கல்லறையில் எத்தனை நாள்?

Dr.தியோடர் எச்.எஃப்
(மார்ச்-ஏப்ரல் 2016)

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமைதானா? அப்படியானால் மூன்று நாட்கள் பகலும் இரவும் கல்லறையில் இருந்துவிட்டு ஞாயிறு காலையில் உயிர்த்தெழ முடியுமா?

கிறிஸ்து நிச்சயமாக மூன்று நாட்களும் மூன்று இரவும் கல்லறையில் இருந்தார் என்பது என்னுடையதும் அநேக விசுவாசிகளுடைய நம்பிக்கையுமாகும். ஆகையால், அவர் சிலுவையில் அறையப்பட்டது வெள்ளிக்கிழமை அல்ல!

வேதபாரகரும் பரிசேயரும் உண்மையிலே கிறிஸ்துதான் வரவிருந்த மேசியாவா என்று அறிந்துகொள்ளுவதற்கு ஒரு அடையாளத்தைக் காண விரும்பி, ‘உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்’ (மத்.12:38) என்று அவர்களில் சிலர் அவரை நோக்கிக் கேட்டார்கள். “அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை” (வசனம் 39) என்றார். யோனா தீர்க்கதரிசியின் அடையாளமாவது என்ன? “யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” (வசனம் 40). இவ்விதமாக இயேசுவானவர் அவர்களுக்கு ஒரு அடையாளத்தைத் தந்தார்.

இயேசுவானவர் பூமியின் இருதயத்தில் மூன்று நாட்கள் இரவும் பகலும் இருந்திராவிட்டால் அவர் மேசியாவாக இருந்திருக்க முடியாது. ஏனெனில் இந்த அடையாளத்தின் மூலம் அவர் மேசியாவா இல்லையா என்பதை வேதபாரகரும் பரிசேயரும் சொல்லமுடியும் என்று இயேசு சொல்லியிருந்தார். அவர்களும் இந்தவிதமாகவே விளங்கிக்கொண்டார்கள். ஏனெனில் அவர் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் பண்ணப்பட்ட மறுநாளன்று, பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து, “ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. … மூன்றுநாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்” என்று மத்தேயு 27:63,64 இல் வாசிக்கிறோம்.

பிலாத்து அவர்கள் கேட்டபடியே காவல் காப்பதற்கு காவல் சேவகரைக் கொடுத்தான். ஆனால் இதிலிருந்து விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரதான ஆசாரியரும் பரிசேயரும் தங்கள் சொல்லைக் காப்பாற்றிக்கொள்ளவும், இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் இல்லை என்பதை நிரூபிக்கவும் முயற்சித்தார்கள் என்பதே. “அவரை தேவகுமாரன் என்று நம்பின அவருடைய சீஷர்கள் மூன்றாவது நாளிலே களவாய்க் கொண்டுபோய்விட்டு, ‘அந்த அடையாளத்தைக் கொடுத்தவர் அவரே. இவ்விதமாக அதை நிறைவேற்றினார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்’, என்று சொல்வார்கள்”, என்று நினைத்துக்கொண்டு கல்லறைக்கு காவல் வைத்தார்கள்.

இயேசுவானவர் மேசியா இல்லை என்ற அவர்களுடைய எண்ணத்தை நிரூபிக்க முயன்றுகொண்டிருந்த வேதபாரகரும் பரிசேயருமே தாங்கள் அறியாமல் அவர்தான் மேசியா என்பதற்கு நிரூபணம் ஆனார்கள். ஏனெனில் அவர்கள் காவல் வைத்தார்கள்.. அந்தக் காவல்காரரே, அவர் களவாடிக்கொண்டு போகப்படவில்லை; மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு ஆதாரமாயினர்.

