அச்சத்தை அகற்றிய அன்பு!

Dr.உட்ரோ குரோல்
(மார்ச்-ஏப்ரல் 2016)

எருசலேமிலுள்ள இயேசுகிறிஸ்துவின் காலியான கல்லறையைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிகின்றனர். அது கிறிஸ்து உயிர்த்தெழுந்ததற்கு ஒரு சாட்சியாக விளங்குகிறது. இயேசுகிறிஸ்துவை அடக்கம் பண்ணின கல்லறையின் முன்பாகக் கூடிய மக்களைக் குறித்து இவ்விதழில் நாம் தியானிப்போம்.

கெத்செமனே பூங்காவில் யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு, போர்ச் சேவகர்களால் கைது செய்யப்பட்டு, பொந்தியு பிலாத்துவின் அரண்மனைக்கு விசாரணைக்காகக் கொண்டு போகப்பட்டார். பின்னர் கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டார். அதுவரை ஒரு திரளான கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது. ஆனால் அவர் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறைக்கு அவரை நேசித்த வெகுசிலரே வந்தனர் என லூக்கா 23 இல் நாம் வாசிக்கிறோம்.

“அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடி வந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின் சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” (வச.44-49).

“யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வு நாளும் ஆரம்பமாயிற்று. கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமள தைலங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படியே ஓய்வு நாளில் ஓய்ந்திருந்தார்கள்” (வச. 50- 56).

இயேசுவின் சரீரம் அடக்கம் செய்யப்பட்டது. நெருங்கிய சில நண்பர்களும் உறவினர்களும் மாத்திரமே அக்கல்லறையருகே காணப்பட்டனர். அங்கே அமைதி நிலவியது. கூட்டத்தினரின் கோபவார்த்தைகளுக்குப் பதிலாக அங்கு கண்ணீரும் வேதனையுமே காணப்பட்டது. இந்த மக்கள் இயேசுவே தங்களது எதிர்காலத்தின் ஒரே நம்பிக்கை எனக் கண்டவர்கள். ஆனால் அந்த நம்பிக்கை இப்பொழுது அழிந்துவிட்டது. இதனை சற்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஒன்றும் செய்யத்தெரியாதவர்களாய் இருந்தனர். வரலாற்றில் நம்பிக்கையற்ற ஓர் இருண்ட காலமாகவே அதைக் கருதினர்.

இயேசுகிறிஸ்துவை அடக்கம்பண்ணின கல்லறை வரைக்கும் சென்ற சிலரை நாம் ஆராய்வோம். அதில் முக்கியமான ஒருவர் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு ஆவார்.

யூதர்களிடையே யோசேப்பு என்ற பெயர் அதிகம் காணப்படும். கோத்திரப் பிதாவாகிய யாக்கோபின் பதினோராவது மகன் யோசேப்பு ஆவார். இஸ்ரவேலில் அவர் ஒரு சிறந்த மாமனிதர். எகிப்தின் பிரதம மந்திரியாக விளங்கியவர். யோசேப்பு என்ற பெயரின் பொருள்: “கர்த்தர் இன்னும் ஒரு குமாரனை அளிப்பார்” என்பதாகும். இது ஒரு ஆசீர்வாத வார்த்தை அல்லது வாழ்த்து போன்றதாகும். ஒவ்வொரு யூதனும் தனது மகனும் யோசேப்பைப்போல இருக்கவேண்டுமென விரும்புவர். இந்த அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு ஓர் ஆலோசனைக்காரன் என்று தரப்பட்டுள்ளது (வச.50). “இவர் ஒரு கனம் பொருந்திய ஆலோசனைக்காரன்” என்று மாற்கு குறிப்பிடுகிறார் (மாற்கு 15:43). சனகெரிப் சங்கத்தில் ஒரு முக்கியமானவர் என்றும் அவருடைய ஞானமுள்ள வார்த்தைக்கு மதிப்பு அளிக்கப்பட்டது எனவும் நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த சனகெரிப் சங்கம் என்பது ஆதி காலத்து யூத சமய உச்ச நீதிமன்றம் போன்றது. அவர்களே மேலான அதிகாரத்தை உடையவர்கள். இயேசுவின் காலத்தில் அது யூதமக்களுடைய நீதிமன்றமாக விளங்கியது. அதில் 71 உறுப்பினர்கள் இருந்தார்கள். இவர்களே இயேசுவுக்கு எதிராக யூதர்கள் கூறிய பொய்க் குற்றச்சாட்டுகளை விசாரித்தவர்கள். இதில் உயரிய இடத்தைக் கொண்டிருந்த அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு எந்த ஆபத்துக்கும் துணிந்தவராய் பிலாத்துவினிடத்தில் சென்று இயேசுவின் உடலை அடக்கம்பண்ணக் கேட்டான். தன்னுடைய நற்பெயர், சனகெரிப் சங்கத்தில் தனது பதவி, தனது உயிர் முதலியவற்றைப் பொருட்படுத்தாது துணிச்சலுடன் சென்றார். இயேசுவின் மேல் தான் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்த எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள அவர் ஆயத்தமாயிருந்தார்.

