சுத்திகரிக்கும் ஆண்டவர்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மார்ச்-ஏப்ரல் 2016)

இந்த லெந்துநாட்களிலே இயேசுகிறிஸ்துவின் பாடுகளைக்குறித்த அநேக சத்தியங்களைத் தியானித்து வந்திருப்பீர்கள்.

பரிசுத்த வாரத்திலே நம் ஆண்டவர் தேவாலயத்தை சுத்திகரிக்கிறார். “இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து; என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்” (மத்.21:12,13) என வாசிக்கிறோம். மத்தேயு தனது நிருபத்தில் ஆண்டவராகிய இயேசு  பவனி வந்த நாளிலே இந்த சம்பவம் நடந்ததாக எழுதுகிறார். மாற்குவின் சுவிசேஷத்தில் மறுநாளிலே இயேசு தேவலாயத்தை சுத்திகரித்ததாக எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். ஏறக்குறைய எல்லா வேதப்பண்டிதர்களும் சொல்லுகிறது என்னவென்றால், இந்த நிகழ்வானது பரிசுத்த வாரத்திலே திங்கட் கிழமையிலே நடந்ததாகவே கூறுகிறார்கள்.

ஆண்டவர் தேவாலயத்திற்குள்ளே செல்கிறார். அங்கே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகள், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்கள் எல்லாவற்றையும் கவிழ்த்துப்போடுகிறதாகப் பார்க்கிறோம். இங்கே ஆண்டவராகிய இயேசு புரட்சியாளராகக் காணப்படுகிறார். அன்பு நிறைந்த ஆண்டவர் இந்தச் சூழலிலே கயிற்றினாலே ஒரு வாரை எடுப்பித்து விற்கிறவர்களை ஆலயத்திலிருந்து துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையெல்லாம் கவிழ்த்துப் போடுகிறதை நாம் பார்க்கிறோம். இந்தக் காரியம் அங்குள்ள மத வியாபாரிகளுக்கும் வேதபாரகர்களுக்கும் ஆசாரியர்களுக்கும் எரிச்சலையும், கசப்பையும், மனவருத்தத்தையும் ஏற்படுத்தியதை நாம் திருமறையிலே வாசிக்கிறோம்.

அருமையானவர்களே! ஆண்டவராகிய இயேசு தேவாலயத்தை சுத்திகரிக்கும் இந்த நிகழ்வை பலர் தவறாகப் புரிந்துகொண்டு, தவறாக வியாக்கியானம் பண்ணுவதுண்டு. தேவாலயத்திலே, சபையிலே Fund Raising  செய்வதை அதாவது பணம் சேகரிப்பதையும் விற்பதையும் வாங்குகிறதையும் இந்த வேதபகுதி தடை செய்கிறதென சிலர் தவறாக புரிந்துகொள்வதுண்டு.

ஆனால், இந்த சம்பவத்தை வசனத்தின் வெளிச்சத்திலே நாம் புரிந்துகொள்வது நல்லது. எருசலேம் தேவாலயம் வித்தியாசமான ஒரு தேவாலயம். அங்கே புறஜாதிகளுக்கு ஒரு இடமுண்டு.  அங்கே அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அதற்கு கொஞ்சம் தள்ளி யூதபெண்கள் தொழுது கொள்வார்கள். அதற்கு அப்புறம் கொஞ்சம் தூரம் தள்ளிப் போய் யூத ஆண்கள் தொழுது கொள்வார்கள். பிறகு ஆசாரியர்கள், தேவனுடைய மக்கள் அங்கே தொழுதுகொள்வார்கள்.

ஆனால், புறஜாதியினர் தொழுது கொள்ளுகிற அந்த இடத்தில்தான் இந்த மக்கள் வியாபாரம் செய்தனர்.  இது ஆண்டவருக்கு விசனமாயிருந்தது. ஆராதிக்கக்கூடிய இடத்திலே, அர்ப்பணத்தோடு தேவனைத் துதிக்க வேண்டிய இடத்திலே வியாபாரிகளின் சத்தமும், காசுக்காரர்களுடைய சத்தமும், ஆடுகளின் சத்தமும் கேட்டால், அது எவ்வளவு தடையாயிருக்கும் என்பதை ஆண்டவர் புரிந்ததினால்தான் அவைகளை அகற்றி அங்கே பெரிய மாற்றங்களைச் செய்கிறார்.