வேதாகமத்திலே இயேசுகிறிஸ்து ஓய்வு நாளுக்கு முந்தின நாள் மரித்ததாக வாசிக்கிறோம். ஆகையால் அவர் வெள்ளிக்கிழமைதான் மரித்தார் என்று யூகிக்கப்பட்டு வருகிறது. இதிலேதான் எண்ணங்களுக்குள் முரண்பாடு தோன்றுகிறது. ஆனால் இந்த யூகத்தில் ஒரு மிக முக்கியமான காரியம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதாவது, இஸ்ரவேலருக்கு ஒரு வருடத்தில் ஏழு வித்தியாசமான பண்டிகைகள் ஆசரிக்கப்படவிருந்தன.  இந்த ஏழு பண்டிகைகளின் பொழுதும் வாரத்தின் எந்த நாளிலும் ஆசரிக்கப் படக்கூடிய ஒரு விசேஷித்த ஓய்வுநாள் ஆசரிக்கப்பட்டு வந்தது. அது வாரத்தின் எந்த நாளாயிருந்தாலும் அந்தப் பண்டிகையை ஆசரிப்பதைப் பொருத்திருந்தது.

பஸ்கா பண்டிகை வந்தபொழுது பஸ்காவை அனுசரிப்பதற்கு முந்தின நாள் அப்பண்டிகையின் ஆயத்த நாளாய் இருந்தது. அது புதன்கிழமையாயிருந்தது. இதற்கு அடுத்த நாள் பண்டிகையின் உச்சநாள், விசேஷித்த ஓய்வுநாளாயிருந்தது (யோவான். 19:14,31). அது வியாழக்கிழமையாயிருந்தது. அதன்பின் ஒரு வெள்ளிக்கிழமை வர அதற்குப்பின் வழக்கமான வார ஓய்வுநாள் வந்தது. இதற்குப் பின்னர் வாரத்தின் முதல் நாளான ஞாயிறு வந்தது. இவற்றை மனதில் கொள்ளுவோமானால், நமக்கு வேண்டிய விடையை அறிவது சுலபமாயிருக்கும்.

யூத சரித்திரத்திலே பஸ்கா ஆட்டுக்குட்டியானது விசேஷித்த ஓய்வுநாளுக்கு முந்திய நாளிலேதான் எப்போதும் அடிக்கப்பட்டது. ஆகவே யூதர்களுடைய ஆசாரத்தின்படி விசேஷ ஓய்வுநாளாய் ஆசரிக்கப்பட்ட அந்த வியாழக்கிழமைக்கு முந்தின புதன்கிழமையன்று பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டது.

இயேசுவானவர்தாம் உண்மையிலே அடிக்கப்படவிருந்த ஆட்டுக்குட்டியானவர். வேதாகமத்தில் எல்லா திருஷ்டாந்தங்களும் (types) இவரை சுட்டிக்காட்டுகின்றன. ஆகையால் அவ்வருஷப் பண்டிகைக்காக ஆட்டுக்குட்டிகள் அடிக்கப்பட்ட அதே நாளான புதன்கிழமையன்று இயேசுவானவரும் கொல்லப்பட வேண்டியதிருந்தது. இவ்விதமாக  விசேஷித்த ஓய்வு நாளுக்கு சரியாய் முந்தின புதன் கிழமையன்று இயேசுவானவர் கொலை செய்யப்பட்டார்.

சாயந்தர வேளையில் அரிமத்தியா ஊரானான யோசேப்பு இயேசுவானவரை அடக்கம் செய்வதற்காக அவருடைய சரீரத்தைக் கேட்க வந்தான். பிற்பகல் மூன்று மணிக்கு இயேசுவானவர் மரித்தபின் ஒருவேளை ஓய்வுநாளின் சாயந்திர வேளையின் முதற்பகுதியில் யோசேப்பு வந்து இயேசுவானவரை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம் பண்ணியிருந்திருப்பான். ஆகவே இயேசுவானவர் சாயந்திரம் ஆறு மணி அளவில் அதாவது புதன்கிழமை முடிவிலும் விசேஷித்த ஓய்வுநாளின் துவக்கத்திலும் கல்லறைக்குள் பிரவேசித்தார்.