இயேசுவுக்காக நம்முடைய பணி பாதுகாப்பு, பதவி உயர்வு, சமுதாய அந்தஸ்து, நம்முடைய உயிர் மற்றும் வாழ்வாதாரம் இவற்றில் ஆபத்தை சந்திக்கும் துணிச்சல் உண்டா? யோசேப்பை உதாரணமாகக் கொண்டு தைரியம் கொள்ளுங்கள். சனகெரிப் சங்கத்தின் முக்கிய உறுப்பினரான இவர், தான் இயேசுவைப் பின்பற்றுபவர் என வெளிப்படையாய் தெரிவிக்கும் விதமாய் தேசாதிபதியான பிலாத்துவினிடத்தில் சென்று இயேசுவின் சரீரத்தை தன்னிடம் தரும்படி தைரியமாய்க் கேட்டார்.

மேலும் இவர் உத்தமனும் நீதிமானுமாயிருந்தார் என்று வாசிக்கிறோம். யூதருடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் உடன்படாததின் மூலம் தனது உத்தமத்தை, நீதியை, மற்றும் நேர்மையை வெளிப்படுத்தினார். ஒருவேளை அவர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கமாட்டார். இரவு நேரத்தில் அவசரமாக கூட்டப்பட்ட அந்த சட்ட விரோதமான விசாரணைக்கு அவர் சென்றிருக்கமாட்டார் என நான் நினைக்கிறேன். ஏனெனில் “பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவ தூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம் பண்ணினார்கள்” (மாற்கு14:63,64). அவர்கள் அனை வரும் ஒருமனப்பட்டு இயேசுவைக் குற்றவாளி என்று தீர்மானித்துவிட்டனர். தனது வாதம் எடுபடாது என்று அவர் அறிந்துகொண்டார்.

எனவே தான் யோசேப்பு அந்த ஆலோசனை சங்கக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. உங்களுடைய நண்பர்கள் நெருங்கியவர்கள், சமவயதினர் யாவரும் உங்கள் இரட்சகராகிய இயேசுவுக்கு மிகக்கொடூரமான தண்டனை தர வேண்டும் எனக்கூறியிருந்தால் நீங்கள் எவ்வாறு அதற்கு சம்மதிப்பீர்கள்? அது நடக்கும்பொழுது நீங்கள் அங்கு இருக்க விரும்புவீர்களா? அவ்வாறே யோசேப்பால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களை எதிர்த்து ஓட்டுப்போடவும் முடியாது. ஏனெனில் அது அவருடைய உயிருக்கும் ஆபத்தாக முடியும்.

அச்சங்கக் கூட்டத்துக்கு விலகியிருப்பதே அவருக்கு தெரிந்த ஒரு சிறந்த காரியம். அந்த இரவில் நடந்த அநியாயத்துக்கு அவர் துணை போக விரும்பவில்லை. ஏனெனில் அவர் ஓர் உத்தமர், நீதிமான். வசனம் 51இல் அவர் யூதருடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர் என்று அறிகிறோம். இவ்வூர் எருசலேமுக்கு வடமேற்கே 20 மைல் தொலைவில் உள்ள பட்டணமாகும். யூதேயாவிலுள்ள மலைப்பிரதேசத்தைச் சேர்ந்தது.

மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்களான ஜொசிபஸ் மற்றும் ஜெரோம் என்பவர்களும் இப்பட்டணத்தை சாமுவேல் தீர்க்கதரிசியின் பிறந்த இடமான ராமா அல்லது ராமதாயீம் என்று அடையாளம் கண்டுள்ளனர். இச்சிறிய பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு இயேசுவின் உடலை அடக்கம்பண்ண விரும்பினார். இயேசுவுக்காக ஒரு சரியான செயலைச் செய்வதற்கு தனக்கு நேரிடும் ஆபத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை. மேலும் இந்த யோசேப்பு தேவனுடைய இராஜ்யம் வரக்காத்திருந்தார். மக்களுடைய மனதில் ஆட்சி செய்யும் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் என்று அவர் விசுவாசித்து அதற்காக காத்திருக்கவும் செய்தார். தேவனுடைய இராஜ்யம் பூமியில் வரவேண்டுமென வாஞ்சித்தார். தேவன் அவரது இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்து விட்டார். இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கற்பித்த “உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்ற ஜெபத்தின்படி யோசேப்பும் அந்த இராஜ்யத்துக்கு காத்திருந்தார்.

சனகெரிப் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக அவர் இருந்தாலும் இயேசுவுக்காக சரியான செயலைச் செய்வதற்கு சில ஆபத்துகளையும் எதிர்கொள்ளத் துணிந்தார். “இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்தும் உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான். ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்த வர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. யூதருடைய ஆயத்த நாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்” (யோவான்19: 38-42).

யோவான் நற்செய்தி நூலில் அவர் இயேசுவுக்கு அந்தரங்க சீடனாய் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுவுக்காக தான் எதையேனும் செய்தால் மற்ற உறுப்பினர்கள் தன்னை சங்கத்தைவிட்டு விலக்கிவிடுவார்கள் என்றோ அல்லது தன்னை ஜெப ஆலயத்துக்கும் புறம்பே தள்ளிவிடுவார்கள் என்ற பயத்துடன் அவர் இருந்திருப்பார். ஆனால் இப்பொழுதோ கிறிஸ்துவின் ஒப்புரவாக்கும் மரணத்தினாலும் அவர் காட்டிய அன்பினாலும் இவர் தைரியமடைந்தார். எனவே பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டார்”.

மாற்கு 15:43இல் அவருடைய துணிச்சல் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னுடய உடன் சங்கத்தினர் இதனைக் கேள்விப்படுவார்கள் என்பதை அறிந்தும் அவர் தைரியமாக இயேசுவின் சரீரத்தைக் கேட்டார். இத் துணிச்சலை அவர் எங்கிருந்து பெற்றார்? ஏனெனில் அவர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் இருந்தார். நீங்களும் நானும் அக்கூட்டத்தில் இருந்தால் எதைக் காண்போமோ அதையே அவரும் கண்டார். ஜனங்களின் பாவங்களை மன்னிக்கும்படி இயேசு பிதாவினிடத்தில் பரிந்து பேசுவதைக் கேட்டார். அதன் பின்னர் அவர் இயேசுவின் அந்தரங்க சீடராக இருக்கவில்லை. வெளியரங்கமாய் செயல்பட்டார்.

மத்தேயு நற்செய்தி நூலில் அவர் ஐசுவரியவான் என்றும், கன்மலையில் ஒரு புதிய கல்லறையைத் தனக்கென வெட்டியிருந்தார் எனவும் அறிகிறோம் (மத்;. 27:57). இயேசுவை கல்லறைவரைக்கும் இவர் பின்தொடர்ந்தார். தனக்காக மரித்த இயேசுவின் அன்பினால் தொடப்பட்டவராய் வெளியரங்கமாய் தான் இயேசுவின் சீடன் என்று வெளிப்படுத்தினார்.

நமக்காக மரித்த இயேசுகிறிஸ்துவின் அன்பை அறிந்த எவரும் அமைதியாய் இருக்கமுடியாது. இயேசுவின் கல்லறையருகே காணப்பட்ட மற்றொரு மனிதர் நிக்கொதேமு ஆவார் (யோவான்.19:39). இவர் ஆரம்பத்திலே இயேசுவைக் காண இரவிலே அவரிடத்துக்கு வந்தார்.