மத்தேயு 21:13இல் “என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” என்று ஆண்டவராகிய இயேசு கூறுகிறார். ஆகவே இந்தப் பகுதியிலே ஆண்டவர் தேவாலயத்தைக்குறித்து என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்பதையும், நாம் தேவாலயத்தை என்னவிதமாய் நடத்தவேண்டும், அதை எவ்விதமாய் பாவிக்கவேண்டும்  என்பதை யும் குறித்து சிந்திப்போம்.

முதலாவது ஆண்டவராகிய கர்த்தர் இந்த தேவாலயத்தை ஜெபவீடாக கவனிக்கிறார் அல்லது காண்கிறார். பாருங்கள், ‘என்னுடைய வீடு ஜெபவீடு’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஏசாயா 56ஆம் அதிகாரம் 7 ஆம் வசனத்தில் அதேவிதமாகச் சொல்லப்படுகிறது. ஆகவே தேவனுடைய வீட்டிலே ஆராதனையும் துதியும் காணப்பட வேண்டும். ஆராதனை துதிக்குப் பதிலாக அங்கு என்ன காணப்படுகிறது என்றால், வியாபாரங்கள், காசுக்காரருடைய பலகைகளின் சத்தமும், ஆடுகளின் சத்தமும்தான் அங்கு காணப்படுகிறது. தேவனை ஆராதிக்கிற இடம் பரிசுத்தமான இடமாகும். தேவனை ஆராதிக்கிற இடம் அமைதலான இடமாக காணப்பட வேண்டும். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும்கூட ஜெபிக்கும்போது “உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு”(மத்.6:6) என்று சொன்னார்.  அப்படியானால் மனுஷ தடைகள், மற்ற தடைகள் இல்லாத அளவுக்கு நாம் பிரார்த்திக்க அழைக்கப்படுகிறோம்.

ஆனால் ஆராதிக்கிற இந்த இடத்தை வியாபார ஸ்தலமாக்கினார்கள். ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மீகத்தை நாம் என்றைக்கு வியாபாரமாக்குகிறோமோ அன்றைக்கு ஆண்டவர் அதைக் கண்டிக்கிறார், எதிர்க்கிறார்.  இன்றைய நாட்களிலே நாம் காண்கிற ஒரு உண்மை என்னவென்றால், அநேக இடங்களிலே அநேக சபைகளிலே, அநேக ஊழியங்களிலே, குறிப்பிட்ட ஒரு சில ஊழியர்கள்கூட என்ன செய்கிறார்கள் என்று சொன்னால் வரங்களை வல்லமைகளை அல்லது ஊழியங்களை வியாபார மயமாக்கி அவர்கள் வாழ்கிறதை நாம் பார்க்க முடிகிறது.

ஆண்டவருடைய ராஜ்யத்தைக் கட்ட வேண்டுமே தவிர நாம் நமக்காக சாம்ராஜ்யத்தைக் கட்டுவதை ஆண்டவர்  விரும்புகிறதேயில்லை. ஆகவேதான் ஆண்டவர் ஆன்மீக இடத்தை அல்லது ஆன்மீக காரியத்தை அல்லது ஆராதிக்கிற இடத்தை வியாபார மயமாக்கும்போது கண்டிக்கிறார், எதிர்க்கிறார். நம்முடைய ஆன்மீகத்தை நாம் எந்தளவுக்கு பயன்படுத்துகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

தேவாலயமாகிய தம்முடைய வீட்டைக் குறித்து ஆண்டவர் விரும்புகிற இன்னொரு காரியமென்னவென்றால்,   எல்லா ஜனங்களும் அங்கு தங்கவேண்டும் என்பதாகும். ‘என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்’ ஏசாயா 56:7 இல் நாம் வாசிக்கிறோம். ஆகவே தேவனுடைய ஆலயம், தேவனுடைய சபை என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்குரியது அல்ல. யூதர்களுடைய எருசலேம் தேவாலயம் என்பது யூதர்களுக்கு மாத்திரமே உரியது. ஆனால் புறமக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலேதான் தொழுதுகொள்ள முடியும், அங்கு தங்கி ஆசரிக்க முடியும். அந்த இடத்தையே யூத மதத் தலைவர்கள், ஆசாரியர்கள், வேதபாரகர்கள் அதை வியாபார மயமாக்கிவிட்டார்கள். இதைக் கண்டபோது ஆண்டவர் விசனப்பட்டுதான் இந்த காரியத்தைச் செய்தார். ஏனென்றால் வேதவசனம் சொல்கிறது; என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு. அது யூதர்களுக்கு மாத்திரமோ, அல்லது ஆசாரியர்களும் லேவியரும் மாத்திரமோ ஆராதிக்கிற இடம் அல்ல. யூத ஆண்களும், யூத பெண்களும் மாத்திரம் ஆராதிக்கிற இடமும்  அல்ல, அது எல்லா ஜனங்களும் ஆராதிக்கிற இடமாகும். அப்படியானால் தேவனுடைய ஆலயமானது ஜெபவீடாக மதிக்கப்படவேண்டும் அல்லது கையாளப்பட வேண்டும். அதேசமயம் தேவனுடைய வீடு ஒரு குறிப்பிட்ட ஜனத்திற்கும், குறிப்பிட்ட இனத்திற்கும், குறிப்பிட்ட மக்களுக்கும் உரிய இடம் அல்ல, அது எல்லா ஜனத்திற்கும் உரிய வீடு என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

