ஊக்குவிக்கும் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து!

திரு.பிரகாஷ் ஏசுவடியான்
(மார்ச்-ஏப்ரல் 2016)

கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் இந்நாட்களைத் திருச்சபையின் வளர்ச்சியின் காலம் என அழைக்கலாம். கொரியா, லத்தீன், அமெரிக்கா, இந்தோனேசியா; ஆப்பிரிக்கா கண்டத்தின் பலநாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளில் திருச்சபைகள் அதிகமாக வளர்ச்சியடைந்து வருவதைக் குறித்து கேள்விப்படுகிறோம். இந்நிலையில் நாம் நம்மையே கேட்டுப்பார்க்க வேண்டிய ஒரு கேள்வி: ‘இன்று நம்முடைய திருச்சபைகள் வளர்கின்றனவா?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஐந்து பேரைக்கொண்டு ஆரம்பித்த திருச்சபை இன்று ஐநூறாக வளர்ச்சி அடைந்ததின் காரணம் என்னவென்று கேட்டால். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ஐந்து பேர் திருமணம் செய்து பத்து பேராக மாறினார் கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்தபோது பல உறவினர்கள் திருச்சபைக்குள் வந்தார்கள். இவ்விதமாக இனப்பெருக்கத்தின் அடிப்படையில் ஐநூறு பேராக மாறினார்கள் எனக் கூறுவது இனப்பெருக்கத்தின் அடிப்படையில் ஏற்படும் திருச்சபை வளர்ச்சி.

மதுரையில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவ தம்பதியரும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் சென்னைக்கு மாறுதல் ஆகி வந்ததின் அடிப்படையில், சென்னையிலுள்ள ஒரு திருச்சபையில் ஐந்து பேரும் அங்கங்களாக மாறினார்கள் எனக்கூறுவது இடம் மாறுதலின் அடிப்படையில் ஏற்படும் திருச்சபை வளர்ச்சி. மேலும் “இக்கரைக்கு அக்கரை பச்சை” என்பது போல ஒவ்வொரு திருச்சபையிலிருந்து இன்னொரு திருச்சபைக்கு தாவுவதால் சில திருச்சபைகள் வளர்ச்சியடைவதை காண்கிறோம். ஆனால், அப்போஸ்தலர் 2:47இல் ஆரம்ப திருச்சபையின் வளர்ச்சியைக் குறித்து நாம் வாசிக்கிறோம்:

தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார் (அப்.2:47).

இவ்வசனத்தில் கூறப்பட்டிருப்பது மனமாற்றத்தின் அடிப்படையில் ஏற்படும் திருச்சபை வளர்ச்சியாகும். இரட்சிப்பின் நிச்சயத்திற்குள் வந்தவர்கள் எருசலேமில் உள்ள சபைகளின் அங்கங்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். ஆதித் திருச்சபை அதிவேகமாக வளர்வதற்குக் காரணம் தேவன் பேதுரு போன்ற அப்போஸ்தலர்களை மட்டுமல்ல, ஸ்தேவான் பிலிப்பு போன்ற சபையின் மூப்பர்களையும் சிதறிப்போன சாதாரண விசுவாசிகளையும் தேவன் பயன்படுத்தினார் என்று பார்க்கிறோம். சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக இவர்களை உந்தித் தள்ளிய நெம்புகோல்தான் என்ன?

அப்போஸ்தலர் முதலாம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து தம்மை உயிரோடிருக்கிறவராக பல திருஷ்டாந்தங்கள் மூலமாக நிரூபித்தார் எனக் காண்கிறோம் (அப்.1.1-3). இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின் யூதர்களுக்கு பயந்ததினால் மேல்வீட்டு அறையில் ஒளிந்து கொண்டிருந்த சீஷர்கள். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக்கண்டு, பின் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டபோது சுவிசேஷத்தை அறிவிக்க உந்தித் தள்ளப்பட்டார்கள். அவர்களில் சிலரைப்பற்றி கவனிப்போம்.

