Dr.தியோடர் எச்.எஃப்.
(மார்ச்-ஏப்ரல் 2016)

3. விசுவாசிகளின் எதிரிகளும், அவர்களுடைய தாக்கும் உத்திகளும் (எபேசி. 6:11, 12,16)

பொய்யான உபதேசங்கள்

மனுக்குலத்தை வழி தவறச் செய்யும்படி சாத்தான் பொய்யான, தவறான உபதேசங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். “ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்” (1தீமோ.4:1).

வேதாகமத்துக்கு விரோதமான எல்லா உபதேசங்களையும் சாத்தான் ஊக்குவிப்பான். ஏனெனில், அது மக்களை இயேசுகிறிஸ்துவை விட்டு தூர விலகி நிற்கச்செய்யும். முற்போக்கு இறையியல் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையும், சிலுவையில் செய்துமுடித்த பாவமன்னிப்பு, மீட்புப்பணியையும், இயேசு திரும்ப வருவார் என்னும் கருத்தையும் மறுக்கிறது. இது சாத்தான் தானே உருவாக்கிய கொள்கையாகும்.

சாத்தானின் வல்லமை அவனுடைய தந்திரங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. எபிரெயர் 2:14இல் கிறிஸ்து சிலுவையில் மரணமடைவதற்கு முன்னரே சாத்தானுக்கு “மரணத்தின் மீது வல்லமை” இருந்தது என்று காண்கிறோம். ஆனால், பழைய ஏற்பாட்டுக் காலத்திலிருந்தே தேவன் சாத்தானுடைய வல்லமையைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார் என்று காண்கிறோம். சாத்தான் யோபுவின் மீது துன்பங்களைக் கொடுக்க விரும்பியபோது, தேவன் அவனிடத்தில் “இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன் மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்” (யோபு 1:12). பின்னர் யோபுவைத் தொடர்ந்து சோதிக்கும்படி சாத்தானுக்கு அனுமதியளித்தார். ஆனால் அவனிடம், “இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார்” (யோபு 2:6). இந்த வசனங்களிலிருந்து சாத்தான் தன் வல்லமையை தேவன் வகுத்த எல்லைக் கோட்டைத் தாண்டிச் செயல்படுத்த முடியவில்லை என்று காண்கிறோம். விசுவாசி கிறிஸ்துவோடு தான் கொண்டிருக்கும் உறவு, தன்னிடத்தில் இருக்கும் ஆவிக்குரிய ஆயுதங்கள் இவற்றைக் கொண்டு சாத்தான் மீது வெற்றி காண முடியும். “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே.2:7).  எனவே எவரும் கிறிஸ்துவைத் தொடாமல் நம்மீது கை வைக்க முடியாது. பவுல் விசுவாசிகளுக்கு நினைவூட்டுவதைக் கவனியுங்கள்: “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாய் இருக்கிறது” (2கொரி.10:4).

இயேசுகிறிஸ்துவுடன் இருக்கும் நம்முடைய நிலையால் சாத்தானால் நம்மீது வெற்றி காணமுடியாது. விசுவாசத்தின்மூலம் நாம் கிறிஸ்துவுடன் இருந்துகொண்டிருக்க வேண்டும். எல்லா துரைத்தனங்கள் மீதும் அதிகாரங்கள் மீதும் கிறிஸ்துவுக்கு வல்லமை உண்டு. எனவே, விசுவாசிகள் கிறிஸ்துவின் வல்லமையின் மூலம் நன்மையடைகிறார்கள். எப்படியெனில் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவின் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் இப்படிக் கூறியிருக்கிறார். விசுவாசி கிறிஸ்துவினால் சூழப்பட்டிருக்கிறான். எனவே கிறிஸ்துவைத் தொடாமல் சாத்தான் விசுவாசியைத் தொட முடியாது.