இயேசுவானவர் மத்தேயு 28:19ஆம் வசனத்திலும் இவ்விதமாகச் சொன்னார்: “நீங்கள் சகல ஜாதிகளையும் சீஷராக்கி… அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்று வாசிக்கிறோம். சகல ஜாதிகள் என்னும்போது அனைத்து மக்களுக்கும் நாம் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகிறோம். நம்முடைய ஆண்டவராகிய இயேசு யூதர்களுக்கு மாத்திரம் இரட்சகர் அல்ல. அவர் உலகத்தினுடைய ஒவ்வொரு மக்களுக்கும் இரட்சகராக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தத் தரத்திலுமுள்ள மக்களுக்கும் அவர் இரட்சகராக இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு அல்ல, ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கு அல்ல, ஒரு குறிப்பிட்ட சபையின் மக்களுக்கு அல்ல, நம் ஆண்டவரின் வீடு, ஆண்டவரின் சபை என்பது எல்லா ஜனங்களுக்கும் உரிய வீடு என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். ஆகவே ஆண்டவருடைய வீடு ஜெபவீடாக ஆசரிக்கப்பட வேண்டும்.

அப்படி ஜெபவீடாக தேவனுடைய வீட்டை  கருதும்போது நடந்ததை மத்தேயு 21:14-17 வரை உள்ள பகுதிகளிலே நாம் பார்க்கலாம். “அப்பொழுது குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள்”.

அருமையானவர்களே, தேவ வீடாக ஆசரிக்கப்படவேண்டிய இடம் அன்று வியாபார ஸ்தலமாக காணப்பட்டது. அந்த ஸ்தலம் சுத்திகரிக்கப்பட்டபோது அங்கே குருடரும் சப்பாணிகளும் வந்தார்கள். ஏனென்றால் எல்லா ஜனங்களும் அங்குவந்து தேவனை நோக்கி ஆராதித்து அற்புதங்களைப் பெற்றுக்கொள்கிற இடமாக அது காணப்பட்டது. எனவே தேவனுடைய வீடு அல்லது சபை என்பது ஜெப வீடாகவும் எல்லா ஜனத்துக்கும் உரிய வீடாகவும் விளங்க வேண்டும்.

மூன்றாவதாக, தேவனுடைய வீட்டிலே துதி ஏறெடுக்கப்பட வேண்டிய இடமாகும். மத்.21: 15-16 வசனங்களில் இவ்விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது: “அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஒசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து, அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்”.

அருமையானவர்களே, நீங்கள் தேவனுடைய வீட்டை எவ்விதம் கருதுகிறீர்கள்? தேவனை ஆராதிக்கிற சபையிலே நீங்கள் அதை எப்படி கையாளுகிறீர்கள். ஆண்டவரைத் துதிக்கிற துதி அங்கே காணப்படுகிறதா, கர்த்தருடைய அற்புதம் அங்கு வெளிப்படும்போது மக்கள் துதிக்கிறார்கள். ஆண்டவர் தமது பிரசன்னத்தை வெளிப்படுத்தும்போது மக்கள் துதிக்கிறார்கள். ஆகவே தேவனுடைய வீடு அல்லது தேவனுடைய சபை என்பது தேவனைத் துதிக்கிற இடமாகக் காணப்பட வேண்டும் எனப் பார்க்கிறோம்.