இப்பொழுது மத்தேயு 28;1,2ஐக் கவனிப்போம்: “ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்”.

ஆகையால், அந்த வாரத்தின் முதல் நாளிலே சூரியன் உதயமாகுமுன்னரே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள் என்பது தெளிவாகிறது. கல்லறையை மூடியிருந்த கல்லை எவ்வாறு புரட்டமுடியும் என்று யோசித்துக்கொண்டு அங்கே வந்தனர். கல்லறை அருகில் நின்றுகொண்டிருந்தபோது, பூமி மிகவும் அதிரும்படி கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து வாசலிலிருந்த கல்லைப் புரட்டித்தள்ளி அதின்மேல் உட்கார்ந்தான். எப்பொழுது கல்லைப் புரட்டித் தள்ளினான்? அந்த ஸ்திரீகள் இருக்கும்போது கல்லைப் புரட்டித் தள்ளினான்.

அப்பொழுதுதான் இயேசு உயிர்த்தெழுந்தாரா? இல்லை. வேதாகமம் அவ்விதம் சொல்லவில்லை. இயேசுவானவரை கல்லறைக்குள் அடைத்து வைத்திருக்கக் கூடிய கல் ஒன்றும் இருந்ததில்லை. ஓய்வுநாளின் மாலை ஆறுமணிக்கும் வாரத்தின் முதல்நாள் காலைக்கும் இடையே இயேசுவானவர் உயிர்த்தெழுந்தார். அநேகமாய் ஓய்வுநாள் முற்றுப் பெற்றவுடனே அவர் உயிர்த்தெழுந்திருக்க வேண்டும். கல்லறை வாசலை காவல்காத்துக் கொண்டிருந்த காவற்சேவகர்கள் மட்டுமே அவர் வெளியேறுவதைப் பார்த்திருப்பார்கள்.

தான் உயிர்த்தெழுந்து வெளியே வருவதற்கு, இயேசுவானவருக்கு கல்லைறையை மூடியிருந்த கல்லைப் புரட்டித் தள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் கர்த்தருடைய தூதன் அதைப் புரட்டித் தள்ளிவிட்டு, ஸ்திரீகளைப் பார்த்து, “கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்” என்று சொன்னான் (மத்.28:2-6). அப்படியானால் நிச்சயமாய் இயேசுவானவர் கல்லறையில் மூன்றுநாட்கள் இரவும் பகலும் இருந்தார் என்று அறியலாம்.

கொலோசேயர் 2:16ஐ நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். நாம் எந்த நாளை அனுசரிக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நாம் ஒருவரையொருவர் குற்றப்படுத்தாதிருப்போமாக. ஏனென்றால் உண்மையிலே விவாதம் இதுவல்ல. உண்மையிலே விவாதத்திற்கு உட்பட்டவர் கிறிஸ்து!

நான் இங்கே விளக்கம் கொடுத்திருப்பது வேதத்தின்படி இயேசுவானவரை மேசியா என்பதை தெளிவாய் நிரூபிக்கிறது. சரித்திரமும் இதை ஊர்ஜிதப்படுத்தும். ஆனால், சிலர் வெள்ளிக்கிழமையை ஆண்டவர் நமக்காக மரித்த தினமாகத் தெரிந்துகொண்ட போதிலும் (அந்நாளை பெரிய வெள்ளிக்கிழமை Good Friday என்று அழைக்கிறோம்). அந்நாளை அவருடைய மரணத்தை நினைவுகூரும் நாளாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அர்த்தப்படாது. நாள் எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காதபடியால் எனக்கு அதைப்பற்றி பிரச்சனையே இல்லை.

இயேசுவானவர் மரித்து உயிரோடெழுந்தார் என்பதும், கல்லறையில் மூன்று நாட்கள் பகலும் இரவும் இருந்தார் என்பதும் மட்டும் உண்மையாகவே இருக்கிறது!

சத்தியவசனம்