தான் தோற்கடிக்கப்பட்டது எங்கே என்று சாத்தானுக்குத் தெரியும். அசைக்க முடியாத அரண்கள் என்று அறிந்து சாத்தான் தன்னுடைய நேரத்தையும் பலத்தையும் வீணாக்க மாட்டான். எனவே நாம் கிறிஸ்துவால் சூழப்பட்டவர்களாக அவருடன் வாழும் காலம் வரையிலும் சாத்தானின் தாக்குதல்கள் நமக்கு வரும் என்று பயப்படத் தேவையில்லை. என்ற போதிலும் சாத்தான் தந்திரம் உள்ளவன் என்பதை அறிந்திருக்கிறபடியால் நம்மைக் கிறிஸ்துவைவிட்டுத் தனியாகப் பிரித்து தன் பலத்தில் சார்ந்து வாழும்படி செய்ய முயற்சிப்பான். கிறிஸ்துவோடு நாம் இருக்கும்போது நமக்கு இருந்த அதிகாரம், வல்லமை இவற்றை மறந்துவிட்டு தன் பலத்தில் சார்ந்து சாத்தானை எதிர்க்கச் செய்வான்.

எபேசியர் 6:11இல் காணப்படும் “சாத்தானின் தந்திரங்கள்” என்னும் சொல் கவனிக்கத்தக்கது. “தந்திரங்கள்” என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் சொல்லின் பொருள் “முறைகள்” (Methods) என்பதாகும். வேதாகம காலங்களில் பயன்படுத்தப்பட்ட இந்தச் சொல்லின் பொருள்கள் இந்தச் சொல், ஏமாற்று, தந்திரம், சூழ்ச்சி, மோசடி போன்றவையாகும். கிறிஸ்துவின் அரணான கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்கும் நம்மைப் பற்பல கவர்ச்சிகளைக் காட்டி, ஏமாற்றி, வஞ்சித்து, சூழ்ச்சியாக வெளியே வரச்செய்ய சாத்தான் முயற்சி செய்வான். ஒரு விசுவாசியைச் சந்தேகப்படச் செய்யவோ, மனச்சோர்வடையச் செய்யவோ (இவையிரண்டும் சாத்தானிடமிருந்து வருபவை) செய்துவிட்டானானால், அவர்களை விழத்தள்ளித் தனக்கு அடிமையாக்கும் முயற்சியில் நம்பிக்கையுடன் வெற்றியடைவான். ஒரு விசுவாசி விசுவாசத்தில் கிறிஸ்துவுடன் ஐக்கியமாயிருக்கும் நிலையிலிருந்து விலகி, அவரைச் சார்ந்திருக்கும் நிலையை விட்டுவிட்டானானால், இப்பொழுது சாத்தானின் வல்லமைக்குள் வந்துவிடுகிறான். நாம் கிறிஸ்துவின் எச்சரிக்கை வார்த்தையை ஏற்று அதன்படி நடக்கவேண்டும். “எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்” (லூக்கா 21:36).

பவுல் ஒருபோதும் கிறிஸ்தவ வாழ்க்கை சுலபமானது என்று நினைக்கவில்லை. அவன் தீமோத்தேயுவை இப்படிச் சொல்லி ஊக்குவித்தான்: “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு,…” (1தீமோ.6:12). இந்த விசுவாசப் போராட்டத்தில்தான் விசுவாசி எபேசியர் 6ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் சர்வாயுத வர்க்கங்களைப் பயன்படுத்த வேண்டும். அவைகளைக் குறித்து அடுத்த அதிகாரத்தில் விரிவாகப் பார்ப்போம். இந்த ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் நம்முடைய சுய பலத்தைக் கொண்டு சாத்தானை எதிர்த்துப் போராடி வெற்றியடைந்து விடுவோம் என்ற நினைக்கவே கூடாது.

விசுவாசிகளுக்கு வேதாகமம் கூறும் புத்திமதி என்னவெனில்;  “ஆகையால், ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே” (1பேது.5:6-9). 1பேதுரு 4:7 இவ்விதமாக கூறுகிறது: “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.”

மிகவும் பலவீனமான விசுவாசியும், மிகவும் அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற விசுவாசியும் கிறிஸ்துவோடு ஐக்கியமாகி அவருடன் வாழ்வதால், இருவரும் ஒரே மாதிரியாகப் பாதுகாப்பாயிருக்கிறார்கள். ஏனெனில் இருவரும் கிறிஸ்து என்னும் அரணான கோட்டைக்குள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு விசுவாசி தாவீதோடு சேர்ந்து இப்படிக் கூறலாம்:  “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே. ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி ரட்சிக்கப்படுவேன்” (2சாமு.22:2-4).

