உபா.21:23; கலா.3:13). அப்படியே அந்தச் சிலுவை மரத்திலே சபிக்கப்பட்ட நமக்காக கிறிஸ்து தாமே சாபமாகி, சாபத்திற்குட்பட்ட நம்மை அவர் நீங்கலாக்கி இரட்சித்தார்.

அந்தப்படியே மனிதனுடைய பாவங்களைத் தம்மிலே சுமந்து, பாவத்தினாலே உண்டான சாபத்தை நீக்கி, நம்மை மறுபடியும் பிதாவுடன் ஒப்புரவாக்கின ஆண்டவருக்கே சதாகாலமும் மகிமை உண்டாவதாக. நமக்கு நேரிடவிருந்த மரணதண்டனையைத் தம்மேல் ஏற்றுக்கொண்ட தன்மூலம் கிறிஸ்து நமக்கு மீட்பை அளித்தார். பாவத்திற்கான பலி செலுத்தப்பட்டதால், நாம் இன்று பிதாவுடன் ஒப்புரவானோம்; தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே விழுந்த பாவத்திரை, கிறிஸ்துவின் மாம்சத்தில் கிழிக்கப்பட்டதால் நாம் இன்று பிதாவிடம் சேருகின்ற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இழந்துபோன நித்திய உறவின் நிச்சயத்தைப் பெற்றுக் கொண்டோம். ஆனால், இந்த உலக ஓட்டத்தில், அந்த நித்திய உறவை நோக்கிய ஓட்டத்தில் நாம் நிலைநிற்கவேண்டுமே!

CURSE  &  CURE

சாபம் – CURSE என்ற ஆங்கிலச் சொல் லையும், CURE – அந்தச் சாபத்திலிருந்து நாம் நீங்கலாகியிருக்கிறோம் என்ற அர்த்தமுள்ள இந்தச் சொல்லையும் கவனித்துப் பாருங்கள். (சாபம்) CURSE என்ற சொல்லிலிருந்து “S” என்ற எழுத்தை நீக்கிவிட்டால் (குணம், சுகம்) ஊருசுநு கிடைத்துவிடும். அந்த “S” என்பது “SIN” – பாவத் தைக் குறிக்கிறது. அந்த “S” – ஐ CURSE – லிருந்து அழித்துவிட்டால் நமக்கு சுகம் உண்டாகும். நம்மைக் கவ்விக்கொண்ட சாபத்திலிருந்து நீங்க லாகிறோம். அதற்கு ஒரே வழி, பாவத்தின் பரிகாரமாக தமது சொந்த பரிசுத்த இரத்தத்தைச் சிலுவையிலே சிந்திய கிறிஸ்து ஒருவரே. இயேசு கிறிஸ்து சாபக்கேடான சிலுவையிலே சகலத்தையும் செய்துமுடித்துவிட்டார். அவர் மரித்து உயிர்த்தெழுந்ததாலே இழந்துபோன நித்திய உறவைக் குறித்த நிச்சயமும் நமக்கு அருளப்பட்டாயிற்று.

சாபத்திலிருந்து நாம் குணமடைந்திருக்கிறோமா?

கிறிஸ்து யாவையும் செய்து முடித்து விட்டார். ஆனால், அதை நாம் நமக்கென்று பெற்றிருக்கிறோமா? அந்த விசுவாசம் நமக்குண்டா? “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர் 6:23) இந்தப் பெரிய இரட்சிப்பு நமக்கு உண்டாயிருக்க, விசுவாசிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இன்னமும் பாவத்தைப் பற்றிக்கொண்டு, தேவனைத் துக்கப்படுத்துவது எப்படி? “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்?” (எபி.2:4).

தேவசமுகத்திற்கு, அவருடைய கிருபாசனத் தண்டைக்கு சேரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிற நாம், எந்த வேதனையோ சோதனையோ நேரிட்டாலும் கலங்குவதும், இன்னமும் பிறரைக் குற்றம் சொல்லுவதும் ஏன்? கிறிஸ்து அருளிய மகத்தான மீட்பை நாம் விசுவாசிப்பது மெய்யானால் பாவத்தோடு நமக்கு ஏது சம்பந்தம்? சிந்திப்போம். நாம் மீட்கப்பட்டவர்கள் என்ற சிந்தனையுடன் பொறுமையுடன் ஓடக்கடவோம். நமது சுயபெலத்தால் எதுவும் கூடாதுதான். ஆனால் தேவனால் எல்லாமே கூடும். ஆகவே தைரியத்தோடே ஓடக்கடவோம்.

“இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை” (வெளி. 21:4). “இனி ஒரு சாபமுமிராது. … அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்” (வெளி.22: 3,4). இது சத்திய வாக்கு! இந்த அழியாத நம்பிக்கை நமக்குண்டு.

இப்படியிருக்க நாம் தோற்றுப்போனவர்கள் போலவும், நம்பிக்கையற்றவர்கள் போலவும், சமாதானமின்றி தவித்திருப்பது ஏன்? கிறிஸ்து வின் இரத்தத்தினாலான இரட்சிப்பை விசுவாசத்தால் பெற்றுக்கொண்டு, தேவனுக்கு மகிமையாய் மகிழ்ச்சியுடன், அவருக்கே சாட்சிகளாக வாழுவோமாக.

CURSE   U CURE

சத்தியவசனம்