நான்காவதாக தேவனுடைய வீடு தேவ னுடைய வல்லமை வெளிப்படுகிற இடமாக காணப்படுகிறது. மத்.21:14ஆம் வசனத்திலே குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார். கர்த்தருடைய வல்லமை வெளிப்படுகிற இடம் தேவனுடைய வீடு அல்லது தேவனுடைய சபை என்று நம்முடைய காலச் சூழ்நிலையில் சொல்கிறேன். அப்படியானால் அநேகர் கேட்கலாம், தேவனாகிய கர்த்தர் தேவனுடைய வீட்டில் அல்லது ஆலயத்தில் மட்டும்தான் அற்புதங்களைச் செய்வாரா எனக் கேட்கலாம். நான் சொல்ல விரும்புகிறதை கவனமாய் புரிந்துகொள்ளுங்கள். தேவன் தம்முடைய வீட்டிலே அற்புதங்களைச் செய்ய வல்லமையுள்ளவராயிருக்கிறார். இது யதார்த்தமான உண்மை!

ஆனால், அதே சமயத்தில் தேவனுடைய ஆலயத்திற்கு வெளியேயும் ஆண்டவர் அற்புதங்கள் செய்தார். வழியருகே சாலைகளிலும் பாதைகளிலும் அவர் செய்திருக்கிறார். வீடுகளில் செய்திருக்கிறார். நடந்து செல்லும்போது கூட நம்முடைய ஆண்டவராகிய இயேசு வானவர் அற்புதங்களைச் செய்திருக்கிறார். இருந்தாலும்கூட தேவனுடைய ஆலயத்திலே தேவனுடைய வல்லமை வெளிப்படுகிறபடியினாலே கர்த்தருடைய வல்லமை வெளிப்படுகிற இடமாக கருதப்பட வேண்டும். அநேகர் தேவனுடைய ஆலயத்தை ஒரு சாதாரண கட்டடமாக, ஒரு அலங்கரிக்கப்பட்ட இடமாக எண்ணுகிறார்கள். ஆனால், தேவனுடைய ஆலயமானது எல்லா ஜனங்களுக்குமுரியது. தேவனுடைய ஆலயம் என்பது அவருடைய ஜனங்கள் தொழுதுகொள்ளுகிற ஜெபிக்கிற இடமாகும். தேவனுடைய ஆலயம் என்பது துதிக்கிற இடமாகும். அன்று தேவனுடைய ஆலயத்தில் இயேசுவின் வல்லமை வெளிப்பட்டது. தேவாலயத்திலே இந்த நிகழ்வுகள் நடந்தபோது அநேகர் ஆண்டவரை அறிந்தவர்கள், ஆண்டவரை நேசித்தவர்கள் அவரைத் துதித்தார்கள்.

ஆனால் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத வேதபாரகர்கள் ஆசாரியர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? கோபமடைந்தார்கள், எரிச்சலடைந்தார்கள். அற்புதங்களைக் கண்டு அநேகர் மனந்திரும்புவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால் எருசலேம் தேவாலயத்திலே அற்புதங்களைக் கண்டாலும் அங்குள்ள வேதபாரகர்கள், பரிசேயர்கள், ஆசாரியர்கள் மனந்திரும்பவில்லை. அவர்கள் கடினப்பட்டு கோபப்பட்டு ஆண்டவரிடத்தில் வாக்குவாதம் செய்யக்கூடியவர்களாய் மாறினார்கள். ஆகவேதான் தேவாலயத்தை ஆண்டவர் சுத்திகரித்து, தமது சித்தத்தையும் நோக்கத்தையும் தேவனைக் குறித்து மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறவராய் காணப்பட்டார்.

இந்த திருமறைப் பகுதியை நாம் வாசித்து இதிலிருந்து கற்றுக் கொள்ளுகிற காரியங்கள் என்னவென்றால், தேவனுடைய ஆலயம் என்பது ஜெபிக்கிற இடம், தேவனுடைய ஆலயம் என்பது எல்லா ஜனத்துக்குமுரிய இடம், தேவனுடைய ஆலயம் என்பது கர்த்தரை மனதாரத் துதித்து ஆராதிக்கிற இடம், தேவனுடைய ஆலயம் என்பது அற்புதமான தேவனுடைய வல்லமை வெளிப்படும் ஒரு இடமாகக் காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் தேவனுடைய  ஆலயத்தை எவ்வாறு கருதுகிறீர்களா?

சத்தியவசனம்