மிக முன்னேறிய விசுவாசியும் கிறிஸ்துவுடன் உறவுடன் இருக்கும் நிலையிலிருந்து விலகித் தன் சொந்த பலத்தில் சார்ந்து நிற்க ஆரம்பிப்பானாகில், அவன் மிகவும் பலவீனமானவனும், ஆதரவற்றவனுமாய் இருப்பான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருப்பதை இடைவிடாமல் எப்போதும் நினைத்துக்கொண்டிக்க அவசியமில்லை. ஆனால், அதுவே அவன் நிலைத்திருப்பதற்கும், செய்யும் கிரியைகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவுக்குள் இருப்பதை உணரும் விசுவாசி அந்த நேரம் முதல் அதே நிலையில் தொடர்ந்து வாழ வேண்டும் என்பது அவசியம்.

எபேசியர் 6:16 சொல்வதைக் கவனியுங்கள்: ஒரு உண்மையான விசுவாசி “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்”. இந்த அஸ்திரங்கள் விசுவாசிகளை விழச் செய்வதற்காகச் சாத்தான் அனுப்பும் சோதனைகளாகும். என்றபோதிலும் நாம் ஒரு பெரிய சோதனையில் அகப்பட்டிருக்கும்போது, 1கொரி.10:12,13 வசனங்களை நினைவுகூர வேண்டும்: “இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்”.

நாம் சாத்தானின் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, வேதாகமமும், தேவனுடைய வசனங்களும் நம்மை ஊக்குவிப்பனவாக இருப்பதைக் காணலாம். இப்படிப்பட்ட சோதனை நேரங்களில் தேவன் நமக்கு உதவி செய்ய எவ்வளவு உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதை நினைவுகூர வேண்டும். அநேக வருஷங்களுக்கு முன்னர், முக்கியமான செய்தி ஒலிபரப்பு விஷயமாக கடல்கடந்து யாத்திரை செல்ல ஆயத்தப்படும்போது, அநேகர் நான் திரும்பிவர மாட்டேன் என்ற கூறி என்னைப் பயமுறுத்தினார்கள். இந்த பயம் என்னில் தங்கி, என்னில் தேவனுடைய ஆளுகையையும், தேவன் எனக்கு வைத்துள்ள நன்மைகள் மேல் சந்தேகப்படுவது போலவும் ஆயிற்று.

விமானத்தில் ஏறிய பின் 91ஆம் சங்கீதத்தை எடுத்து வாசித்தேன். அது என்னை ஆறுதல்படுத்தித் திடப்படுத்தி ஊக்குவித்தது. அதை நான் வாசிக்கும்போது ஒரு விசுவாசி என்னும் என் நிலை உறுதிப்பட்டது. நான் ஒரு விசுவாசி என்னும் எண்ணம் உறுதியாகி, சாத்தான் என்மீது தொடுத்த தாக்குதல்கள் சிதறடிக்கப்பட்டன. நான் யாத்திரை செய்யும்போது எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் என்னுடைய ஆத்துமாவைக் காத்தது. தேவ பிரசன்னம் எப்போதும் என்னோடிருக்கும் என்பது எனக்கு உறுதியளிக்கப்பட்டது. 91ஆம் சங்கீதத்தின் முதல் இரண்டு வசனங்களும் இப்படிக் கூறுகின்றன:

“உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்”.

இந்தச் சங்கீதத்தில் தேவன் விசுவாசியிடம் கூறுகிறார்:  “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்” (வச.14-16).

அக்கிரமக்காரனுடைய அக்கினி அஸ்திரங்களை நாம் தாங்கிக்கொண்டிருக்கும்போது, தேவன் நமக்களிக்கும் ஆறுதலான வார்த்தைகள் எவ்வளவு அற்புதமாகவும் உறுதியளிப்பதாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளன!

மொழியாக்கம்: G.வில்சன்