இவர் யூதருக்குத் தலைவராய் இருந்தார். “யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக் காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர் வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்” (யோவான் 3:1-7) என்று நாம் வாசிக்கிறோம். நிக்கொதேமு என்பதற்கு “மக்களின் மேல் வெற்றி பெறுபவர்” என்று பொருளாகும். இப்பெயர் ஒரு கிரேக்க பெயராகும். ஆனால் இவர் ஒரு யூதர்; கிரேக்கர் அல்லர்; மேலும் இவர் ஒரு பரிசேயர். பழைய ஏற்பாட்டுக்காலத்துக்கும் புதிய ஏற்பாட்டுக் காலத்துக்கும் இடையில் மக்கபேயரின் போர்களுக்கு முன்னதாக பரிசேயர்களின் குழு உருவானது எனலாம்.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கர்களது விக்கிரக வணக்க சடங்குகளை எதிர்த்த இந்த மக்கள் தங்களுடைய யூதமத நம்பிக்கையில் உறுதியாய் நின்றனர். இவர்கள் பிரித்து எடுக்கப்பட்டவர்கள் என்ற பொருளையுடைய ஹாசிதிம் (Hassidim) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் பரிசேயர் வகுப்பினருக்கு முன்னோடிகள். தற்காலத்தில் கறுப்பு உடை மற்றும் தொப்பி அணிந்து கிருதாவின் முனையில் நீண்ட குஞ்சமும் வைத்திருக்கிற இவர்களை நியூயார்க் நகரம், டெல்அவிவ் மற்றும் எருசலேம் பட்டணத்து வீதிகளில் நாம் காணமுடியும். நிக்கொதேமுவும் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் தனது விசுவாசத்தை வைத்திருந்தார். ஆம்; பாரம்பரிய கட்டுப்பாட்டுடைய யூத சமய அதிகாரி நிக்கொதேமுவும் இயேசுவின் கல்லறைக்கு வந்தார். இயேசுவின்மேல் அவர் வைத்திருந்த அன்பு அவரை மாற்றிவிட்டது.

மூன்றாவதாக மற்றொரு குழுவினரும் அக்கல்லறைக்கருகே காணப்பட்டனர். “கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்தனர்” என்று நாம் வாசிக்கிறோம் (லூக்கா 23:55). இப்பெண்களில் இருவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மகதலேனா மரியாள். இயேசு இவளிடமிருந்து ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அடுத்தவர் யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள். இயேசுவையும் அவருடைய சீடர்களையும் பின்பற்றி அவர்களுக்கு உணவும் கொடுத்து வந்தாள். சிலுவையின் அடியில் நின்ற இவர் இயேசுவின் கல்லறைவரைக்கும் வந்தார். இயேசுவை சிலுவையில் அறைந்த இடத்தில் திரளான ஜனக்கூட்டம் அங்கு காணப்பட்டது. ஆனால் அவர் மரித்தபின் அக்கூட்டம் கலைந்து அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு, நிக்கொதேமு, மகதலேனா மரியாள் மற்றும் யோசேயின் தாயாகிய மரியாள் போன்ற உண்மையான அன்புடையவர்கள் மட்டுமே அங்கு நின்றிருந்தனர். இயேசுவைப் பின்பற்ற விரும்பினால் அதற்கான கிரயம் நீங்கள் செலுத்தியாக வேண்டும்; அது எதுவாகவும் இருக்கலாம். நீங்கள் உண்மையாகவே அவரில் அனபுகூர்ந்தால் நிச்சயமாகவே ஒருநாள் வெகுமதியைப் பெறுவீர்கள். மேலே நாம் கண்ட மனிதர்கள் அவரது மரித்த சரீரத்தைக் கனம்பண்ணி நேசித்தார்கள் எனில் உயிர்த்தெழுந்த இயேசுவை அறிந்த நாம் எவ்வளவாய் அவரில் அன்புகூரவேண்டும்? இது தான் இன்று நான் உங்களுக்கு விடும் சவால். இன்று அவர் மீதுள்ள நமது அன்பை நாம் எவ்வாறு வெளிப்படுத்த முடியும்? வார்த்தைகளில் மட்டும் கூறுவதுடன் நின்றுவிடாமல், அதனைச் செயலிலும் நிரூபிக்கவேண்டும். உண்மையான அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். நாம் மேன்மையாகக் கருதுபவைகளை அவருக்காக தியாகம் செய்ய ஆயத்தமாயிருக்கவேண்டும். நம்முடைய பிள்ளைகள், நம்முடைய வீடு, வேலை, பணம் மற்றும் நமது வாழ்க்கை முழுவதையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

“உனக்காக நான் மரித்தேனே; எனக்காக நீ என்ன செய்தாய்?” என்று இரட்சகராகிய இயேசுகிறிஸ்து வின் கேள்விக்கு உங்களிடம் உள்ள பதில் என்ன?

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்