1. சோர்ந்துபோன மரியாள்

சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்டு மனதிலும் சரீரத்திலும் மாசு படிந்து இவ்வுலகில் வாழ்வதற்கு ஓர் நம்பிக்கையும் இல்லை என வாழ்ந்துகொண்டிருந்த மகதலேனா மரியாளை இரட்சகராகிய இயேசு கிறிஸ்து சந்தித்து மனதிலும் ஆவியிலும் விடுதலை அளித்து, “மனுஷி” என்ற கண்ணியத்தை அவளுக்கு அளித்தார். ஆனால் அவர் மரித்த மூன்றாம் நாள் காலையில் “எம்பெருமான் மரணம் அடைந்துவிட்டார்; அவரது சரீரம்கூட மறைந்துவிட்டதே” என வெறுமையான கல்லறைக்கு முன்பாக மனக்கலக்கத்தோடு கண்ணீரோடும் நின்றுகொண்டிருந்த மரியாளை உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து சந்தித்தபோது மகிழ்ச்சியினால் உந்தித் தள்ளப்பட்டு ஓடிப்போய் உயிர்த்தெழுந்த கிறிஸ்து வைப்பற்றி சீஷர்களுக்கு அறிவித்தாள்.

ஒருவேளை இச்செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் சோர்வுற்றவர்களாக வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையும் இல்லையே என்ற நிலைக்கு வந்திருப்பீர்களானால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை விசுவாசக் கண்களினால் கண்டு அவர் கொடுக்கும் நோக்கங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். “ஸ்திரீயே” என்று பெண்களைப் பொதுவாக அழைத்த கிறிஸ்து, “மரியாளே” என தனிப்பட்ட முறையில் அவளை அழைத்து வெறுமையான கல்லறையைக் கண்டு ஏமாந்த அவளுடைய கண்களைத் திருப்பி, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாகிய தம்மைக் காணும்படியாக செய்தார்.

2. சந்தேகப்பட்ட தோமா

தோமாவினுடைய சந்தேகம் விதண்டாவாதத்திற்காக உருவாக்கப்பட்ட சந்தேகம் அல்ல. உண்மையாகவே கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வோடு ஏற்பட்ட சந்தேகமாகும். மற்ற சீஷர்கள் சொன்னதினால் அல்ல, தானே அவரைத் தொட்டுப்பார்க்கவேண்டும் என வாஞ்சையோடு காத்திருந்தான். உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து அவனைச் சந்தித்தபோது, “என் ஆண்டவரே! என் தேவனே! என தோமா அவரைப் பணிந்துகொண்டான். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அன்பு தோமாவை உந்தித்தள்ளி, நம் பாரத மண்ணிற்கு அனுப்பிற்று. அதன் அடிப்படையில் உருவான திருச்சபை இன்றும் கேரளாவில் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

ஆம்! உங்கள் மனதில் பல சந்தேகங்கள் இருக்கலாம். உங்கள் பாவங்களுக்காக உயிர்கொடுத்து, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை உளமாற விசுவாசிக்கும்போது, அவர் உங்கள் மனதின் சந்தேகங்களை அகற்றி தமது உயரிய  நோக்கங்களுக்காக உங்களைப் பயன்படுத்துவார்.

3. தோல்வியடைந்த பேதுரு

“என்னைப் பின்பற்றி வா, உன்னை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” என்ற சத்தம் கேட்டு கிறிஸ்துவின் சித்தம் செய்ய தன்னையே அர்ப்பணித்த பேதுரு, இயேசு கிறிஸ்து சிலுவைக்குச் சென்றபோது அவருக்கு தூரமாக பின்சென்று, அவரது பகைவர்களோடு அமர்ந்து குளிர்காய்ந்து, மூன்றுமுறை அவரை மறுதலித்து, மறுபடியும் மீன் பிடிக்கச் சென்றுவிட்டபோதிலும், உயிர்த்தெழுந்த கிறிஸ்து பேதுருவை சந்தித்து, “இவர்களிலும் அதிகமாக என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? நேசிக்கின்றாயா? என்ற கேள்விகளைக் கேட்டு தன்னோடு ஒப்புரவாக்கி பரிசுத்த ஆவியினால் நிரப்பி பயன்படுத்தினார். உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவோடு நீங்கள் நெருங்கி வாழாமல்,  அகன்று வாழ்கின்றீர்களா? அவரது பகைவர்களோடு உறவாடி, சாட்சியை இழந்து நிற்கிறீர்களா? கிறிஸ்துவை மறுதலித்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு உங்களை வாட்டுகிறதா? உயிர்த்தெழுந்த கிறிஸ்து உங்களிடத்தில், “நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா?” என்று இன்றும் கேட்கும் கேள்விக்கு உண்மையான பதிலை உள்ளத்தின் ஆழத்தில் இருந்து கூற முடியுமா? அன்று பேதுருவைத் தொட்டு மாற்றி, பயன்படுத்தின இயேசுகிறிஸ்து இன்று உங்களையும் மாற்றி பயன்படுத்துவார்.

சத்தியவசனம்